உண்மையிலேயே ஒரு மிகப் பெரிய மாற்றுக்காக தமிழக மக்கள் காத்துக் கிடக்கிறார்கள்! அந்த வெற்றிடத்தை நிரப்பும் என எதிர்பார்க்கப்பட்ட த.வெகவில் என்ன நடக்கிறது? விற்பனை செய்யப்படும் கட்சிப் பதவிகள், விலை போகும் நிர்வாகிகள், ஒருவருக்கொருவர் குழிபறிப்புகள், கட்சித் தலைமையிடம் பேச முடியாத கொந்தளிப்புகள் என அதகளப்படுகிறது த.வெ.க;
ஏற்கனவே தமிழக மக்கள் தேசிய கட்சிகள் மீதான அதிருப்தியால் திராவிடக் கட்சிகளை நாடினார்கள்!
தற்போது திராவிடக் கட்சிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ள நிலையில் மாற்றத்திற்கான எதிர்பார்ப்புகள் நிறையவே உள்ளது!
இது தான் கள யதார்த்தம்!
இந்த வெற்றிடத்தில் விஜய்யை பொருத்தி வைத்து ஒரு வாய்ப்பை தந்து தான் பார்க்கலாமே..என்று பரவலாக நினைக்கிறார்கள்.
யாருக்கும் இல்லாத வகையில் விஜய்க்கு அபாரமான மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.
ஆனால் விஜய்யின் நடவடிக்கைகள் மக்கள் எதிர்பார்ப்புகளுக்கு நம்பிக்கை தருவதாக இருக்கிறதா?
ஒரு கட்சி ஆரம்ப நிலையிலேயே இவ்வளவு கரப்ஷன் புகார்களோடு களத்தில் இயங்குவதை முதன்முதலாக தமிழகம் பார்க்கிறது.
ஒரு முறை கூட மக்கள் தீர்ப்பை பெற்று இராத ஒரு புதிய கட்சியில் கட்சிப் பதவிகளை லட்சங்களுக்கும், கோடிகளுக்கும் விற்று கல்லா கட்டும் தலைவர்களைப் பற்றிய புகார்களால் கட்சிக்குள் வெட்டு,குத்து என ரணகளம் நடக்கின்றது.

முதலில் விஜய்க்கு அடுத்தபடியாக இருக்கும் புஸ்சி ஆனந்த் மீது இந்தப் புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தன. மாவட்ட அளவினான பொறுப்புகளை பெற்றவர்கள் பல லட்சங்களை கொடுத்து வந்த பிறகு தங்களுக்கு கீழ் வட்டார அளவிலான தலைவர்களை நியமிக்க அவர்கள் வசூல் வேட்டையில் இறங்கிவிடுகின்றனர்.
தேர்தலில் நிற்காமல் ஒரு கவின்சிலரோ, எம்.எல்.ஏவோ, எம்.பியோ எந்த பதவியும் இல்லாமல் கட்சிப் பொறுப்பிலேயே கோடீஸ்வரர்களாகும் அதிசயத்தை இந்தக் கட்சி நிகழ்த்திக் கொண்டுள்ளது.
இதன் விளைவாக த.வெ.க., மாவட்டச் செயலர்களுக்கு எதிராக, சொந்த கட்சியினரே, பல்வேறு மாவட்டங்களில், போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனால், பத்தாண்டுகளுக்கும் மேலாக விஜய் நற்பணி மன்றம் பிறகு த.வெ.க என்று தொடர்ந்து பயணித்த ஏராளமானோர் ஓரம் கட்டப்பட்டு வெம்பி வெதும்பி நிற்பதும்,வெளியேறுவதும் தொடர்கதையான நிலையிலும், இவற்றை தடுக்கவோ, விசாரணை மேற்கொண்டு வில்லங்கமான நபர்களை நீக்கவோ விஜய் முயற்சிக்கவே இல்லை.
இவ்வளவு குறுகிய காலத்தில் விஜய் அரசியலால் அவரது தீவிர அபிமானிகள் பலர் கட்சி வளர்ச்சிக்காக பல லட்சங்கள், கோடிகளை அழித்து நிம்மதியின்றி உழல்கின்றனர்.
எவ்வளவு தீவிரமாக உழைத்தாலும் கடைசி வரை தலைவரின் கவனத்திற்கு போக முடியாதவர்களாகவே அந்தக் கட்சியில் ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் உழல்கின்றனர். எப்போது வேண்டுமானாலும் தங்கள் உழைப்பு உதாசீனப்படுத்தப்படலாம், தனது மாவட்டத்திலோ, வட்டாரத்திலோ பண பலம் அல்லது சாதி பலம் மிக்க ஒருவர் திடீரென்று கட்சிக்குள் நுழைந்து தன்னுடைய இடத்தை அபகரிக்கலாம். அதற்கான காரணங்களை கூட தாங்கள் அறிய முடியாதவர்களாக, – தங்களுக்கான நியாயத்தை தாங்கள் உயிருக்கு உயிராய் நேசிக்கும் தலைவரிடம் சொல்ல முடியாதவர்களாக – அவர்கள் தூக்கி எறியப்படலாம் என்பது எவ்வளவு அநீதி.

