நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு…!

இந்தியாவில் இதழியல் துறையின் இழி நிலைக்கு ’தி இந்து தமிழ் திசை’ ரஜினிகாந்திற்கு சிறப்பு புத்தகம் வெளியிட்டுள்ள நிகழ்வே சாட்சி!

மலிவான ரசனை போக்குகளை மகத்தானதாக பூதாகரப்படுத்தி, பிரமிப்பூட்டி, கல்லா நிரப்ப வேண்டிய கட்டாயம் என்ன வந்தது ஒரு பாரம்பரிய பத்திரிகை குழுமத்திற்கு…?

இன்றைக்கு நாடும், மக்களும் எவ்வளவோ சிக்கலான விஷயங்களை சந்தித்துக் கொண்டுள்ளனர். விவசாயிகளும்,தொழிலாளர்களும் சுதந்திர இந்தியாவில் இதுவரை சந்தித்திராத சோதனைகளை சந்தித்து எதிர்கொண்டு வருகின்றனர். ஜனநாயகம் கேள்விக்குள்ளாகியுள்ளது..! மனித உரிமை ஆர்வலர்கள் வேட்டையாடப்படுகின்றனர்.

கொரானா ஏற்படுத்திய பொருளாதாரச் சரிவிலிருந்து பல குடும்பங்கள் மீள முடியாமல் தத்தளித்துக் கொண்டுள்ளன. வேலை வாய்ப்புகள் பறிபோய், வர்த்தகம் வீழ்ந்ததினால் நாளும், நாளும் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன…!

சினிமா டிக்கெட்டுகளை சமூகவிரோதிகள் பிளாக்கில் விற்று பிழைப்பு நடத்தியதற்கு மாறாக தியேட்டர் உரிமையாளர்களே அந்த காரியத்தை செய்யும்படி மாற்றிய ஸ்டார் நடிகர் ரஜினி!

இந்தச் சூழலில் தமிழ் சினிமா துறையை வர்த்தக சூதாட்டமாக்கி சீரழித்த ஒரு நடிகரை,சீராட்டி, பாராட்டி சிறப்பு மலர் போட்டுள்ளது இந்து தமிழ் திசை! ரஜினிகாந்தை விதந்தோதுவதின் வாயிலாக இந்து எந்த திசைக்கு வாசகர்களை அழைத்துப் போக விரும்புகிறது என்பதை தெளிவாக்கிவிட்டது!

இந்த மலர் குறித்து தி இந்து வெளியிடுள்ள செய்தியே அவர்களின் யோக்கியதையையும்,அரசியல் நோக்கத்தையும் தெளிவாக்குகிறது.

தமிழக மக்களால் நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த ரஜினியின்அரசியல் வருகை அண்மையில் உறுதி செய்யப்பட்ட நிலையில்,பாரம்பரியமிக்க ‘தி இந்து’ குழுமத்தில் இருந்து வெளிவந்துள்ள ‘சூப்பர் ஸ்டார் 45’ மலரை நேற்றுஅவர் ஆர்வத்தோடு பெற்றுக்கொண்டார். மலரை அதே வேகத்துடன் புரட்டிப் பார்த்து மகிழ்ச்சியோடு வாசித்தார்.

அப்போது உடனிருந்த, ரஜினி தொடங்க உள்ள கட்சியின் ( பாவம் பெயர் தெரியவில்லை) தலைமை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ரா.அர்ஜுனமூர்த்தி ‘சூப்பர் ஸ்டார் 45’ மலர், மிகவும் சிறப்பான தகவல்கள், அரிய புகைப்படங்கள், நேர்த்தியான வடிவமைப்புடன் நல்ல முறையில் உருவாக்கப்பட்டுள்ளது என்றார். அதை ஆமோதித்த கட்சியின் மேற்பார்வையாளர் தமிழருவி மணியன், ‘ரஜினிகாந்த் பற்றிய மிகச் சிறந்த காபி டேபிள் நூலாக‌ இது அமையும்’ என நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

ரஜினி பொக்கிஷமாக விரிந்துள்ள இந்த மலரை ஓவியர் ஏ.பி.தர் தன் கலைவண்ணத்தால் மேலும் சிறப்பாக்கி இருக்கிறார். கூடுதல் அம்சமாக, ‘போர் வரும் போது வருகிறேன்’ என ரஜினி அரசியல் பயணம் பற்றி பேசியதை நினைவுகூரும் வகையில் ரஜினி மன்னரைப் போல வாளேந்தி குதிரையில் வரும் ராஜ கம்பீரமான ‘புளோ – அப்’ போஸ்டர், மலருடன் இணைக்கப்பட்டுள்ளது.

