திருத்தணி சம்பவம்; மறைக்கப்படும் உண்மைகள்!

-சாவித்திரி கண்ணன்

திருத்தணியில் மிகக் கொடூரமான முறையில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டுப்பட்ட – தலை பிளக்கப்பட்ட – வட மாநில இளைஞர் சுராஜ் 48 மணி நேரத்திற்குள் சிகிச்சை முடிந்து அனுப்பி வைக்கப்பட்டிருப்பதன் பின்னணி அதிர வைக்கிறது. இதன் பின்னணியில் உள்ள  அரசின் மனிதாபிமானமற்ற போக்கும், சாதி அழுத்தமும் கவலையளிக்கிறது;

இவ்வளவு கொடூரமாக தாக்கப்பட்டுள்ள ஒருவர் உயிருடன் இருப்பதே அபூர்வம். அந்த வகையில் அவரை பிழைக்க வைத்தமைக்கு அரசு மருத்துவர்களை மனதாரப் பாராட்டலாம். ஆனால், மிக மோசமான உடல் நிலை கொண்ட அவருக்கு இன்னும் பல நாட்கள் நீடித்த சிகிச்சையும், தொடர் மருத்துவக் கண்காணிப்பும் தேவைப்படும் நிலையில் அவசர, அவசரமாக  டிஸ்சார்ஜ் ஏன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்?

இந்த சம்பவம் குறித்து நாம் விலாவாரியாக விசாரித்த போது , இது வரை வெளியான செய்திகளில் பல உண்மைக்கு புறம்பானவை, உள் நோக்கம் கொண்டவை என அறிய வந்தது.

வெட்டுப்பட்ட வட மாநில இளைஞர் 19 வயதுள்ளவர், அவருக்கு 34 வயது என்பது பொய். அதே போல அவர் மகாராஷ்டிராவின் நாக்பூரை சேர்ந்தவர் என வெளியான தகவல் உண்மையல்ல, ஒடிசாவின் கால்கட்டி மாவட்டத்தின் தர்மம் என்ற கிராமத்துக்காரர். தந்தை பெயர் கவிராஜ்.

இரண்டாவது பிளாட்பாரத்தில் இறங்கிய சுராஜை குற்றவாளிகள் மூன்றாவது பிளாட்பாரம் அருகில் பாழடைந்த ஆள் ஆரவாரமற்ற ரயில்வே குவார்ட்டர்ஸ் அருகே தான் துள்ளத் துடிக்க மீண்டும், மீண்டும் வெற்றி அவன் துடிப்பதை பார்த்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதை வீடியோ எடுத்து போட்டால் தங்களுக்கு கெத்து ஏற்படும். தங்களைக் கண்டு சகலரும் மிரளுவார்கள், ஒரு தாதாவாக வலம் வரலாம் என்பதே அவர்களின் நோக்கமாக இருந்துள்ளது. ஏற்கனவே பட்டாகத்தியுடன் அலம்பல் செய்து இவர்கள் ஆறு வீடியோக்கள் வெளியிட்ட போதே காவல்துறை விழித்துக் கொள்ளாமல் இருந்ததே, இது போன்ற கொடூர ரீல்ஸ் போடும் அடுத்த கட்டத்திற்கு இவர்கள் நகரந்தது எனலாம்.

அடுத்த ரயில் வந்த பிறகு இறங்கி நடந்தவர்கள் சுராஜ் படுகாயத்துடன் ரத்தமாக கிடந்ததைப் பார்த்து ஆம்புலன்ஸை வரவழைத்து லோக்கல் ஆஸ்பிட்டல் அனுப்பி உள்ளனர்.

இவ்வளவு மோசமான ரத்த காயங்களுக்கு அங்கே சிகிச்சை போதுமானதில்லை என்பதால், திருவள்ளுவர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்புகிறார்கள். தலையிலும், உடம்பிலும் படக் கூடாத இடங்களில் வெட்டுப்பட்டுள்ளதால் இதை பெரிய டாக்டர்கள் தான் கையாள முடியும் என மூன்றாவது கட்டமாக ராஜிவ்காந்தி மருத்துவமனை அனுப்புகிறார்கள். ஆனால், ராஜிவ் காந்தி மருத்துவமனையிலோ அவர் சில மணி நேர சிகிச்சையிலேயே சொந்த ஊருக்கு போய்விட்டார் என்கிறார்கள்.

19 வயது இளைஞர். படுகாயத்துடன் உள்ளவர், தொடர் சிகிச்சை தேவைப்படும் நிலையில் சென்னையில் குடும்பமோ, உறவுகளோ இல்லாத சூழலில் எப்படி வெளியே அனுப்பப்பட்டார் என்பது புரியாத புதிராக உள்ளது. அவரது குடும்பத்திற்கு தகவல் தரப்பட்டு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தால் பிரச்சினை இல்லை.

இவ்வளவு சென்சிட்டிவ்வான இந்த விவகாரத்தில் சுகாதாரத் துறை அமைச்சரோ அல்லது துணை முதல்வரோ நேரடியாக மருத்துவமனை வந்து பாதிக்கப்பட்ட இளைஞரை பார்த்து தைரியம் கூறி இருந்தால், அது தமிழகத்தில் வாழும் அனைத்து வடமாநில தொழிலாளிகளுக்கும் நம்பிக்கை தரும் செய்தியாக இருந்திருக்கும். ஆனால், இந்த விவகாரம் செய்தியானதையே அரசு விரும்பவில்லை போலும்.

