இந்தியாவெங்கும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் இந்துத்துவ வெறி அமைப்புகள் நடத்திய தாக்குதலும், அதை காவல்துறை வேடிக்கை பார்த்தமையும் அச்சத்தை உருவாக்குகிறது. இதன் மூலம் பாஜக அரசு சிறுபான்மையினருக்கு சொல்லும் செய்தி என்னவென்றாலும், உலக அரங்கில் இந்தியாவின் இமேஜ் கடுமையாக சிதைந்து வருவது குறித்த ஒரு அலசல்;
உலக முழுமையும் கொண்டாடப்படுகிறது, கிறிஸ்துமஸ் திருவிழா!
கிறித்துவம் உலகில் அதிக மக்களைக் கொண்ட மதம்! இதனால் அதிகமான நாடுகளில் கொண்டாடப்படும் விழாவாகவும் கிறிஸ்துமஸ் உள்ளது.
இயேசு கிறிஸ்துவை நேசிப்பவர்கள் கிறிஸ்துவர் மட்டுமல்ல, கிறிஸ்துவர்கள் அல்லாத பிற மதங்களில் உள்ள மனித நேயர்கள், பரந்துபட்ட சிந்தனையுள்ளவர்கள் ஆகியோர் நெஞ்சங்களிலும் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளார் இயேசு கிறிஸ்து!
மனித பிறவி எடுத்த எவரும், அவரது மலை பிரசங்க உரையில் மனதை பறிகொடுக்காமல் இருக்க முடியாது. அகிம்சை தத்துவத்தால் அகிலமெல்லாம் கொண்டாடப்பட்ட காந்தி, ‘தன்னை செதுக்கியதில் கிறிஸ்துவின் மலை பிரசங்க உரைக்கு மகத்தான பங்கு உள்ளது’ எனக் கூறியுள்ளார்.

இந்தியாவில் கிறிஸ்துமஸ் தினத்திற்கு அரசு விடுமுறை என்பது நீண்ட கால மரபாக உள்ளது. ஆனால், உத்திரபிரதேச அரசின் முதல்வர் யோகி, ”இனி கிறிஸ்துமஸ் விழாவிற்கு விடுமுறை கிடையாது” என அதிரடியாய் அறிவிக்கிறார். அதைத் தொடர்ந்து அந்த ம நிலத்தில் கிறிஸ்துமஸ் விழாவிற்கு விடுமுறைவிட்ட தனியார் கல்வி நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் எல்லாம் கிறிஸ்துவர்களும், இஸ்லாமியர்களும் இரண்டாம் தரக் குடிமகன்களாக நடத்தப்படுவது இங்கு எழுதப்படாத விதியாக அரங்கேறி வருவதை ஆயிரக்கணக்கான சம்பவங்கள் அறியத் தருகின்றன. இந்த ஆண்டு ஜனவரி தொடங்கி நவம்பர் முடிய உள்ள 11 மாத காலத்தில் கிறிஸ்துவர்கள் மீதான தாக்குதல்கள் சுமார் 700 ஐக் கடந்துள்ளது.
ஆனால், இந்த வருடம் கம்யூனிஸ்ட் ஆட்சி செய்யும் கேரளாவின் பாலக்காட்டில் கிறிஸ்துமஸ் பாடல்கள் பாடி வந்த பாலகர்களை ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் தாக்கி, அவர்களிடம் உள்ள டிரம்ஸ்களை பிடுங்கி ஓடவிட்ட சம்பவம் இரண்டு நாட்கள் முன்பே அரங்கேறியது.

அதைத் தொடர்ந்து தற்போது இந்தியா முழுமையிலும் அங்குமிங்குமாக மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்கண்ட், கர்நாடகா, டெல்லி, அஸ்ஸாம், ஹரியானா, ஒடிசா, பீகார் ஆகிய மாநிலங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் பரவலாக தாகுதல்கள் நடந்தேறியுள்ளது சகஜமாக வாழ்ந்து கொண்டிருக்கும் கோடிக்கணக்கான இந்திய மக்களுக்கு அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தி உள்ளது!
சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்ந்த உத்திரகாண்ட் மாநிலத்தின் பிரபல ஹரித்துவார் நகரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்காக அட்வான்ஸ் கொடுத்து புக் பண்ணிய விழாக்களை இந்துத்துவ வெறியர்களின் எதிர்ப்பு காரணமாக ஹோட்டல் நிர்வாகங்கள் ரத்து செய்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

