பங்களாதேஷின் அரசியல், சமூக தளங்களில் பதற்றம் நிலவுகிறது. ஊழல் ராணி, பல நூறு இளைஞர்களை கொன்று குவித்த கொலையாளி ஷேக் ஹசீனாவிற்கு ஆதரவளித்து, தஞ்சம் தந்துள்ள இந்திய ஆட்சியாளர்கள் மீதான கோபம் அங்கு கொளுந்துவிட்டு எரிகிறது. இதில் மேலும் குளிர்காய பார்க்கலாமா, மோடி சர்க்கார்….?
டிசம்பர் 12ந்தேதி வங்க தேச மாணவர் தலைவர் ஷரிப் உஸ்மான் ஹாடி டிசம்பர் 18 அன்று சிங்கப்பூரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அதை தொடர்ந்து வங்க தேசத்தில் கிளர்ச்சிகளும் வன்முறையும் மீண்டும் வெடித்தன.
ஹாடியின் “கொலையாளிகள்” இன்னும் பிடிபடவில்லை. இந்தச் சூழலில் அவர்கள் ஷேக் ஹசீனாவின் ஆட்கள், இந்திய உளவுத் துறையின் கைக் கூலிகள் தற்போது இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளனர் என்றெல்லாம் “செய்திகள்” பரவின.

ஏற்கனவே ஊழல் செய்து இளம் மாணவர்களை கொன்று குவித்த ஷேக் ஹசீனாவிற்கு இந்தியா அடைக்கலம் கொடுத்துள்ளதால் இந்திய அரசின் மீது வங்க மக்கள் கொண்டுள்ள கோபம் இப்பொழுது மேலும் பெரிதாக வெடித்துள்ளது. இந்த கோபத்தை காரணமாக்கி சில பத்திரிக்கைகள் மீது தாக்குதல்களும் நடத்தப்பட்டன, இந்துக்கள் சிலரும் தாக்கப்பட்டுள்ளனர். திபு சந்திரதாஸ் என்ற இந்து இளைஞரை வன்முறையாளர்கள் அடித்து கொன்ற செய்தி இந்திய பத்திரிக்கைகளில் அதிக கவனத்தை ஈர்த்தது.

1971 முதல் இன்றுவரை வங்க தேசத்தில் உள்ள இஸ்லாமிய தீவிர அமைப்பான ஜமாத் இ இஸ்லாமி அமைப்பு அங்கு ஆட்சிக் கட்டிலில் அமரவில்லை, வங்க மக்களிடையே 3 விழுக்காட்டிற்கு மேல் வாக்கும் வாங்கவில்லை, அவர்கள் செல்வாக்கு அவ்வளவுதான் , எஞ்சியுள்ள 97 விழுக்காட்டு மக்களின் உணர்வுகளை இஸ்லாமிய தீவிரவாதமாக இந்தியா நினைக்குமானால் அது இந்திய அரசின் ‘டி என் ஏ ‘ விலுள்ள கோளாறன்றி வேறென்ன?
ஹாடியை தொடர்ந்து மற்றொரு மாணவர் தலைவர் ஒருவரை குல்நா நகரில் இனந்தெரியாத நபர்கள் சுட்டு உள்ளனர். இத்தகைய அனாமதேய கொலையாளிகளை இந்திய அரசு இதுவரை கண்டிக்கவில்லை, ஷேக் ஹசீனாவை ஒப்படைக்க கூறும் வங்கதேச அரசின் கோரிக்கையை இந்திய அரசு கண்டு கொள்ளவில்லை!
பதினெட்டு ஆண்டுகளுக்குப்பிறகு நாடு திரும்பிய வங்கதேச தேசியவாத கட்சியின் செயல் தலைவர் தாரிக் ரஹ்மானும் வங்கதேசம் அனைத்து மத்த்தினருக்கும் பொதுவான நாடு, இங்கு பல்வேறு மதத்தை பின்பற்றுபவர்களும் வாழ்கின்றனர், அவர்கள் அனைவரின் சிறப்பான எதிர்காலத்திற்கான திட்டம் தம்மிடம் உள்ளது என்று நேற்று கூறியுள்ளார். முன்னாள் அதிபர் கலீதா ஜியாவின் மகனான தாரிக் ரகுமான் மேலும் பேசுகையில் , சட்டம் ஒழுங்கை பேணவேண்டிய அவசியம் பற்றியும் ஆதிக்க சக்திகளின் கையாட்களிடம் வங்கதேசம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டிய அவசியம் பற்றியும் கூறினார். அவர் யாரை மனதில் வைத்து பேசுகிறார் என்பது வங்க மக்களுக்கு புரியும்.