( இந்த மலர் குறித்து ரஜினி வாய் திறந்ததாக தகவல்கள் இல்லை. அவர் கூட உடனிருந்ததாக கூறப்படும் இருவரும் புகழ்ந்து பேசினார்களாம்…! ஆனால், அப்படியானதற்கு எந்த புகைப்பட ஆதாரமும் இல்லை.பிழைப்புவாத பித்தலாட்டத்திற்கு அளவே இல்லையா?)

சுதந்திரப் போராட்டத்திற்கு ஊடகத்துறை தன்னை அர்ப்பணித்துக் கொண்ட காலகட்டம் ஒன்று இருந்தது. அன்றைய தினம் மக்களை அடிமை மன நிலையில் இருந்து மீட்டெடுக்கும் உக்கிரமான வேலையை பாரதியார், வ.உ.சி, சுப்பிரமணிய சிவா, திருவிக, வரதராஜுலு நாயுடு..போன்றோர் பயன்படுத்தினர். அதை மக்களின் சமூக விடுதலைக்கு பெரியார்,குத்தூசி குருசாமி,அண்ணா பயன்படுத்தினர்.

அதன் பிறகு நாட்டு நடப்புகளை,மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை, ஆட்சியாளர்களின் அதிகார துஷ்பிரயோகங்களை அம்பலப்படுத்தி விழிப்புணர்வூட்ட டி.எஸ்.சொக்கலிங்கம், ‘சக்தி’வை.கோவிந்தன், எஸ்.ராமகிருஷ்ணன், சதானந்தம், பா.ஜீவானந்தம், வ.விஜயபாஸ்கரன் போன்ற பலர் இதழியல் துறையை மக்கள் நலன் சார்ந்து ஒரு தவமாக எண்ணி அறம் காத்தனர்!

தற்போது, ஊடகத்துறையின் உரிமைகள் பறிக்கப்பட்டு, அவை,ஆள்வோரின் ஊதுகுழலாக மாற்றப்பட்டு வருகின்றன. இதை எதிர்க்கத் துணிவின்றி தானும் அதில் ஒரு அங்கமாக மாறி, ‘தி இந்து தமிழ் திசை’ தன்னை பிழைப்புவாத இதழியலின் பிதாமகனாக வெளிப்படுத்தி கொண்ட வகையில் அதன் சாயம் வெளுத்துவிட்டது மகிழ்ச்சியே!

ஒரு செய்தி பத்திரிகை ஒரு நடிகருக்கு சிறப்பு புத்தகம் போட வேண்டியதன் அவசியம் தான் என்ன? ரஜினிகாந்த் குறித்து ஒன்றிரண்டு சிறப்பு கட்டுரைகள் இடம் பெற்றால், அதை இயல்பாக கருதலாம்!

அவர் என்ன தேசியத் தலைவரா? எளிய மக்களின் போர்குரலாகத் திகழ்ந்த போராளியா? அரசியல் மறுமலர்ச்சிக்கு வித்திட்டவரா? இன்றுவரை இந்த மனிதர் தான் யார்? தனக்கான அரசியல் எது? என்ற சுயபுரிதலின்றி, இந்துத்துவ சக்திகளின் கைப்பிள்ளையாக வெளிப்பட்டவண்ணம் உள்ளார். அப்படிப்பட்ட அரசியலுக்கு வலு சேர்க்கும் கருவிகளில் தன்னைத்தானும் ஒன்றாக இந்து தமிழ் திசை கருத தொடங்கிவிட்டதையே இந்த ரஜினி சிறப்பு மலர் உறுதிபடுத்துகிறது!

இது, பாமரத்தனமான சினிமா ரசனையை பக்குவமாக திசைமாற்றி.., தங்கள் அரசியலுக்கான அடித்தளமாக்க படித்த மேட்டுக்குடியினர் செய்யும் சூதன்றி வேறென்ன…?

‘’படித்தவன் சூதும்,வாதும் செய்தால் ஐயோவென்று போவான்…’’ என்றார் பாரதி! இவர்கள் ஐயோவனெப் போவது பற்றி நமக்கு கவலையில்லை வாசகர்களையல்லவா புதைகுழிக்கு தள்ளுகின்றனர்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time