எதற்காக இந்தக் கட்சியில் இயங்கி வருகிறோம்…? எந்த நம்பிக்கையில் நம்முடைய பணத்தையும், உழைப்பையும் இந்தக் கட்சியின் வளர்ச்சிக்கு கொட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்? இந்த கட்சியின் கொள்கை, சித்தாந்தம் என்ன? அதை நோக்கித் தான் பயணப்படுகிறோமா? எப்போதும் பதற்றமாகவே நம்மை தலைமை வைத்திருக்குமா? ஒன்றும் புரிபடாமல் உழன்று கொண்டுள்ளனர்.
மிகப் பெரிய அளவில் பெண்களிடம் வரவேற்பு பெற்றுள்ள த.வெ.கவில் அவர்களுக்கான முக்கியத்துவத்தையே காண முடியவில்லை. கட்சிப் பதவிகளிலும், கட்சியின் முடிவுகளிலும் அவர்களின் பங்களிப்பு இருப்பதாக தெரியவில்லை.
கட்சித் தலைவராக இருக்கும் ஒருவர் எப்போதுமே அணுக முடியாதவராக இருந்தால், நிச்சயம் அந்தக் கட்சிக்கு எதிர்காலம் கேள்விக்குறியே. ஒரு போதும் பத்திரிகையாளர்களை சந்திக்க முடியாதவர் எப்படி மக்களுக்கு தன்னை வெளிப்படுத்த முடியும்? மேடையில் அவர் பேசுவதை கேட்பது மட்டுமே மக்களுக்கான ஒரே வாய்ப்பு. அவரோடு உரையாடல் என்பதை எதிர்பார்க்கவே வாய்ப்பில்லை என்பது மிகவும் துர்பாக்கியமானது.

தன்னைச் சுற்றி இரும்பு வேலி அமைத்துக் கொண்டு, காட்சி பொம்மையாக மட்டுமே வெளிப்பட்டு, எழுதி தரப்படும் வசனங்களை ஏற்ற, இறக்கங்களுடன் சொல்வதற்காக பொதுக் கூட்டம் என்ற சடங்கை நடத்திக் கொண்டு சென்றால், இந்தக் கட்சி மீது ஒரு பிடிமானமும், நம்பிக்கையும் எப்படி வரும்?
தேர்தலில் எம்.எல்.ஏ சீட்டு பெறுவதில் இன்னும் என்னென்ன கூத்துக்கள் அரங்கேற உள்ளதோ..? இப்போதே த.வெ.க நிர்வாகிகள் பலர் லோக்கல் ஆளும் கட்சி அமைச்சர்களிடமும், மாவட்டத் தலைமையிடமும் மறைமுக நட்பு பாராட்டுவது குறித்து அந்தக் கட்சியிலேயே புகார்கள் குவிந்து கிடக்கின்றன. வேட்பாளர் அறிவிப்பு வந்தவுடன் பெரிய அரசியல் கட்சிகள் இவர்களை எளிதில் விலை பேசி நினைத்து பார்க்க முடியாத பெரும் பணத்தை தந்து தூக்கிவிடுவார்கள்!
Also read
அந்த நேரத்தில் விஜய்யின் இமேஜ் எல்லாம் சுக்கு நூறாகிவிடும். மக்களோடு மக்களாக கீழே இறங்கி நல்ல நிர்வாகிகளை அடையாளம் கண்டு மனம் விட்டுப் பேசி நம்பிக்கை தந்து வளர்த்தெடுத்தால் மட்டுமே நிர்வாகிகள் தாக்குபிடிப்பார்கள்! இல்லாவிட்டால், திசை தெரியாத பயணத்தில் திடீர் சந்தர்ப்பம் வரும் போது கட்சி தாவி தங்கள் பாதையை மாற்றிக் கொள்வார்கள்!
தமிழக அரசியலில் ஏற்கனவே இருக்கும் கட்சிகளிடம் ஏற்பட்ட அதிருப்திகள், விஜய்யின் மிகப் பெரிய மக்கள் ஈர்ப்பு, இளம் தலைமுறையின் கண்மூடித்தனமான ஆதரவு ஆகியவற்றால்… விஸ்வரூபம் எடுத்து காட்சி தந்தாலும், ஓட்டுப் பதிவு முடியும் வரையாவது த.வெ.க தாக்குபிடிக்குமா? எனத் தெரியவில்லை.
சாவித்திரி கண்ணன்















Leave a Reply