ஆனால் இந்திய ஆட்சியாளர்கள் வங்க தேசம் இந்தியாவை வெறுத்து விலகுவதை , இந்திய வங்க தேச உறவுகள் சீர்குலைவதை பற்றி கவலை படவில்லை . அவர்கள் விரும்புவதெல்லாம் தேர்தலில் வெற்றி பெருவது ஒன்றுதான். மேற்கு வங்கத்திலும், அசாமிலும் நடக்கவிருக்கின்ற தேர்தல்களில் வெற்றி பெறுவதே மோடி அரசின் ஒரே குறிக்கோள். இத்தகைய அணுகுமுறைதான் இந்திய ஆட்சியாளர்களை – இந்துத்துவ ஆட்சியாளர்களை- உலகத்தார் முன்னிலையில் தோலுரித்து காட்டியுள்ளது.
உள்நாட்டு அரசியல் நலன்களுக்காக இன்றைய ஆட்சியாளர்கள் பிற நாடுகளுடனான உறவுகளை சீரழித்து வருகின்றனர். சிறுபான்மை மக்களை- இஸலாமியர் மற்றும் கிறித்துவ மக்களை- தாக்கி அவர்களின் உரிமைகளை நசுக்குவதால் ஐ நா சபை மட்டுமின்றி மேலை நாடுகளின் (ஐரோப்பிய) நம்பிக்கையை, வளைகுடா நாடுகளின் நன்மதிப்பை இந்தியா இழந்துள்ளது. மத நல்லிணக்கம் மனித உரிமைகள் , ஆதிக்க எதிர்ப்பு இவைபற்றியெல்லாம் வாய்கிழிய வெளிநாட்டு அரங்கங்களில் பேசும் மோடி, இந்தப்பகுதியில் உள்ள சிறு நாடுகளை உதாசீனப்படுத்துவதும், அவர்களை மிரட்டுவதும் செய்கிறது.
உள் நாட்டில் உள்ள முஸ்லீம் மக்களின் கிறித்துவ மக்களின் உரிமைகள் மீதும், ஆலயங்கள் அடையாளங்கள் மீதும் தாக்குதல் நடத்துவோரை கண்டிக்காமல் இருப்பது அல்லது அவர்களை ஊக்குவிப்பது, பிடிபட்டோரை தண்டிக்காமல் தப்பவிடுவது என்ற கேவலங்களை நடத்தி வருகிறது.
உண்மையில் வங்க தேசத்தில் நிலைமை சீராகி தேர்தல்கள் அமைதியாக அங்கு நடக்க இந்தியா உதவ வேண்டும். இந்தியாவிற்கான புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமெரிக்க தூதர் சர்ஜியோ கொர், வங்க தேசத்தில் அமைதியான தேர்தல் நடத்த உதவுவதே எனது முதல் பணி என்கிறார் . ஆனால் அண்டை நாடான இந்தியாவோ அதை பற்றி வாயை திறக்கவில்லை, இந்திய அரசின் தயவால் இந்தியாவில் ஒளிந்துள்ள ஷேக் ஹசீனாவோ வங்க தேசத்தில் தேர்தல்கள் நேர்மையாக நடத்த முடியாது என்கிறார்.

ஒருவேளை அவரைப்போன்றே இன்றைய யூனூஸ் நிருவாகமும் தேர்தல் மோசடி செய்யும் என நினைக்கிறாரா? என்னவோ தெரியவில்லை. ஆனால் இத்தகைய பேச்சை இந்தியா (தனது மண்ணில் ) அனுமதிப்பது வங்க தேச மக்களின் பெருங்கோபமாக வெடித்துள்ளது.
வங்க தேச தேசீயவாத கட்சியும் மற்ற பிற கட்சிகளும் தேர்தல்கள் முறையாக நடத்தப்பட வேண்டும் என்றே கோருகின்றனர். இன்று நடக்கும் வன்முறைக்கு – ஹாடி கொலை, திபு சரண்தாஸ் கொலை மற்றும் மாணவர் தலைவர் சித்திக் மீதான துப்பாக்கி சூடு போன்ற வன்முறைகளுக்கு– காரணமானவர்களை பிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் , இதை செய்ய முகமது யூனுஸ் நிருவாகம் தவறி விட்டது என்றும் அங்குள்ள கட்சிகள் குறை கூறுகின்றனர். இந்த குற்றச்சாட்டை புறம் தள்ள முடியாது. இந்த விவகாரத்தில் முகமது யூனுஸ் நிர்வாகம் துரிதமாக செயல்பட்டிருந்தால் இவ்வளவு ப்தற்றம் ஏற்பட்டு இராது.
அமைதிக்கு இரு வழிகள்;
அதே சமயம் இந்திய அரசு இரு வழிகளில் வங்க தேசத்தின் அமைதிக்கு உதவ முடியும்!
# முன்னாள் பிரதமரும் இன்றைய குற்றவாளியுமான ஷேக் ஹசீனாவை இந்தியாவிலிருந்து அகற்றுதல், அவரை இந்தியா வங்க தேசத்திடம் ஒப்படைக்க தேவையில்லை, அவரை இந்தியாவை விட்டு வெளியேறப் பணித்தாலே பாதி பிரச்சினை தீர்ந்து விடும்!
# முக்கிய குற்றச் செயல்களை இந்தியா கண்டிப்பதும், குற்றவாளிகளை பிடிக்க அனைத்து உதவிகளை தர இந்தியா தயார் என அறிவிப்பதும் ஆகும். இந்தியா , வங்க தேசத்தின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட விரும்பவில்லை என தெரிவிப்பதும், வங்க தேச மக்களின் தேர்வை இந்தியா மதிக்கிறது என்ற உணர்வை வளர்ப்பதுமே நிலைமைகளை சீராக்க உதவும்.

