சரத்பவார் அஜித்பவார் விவகாரத்திற்கும், ராமதாஸுக்கும் அன்புமணிக்குமான விவகாரத்திற்கும் இவ்வளவு ஒற்றுமைகளா? என்று ஆச்சரியமாக உள்ளது. ‘ குடும்பம் அதிகாரத்தில் இருக்க வேண்டும்’ என்ற ஒற்றை நோக்கத்தால், ‘வாரிசுகளாலே வதைபட்டாலும் ஒன்றிணைவார்கள்’ என்பதையே இவர்களின் வரலாறு சொல்கிறது;
தலைவர் எப்படி உள்ளாரோ, அப்படித்தான் அவரது வாரிசும் அச்சுப் பிறழாமல் உருவாகும் என்பதற்கு இந்த இரு அரசியல் குடும்பங்களின் வாரிசுகள் வளர்த்த கிடாவே மார்பில் முட்டிய கதையாக தங்கள் தந்தையையே பலி கொடுத்து, தங்களை வளர்த்துக் கொண்டமை சான்றாகிறது.
”ஊழல்வாதி, கட்சி மாறி, ஓடுகாலி, சந்தர்ப்பவாதி, அதிகார விரும்பி, கட்சியிலும், குடும்பத்திலும் ஒரு சேர பிளவை உருவாக்கி விட்டான். இனி ஒரு போதும் அவனை நான் ஏற்கமாட்டேன்…” என்று தன் வாரிசு அஜித்பவாரைக் குறித்து சொன்னவர் தான் சரத்பவார்.
ஆனால், அஜித்பவாரை குறித்து சர்த்பவார் என்ன சொன்னாரோ, அவை அனைத்தும் அவருக்கும் அப்படியே 100 சதவிகிதம் பொருந்தும்.
தன்னை வளர்த்துவிட்ட காங்கிரஸ் கட்சியை பிளந்து கட்சி ஆரம்பித்தவர் சரத்பவார். மீண்டும் அவரை மன்னித்து கட்சியில் இணைத்தது காங்கிரஸ் மீண்டும் பிளவுபடுத்தி தேசியவாத காங்கிரஸை உருவாக்கினார் சரத்பவார். அது போலவே தன்னுடைய அரசியல் ஆசான் சவானின் முதுகில் குத்தியவர்.
ராமதாஸ் தன்னை வளர்த்துவிட்ட வன்னியகுல முன்னோடித் தலைவர்கள் அனைவருக்கும் துரோகம் செய்து தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்திக் கொண்டவர். தமிழக அரசியலில் சாதி ஆதிக்கம் வேறூன்ற வித்திட்டவர், மிக உயர்ந்த கொள்கைகளை பேசி தன்னை வளர்த்துக் கொண்டு, அந்த கொள்கைகளுக்கு நேர் எதிராக செயல்பட்டு அதிகார பலத்தையும், பொருளாதார பலத்தையும் வளர்த்துக் கொண்டவர்.
”அன்புமணி தகுதி இல்லாதவன், பொய் பேசுபவன், ஏமாற்றுக்காரன், உழைக்க மறுப்பவன், என் நம்பிக்கைக்கு பாத்திரமாக நடக்காதவன், தன் தந்தைக்கே துரோகம் செய்துவிட்டான். நான் எப்போது சாவேன் என நினைக்கிறான், என்னையே ஒட்டுகேட்கும் கருவி வைத்து வேவு பார்க்கிறான். என் மார்பிலும் உடலிலும் ஈட்டியால் குத்துகிறான். சொந்த அக்காவின் மகனையே இளைஞர் அணித் தலைவராக ஏற்க மறுக்கிறான்” எனப் புலம்பும் ராமதாஸ், ”இன்னும் கொஞ்ச நாள் என் வழியில் நடந்தால் எதிர்காலத்தில் கட்சியே அவனுக்குத் தான்” என்கிறார்.

