மேட்டுக்குடி மனோபாவமே, மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளை வீழ்த்தியது!

சாவித்திரி கண்ணன்

இந்தியாவின் கலாச்சார தலைநகரமாக நீண்ட நெடுங்காலமாகத் திகழ்ந்த மண் தான் வங்கம்! முற்போக்கு சீர்திருத்ததிற்கு ராஜாராம் மோகன்ராய், ஆன்மீகத்திற்கு விவேகானந்தர், அரசியலுக்கு சுபாஷ் சந்திரபோஸ், கவிதை இலக்கியத்திற்கு தாகூர், நவீன கதை இலக்கியத்திற்கு சரத்சந்திரர், சேவைக்கு அன்னை தெரசா….என்று இந்தியாவின் ஆகச் சிறந்த ஆளுமைகளை தந்த அந்த கலாச்சார தலை நகரம் இன்று நாளும், பொழுதும் கலவரபூமியாக மாறிக் கொண்டுள்ளது கவலையளிக்கிறது!

முப்பதாண்டுகளுக்கும் மேலாக ஆட்சி அதிகாரத்தில் கோலோச்சிய இடதுசாரிகள் ஆட்சி அதிகாரத்தை இழந்தது ஒன்றும் அதிசயமல்ல! அரசியலில் தோல்விகள் வரும்,போகும்! ஆனால்,கட்சியே காணாமல் போகும் நிலை தோன்றக் கூடாது! கிட்டதட்ட அப்படியொரு நிலையை நோக்கி இடதுசாரிகள் நகர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றால், கட்சியின் கட்டமைப்பில் ஏதோ மிகப் பெரிய பிழை நடந்துள்ளது என்பது தான் பொருள்!

வங்கத்தை பொறுத்தவரை அடிப்படையில் அது நீண்ட நெடுங்காலமாக காங்கிரசின் கோட்டையாக திகழ்ந்தது! அதன் பிறகு அது இடதுசாரிகளின் கைக்கு வந்த போதிலும் கூட, தனிப்பட்ட முறையில் காங்கிரஸ் தான் வங்க மண்ணில் மார்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியைவிடவும் பலமான கட்சி. ஒரு பக்கம் இந்திய தேசியத்தையும், மறுபக்கம் சர்வதேசியத்தையும் இரு கண்ணாக வங்க மக்கள் கருதினாலும், அவர்கள் அடிப்படையில் வங்காளிகள் என்ற இயல்பை இழக்காதவர்களாகவே இருந்தனர்.

இந்திய தேசியத்தை பேசிய காங்கிரஸ் கட்சியிலும், சர்வதேசியத்தை பேசிய மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சியிலும்,ஆட்சியிலும் மேட்டுக்குடியினர் ஆதிக்கமே மேலோங்கி இருந்தது.வங்க மண்ணில் இவை நீண்ட காலமாகவே இரு மேட்டுகுடி வர்க்கத்தின் நலன்களை பிரதிபலிக்கும் கட்சிகளாகவே இருந்தன…என்பது ஒரு சுட்டெரிக்கும் உண்மையாகும்! குறிப்பாக பிராமணர், பைடா,கயஸ்தா (biramin, naiada,kayastha) ஆகிய மூன்று ஜாதிப் பிரிவினரே இரு கட்சிகளின் உயர் பொறுப்புகளில் நீக்கமற நிறைந்திருந்தனர்!

கம்யூனிஸ்டு கட்சியில் மேட்டுக்குடியினர் சேர்ந்ததும்,பாடுபட்டதும் கட்சியை வளர்த்ததும் கண் கூடான உண்மை, மறுக்கமுடியாது! அவர்களில் மதிக்கதக்க தியாகிகளும் இருந்தனர்! ஆனால், ஒரு கட்சி ஆட்சிபீடம் ஏறும் தருவாயில் சமூகத்தின் சகலதளத்திற்கும் சரியான பிரதிநிதித்துவம் தர வேண்டும் .ஆட்சியில் மட்டுமல்ல, கட்சியிலும் அவர்கள் குரலுக்கு உரிய மரியாதை தரப்பட வேண்டும்! அது மார்க்சிஸ்டு கட்சியில் இல்லாமல் போனதன் விளைவைத் தான் இன்று வங்கத்தில் அந்த கட்சி அனுபவித்துக் கொண்டுள்ளது.

