ஆரவல்லி மலைத் தொடரை அழிப்பதற்கு வலுக்கும் எதிர்ப்புகள்!

ச. அருணாசலம்

இயற்கையை அழிக்க தடை செய்யும் சட்டங்களை தகர்த்து புதிய சட்டங்கள் இயற்றுவது, தன் ஆத்ம நண்பர் அதானிக்கு ஆரவல்லி மலைத் தொடரை அர்ப்பணிப்பது, அதற்கு நீதிமன்றங்களை நிர்பந்தப்படுத்துவது, எதிர்ப்போர் மீது எல்லா அடக்குமுறைகளையும் ஏவுவது..என்ற பாஜக அரசின் பகாசூர இயற்கை அழிப்புக்கு எழுந்துள்ள எதிர்ப்பலைகள் ஒரு அலசல்;

இமயமலைத் தொடரை விட பழமையான ஆரவல்லிக் குன்றுகள்!

உயரம் குறைந்த மலைத்தொடர் ஆனாலும் வட இந்திய மக்களின் உயிர் மூச்சாக திகழ்கிறது.

ஏறத்தாழ 700 கி.மீ நீளமுள்ள இந்த மலைத்தொடர் புது தில்லியில் தொடங்கி ஹரியானா மாநிலம், ராஜஸ்தான் மாநிலம் ஆகியவற்றில் பரந்து விரிந்து குஜராத் மாநிலம் வரை நீளும் இந்த ஆரவல்லி மலைத் தொடர்கள் , தார் பாலைவனத்திலிருந்து கங்கைச் சமவெளியை பாதுகாப்பதோடன்றி, இம்மாநிலங்களின் நிலத்தடி நீர் , மழை அளவின் தன்மை, பருவகாற்றுகளின் வீச்சு ஆகியவற்றை தீர்மானிக்கும் சூழலமைப்பாக (மலைகள் ) திகழ்கின்றன. எனவே இக்குன்றுகளை, இதன் சரிந்த பள்ளத்தாக்குகளை, அடர்த்தி அதிகம் இல்லாத காடுகளை அதை ஒட்டியுள்ள நிலப்பரப்புகளை ஆரவல்லி மலைத்தொடர் என்பதைவிட ஆரவல்லி சூழலமைப்பு என்று வருணிப்பதே பொருத்தனமானதாகும்.

இக்குன்றுகளும், இக்குன்றுசூழ் காடுகளும் , நிலப்பகுதியும் பல ஆயிரம் ஆண்டுகளாக அழியாமல் இருப்பதற்கான காரணம் இச்சூழலுடன் இயைந்து மக்கள் கூட்டம் தங்களது வாழ்க்கையை அமைத்து கொண்டு வாழ்ந்து வந்த விதமே ஆகும் . இத்தகைய வாழ்க்கை முறையையே நமது பாரம்பரியம், நமது பண்பாடு என பெருமை கொள்கிறோம்.

எப்பொழுதெல்லாம் இயற்கையோடு இயைந்த வாழ்க்கைக்கு, வணிகமயச் சூழலும், நாகரீகம் வளர்ச்சி என்பதன் பெயரால் நகரமயமாக்கும் போக்கும் இடையூறு ஏற்படுத்துகிறதோ அப்போதெல்லாம் இயற்கை சூழலை பேணி பாதுகாக்க சில உயர் நெறிகள் மக்களால் பின்பற்றப்படுகின்றன.

கி.பி 1, 500 ஆண்டு வாக்கிலே ராஜஸ்தானில் பார்மர் வகுப்பு மக்களிடையே குரு ஜாம்போஜி, மேக்ரிஷி, போன்ற மெய் ஞானிகள் இயற்கையை அழிக்காமல் இயைந்து வாழும் அறநெறிகளை எடுத்தியம்பினார்கள்.

ராஜஸ்தான் மாநிலத்தின் நாட்டார் தெய்வ வழிபாடே இயற்கையை காப்பதற்கானதே!

அங்கு கேஜ்ரி மரங்களை வெட்டுவதை எதிர்த்து உயிர் துறந்தவர்

அம்ரிதா தேவி. இத்தகைய இயற்கை சார்ந்த முரணற்ற அறநெறி இந்திய மக்களின் வாழ்வு நெறியாக இருக்கிறது.