ஆகவே, ராமதாஸ் அன்புமணி இடையிலான மோதலின் ஆயுள் வெகு காலத்திற்கு தொடராது என நாம் நம்பலாம். இதற்கு உதாரணமாக கட்சியை பிளந்து, தனிகட்சி ஆரம்பித்து சரத்பவாரையே சரிவில் தள்ளிய அஜித்பவாரும், சரத்பவாரும் தற்போது வரும் உள்ளாட்சித் தேர்தலில் ஒன்றிணையப் போகிறார்களாம்.
தன்னுடைய குடும்ப அரசியல் காரணமாக நம்பகத் தன்மை இல்லாத – பொதுப் பணத்தை களவாடுகின்ற – அண்ணன் மகன் அஜித்பவாரை மூன்று முறை துணை முதல்வராக்கி அழகு பார்த்தவர் தான், சரத்பவார்! காரணம் ரத்தபாசமே!
அரசியல் குடும்பங்களில் எவ்வளவு தான் படு பயங்கர மோதல்கள் நடந்தாலும், குடும்பத்தைக் கடந்து அடுத்தவர் கையில் அதிகாரத்தை ஒரு போதும் தரமாட்டார்கள். ”அன்புமணி மிக மோசமானவர்” என்று சொல்லும் ராமதாஸின் எதிர்பார்ப்பு, ‘அன்புமணி திருந்த வேண்டும்’ என்பதல்ல, ‘தனக்கு கட்டுப்பட்டு நடந்தால் போதும்’ என்பதே.
ஆனால், அதிகாரயுத்தம் அராஜகமானது. அது நெருங்கிய உறவையே பலியாக்கும். இதில் வலிமையும், நரித் தந்திரமும் உள்ளதே வாகை சூடும்.
அஜித்பவாரை புறக்கணித்த சரத்பவார், தன் மகள சுப்ரியாவையும், பேரனையும் தான் முன்னிருத்தினார். வேறு பலசாலிகள் இருந்தாலும் அவர்களை பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதிகாரம் வேறு இடத்திற்கு இடம் பெயராமல் குடும்பத்திற்குள்ளேயே இருக்கட்டும் என்பதில் கவனம் செலுத்தினார். அதே போலத் தான் ராமதாசும் அன்புமணியை விழ்த்த கட்சியில் சிறந்த வலிமையான பல தளபதிகள் இருந்தும் 60 வயது மூதாட்டியான காந்திமதியை வலிந்து அரசியலுக்கு கொண்டு வருகிறார். பேரன் முகுந்தனை கொண்டு வருகிறார்.
அரசியல் குடும்பங்களின் மோதல்களால் அந்த குடும்பங்கள் அழிவதில்லை. இன்னும் சொல்வதென்றால், எந்த பாதிப்பும் அவர்களை தொடுவதில்லை. கட்சித் தொண்டர்களும், நிர்வாகிகளுமே கடுமையாக பாதிப்பு அடைவார்கள். இவர்களுக்காக அடித்தளத்தில், களத்தில் மோதிக் கொண்டவர்கள் நாளைக்கு இவர்கள் ஒன்று சேரும் போது அனாதைகளாகப் போய் விடுகிறார்கள் என்பதே நிதர்சனம்.
சரத்பவார் – அஜித்பவார் விவகாரத்திலும் இது தான் நடந்து கொண்டுள்ளது.
2019-ல் பாஜக-சிவசேனா கூட்டணி முறிகிறது. காங்கிரஸ், என்.சி.பி,சிவசேனா இணைந்து ஆட்சி அமைக்க திட்டமிடப்படுகிறது. அன்று இரவோடு இரவாக கட்சி தாவி, அதிகாலை பாஜக அமைச்சரவையில் துணை முதல்வரானதோடு, என்.சி.பியின் எம்.எல்.ஏக்கள் எல்லாம் தன்னையே ஆதரிப்பதாக சொல்லி சர்த்பவாருக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்தவர் தான் அஜித்பவார். ஆனால், சட்டசபையில் பெரும்பான்மையை நிருபிக்க முடியாத நிலையில் திரும்பி வந்த அஜித்பவாரை சேர்த்துக் கொண்டார் சரத்பவார்! உடனே, அவரது துரோகத்தை மன்னித்து கட்டித் தழுவி அரவணைத்து, சிவசேனா அமைச்சரவையில் துணை முதல்வர் பதவி வாங்கித் தந்து அழகு பார்த்தார் சரத்பவார்.