மண்டல் கமிஷன் விவகாரம் மேலெழுந்த போது ஜோதிபாசு என்ன சொன்னார் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன். ‘’வங்கத்தை பொறுத்த வரை இரண்டு ஜாதி தான்; ஒன்று ஏழை, மற்றொன்று பணக்காரன்.’’ ஆகவே தான் இந்திய முழுவதும் அமல்படுத்தப்பட்ட மண்டல் கமிஷன் பரிந்துரைகளை மேற்குவங்கத்தில் இடதுசாரிகள் அமல்படுத்தாமல் புறக்கணித்துவிட்டனர். எந்த அளவுக்கு கட்சியிலும், ஆட்சியிலும் மேட்டுக்குடி மனோபாவம் இருந்திருக்குமானால் மண்டல் பரிந்துரைகளை செல்லாக்காசாக்கி, தூரத் தூக்கி எறிந்திருப்பார்கள் என்று பார்க்க வேண்டும். அதே சமயத்தில் இந்தியா முழுவதும் உத்திரபிரதேசம்,பீகார் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலுமே மண்டல் பரிந்துரைகள் அமலாக்கப்பட்டதையும், பிற்பட்ட வகுப்பினர் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த விஷயத்தையெல்லாம் பார்த்தும் அது பெங்காலில் மட்டும் ஒரு போதும் வாய்ப்பில்லை என்று கம்யூனிஸ்டுகள் எப்படி பிடிவாதமாக இருந்தனர் எனத் தெரியவில்லை!

எளிய மக்களின் குரலாக தாங்களே இருக்கிறோம் என உயர்சாதியினர் அவர்களின் பங்கு பாத்திரத்தை கையில் எடுத்துக் கொண்டார்களேயன்றி, எளியவர்களின் குரலாக அவர்களே ஒலித்திட அனுமதிக்கவில்லை என்பது மிகவும் துரதிர்ஷ்டமானதாகும்!

அத்துடன் எளிய மக்களின் குரலாக ஒலித்தவர்களை நக்சலைட்டுகள் என்று கூறி இரக்கமின்றி, கடுமையாக வேட்டையாடினர். கலகக்குரல்களை காது கொடுத்து கேட்டு, நியாயமானவைகளை ஏற்று ஒரளவேனும் விட்டுக் கொடுத்து சமரசம் செய்திருக்க வேண்டும். ஆனால்,ஆட்சி அதிகாரத்தால் அவர்களை அடக்கிவைத்தனர். ஆகவே,அவர்கள் சமயம் பார்த்து காத்திருந்தனர். மம்தாபானர்ஜி மேலெழுந்து வந்த போது அவரோடு கைகோர்த்தனர். இதை இடதுசாரிகளால் தாக்குபிடிக்க முடியவில்லை.

சிங்கூரிலும் நந்திகிராமிலும் எளிய விவசாய பெருங்குடிகளின் கதறல்களை,போராட்டங்களை காதுகொடுத்து கேட்க மறுக்கும் அளவுக்கு மட்டுமல்ல, அவர்களை அரச அதிகாரபலத்துடன் அடக்கும் மன நிலைக்கு வந்ததன் பின்புலத்தை ஆராய்ந்தால்,அங்கு அதிகாரமையத்தில் விவசாய பெருங்குடி மக்களின் வலியை உணராத பிரதிநிதிகளே நிறைந்திருந்தனர் என்ற அவலம் விளங்கும்!

