எது நடந்தாலும் நல்லதுக்கு நடந்ததாக நினைக்கும் மன நிலை பெற்றால் மட்டுமே இனி இந்தியாவில் மகிழ்ச்சியாக வாழ முடியும்! ஆகவே தேர்தல் ஆணையம் தமிழகத்திற்கு செய்துள்ள அற்புதமான சேவைகளை -, சொல்லப்படாத அரிய சாதனை மற்றும் புதுமைச் செய்திகளை பட்டியலிட்டு பரவசத்துடன் பகிர்கிறோம்;
தமிழகத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் சீராய்வு அறிவிக்கப்பட்ட போது வீடுவீடாக வந்து வாக்காளர் பட்டியல் சரி பார்க்கப்படும் என்றார்கள்.
ஆகா, வரட்டும், நல்லதாக போய்விட்டது…என்று அப்பாவி மக்கள் பலரும் காத்திருந்தோம். ஆனால், அப்படி வராமலே ஜீ பூம் பா ஸ்டைலில் வாக்காளர் லிஸ்ட் தயார் செய்யப்பட்டுவிட்டது.
அதில் 97 இலட்சத்து 37 ஆயிரம் பேர் இல்லாமல் போன அதிர்ச்சிகரமான அரிய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை 6,41,14,587 என்பதிலிருந்து 5,43,76,755 என்பதாகக் குறைந்துள்ளது. இது வரலாற்றில் பதிவு செய்ய வேண்டிய அரிய சாதனையாகும்!
# 20 முதல் 50 வயதுகுட்பட்டவர்களின் இள வயது மரணங்கள் அதிகரித்துள்ளது.
# மக்கள் தொகையில் பெண்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டுள்ளது.
# குறிப்பிட்ட ஊர்களில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை – அதுவும் எதிர்கட்சிகள் பலமாக இருக்கும் ஊர்களில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை – கண்ணீர் வர வழைக்கும் வகையில் உள்ளது.
# சுமார் 4,000 இடங்களில் பெரும் எண்ணிக்கையில் இறந்தவர்கள் யார் கவனத்திற்கும் வராமல் போயுள்ளது.

# 6000 க்கு பாகங்களில் மனிதர்களே இல்லாத வெறும் வீடுகள் கண்டறியப்பட்டுள்ளன.
# 172 பாகங்களில் காணாமல் போன பெண்களின் எண்ணிக்கை கவனப்படுத்தப்பட்டுள்ளது.
# அடிக்கடி வீடு மாறிக் கொண்டிருப்பவர்கள் ஆண்டி இந்தியர்கள் என்பதால், அவர்களின் குடியுரிமையை பறிக்கும் விதத்தில் வாக்களார் லிஸ்டில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
# எல்லாவற்றுக்கும் மேலாக இறந்தவர்களுக்கு உயிர் பிச்சை தந்து மீண்டும் வாக்காளர் லிஸ்டில் அவர்களை கொணர்ந்து புதிய சாதனை படைத்துள்ளது தேர்தல் ஆணையம்.
# கிறிஸ்த்துவர்கள் வசிக்கும் பகுதிகளில் முக்கால்வாசிப் பெண்கள் என்ன ஆனார்கள் என்ற கேள்விக்கு பதிலாக அவர்கள் தேவனின் சிறப்பு ஏற்பாட்டில் அழைக்கப்பட்டிருக்கிறார் என தேர்தல் ஆணையம் தெரிய வைத்துள்ளது.
# 100க்கு மேற்பட்ட சட்டமன்ற தொகுதிகளின் சுமார் 500 வாக்குச் சாவடிகளில் ‘இறப்பின்’ காரணமாக அனைத்து வாக்காளர்களும் நீக்கப்பட வேண்டிய துர்பாக்கிய கடமையை நெஞ்சுறுதியுடன் செய்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம்.
# ஆக மொத்ததில் இந்திய தேர்தல் வரலாற்றில் இறந்து போனவர்கள் ஆவிகளாக வந்து வாக்கு பதிவு செய்வதற்கும், இருப்பவர்கள் ஆவியாக மாறி இல்லாமல் போவதுமான தேர்தல் ஆணையத் தலைவர் ஞானேஸ்வரனின் புத்தாக்கச் சிந்தனைக்கு புரட்சிகர வடிவம் தரப்பட்டுள்ளது.
இப்படியெல்லாம் வாக்காளர் எண்ணிக்கை பிரமிக்கத் தக்க அளவில் சரிந்த போதிலும் 68ஆயிரத்து சொச்சம் வாக்குச்சாவடிகள் இருந்த தமிழ்நாட்டில் தற்போது 75ஆயிரத்து சொச்சம் வாக்குச் சாவடிகளை அதிகரித்து தமிழகத்தின் மீதான தன் கரிசனத்தைக் காண்பித்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம்.
ஒரு குடும்பத்தினர் அனைவரும் ஒரே வாக்குச் சாவடி சென்று வாக்களிப்பதால் ஏற்படும் சலிப்பை போக்கும் வண்ணம் கணவர் ஓரிடமும், மனைவி ஓரிடமும், பிள்ளைகள் வேறொரு இடமுமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Also read
இப்படி சிந்தித்து பார்க்க முடியாத வகைகளில் வாக்காளர் சிறப்பு சீர்திருத்தம் அரங்கேறியமை கண்டு தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பெரு மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். பாரதீய ஜனதா கட்சியினர் பரவசம் அடைந்துள்ளனர்.
பீகாரிலும், மகாராஷ்டிராவிலும், ஜார்கண்டிலும் தேர்தல் ஆணையம் செய்த சேவைகளை விடவும் விஞ்சியதாக அதன் தமிழக சேவை உள்ளதாக ஊடகங்கள் பாராட்டு மழை பொழிந்த வண்ணம் உள்ளனர்.
இதன் மூலம் 2026 தேர்தலில் தமிழக அரசியலில் ஒரு ஆன்மீக அரசு அமைவதற்கான மாற்றத்திற்கான விதைகளை தூவி சென்றுள்ளது என தமிழக ஆதீனங்கள் பிரதமருக்கும், உள்துறை அமைச்சருக்கும் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளனர். இத்தகைய சாதனையில் நமது உச்ச நீதிமன்றத்திற்கும் பங்குள்ளது என்பதை நன்றியுடன் நினைவு கூர்வோம்.
வாழ்க இந்திய தேசியம், வந்தே மாதரம்! ஜெய்கிந்த்!
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்















1986 நகராட்சி தேர்தலில் நின்று வென்ற அன்றைய ஜனதா கட்சி கவுன்சிலர் கூறுகிறேன் உயிருடன் உள்ளவருக்கே தெரியாமல் கள்ள ஓட்டு ,இறந்தவர் இடம் மாறியவர் ஓட்டு எல்லாம் உட்கட்சி கட்டமைப்பு உள்ள கட்சிகளுக்கு சாதாரணம் அதை மீறி சாமானியன் ஜெயிக்கவே முடியாது வாக்காளர்களை திமுக கட்சிக்காரர்கள் விடுபடாமல் சேர்த்து விட்டார்கள் காங்கிரஸ் பாஜக கட்சிகளுக்கு அந்த கலை இன்னமும் தெரியவில்லை