இந்த விவகாரத்தில் பேட்டி அளித்த நேர்மையான போலீஸ் அதிகாரி அஸ்ரா கார்க் அவர்கள் இந்த விவகாரத்தை மிக மேலோட்டமாக கையாண்டது நன்கு வெளிப்பட்டது. இவருமே கூட பாதிக்கப்பட்ட இளைஞரையோ, கைது செய்யப்பட்ட பசங்களையோ நேரில் சந்திக்காமல் எப்.ஐ.ஆர் தகவல் அடிப்படையில் பேசுகிறார். பத்திரிகையாளர்கள் கேள்விக்கு பதில் அளிக்கும் போது, ”அந்த வடமாநில இளைஞர் முறைத்த காரணத்தால் இவர்கள் வெட்டினார்கள்” என குற்றவாளிகளின் குரலை வெளிப்படுத்தினார். அதிர்ச்சியாக இருந்தது.

வீடியோ பதிவில் அந்த வட மாநில இளைஞரை வெறுப்பேத்தும் வகையில் இந்த குற்றவாளி கத்தியை சுழற்றி வெட்டப்போவதாக பயமுறுத்திய போதிலும், அவன் இயல்பாகவே அதை மறுத்தான். நம்மை வைத்து ஏதோ விளையாடி ரீல்ஸ் எடுக்கிறார்கள் என்பதாக அவன் கருதியதை போல இருந்தது.

குற்றவாளிகள் தங்களை நியாயப்படுத்த அவ்விதம் கூறியுள்ளனர். ஆனால், அதில் உண்மை இல்லை என அஸ்ராகார்க் சொல்லி இருக்க வேண்டும். மேலும், ”படுகாயமுற்ற  அந்த வட மாநில இளைஞர் டிஸ்சார்ஜ் ஆகி சொந்த ஊருக்கு போய்விட்டார்” என அவர் சொல்லும் போது அங்கே நிருபர்கள் அது குறித்து கேள்வி கேட்டு விளக்கம் பெறாததது ஆச்சரியப்படுத்தியது.

இந்த வழக்கில்  பொது மக்களுக்கு பலவற்றில் விடை தெரியவில்லை.

இவ்வளவு கொடூர மனநிலை கொண்டவர்களை சட்டப்படி தண்டிக்க அரசு தரப்பில் ஆர்வம் காட்ட்டாமையை புரிந்து கொள்ள முடியவில்லை. சம்பவத்திற்கு அடுத்த நாள் அதிகாலை நான்கு மணி அளவிலே சம்பந்தப்பட்ட பசங்களை கைது செய்து மாஜிஸ்திரேட் வீட்டிற்கு அழைத்துச் சென்ற போலீசார் நடந்த சம்பவ வீடியோவை நீதிபதி அவர்களின் பார்வைக்கு கொண்டு செல்லாமல் சாதாரணமாக வாய் மொழியாக கூறிய வகையில், அதில் ஒருவருக்கு உடனே சொந்த ஜாமீனில் விடுதலை தரப்படுகிறது.

இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட பசங்களில் மூவர் தாழ்த்தப்பட்டவர்கள் என்பதால், அவர்கள் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியும், அதன் வழக்கறிஞர் குழாமும் காவல் துறைக்கு பெருந்திரளுடன் வந்து கடும் நெருக்கடி தந்ததாகச் சொல்லப்படுகிறது. ‘திருவள்ளுவர் மாவட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்கு வங்கிக்கு சேதாரம் வந்துவிடக் கூடாது’ என்ற அரசியல் அழுத்தம் தான் காவல்துறை இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட இளைஞர்கள் சுலபத்தில் வெளியே வருவதற்கு ஏதுவாகவே செயல்பட நிர்பந்திக்கப்பட்டுள்ளனர் என்பது மக்களின் பார்வையாக உள்ளது.

அத்துடன் சம்பவத்தன்று அந்த நால்வரும் டாஸ்மாக்கில் இரண்டு குவாட்டர் வாங்கிக் கொண்டு அதை கலந்து குடிக்க சோடாவும், பிளாஷ்டிக் டம்பளர்களும் வாங்கித் தான் ரயில் ஏறி உள்ளனர். அந்த நேரத்தில் அவர்கள் போதை வஸ்துக்கள் எதையும் உட்கொள்ளவில்லை. இதில் அவர்கள் மது குடித்திருந்த விவகாரம் ஏனோ வெளிப்படுத்தப்படவில்லை. 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு அரசாங்கத்தின் டாஸ்மாக்கில் மது விற்பனை செய்யப்பட்டது விதிமீறலாகும்.

மொத்தத்தில் தமிழக அரசு இந்த விவகாரத்தை மனிதாபிமானத்தோடு அணுகவில்லை என்பதும், மக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த இந்த விவகாரத்தில் குற்றவாளிகளை சட்டப்படி கையாளாமல் மென்மையாக கையாண்டுள்ளனர் என்பதும்  தெரிகிறது.

சாவித்திரி கண்ணன்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time