காங்கிரஸும், கம்யூனிஸ்டுகளும் கவனிக்கத் தவறிய பிற்படுத்தபட்ட மக்களை மம்தா கையில் எடுத்தார், எளிதில் வென்றார்! அதே சமயம் மம்தாவின் திரிணமுள் கட்சியின் மேல்மட்டத்திலும் இந்த மேட்டுக்குடியினர் தான் ஆதிக்க அதிகார மையத்திற்கு வந்தனர். யார் அதிகாரத்திற்கு வந்தாலும் அல்லது வருவதாக தெரிந்தாலுமே கூட ஓடிப்போய் அவர்களோடு ஐக்கியமாகும் கலையில் கை தேர்ந்தவர்களல்லவா இந்த மேட்டுக்குடியினர்! அவர்கள் மம்தாவின் திரிணமுள் காங்கிரஸ் பாஜகவோடு கைகோர்க்கும் கைங்கரியத்தையும் நடத்தி, மேற்கு வங்கத்தில் பாஜக காலூன்ற வித்திட்டுவிட்டனர். 1989 ல் மேற்குவங்கத்தில் வெறும் 1.67% இருந்த பாஜக, திரிணமுள் தொடர்பில் கிளைபரப்பி 2004 ல் 8.06% தன்னை தக்க வைத்துக் கொண்டது. 2014 ல் அது 16.84% மாக தன்னை தகவமைத்துக் கொண்டது. அதன் பிறகு மத்தியில் அதன் ஆட்சிஅதிகாரபலமும் சேர்ந்து கொள்ள அடுத்த ஆறே ஆண்டில் தன் வாக்குவங்கியை 2019ல் 40.25% மாக உயர்த்திக் கொண்டது. ஆனால், 2004 ல் 42.6% இருந்த இடதுசாரிகள் தற்போது 6.3% சதவீதமாகிவிட்டனர்!

இந்த இடைப்பட்ட ஆறு ஆண்டுகளில் பாஜக கையில் எடுத்துக் கொண்ட அரசியலை கவனிக்க வேண்டும்.

மேற்குவங்கத்தில் மிகவும் புறக்கணிக்கபட்ட நாமசூத்திரா எனப்படும் மத்துவா சமூகத்தை வளைத்துபோட்டது! அந்த சமூகத்தை சேர்ந்தவருக்கு கட்சியில் உயர்பதவி தந்தது. மண்டல்கமிஷன் பரிந்துரைகளை மேற்குவங்கத்தின் அரசு பணிகளிலும் ,அரசின் கல்வி நிறுவனங்களிலும் அமல்படுத்த வேண்டும் என அவர்களை கேட்க வைத்துள்ளது! தாழ்த்தபட்டவர்கள்,ஆதிவாசிகளிடம் ஆர்.எஸ்.எஸ் காரார்கள் மிகத் தீவிரமாக களம் கண்டு வேலைபார்த்து தங்களோடு இணைத்துக் கொண்டனர்! மேற்குவங்கத்தில் பாஜக செய்து வருவதெல்லாம் இதுவரையிலான அரசியலில் உரிமை மறுக்கப்பட்ட பிரிவினரை தேடிக் கண்டடைந்து அவர்களுக்கு கட்சியில் அதிகாரம் வழங்கிவருவது தான்! அந்த அளவுக்கு எளிய பிரிவு மக்களிடம் பெரும் மனப்புழுக்கம் இருந்திருக்கிறது. இதை உண்மையிலேயே ‘எளிய மக்களுக்கான அதிகாரம்’ என மனதார பாஜக செய்ய வாய்ப்பே இல்லை. இது ஆட்சிக்கு வருவதற்கான ஒரு அரசியல் தந்திரம் ! அதே சமயம் தமிழகத்தின் திராவிட இயக்க அரசியலை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டே, இதை பாஜக கையில் எடுத்திருப்பதாக மேற்குவங்கத்தின் பாஜக அரசியல் வளர்ச்சியை ஆய்வு செய்யும் போது உணரமுடிகிறது!

கம்யூனிஸ்டு கட்சியின் அதிகாரமையத்தில் பலவற்றை அனுபவித்த மேட்டுக்குடியினர், தற்போது பாஜகவில் ஐக்கியமாகி மிக இயல்பாக எந்த குற்றவுணர்வுமின்றி வேலை செய்கின்றனர். காலம் கடந்து இந்த உண்மையை உணர்ந்து வருகின்றனர் இடதுசாரிகள்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time