விடுதலையடைந்த இந்தியாவில் வளர்ச்சி என்ற பேரவா சிலரின் கண்களை மறைத்தாலும் 1980களில் இந்திய அரசு சற்றே விழித்து கொண்டது எனலாம்.

வனப்பாதுகாப்பு சட்டம் 1980, சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986, வன உரிமைச்சட்டம் 2006

போன்ற சட்டங்கள் சூழலுக்கான நீதிமுறைமைக்கு சட்ட அங்கீகாரம் கொடுத்தது எனலாம்.

பெசா சட்டம் (PESA 1996) உள்ளிட்ட பல சட்டங்கள் இத்தனை சட்டங்கள் இருப்பினும் சட்டத்தின் சந்து பொந்துகளை பயன்படுத்தி, இயற்கை வளங்களை சூறையாடிவருகின்றனர்.

நவம்பர் 20 அன்று, தனது பதவிக்காலம் முடிய (நவம்பர்24) சில நாட்களே இருக்கும் வேளையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி. ஆர் கவாய் தலைமையிலான அமர்வு ஆரவல்லி மலைத்தொடர்கள் என்பதற்கு ஒரு விளக்கம் கொடுத்து தீர்ப்பளித்துள்ளது.

100 மீட்டர் அல்லது அதற்கு அதிகமான உயரம் கொண்ட மலைகள் மட்டுமே ஆரவல்லி மலைகளாக கொள்ளப்படும் என்றும், 500 மீட்டருக்குள் ஒன்றுக்கும் மேற்பட்ட மலைகள் இருந்தால் மட்டுமே அது ஆரவல்லி மலைத் தொடராக கருதப்படும் என்றும் அரசு நிபுணர் குழு அளித்த வரையறையை உறுதி செய்து கடந்த நவம்பர் 20-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதன்படி மொத்தமுள்ள 12,081 குன்றுகளில் 1,048 குன்றுகளே (100 மீ உயரம் கொண்டவை) அதாவது, வெறும் 8.7 % மலைப்பகுதியே “பாதுகாக்கப்படும்”. மற்றவை “வளர்ச்சிக்காக” தோண்டப்படுவதில் தடையில்லை. ஏனெனில் தேசீய பாதுகாப்பை (National Security)மனதில் கொண்டு இங்கு கிடைக்கும் கனிமங்களை – தங்கம், டங்ஸ்டன், லெட், கிராஃபைட், மாலிப்டெனம், லித்தியம் போன்ற அரியவகை கனிமங்களை- இந்தியாவின் நீடித்த வளர்ச்சிக்காக நாம் பயன்படுத்த வேண்டியுள்ளது, இதனால் ஏற்படும் மனித மற்றும் சூழல் இழப்புகள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளதக்கதே!

என்று உச்சநீதிமன்றம் உணர்த்தியுள்ளது. இது போலத்தான் அந்தமான் நிக்கோபர் திட்டத்தையும் தேசீய பாதுகாப்பு என்ற காரணத்தை கூறி தேசீய பசுமை தீர்ப்பாயம் மற்றும் உச்சநீதிமன்றம் ஆகியவற்றை மோடி அரசு ஏமாற்றியது. 2021ல் 72,000 கோடி என மதிப்பிடப்பட்ட இத்திட்டம் அதானி குழுமத்திற்கு தாரை வார்க்கப்பட்டது. சுற்றுசூழல் சீரழிவு, பல்லுயிர் இழப்பு, பழங்குடியினர் உரிமைகள் மறுப்பு, கோரல் ரீவ்ஸ் மற்றும் மரைன் ஈகோ சிஸடத்தை அழித்தல் 1,20,000 ச.கிமீ காடுகளை அழித்தல் ஆகியவற்றை நிறைவேற்ற ஆரம்பித்துள்ளது. அங்கு காடுகளை அழிப்பதற்கு ஈடு செய்யும் விதமாக ஹரியானா மாநிலத்திலுள்ள ஆரவல்லி காடுகளில் மரங்கள் நடுவதாக கூறியிருந்த மோடி அரசு இப்பொழுது ஆரவல்லிக்கும் ஆப்பு அடித்துள்ளது.