அதன்பிறகும் இப்படி தொடர்ந்து துரோகம் இழைத்தாலும், அதிர்ச்சிக்கும் மேல் அதிர்ச்சி தந்து இதயத்தில் ஈட்டியால் குத்தினாலும், அஜித்பவாரை மீண்டும், மீண்டும் அரவணைத்துக் கொண்டே இருக்கிறார், சரத்பவார்.
மீண்டும் என்.சி.பியின் 53 உறுப்பினர்களில் தனக்கான 29 பேரைக் கொண்டு பாஜக- ஏக் நாத் ஷிண்டேவின் சிவசேனாவிற்குத் தாவி, துணை முதல்வரானார், அஜித்பவார்.
பாஜகவின் ஆதரவு அஜித்பவாருக்கே இருந்ததால் தேர்தல் கமிஷன் உண்மையான தேசியவாத காங்கிரஸ் அஜித்பாவருடைதே என்றது. அத்துடன் சர்த்பவார் சின்னத்தை பறிகொடுத்தார் . பிறகு சட்டமன்றத் தேர்தலில் சுயேட்சை சின்னம் கிடைக்கிறது. சரத்பவார் அணி வேட்பாளர்களின் பெயரிலும், அதை ஒத்த சின்னத்திலும் வேறொரு வேட்பாளரும் போட்டியிட செய்யும் அஜித்பவாரின் நரித்தனத்திற்கு தேர்தல் கமிஷனும் உடன்பட்டது.
விளைவு 2024 தேர்தலில் அஜித்பவார் 41 எம்.எல்.ஏக்கள் பெறுகிறார், சரத்பவார் வெறும் 10 வேட்பாளர்களே பெறுகிறார்.
இதுவே இங்கு ராமதாஸ் – அன்புமணி விவகாரத்திலும் நடக்கும். அன்புமணி பாஜகவை கண்ணை மூடிக் கொண்டு ஆதரிப்பதால் அவர் தான் அதிகார பூர்வ பாமகவாக அங்கீகரிக்கப்பட வாய்ப்புள்ளது.
ராமதாஸ் அன்புமணியை எடுத்துக் கொண்டால் இவர் 36 வயது வரை பாமகவில் தொடர்பில்லாமல் சொகுசான முறையில் வளர்த்து ஆளாக்கப்பட்டார். பொது நல நோக்கம் இல்லாதவர், கட்சி நடத்திய எந்த போராட்டத்திலும் சிறை செல்லாதவர், ஊருராக சென்று கட்சி வளர்க்காதவர் என எந்த தகுதியுமற்ற தன் மகனை 2004 ஆம் ஆண்டு அதிரடியாக ராஜ்யசபா உறுப்பினராக்கி, உடனே மத்திய சுகாதாரத் துறை பொறுப்பையும் வாங்கித் தந்தார், ராமதாஸ். அந்த பொறுப்பை துஷ்பிரயோகம் செய்து மிக மோசமான அளவில் ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்ட தன் மகனை கண்டிக்கவோ, திருத்தவோ கூட முன்வரவில்லை ராமதாஸ்.
இதன் பின்னரும் கூட கட்சிக்கு தன் உழைப்பையோ, அர்ப்பணிப்பையோ நல்கமாமல் கட்சியின் முன்னணி தலைவர்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி ஒற்றை அதிகார மையமாக அந்த கட்சியில் அன்புமணி தலை எடுத்த போதும் ராமதாஸ் வேடிக்கை பார்த்தாரே அன்றி, ஒழுங்குபடுத்த முனையவில்லை.