இவ்வாறு கூறுவதால் அதன்படி ஒழுகுவதால் இந்திய நாட்டு நலன்களுக்கு எவ்வித நட்டமும் இல்லை. இதைவிடுத்து , வங்க தேசம் சீரழிகிறது என்றோ, தீவிரவாதம் அங்கு மையங்கொண்டுள்ளது என்றோ கூறுவது உள் நோக்கமுள்ள செயலாக கருதப்படும். வங்க தேசத்தை வம்படியாக சீனாவின் வட்டத்திற்குள் தள்ளுவதற்கு ஒப்பாகும் , பிறகு வங்கத்து வளைகுடாக்களில் சீனக்கப்பல்களை நாம் காணலாம் . இன்றைய ஆட்சியாளர்களுக்கு தேர்தல் வெற்றி தான் முக்கியமே ஒழிய தேச நலனல்ல.
வங்க தேசத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது, இஸ்லாமிய தீவிரவாதம் அங்கு கோலோச்சுகிறது, முகமது யூனுஸ் ஒரு இந்திய விரோதி என்ற கதைகள் நம்ம ஊர் பத்திரிக்கைகளில் வலம் வருகின்றன. இதனால் விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தள் அமைப்பினர் இந்தியாவிலுள்ள வங்கதேச தூதரகங்கள் முன் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
எங்கு மனித உயிர் பறிக்கப்பட்டாலும், அந்த அநியாயத்தை அனைவரும் கண்டிக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை , ஆனால் இத்தகைய “நியாய உணர்வை” செயற்கையாக , விருப்பத்திற்கேற்ப கட்டியமைக்க கூடாது.
Also read
இன்னும் ஓரிரு மாதங்களில் மேற்கு வங்கத்திலும், அசாமிலும் வரவுள்ள தேர்தல்களில் இந்துக்களின் வாக்குகளை வசூலிக்க பா ஜ க தலைமை முயற்சிப்பதன் வெளிப்பாடே இந்த ஆர்ப்பாட்டங்களும், பில்டப் செய்யும் கோபங்களும்!. இவை தேர்தல் அரசியலுக்கு உதவலாம் ஆனால், அவை இந்திய – வங்கதேச உறவுகளை சீராக்குவதற்கு உதவுமா? என எண்ணி பார்க்க இவர்கள் தயாரில்லை.
நம்மை சுற்றியுள்ள நாடுகளுடன் நமது உறவு அறம் சார்ந்ததாகவும், இருநாட்டு மக்களின் பொதுநலன் சார்ந்ததாகவும் இருக்க வேண்டும். குறிப்பாக அண்டை நாடுகளின் உள்நாட்டு பிரச்சினைகளில் மூக்கை நுழைக்காமல், இந்தியா இருக்க வேண்டும்.
ச.அருணாசலம்















கட்டுரையாளர் திரு.ச.அருணாசலம் எழுதியுள்ளதைப் பார்த்தால், இவருக்கு அதீத வெளியுறவுத்துறை அனுபவமும், மிகுந்த ஆளுமைத்திறனும் இருப்பது தெளிவாகத் தெரிகிறது.
இவரிடம் பங்களாதேஷை ஒப்படைத்தால், அதனை மிகச் சிறந்த நாடாக முன்னேற்றுவார் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.
யாராவது இவருக்கு பங்களாதேஷை ஒப்படையுங்கள், தயவுசெய்து.