இங்கு உச்சநீதிமன்றம் வருமுன் காக்கும் முன்னெச்சரிக்கை கொள்கையை (Pre cautionary principle ) கைவிட்டதோடு சூழலுக்கான நீதி முறைமைக்கும் (environmental jurisprudence) வேட்டு வைத்துள்ளது.

இதில் வேடிக்கை என்னவென்றால், ஆட்டத்தில் மிகப்பெரும் பணமுதலைகளான தனது நண்பர்களை நுழைப்பதற்காக ஆட்டத்தின் விதிகளையே மாற்றுவது அல்லது தளர்த்துவதே தமது பணி என மோடி அரசு பல்வேறு சட்ட விதிகளை இதுவரை மாற்றி அமைத்துள்ளது.

இந்த விளையாட்டு சலித்துவிட்டதோ என்னவோ, விதிகளை மாற்றும் பொறுப்பை உச்சநீதிமன்றத்திடம் இப்பொழுது கொடுத்துள்ளது மத்திய அரசு. அரசின்மேல் வேண்டாத விமர்சனங்கள் இனிமேல் கிளம்பாது அல்லவா? உச்சநீதிமன்ற ஆணைக்கு அடிபணிவது அரசின் கடமை அல்லவா?

என்ன ஒரு சாணக்கியதனம்?

மூன்றாண்டுகளாக ஆரவல்லி மலைத் தொடரமைப்பு என்றால் என்ன என்பதை நிர்ணயிப்பதில் தில்லி, ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநில அரசுகளிடையே ஒருமித்த கருத்து இல்லை என்பதனால் இந்த பகுதிகளில் சுரங்க வேலைகளின் போது கடைபிடிக்க வேண்டிய விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளை ஒழுங்குபடுத்த அரசுகளால் முடியவில்லை. அதிலும் சுரங்கத்தொழிலில் ஈடுபடும் நிறுவனங்கள் பகாசுர நிறுவனங்களாக உள்ள நிலையில் மாநில அரசுகள் வேடிக்கைதான் பார்க்க முடிகிறது.

2010ம் ஆண்டிலிருந்தே உச்சநீதிமன்றத்தின் அதிகாரம் பெற்ற மத்திய குழு (CEC) இந்திய வன அளவை அமைப்புடன் இணைந்து ஆரவல்லி மலைத்தொடர் முழுக்க ஜிபிஎஸ் மூலம் அளந்து வரையறுக்க முனைந்தது, 2018வரை பலமுறை உச்சநீதிமன்றத்தில் குன்றுகள் சட்டபுறம்பான சுரங்க நடவடிக்கைகளால் தகர்க்கப்படுவதை சி இ சி முறையிட்டது.

இதனை நிவர்த்திக்க உச்சநீதிமன்றம், மத்திய அரசின் சுற்றுச்சூழல் , வனம் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சகத்தின் கீழ் ஒரு குழுவை அமைத்ததுஅதன் அதிகாரத்தின் கீழ் நீதிமன்ற அதிகாரம் பெற்ற குழுவையும் இணைத்தது. இந்த குழுவில் மாநில வனத்துறை செயலர்கள், இந்திய வன அளவை (FSI) அமைப்பு அதிகாரி, புவியளவை (GSI) அமைப்பு அதிகாரி, CEC அதிகாரி ஒருவர் ஆகியோர் இருந்தனர் . இவர்கள் அனைவரும் (சி இ சி தவிர) மத்திய அரசின் அதிகாரிகளே ஆவர். சூழல் வல்லுனர்களுக்கோ, இயற்கை ஆர்வலர்களுக்கோ அந்த குழுவில் இடமில்லை ! மத்திய அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்த குழு இறுதியில் 100 மீ. உயரத்தை அளவுகோலாக பரிந்துரைத்தது.

