”உலக வரைபடம் என்று இது வரை உருட்டப்பட்டதெல்லாம் ஒரு உல்டா! ஏமாற்றாதீங்க. நாடுகளின் வரைபட குளறுபடிகளால் எத்தனை சர்சைகள்? உண்மையான வரைபடத்தை எப்போ வரையப் போறீங்க?” என்று ஆப்பிரிக்க நாடுகளின் இயக்கம் அதிரடி காட்டி உள்ளது. வாவ், இது உண்மையா? வரைபடங்களின் வரலாற்றை புரட்டலாம்;
ஆம், வரைபவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு நோக்கம் இருந்திருக்கிறது. அதற்கேற்ப ஒவ்வொருவிதமான விதிமீறல்களை அரங்கேற்றி உள்ளனர். அப்படி பிரிட்டிஷார் வரைந்து தந்த வரைபடத்தின் விளைவாகத் தான் இன்று வரை இந்தியா – பாகிஸ்தான் மற்றும் இந்தியா – சீனா எல்லை தகராறுகள் தொடர்கின்றன என்பது விவாதிக்கபட வேண்டிய மற்றொரு விஷயமாகும்.
பள்ளி வகுப்பறை தொடங்கி இந்தப் பாரிலுள்ள செய்திகளை அலசும் பத்திரிகை அலுவலகம் வரை பரலவலாக அறியப்பட்ட உலக வரைபடங்கள் அனைத்திலும் இதே போன்ற ஒரு மீறல் இருக்கிறது. அதுவும் சுமார் நான்கு நூற்றாண்டுகளாக இந்த தவறுகள் தொடர்கின்றன. ’இந்த வரைபடத் தவறை திருத்தி, உண்மையான மாற்று வரைபடத்தை போடணும்’ என்று ஆப்பிரிக்க நாடுகள் ஒரு இணைய இயக்கத்தையே உருவாக்கி இருக்கிறார்கள்!
பொய் (!) சொல்லும் இந்த வரலாற்று வரைபடத்திற்கு மாற்றாக, உலக நாடுகளை உள்ளது உள்ளபடி சித்தரிக்கும் வரைபடத்தை (Equal Earth Map ) சர்வதேச அமைப்புகள் பயன்படுத்த வேண்டும் என்று இந்த இயக்கத்தின் சார்பில், ’வரைபடத்தை திருத்தவும்’ (Correct The Map) எனும் இணைய தளமும் அமைக்கப்பட்டுள்ளது.
உலக வரைபடம்
ஆப்பிரிக்க நாடுகள் ஏன் இந்த கோரிக்கையை வைக்கின்றன?
உலக நாடு வரை படத்தில் ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஒரு அநீதி இழைக்கப்பட்டு இருக்கிறது.
சாதாரணமாக பார்ப்பவர்களுக்கு இது தெரியாது.
ஆனால், பரப்பளவில் மிகப் பெரிதான ஆப்பிரிக்க கண்டத்தைவிட சிறிய நாடுகள் வரைபடத்தில் பெரிதாக தோற்றமளிக்கின்றன.
உதாரணத்திற்கு துருவப்பகுதி அருகே உள்ள கிரீன்லாந்து தீவு, ஆப்பிரிக்காவுக்கு நிகரான தோற்றம் கொண்டிருக்கிறது. ஆனால், உண்மையில் அந்த தீவு நாடு, ஆப்பிரிக்காவின் 14 ல் ஒரு பகுதி தான். அதே போலவே, அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளும் அவற்றின் பரப்பை விட, பெரிதாகவே தோற்றம் தருகின்றன.
ஆப்பிரிக்க அநீதி
நிலப்பரப்பின் படி பார்த்தால், ஆப்பிரிக்க கண்டத்திற்குள், அமெரிக்கா, கிரின்லாந்து, இந்தியா,சீனா, ரஷ்யா, நார்வே என இன்னும் பல்வேறு நாடுகளை அடக்கிவிடலாம். அந்த அளவுக்கு புவியியல் நோக்கில் ஆப்பிரிக்க கண்டம் பெரிது.