எவ்வளவு மோசமான மனிதராக அன்புமணி வெளிப்பட்ட போதிலும் 2016 ஆம் ஆண்டு பாமகவின் முதல்வர் வேட்பாளராக அன்புமணியை களத்தில் இறக்கினார். இத்துடன் அன்புமணியின் மனைவி செளமியாவும் கட்சியில் அதிகார மையமாகவும், பசுமை தாயகம் என்ற என்.ஜி.ஒ மூலம் பல கோடி பணத்தை ஸ்வாக செய்பவராகவும் வலம் வர துணை போனார். பொதுச் சமூகத்திற்கும், கட்சிக்கும் இவர்கள் எவ்வளவு பாதகம் செய்தாலும் எல்லாவற்றையும் சகித்துக் கொண்ட ராமதாஸ் தற்போது தனிப்பட்ட முறையில் தன்னை மகன் மதிக்காததால் கொதித்து எழுந்து குமுறுகிறார்.
அரசியல் என்பது முற்ற முழுக்க சந்தர்பவாதம் கொண்டது. எங்கு எதிர்காலம் என்பதை வைத்தே தொண்டர்கள் படை அதிகமாகச் செல்லும். அதிகார மையத்தின் ஆதரவு பெற்றவர்களே ஜெயிக்கும் சூழலை பாஜகவின் தேர்தல் கமிஷன் உருவாக்கித் தரும்.

இவ்வளவு துரோகம் இழைத்தாலும் தற்போது ஜனவரி 15 மகாராஷ்ராவில் வரவுள்ள மாநகராட்சித் தேர்தலில் சர்த்பவார் கட்சியும், அஜித்பவார் கட்சியும் கூட்டணி காண்கிறது. காரணம், இந்தியாவின் ஆகப் பெரும் பணக்காரரும், இந்தியாவின் நிழல் பிரதமருமான அதானியின் கட்டளை. அவருக்கு சேவை செய்வதில் இருவரும் ஒன்று சேர வேண்டிய கட்டாயம் உருவாகி உள்ளது. அதானியின் விருப்பத்திற்கேற்ப எதிரும், புதிருமாக தங்களை காட்டிக் கொண்ட இரு பவார்களும் ஒரே மேடையில் அதானியின் இருபுறமும் நின்று அவரது திட்டத்திற்கு உறுதுணையாக செயல்பட உறுதியளித்தனர்.
அதானி இந்தியாவின் ஏ.ஐ சென்டரை மகாராஷ்டிராவின் பாரமதி தொகுதியில் ஆரம்பிகிறார். இந்த இடம் என்.சி.பியின் கோட்டையாகும். ஆகவே, இந்த அரசியல்வாதிகளின் உதவி அதானிக்கு தேவை. இவ்வளவு தான் இந்திய ஜனநாயகம். பெரு முதலாளின் நன்மைக்கு இயங்குவதே அரசியல் கட்சிகளின் பிரதான கடமையாகவுள்ளது.
ராமதாஸுக்கும், அன்புமணிக்கும் இது போன்ற ஒரு கட்டளை எங்கிருந்து எப்போது நிர்பந்திக்கபடுமோ, அப்போது இருவரும் கை கோர்க்க தயங்கமாட்டார்கள். இவர்கள் பிரியக் காரணமான பாஜகவே ஒன்றிணையவும் காரணமாவார்கள். அதற்குள் தங்களது கையாளான அன்புமணி காலூன்ற வழி சமைத்து தருவார்கள். அரசியல் குடும்பச் சண்டைகளால் அந்த குடும்பத்திற்கு பாதிப்புகள் ஏற்படுவதில்லை. ஆனால், தொண்டர்கள் தரப்பில் கடுமையான பாதிப்பு ஏற்படுகிறது. நீரடித்து நீர் விலகாது. இப்படிப்பட்ட அரசியல் குடும்ப சண்டைகளை அருவெறுத்து ஒதுக்காமல், ரசித்தும், அணி பிரிந்து விவாதித்தும் பிறகு அவர்களுக்கே ஓட்டுப் போடுவதும் மக்களின் வாடிக்கையாக உள்ளது.
சாவித்திரி கண்ணன்























Leave a Reply