வாங்கிக் குவிக்கும் கடன்களுக்கு பின்னணியில் ஒரு சர்வ தேச அரசியல் சதி வலை உள்ளது. இதில் ஆளும் அல்லது ஆண்ட எல்லா அரசியல் கட்சி அரசுகளின் ஆட்சியாளர்களுக்கும் சுயநலம் உள்ளது. தற்சார்பான பொருளாதார பலத்தால் எந்த நாடும் தலை நிமிர்ந்துவிடக் கூடாது என்ற தவிப்பும் உள்ளது;
ஒரு அரசாங்கம் வாங்கும் கடன்கள் பொது மக்களை பாதிக்குமா? பாதிக்காதா?
ஒரு அரசாங்கம் தான் வாங்கும் கடன்களுக்கு வட்டி கட்டுகிறது. அந்த வட்டிக்கான பணத்தை தர கூடுதல் வரி விதித்தோ அல்லது மக்களுக்கான சில திட்டங்களின் முதலீட்டை குறைத்தோ அரசாங்கம் சமாளிக்கிறது. இதனால் பொருட்களின் விலையேற்றத்தையும், முக்கிய திட்டங்களுக்கான நிதிபற்றாகுறையையும் மக்கள் எதிர்கொள்கிறார்கள். ஊதியம் கொடுக்க முடியாத காரணத்தால் பலதுறைகளில் ஊழியர் பற்றாகுறை நிலவுகிறது.
கடன்கள் வாங்குவதால் பல புதிய திட்டங்களும், வசதி வாய்ப்புகளும் மக்களுக்கு கிடைக்கிறதல்லவா? என்று சந்தோஷப்பட முடியவில்லை.
வாங்குகின்ற கடன் எதுவென்றாலும் அதை இத்தனை ஆண்டுகளுக்குள் திருப்பி கட்டிவிட வேண்டும் என்ற குறிக்கோள் வேண்டும். வாங்கிய கடனால் இந்த நாடு இவ்வளவு லாபம் பெற்றது. அந்த லாபத்தைக் கொண்டு கடன் அடைக்கப்பட்ட பிறகு புதுக் கடன் வாங்கினால் ஆட்சேபனை இல்லை. ஒரு போதும் அடைக்க முடியாத கடன்- வட்டி மட்டுமே கட்டிக் கொண்டு வரும் கடன்- ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் கடன் நமக்கு சுமை மட்டுமல்ல, நம்மை அடிமைப்படுத்தும் வழி முறையும் கூட. இந்தக் கடன்களால் நாம் நம் சுயாதீனத்தை இஅழ்ந்து அவர்கள் கூறும்படியான திட்டங்களையும், சட்டங்களையும் போட நிர்பந்திக்கபடுகிறோம். நமது இயற்கை வளங்களை சூறையாடும் ஒப்பந்தங்கள் இதன் வழியே தான் நிறைவேற்றப்படுகிறது.
2011 ல் அதிமுகவிடம் திமுக ஆட்சியை ஒப்படைத்த போது ஒரு லட்ச ரூபாய் கடன் வைத்திருந்தது திமுக அரசு. ஐயோ ஒரு லட்சம் கோடி கடன் வாங்கி தமிழகத்தை சீரழித்துவிட்டதே திமுக அரசு என்றது, புதிய அதிமுக ஆட்சி.
அந்த அதிமுக அடுத்த பத்தாண்டுகளில் அந்த கடன் தொகையையை 4.85 லட்சமாக்கி திமுக அரசிடம் தந்தது. அதிமுக அரசு கடன் வாங்கி தமிழகத்தை அதள பாதாளத்திற்கு தள்ள்விட்டது எனப் புகார் சொன்ன புதிய முதல்வர் ஸ்டாலின், இன்றைக்கு அந்த கடனை 10 லட்சம் கோடிகளாக்கி சாதனை படைத்துள்ளார்.