பெரிய ஆப்பிரிக்க கண்டத்தின் நிலபரப்பை விட கிரீன்லாந்து உள்ளிட்ட நாடுகளின் நிலப்பரப்பு பல மடங்கு பெரிதாக இடம் பெற்று இருப்பதை பார்த்தால், உலகின் இரண்டாவது பெரிய கண்டம் ஆப்பிரிக்கா என்பதை நமப வழியில்லாமல் ஆகிவிடுகிறதே…!
”பொருளாதாரத்தில் தான் உலகம் எங்களை விளிம்பு நிலைக்கு தள்ளி இருக்கு என்றால், வரைபடத்திலுமா?” என்று இவர்கள் கேட்பதிலும் ஒரு நியாயம் இருக்கவே செய்கிறது.
இது வரலாற்றின் தவறான சித்தரிப்பு மட்டும் அல்ல, ஆப்பிரிக்க மக்களுக்கு மன உளைச்சலை தருவதுமாகும்.
“ ஆக, உலக வரைபடத்தை திருத்துவது வேண்டாத செயல் அல்ல,, உண்மை நிலையை மீட்பது” என்று இந்த இயக்கத்தின் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
மெர்கார்ட்டர் பிழை
16 ம் நூற்றாண்டின் மத்தியில் புகழ்பெற்ற ஐரோப்பிய வரைபட மேதை மெர்கார்டர் (Gerardus Mercator ) உருவாக்கிய உலக வரைபடமே இந்த தவறான சித்தரிப்புக்கு அடிப்படையாகும்.
அந்த காலகட்டத்தில் ஐரோப்பிய நாடுகளின் ஆட்சியாளர்களும், வணிகர்களும், கண்டுபிடிப்பாளர்களும் உலகின் புதிய பகுதிகளை தேடி கடல்வழி பயணங்களை மேற்கொண்டிருந்தனர்.

இந்த பின்னணியில் தான் மெர்கார்டர் கடல் பயணங்களை தெளிவாக வழிகாட்டுவதற்காக புதிய வரைபடத்தை உருவாக்கினார். முந்தைய வரைபடங்களில் இல்லாத முக்கிய மாற்றத்தை தனது வரைபடத்தில் அவர் கையாண்டார்.
புவியின் பூமத்திய ரோகை அருகே உள்ள நிலப்பரப்பை உள்ளபடி சித்தரித்தவர், துருவப் பகுதிக்கு அருகாமையில் உள்ள நிலப்பரப்பை அவற்றின் அருகாமைக்கு ஏற்ப நீட்டித்து சித்தரித்தார்.
மெர்கார்டர் மேற்கொண்ட நீட்டிப்பின் காரணமாகவே, துருவம் அருகே உள்ள கிரீன்லாந்தும், ரஷ்யா, கனடா, நார்வே போன்ற இன்னும் பிற நாடுகள் அவற்றின் அளவைவிட பெரிதாக காட்சி அளிக்கின்றன.
காலத்தின் தேவை
ஆனால், மெர்கார்டரின் நோக்கம் உலக நிலப்பரப்பை பிழையானதாக மாற்றுவது அல்ல. மாறாக, கடல் பயணத்திற்கு ஏற்ற வகையில், உலக வரைபடத்தை உருவாக்கவே இந்த தவறை செய்துள்ளார்.
இந்த முயற்சியில் அவர் எதிர்கொண்ட பிரச்சனை உருண்டையான பூமியின் நிலப்பரப்பை தட்டையான காகிதத்தில் சித்தரிப்பது தான். முப்பரிமாண தோற்றத்தை இரு பரிமாண காகிதத்தில் சித்தரிக்கும் போது, எல்லாவிதமான தகவல்களையும் இடம் பெற வைப்பது சவாலாக இருந்தது.
நிலப்பரப்பின் வடிவம் மற்றும் தோற்றம் இரண்டையும் அதே அளவில் காகிதத்தில் மாற்றுவது கடினமானதால், மெர்கார்டர் நாடுகளின் வடிவத்தை தக்க வைத்துக் கொண்டு, அவற்றின் தோற்றத்தில் சிறிய மாற்றத்தை கொண்டு வந்தார்.
வரைபட பிழைகள்
நாடுகளை சித்தரிப்பதில் மெர்கார்டர் பின்பற்றிய இந்த சின்ன திருத்தம் மெர்கார்டர் நீட்டிப்பு என குறிப்பிடப்படுகிறது. மெர்கார்டர் வரைபடமே கூட சற்று காலம் தாழ்ந்து தான் பரவலான பயன்பாட்டிற்கு வந்தது.
மெர்கார்டர் வரைபடம் கடல் பயணங்களில் மாலுமிகளுக்கும், கண்டுபிடிப்பாளர்களுக்கும் கை கொடுத்ததால் அதிக வரவேற்பை பெற்றது. காலனியாதிக்க வெற்றிகளுக்கும் உதவியது . இருபதாம் நூற்றாண்டிலும் இதன் பயன்பாடு தொடர்ந்தது, இந்த நூற்றாண்டிலும் நீடிக்கிறது.
இடையே எண்ணற்ற மாற்று வரைபடங்களும் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன என்றாலும், மெர்கார்டர் வரைபடமே பிரபலமாக இருக்கிறது. பொதுவாக எல்லா வகை வரைபடங்களுமே ஏதேனும் ஒரு பிழையை கொண்டதாகவே இருக்கின்றமையால் மெக்கார்டேவே தொடர்கிறது
வரைபடங்கள் அவற்றின் நோக்கத்திற்கு ஏற்ப குறிப்பிட்ட அம்சத்தில் கவனம் செலுத்தி, அதற்கு பொருந்தாத அம்சத்தை சிறிய அளவில் மாற்றி அமைத்துக் கொள்கின்றன.
ஆப்பிரிக்க எதிர்ப்பு
எல்லா வரைபடங்களிலும், சிறிதளவு சிதைவு இருக்கும் என்பதால், மெர்கார்டர் வரைபடமும் இயல்பாக ஏற்க வேண்டியதில்லை என்ற பின்னணியில் தான் ஆப்பிரிக்க நாடுகள், தங்களுக்கு காலம் காலமாக இழைக்கப்படும் வரைபட அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கின்றன.
மெர்கார்டர் வரைபடம், காலனியாதிக்கத்திற்கு துணை நின்றதோடு, ஐரோப்பிய வெள்ளையர்களின் உலகை முன்னிறுத்தியது என்கிறார், மாற்று உலக வரைபடத்தை உருவாக்கிய ஐரோப்பிய வரைபட வல்லுனர் அர்னோ பீட்டர்ஸ் (Arno Peters ).
1974 – ல் பீட்டர்ஸ் முன் வைத்த மாற்று வரை படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு முன்னரே ஜேம்ஸ் கால் (James Gall ) என்பவர் இதே போன்ற வரைபடத்தை உருவாக்கியிருந்தார்.
எனவே பழைய மெர்கார்டர் வரைபடத்தை கைவிட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. ஆப்பிரிக்க கண்டத்தை காலனியாதிக்க மனநிலையோடு, சிறியதாக்கி காண்பிக்கும் இந்த வரைபடத்தை கைவிட வேண்டும் எனும் கோரிக்கை ஆப்பிரிக்க இயக்கமாகவும் உருவாகியுள்ளது.
ஆப்பிரிக்கா நோ பில்டர் மற்றும் ஸ்பீக் அப் ஆப்பிரிக்கா ஆகிய அமைப்புகள் முன்னெடுத்துள்ள இந்த முயற்சிக்கு ஆப்பிரிக்க ஒன்றியமும் ஆதரவு அளித்துள்ளது.
சமத்துவ வரைபடம்
உலக நாடுகளை சம விகிதத்தில் சித்தரிக்கும் வகையில் 2018 ல் உருவாக்கப்பட்ட உலக சமநிலை வரைபடத்தை (Equal Earth Map), உலக வரைபடமாக ஏற்க வேண்டும் என ஆப்பிரிக்க இயக்கம் கோரிக்கை வைத்துள்ளது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள வரைபடத்தை திருத்தவும் இணையதளமும், உலக சமநிலை வரைபடத்தை முன்னிறுத்துகிறது.