மத்திய பிரதேசத்தில் ஒரு கண் தெரியாத பிள்ளைகளுக்கான பள்ளியில் ஒரு பாஜக பெண் தலைவி அதிரடியாக கூட்டமாக நுழைந்து கத்துகிறார். அங்கிருந்த கண் தெரியாத ஒரு இளம் பெண்ணின் முகத்தில் கை வைத்து அழுத்தி எச்சரித்து மிரட்டுகிறார். அங்கே காவல்துறையினர் சற்று தள்ளி இதை வேடிக்கை பார்க்கின்றனர்.
ஒடிசாவின் பூரி நகரில் பிளாட்பாரத்தில் சாண்டோகோஸை வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த அன்றாடம் காய்ச்சிகளான ஏழைப் பெண்ணை காரில் இருந்து இறங்கிய சங்கி ஒருவர், ”இது இந்து பூமி, இங்கே கிறிஸ்துமஸ் பொருட்களுக்கு என்ன வேலை. உடனே இதை எடுத்துக் கொண்டு ஓடிவிடு. இல்லவிட்டால் சற்று நேரத்தில் எங்க ஆட்கள் வந்து இவற்றை அள்ளிச் சென்று அழித்துவிடுவார்கள்” என எச்சரிக்கிறார்.

இப்படி எண்ணற்ற சம்பவங்கள் கிறிஸ்துமஸ் விழா நடக்கும் மைதானங்களில் நுழைந்து அங்கிருந்த கிறிஸ்துமஸ் தாத்தா உருவத்தை அடித்து நொறுக்கி பலூன்களை உடைத்து அங்கிருக்கும் பொருட்களை சேதப்படுத்துவது…கிறிஸ்துவ தேவாலயங்களில் நுழைந்து அனைவரையும் வெளியேற்றுவது என பேயாட்டம் ஆடி வருகின்றன இந்துத்துவ அமைப்புகளான பஜ்ரங்தள், விஸ்வ ஹிந்து பரிஷத், அனுமன் சேனா.. போன்றவை.
உலக அரங்கில் இந்தியாவின் இமேஜ் தரைமட்டமாவதற்கு இதைவிட பெரிய கைங்கரியம் எதையும் சங்கிகள் செய்ய வேண்டியதில்லை. ஒரு பக்கம் கிறிஸ்துவர்களுக்கு இழைக்கப்படும் துன்பங்கள் நம் நெஞ்சை கலங்க வைக்கின்றன என்றால், உலக அரங்கில் புலம் பெயர்ந்து வாழும் ஒவ்வொரு இந்தியரும் இந்த அவமானத்தை எப்படி எதிர் கொள்வது என்று அதிர்ந்து போயுள்ளனர்.
இந்தியாவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் போதான கிறிஸ்துவர்கள் மீதான தாக்குதல்கள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளின் பாராளுமன்றத்தில் விவாத பொருளாகும். ஐக்கிய நாடுகள் சபையிலும் கூட இது எதிரொலிக்கும். இதன் விளைவுகளை இந்தியா சந்திக்க நேரும்.
காந்தியின் செல்வாக்கை காலி செய்ய என்னென்னவோ செய்து கொண்டுள்ளதைப் போலவே, தற்போது கிறிஸ்துவின் செல்வாக்கையும் கீழிறக்கத் துடிக்கிறது, இந்த அரசாங்கம்.
ஆத்திரம் தலைக்கேறிய இவர்களால் ஒரு போதும் கிறிஸ்துவை அசிங்கப்படுத்திவிட முடியாது. மாறாக, இதன் மூலம் இவர்கள் தங்கள் மனங்களில் உள்ள அசிங்கத்தைத் தான் அரங்கேற்றுவதோடு, இந்தியாவையே உலக அரங்கில் அசிங்கப்படுத்தி வருகின்றனர்.
சாவித்திரி கண்ணன்















Leave a Reply