இதை நீதிமன்றத்தின் அதிகாரம் பெற்ற மத்திய குழுவும் (CEC) , நீதிமன்றத்திற்கு நண்பனாக உதவும் ( Amicus Curiae) அமைப்பும் எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையிட்டன. இவற்றை எல்லாம் ‘கவனத்தில்’ எடுத்துக்கொண்டு அவைகளை நிராகரித்த பிறகுதான் கவாய் தலைமையிலான உச்சநீதி மன்ற அமர்வு மத்திய அரசின் குழு பரிந்துரைத்த“100 மீ உயரம் என்ற அளவு கோலை “ ஏற்றுக் கொண்டு தீர்ப்பளித்துள்ளது.

இந்த மலைத்தொடரில் காடுகளின் அடர்த்தியை வனப்பாதுகாப்பு குறியீட்டால் (forest cover) குறிப்பது வழக்கம் .

# அதன்படி 1975 ல் 10467 சதுர கி.மீட்டர் அளவிருந்த பாதுகாப்பு அளவு 1985-ல் வெறும் 6116 சதுர கி.மீட்டராக தேய்ந்து போயிருந்ததை ,

# 3 டிகிரி சரிவிற்கு (slope) பதிலாக குறைந்தபட்சம் 4.57 டிகிரி சரிவை கணக்கில் எடுக்க வேண்டும் என்ற நீதிமன்ற அதிகாரம் பெற்ற குழுவின் பரிந்துரையை,

#உச்சநீதி மன்றம் இதுபோன்ற வழக்குகளில் முன்னெச்சரிக்கை கொள்கையை கையிலெடுத்து ஆபத்து வருமுன் காக்க வேண்டும் என்ற அமிக்கஸ் க்யூரியின் ஆலோசனையை ,

# மழைப்பொழிவு முறை, காற்றின் அளவு மற்றும் தீவிரம், காற்றின் ஈரப்பதம், தட்பவெப்ப

நிலை மாறுதல், நிலத்தடி நீரின் இருப்பு ஆகிய காரணிகளில் ஏற்படப்போகும் பாதக விளைவுகளை கணக்கில் எடுக்காமல்,

# உலகப்புகழ்பெற்ற ரத்தம்போர் புலிகள் சரணாலயம், வரலாற்று புழ்பெற்ற சித்ரோகர் கோட்டை ஆகிய புராதன தளங்கள் புதிதாக கொடுக்கப்பட்டுள்ள ஆரவல்லி மலைத்தொடர் என்ற வரையறைக்குள் வராது என்பதை புரிந்தோ புரியாமலோ உச்சநீதிமன்றம் நவம்பர்20ல் சர்ச்சைக்குரிய தீர்ப்பை வழங்கியது.

சுரங்க நடவடிக்கைகளுக்கான நிலையான மேலாண்மை திட்டத்தை மத்திய அரசு தயாரிக்க வேண்டும் என்றும், அதுவரை புதிய சுரங்கத்தொழிலுக்கான அனுமதிகள் கூடாது என்றும் நீதிமன்றம் கூறியது. மோடி அரசோ மௌனமாக புன்னகைத்தது! தங்கள் மீது பழி விழாது என இறுமாந்திருந்தனர்.

ஆனால் 90 சதவிகித மலைக்குன்றுகள் பாதுகாப்பிழந்து சூறையாடப்படும் ஆபத்த்து அனைவரையும் உலுக்கியது. மலைகள் தகர்க்கப்பட்டு கனிமங்களை தனியார்கள் கொள்ளையடிப்பதும், சூழல்கள் மாசுபட்டு மக்களின் வாழ்வே கேள்விக்குறியாகி விடும் அபாயம் மக்களை திடுக்கிட வைத்தது.

மலைகளை உடைத்து நொறுக்கி கோல்ஃப் மைதானங்களாக வும், அடுக்குமாடி கட்டிடங்களும் கட்டியெழுப்ப ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் துடிப்பதும் இந்தக் கொள்ளைக்கு வெளிநாட்டு முதலீட்டை கொண்டு வரவும் ஆட்சியாளர்களும் அவர்களது நண்பர்களும் துடிக்கின்றனர். ஆனால் மக்களின் எதிர்காலம் வருங்கால சந்ததியினரின் வாழ்வு சூன்யமாவதை யாரால் பொறுக்க முடியும்?

ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கேலாட், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முதல் அனைத்து எதிர்கட்சிகளும் குரலெழுப்பின. ராஜஸ்தான் மாநிலத்தில் உதய்ப்பூர், ஹராயானாவின் குருகிராம் மற்றும் பல்வேறு நகரங்களில் சுற்றுப்புற ஆர்வலர்களும், மாணவர்களும், பொதுமக்களும் ஆரவல்லியை காப்பாற்றுவோம் என கிளர்ச்சிகளில் குதித்தனர், அமைதிப்பேரணிகள் தில்லி என் சி ஆரில் வெடித்தன. பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் போராடத்தொடங்கினர்.

மெதுவாக விழித்துக் கொண்ட மோடி அரசு, அமைச்சர் பூபேந்திர யாதவ் மூலம் அறிக்கைகளும் விளம்பரங்களும் செய்தனர், ஆரவல்லியில் சுரங்க வேலைகட்கு மத்திய அரசு தடை போட்டுள்ளது என்று அறிவித்தனர். நீதிமன்றம் ஏற்கனவே விதித்திருந்த தடையை மத்திய அரசு இப்போது போடும் தடை போல சித்தரித்து ஏமாற்ற முயற்சித்தனர். பக்கம் பக்கமாக விளம்பரங்கள் கொடுத்தனர் . இந்த தீர்ப்பால் மொத்தமுள்ள 1,43,000 சதுர கி.மீ அளவுள்ள பகுதியில் 217.89 சதுர கி.மீ பகுதியே சுரங்கவேலைகளுக்கு திறந்துவிடப்பட்டுள்ளது என்று புதுகணக்கு கூறி மழுப்பினார் அமைச்சர்.

மோடி அரசுக்கு இதுநாள்வரை முட்டு கொடுத்து கொண்டிருந்த ரிப்ப்ளிக் டி வி அர்னாப் கோஸ்வாமி , மோடி அரசின் இந்த மோசடியை, நீதிமன்றத்தின் “மோசமான தீர்ப்பை” கண்டித்து காணொலிகள் போட்டு வருகிறார், நீதிபதி கவாய் அவர்களை பேட்டி கண்டு கேள்விகளை தொடுக்கிறார், முன்னாள் அமிக்கஸ் க்யூரியும், வழக்கறிஞருமான ஹரீஷ் சால்வே உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்றும் முன்னெச்சரிக்கை கொள்கையை உச்சநீதிமன்றம் கடைபிடித்திருக்க வேண்டுமென்றும் கூறியுள்ளார்.இவ்வாறு கோட்டைக்குள்ளே குத்து வெட்டு நடக்கிறது!

சுரங்க கொள்ளையர்களுக்கும், ரியல் எஸ்டேட் கொள்ளையர்களுக்கும் பாரம்பரியமிக்க,சாமான்ய மக்களின் வாழ்வாதாரமாக திகழும் ஆரவல்லி மலைத்தொடரையே நீதிமன்றத்தின் உத்தரவின் மூலம் தாரைவார்க்க துணிந்த மோடி அரசு

இப்பொழுது எழுந்துள்ள மக்கள் கொந்தளிப்பின் ஆழத்தை இன்னும் புரிந்து கொள்ளவில்லை.

எதிர்ப்புகள் எழாவிட்டால் மத்திய அரசு இப்பிரச்சினையை மௌனமாக கடந்து போயிருக்கும். இன்றும் மோடி அரசும் , மூச்சுக்கு முன்னூறு முறை ‘பாரம்பரியம்’ பற்றி பேசும் ஆர் எஸ் எஸ் அமைப்பும் இந்த மோசடி தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய கோரவில்லை, முன்வரவில்லை!

ஆனால் உச்சநீதிமன்றம் இதை புரிந்து கொண்டிருப்பதன் வெளிப்பாடே , நவம்பர்20-ந்தேதி அளிக்கப்பட்ட தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய முன்வந்துள்ள நேற்றைய அறிவிப்பாகும்.

ச. அருணாசலம்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time