டாம் மற்றும் போஜன் (Tom and Bojan) உள்ளிட்ட வல்லுனர்களால் உருவாக்கப்பட்ட இந்த வரைபடம் நவீன டிஜிட்டல் தன்மையோடு, உலக நாடுகளை உள்ளபடியே சித்தரித்து, வரைபடத்தின் மற்ற அம்சங்களையும் பாதுகாக்கிறது. புவியின் வளைந்த தன்மையையும் தக்க வைத்துள்ளது.
மனநிலை மாற்றம்
பொதுவாக வரைபடம் என்பது அரசியல் நோக்கம் கொண்டதாகவும் இருந்திருக்கிறது. படையெடுப்பிற்கும், ஆதிக்கத்திற்கும் வரை படங்கள் உதவியுள்ளன. எனவே, வரலாற்று தவறை சரி செய்து சமத்துவ வரைபடத்தை பயன்படுத்த வேண்டும் எனும் கோரிக்கையில் நியாயம் உள்ளது.
நிற்க, உலக நாடுகளின் உண்மையான நிலபரப்பு தன்மையை வரைபடத்தில் ஒப்பிட்டு பார்க்க உதவும் ட்ரு சைஸ் ஆப் (https://thetruesize.com/ ) போன்ற இணைய தளங்கள் இந்த பிரச்சனையை புரிந்து கொள்ள உதவுகின்றன.
இதே போன்ற வேறு சில இணையதளங்களும் இருக்கின்றன: https://truesize.net/
சமத்துவ வரைபடம் பற்றி அறிய: https://equal-earth.com/
ஆப்பிரிக்க நாடுகளின் கோரிக்கை தளம்: https://correctthemap.org/
ஜெர்மனியின் வரைகலை வல்லுனர் Kai Krause உருவாக்கிய ஆப்பிரிக்க வரைபடமும் இந்த நோக்கிலான முன்னோடி முயற்சியாக அமைகிறது.
கட்டுரையாளர்; சைபர் சிம்மன்

நரசிம்மன் என்ற இயற்பெரைக் கொண்ட சைபர்சிம்மன், தமிழில், இணையம், செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்பம் குறித்து நீண்ட காலமாக எழுதி வருகிறார். இவை குறித்து நிறைய நூல்களை எழுதியுள்ள இவர் ‘இணையமலர்’ என்ற இதழின் ஆசிரியராகவும் உள்ளார்.















Leave a Reply