வன்முறையை வளர்த்தெடுக்கும் அரசியல், சமூக கலாச்சாரம்!

பிற உயிர்களை துன்புறுத்தி இன்புறுதலை, கொலையை நார்மலைஸ் ஆக்கியத்தில் சமூகத்தின் பங்களிப்பு பல விதங்களில் உள்ளது. வீடுகளில், பள்ளிகள், கல்லூரிகளில், பொதுவெளியில் கலைப் படைப்புகளில் எல்லா இடங்களிலும் வன்முறையின் வடிவாம்சத்தை உள்வாங்குகிறார்கள் சிறார்கள்; ஒரு அலசல்;

மனிதன் ‘மசில் பவரா’லோ, அறிவாற்றலாலோ அல்ல, சக உயிர்கள் மீது காட்டும் கருணையால் தான் மரியாதைக்குரியவனாகிறான்.. என்ற புரிதலை புதைத்தொழித்ததில் நமக்கும் பங்கில்லையா?

வாடிய பயிரைக் கண்டே வாடிய வள்ளலார் பிறந்த மண்ணில் இன்று வாளேந்திய சிறுவர்கள் சக மனிதனை கொன்று ரசிக்கும் மனோபாவத்தை பார்க்கிறோம்.

சமூக வளை தளங்களில் இதற்கு முன்பே சம்பந்தப்பட்ட சிறுவன் 60 க்கு மேற்பட்ட ரீல்ஸ் போட்டுள்ளான். இதே போல ரயிலில் அமைதியாக நிற்கும் ஒரு பெரியவரிடம் அரிவாள் காட்டி ஆட்டம் போடுகிறான்.

இந்த சந்தர்ப்பத்திலேயே காவல்துறை சம்பந்தப்பட்ட இளைஞர்களை தூக்கி இருந்திருக்க வேண்டும்.

கொலையை நார்மலைஸாக பாவிக்கும் மனநிலை இவர்களுக்கு வானத்தில் இருந்து வந்து இறை சக்தியால் இறங்கவில்லை. தங்களை சுற்றியிருக்கும் சமூகத்திடம்  இருந்தே பெற்றுள்ளனர்.

தயை உணர்வும் , கருணை மனோபாவமும் சிறு பிராயத்திலேயே இதயத்திற்குள் இறக்கி வைக்கப்பட வேண்டும். அதற்கான சுற்றமும், சுழலும் வாய்க்க வேண்டும்.

பெற்றோர்கள், நெருங்கிய உறவினர்கள், பள்ளி ஆசிரியர்கள், அருகாமையில் வசிப்பவர்கள்.. ஆகியோர் இவர்களின் சுபாவத்தை சுமார் ஏழெட்டு ஆண்டுகளாகவே அவதானித்தும் அலட்சியப்படுத்தியதன் விளைவை தான் நாம் தற்போது பார்த்துள்ளோம்.

நடந்துள்ள சம்பவம் ஏதோ அரிதினும் அரிதானதல்ல. சிறார்கள் கொலை வாளினை எடுத்து ஆசிரியர்களை, சக மாணவர்களை வெட்டிய சம்பவங்கள் பத்து, பதினைந்து ஆண்டுகளில் பரவலாக அரங்கேறியவண்ணம் உள்ளது.

 

இது போன்ற சிறு வயது கொடூர குற்றவாளிகள் அந்தந்த பகுதி உள்ளுர் அரசியல்வாதிகளாலோ, சாதிய இயக்கங்களாலோ ஆதரிக்கப்படுவர்களாக உள்ளனர். இவர்கள் எவ்வளவு கொடூர குற்றச் செயல்களில்  ஈடுபட்டாலும் ஜாமீன் பெறத்தக்க அளவில் வழக்கறிஞர்களையும் வைத்துள்ளனர்.

உள்ளூர் காவல்துறையும், மாவட்ட நீதிமன்றங்களும் பல்லாண்டுகளாகவே இத்தகைய குற்றச் செயல் செய்யும் சிறார்களுக்கான பின்புலத்தை கண்டும் காணாமல் செயல்பட்டு வருகிறார்கள்!

கமிட்மெண்ட் இல்லாத கரப்ஷன் மிக்க காவல் துறையினர் தங்கள் வருமானத்திற்காக  அரசு பள்ளி, கல்லூரி  மாணவர்கள் மத்தியிலும், சேரிப் பகுதிகளிலும் போதை பொருள் விற்போரை கண்டும் காணாமல் விடுகிறார்கள். பலவிதமான போதை வஸ்த்துகளின் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இப்படி அதிகரிக்கும் போது ஏதோ கொஞ்சத்தை கைப்பற்றி கணக்கு காட்டிவிடுகிறார்கள் காவல்துறையினர்.

அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின் நோய்

தம்நோய்போல் போற்றாக்கடை. 

மற்றவர்களின் துன்பத்தை தன் துயர் போல  எண்ணமுடியாதவர்கள் அறிவிருந்தும் பயனற்றவர்கள். மெத்த படித்தவர்களே சுய நலமாக வாழும் சமூகத்தில் அந்த குணம் பாமரர்கள் வரை பாயத்தானே செய்யும்.

வன்முறை நிறைந்த சினிமாக்களே விடலை பையன்களை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. வன்முறைக் காட்சிகளை நுட்பமாக  காட்சிப்படுத்தும் இயக்குனர்கள் கொண்டாடப்படுகிறார்கள். வன்முறையை ரசிக்கதக்க ஸ்டைலில்  செய்யும் ஹீரோக்கள் சிறார்களின் இதய நாயகர்களாகி விடுகிறார்கள். உயிர்வதைகளை குற்றவுணர்வின்றி செய்யும் ஹீரோக்களே சிறார்களின் ரோல்மாடல்களாகிறார்கள்!

வன்முறை காட்சி கொண்ட படங்களே வசூலை குவிக்கின்றன என்பதால் அத்தகைய படங்களை தயாரிப்பதிலும், இயக்குவதிலும், நடிப்பதிலும் யாருக்கும் குற்றவுணர்வு ஏற்படுவதில்லை. கலை வடிவங்களில் சொல்லப்படும் செய்திகள் சமூகத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி அதுவதற்கான  எதிர்வினைகளை ஏற்படுத்தவே செய்கின்றன.

நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோருக்கு

கொன்றாகும் ஆக்கம் தடை

என்றார், திருவள்ளுவர். கொலையால் பெரும் செல்வம், புகழ்  போன்றவை ஏற்படினும், சான்றோர் எனப்படுவோர் அதனை இழிவாக கருதி புறக்கணிப்பர்.

கத்தி எடுத்து உயிர்வதை செய்து கொல்வது மட்டுமே வன்முறையல்ல, ஊழல் முறைகேடுகளின் வழியே வரைமுறையின்றி சேர்க்கபடும் செல்வக் குவிப்பும், உழைக்கின்ற ஏழை எளியோரை வருத்தி சுரண்டும் செல்வச் செழிப்பும் மாபெரும் வன்முறை தான். அப்படிப்பட்ட ஆட்சியாளர்களின் அநீதிகளை மறைத்து, அவர்களின் புகழ்பாடலும் வன்முறை தான்.

சாவித்திரி கண்ணன்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time