இதை தட்டிக் கேட்டு மக்களை உசுப்புகிறார் எடப்பாடி பழனிச்சாமி. அவர் முதல்வரானால் இந்த கடனை குறைப்பேன் என்றோ, அல்லது இனி கடனே வாங்கமாட்டேன் என்றோ கூறவில்லை. நிச்சயம் இந்தக் கடனை இரு மடங்கு அதிகரிப்பார்.
மத்திய பாஜக ஆட்சியாளர்களுக்கும் இதைப் பேசும் தகுதி இல்லை. அவர்களும் கடன்களை வாங்கி குவிக்கிறார்கள். போதாக்குறைக்கு உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சிகளையும் கடன் வலையில் வீழ்த்துகிறார்கள்! இதுவே உள்ளாட்சி அமைப்புகள் ஊழலில் திளைக்க அடித்தளமிடுகின்றன. இதன் மூலம் வெளிநாட்டு நிறுவனங்கள் குப்பை அள்ளவும், குடிநீர் வழங்குவுமான வாய்ப்பை பெற்று சுரண்டிக் கொழுக்கிறார்கள்.
காங்கிரஸிடமிருந்து இந்திய அரசு நிர்வாகம் பாஜகவுக்கு கைமாறிய போது( 2014), இந்தியாவின் வெளி நாட்டுக் கடன் 54 லட்சம் கோடியாக இருந்தது! தற்போது அந்த கடன் தொகை 200 லட்சம் கோடிகளை கடந்து மேலேறிச் செல்கிறது.
இப்படி வாங்கும் தகுதி அளவுக்கு தான் கடன் வாங்குகிறோம் என்று ஆட்சியாளர்களை சொல்ல வைத்து கடனை திணிக்கும் உலக வங்கியும், பன்னாட்டு நிதியமும், பல்வேறு வெளிநாட்டு அரசுகளும் நமக்கு சும்மா கடன் தருவதில்லை. இங்கிருக்கும் வளங்களை சுரண்டிச் செல்லவும், வளமான பொருட்களை ஏற்றுமதி செய்யவும் நிர்பந்தித்தே கடன் தருகிறார்கள்!
இந்த உலக வங்கி பன்னாட்டு நிதியம்..போன்றவை எல்லாம் காலனியாதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகளை தங்கள் கட்டுப்பாட்டிலே வைத்துக் கொள்வதற்காக பணக்கார நாடுகள் செய்த சூழ்ச்சியே ஆகும்.
Also read
அத்துடன் இப்படி வாங்கும் கடன்களானது ஆட்சியாளர்களை மேலும் ஊழல் செய்யவும், திட்டப் பணத்தில் கணிசமாக கையூட்டு அடித்து லாபம் பார்க்கவும் கற்பித்துள்ளது ஆதலால் இவர்கள் மேன் மேலும் கடன்களை வாங்கி குவித்து காலப்போக்கில் ஒட்டுமொத்த நாட்டையுமே கூட அடகு வைக்க தயங்கமாட்டார்கள்.
எனவே, கடன் வாங்குவதால் இதையிதை செய்ய வேண்டும் என நிர்பந்தித்து நமது அரசின் செயல் திட்டங்களை தீர்மானிக்கிறார்கள். இந்த நாட்டின் தோற்றத்தையே மாற்றுகிறார்கள். கடன்கள் ஒவ்வொரு குடிமகனையும் நிச்சயம் பாதிப்படையச் செய்கிறது.
சாவித்திரி கண்ணன்














லட்சமா அல்லது லட்சம் கோடியா?
இளைய தலைவலி விஜய்யின் தீவிர ரசிகர் சாவித்திரி கண்ணனுக்கு திமுக-வைக் குறை கூறி ஆட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற வெறி இப்படி தப்புத்தப்பாக எழுத வைக்கிறது போலும்
கடனை திருப்பித்தராவிட்டால் என்னவாகும் ??
லிமிட் என்ன ??
வட்டி கட்டாவிட்டால் என்னவாகும்??
கடனுக்கான சால்வென்சி என்ன???
இதைப்பற்றி எல்லாம் எழுதியிருந்தால் பிபிசி கட்டுரை போல இருந்திருக்கும் …
இருப்பினும் பாராட்டுகள்