விவசாய நிலப்பறிப்பில் வியத்தகு சாதனை படைத்த திமுக அரசு!

-சாவித்திரி கண்ணன்

தமிழ்நாட்டில் கடந்த நான்கரை ஆண்டுகளில் பல முக்கிய மாற்றங்கள் நடந்துள்ளன. இயற்கை வள அழிப்பு, விவசாய நிலங்கள் அபகரிப்பு, சுற்றுச் சூழலுக்கு கேடு தரும் தொழிற்சாலைகள் அதிகரிப்பு, நீராதாரங்கள் அழிப்பு, நில வளம் பாதிப்பு, விவசாயிகளின் தற்சார்பு வாழ்க்கை தகர்ப்பு..என பல அதிர்ச்சிகள் அரங்கேறி உள்ளன.

இதற்கு எதிராக தமிழகம் முழுமையும் தொடர் போராட்டங்கள் வேளாண் குடிகளால் ஆங்காங்கே நாளும், பொழுதும் நிகழ்த்தப்படுவதை ஊடகங்கள் இருட்டடிப்பு செய்து வருகின்றன. அவற்றை ஆதாரங்களுன் ஆவணப்படுத்துவதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.

ஒரு நாடு செழிப்பாக இருப்பதற்கு அந்த நாட்டின் பாரம்பரியமான இயற்கை வளங்கள், அந்தந்த மண் சார்ந்த விவசாய உற்பத்தி, நீர் ஆதாரங்கள், மக்களின் வாழ்வாதாரங்கள் ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டும்.

ஆனால், ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பதவி ஏற்றது தொடங்கி இவற்றின் மீது தான் தொடர்ச்சியான தாக்குதல்களை நிகழ்த்தி வருகின்றது. .

உள்ளாட்சிகள் அனுமதி தேவையின்றி -மக்கள் எதிர்ப்புகளை புறந்தள்ளி – பசுமையான விவசாய நிலங்களையும், நீர் ஆதாரங்களையும் தூக்கி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கும் தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம் (Tamilnadu Land Consolidation (for special projects) Act ) என்ற படுபயங்கர சட்டத்தை கூச்ச நாச்சமே இல்லாமல் கொண்டு வந்தது ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு. இதனால் நிலப்பறிப்பும், நீராதரங்கள் அழிப்பும் சர்வ சாதரணமாக்கப்பட்டுவிட்டது.

கொள்ளை போகும் தமிழக இயற்கை வளங்கள்

இத்துடன் நகரமயமாக்கம் அசூர பலத்துடன் மக்கள் எதிர்ப்புகளை மீறி அரங்கேற்றி வருகிறது திமுக அரசு. அந்த வகையில் பல புதிய மாநகராட்சிகள், நகராட்சிகள் புதிதாக உருவாக்கப்பட்டு வேளாண் நிலங்கள் விழுங்கப்பட்டு, ரியல் எஸ்டேட்டுக்கு வழி சமைக்கிறார்கள், ஆட்சியாளர்கள். மேலும்,பல இடங்களில் வேளாண் நிலப்பரப்புகளுக்கு இடையே கிரானைட் குவாரிகளை திறக்கவும் அனுமதித்துள்ளது திமுக தலைமையிலான தமிழக அரசு!

பரந்தூரில் தொடங்கி பழவேற்காடு, கடலூர், கிருஷ்ணகிரியின் உத்தனப்பள்ளி, நாகமங்களம், அயர்னப்பள்ளி, செய்யாறு மேல்மா, வாசுதேவ நல்லூர், கடைய நல்லூர்  கெலமங்களம், ஒட்டன் சத்திரம், மதுரை மேலூர் கல்லங்காடு, தஞ்சை உப்பளம்சேரிப் பண்ணை, சேலம் ஜாகீர் அம்மாபாளையம், நாமக்கல் மோகனூர், கோவை கிணத்துக்கடவு, சூலூர் அன்னூர், மேட்டுப்பாளையம், தர்மபுரி, சிவகங்கை திருமாஞ்சோலை இலுப்பக் குடி…  என விவசாய நிலப் பறிப்பு என்பது நாளும், பொழுதுமாக அரங்கேறி வருகின்றன. என்ன தான் அரசு நிர்வாகம் நடக்கிறது தமிழ்நாட்டில்? எனத் தெரியவில்லை!

சேலம் மாவட்ட மக்களின் சிப்காட்டிற்கு எதிரான போராட்டம்

சேலம், ஜாகீர் அம்மாபாளையத்தில், 184 ஏக்கர் பரப்பளவில் ரூ.800 கோடி முதலீட்டில் ஜவுளிப்பூங்காவிற்கான தொடக்கக்கட்ட பணிகள் மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி  நடைபெற்று வருகின்றன இங்கு, 60க்கும் மேற்பட்ட சாயப்பட்டறை அமைய உள்ளதால் நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழல் மோசமாகும் என இப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதை வெளிப்படுத்த மக்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடிகளை ஏற்றிப் போராட்டம் நடத்தியும், வீதிகளில் இறங்கியும் போராடி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட்டில் ஏற்கனவே சாயப் பட்டறைகளின் கழிவு நீர் ஆழ்துளை கிணறுகள் மூலமாக  நிலத்தில் செலுத்தப்படுகிறது. இதனால் புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்பட்டு அந்தப் பகுதி மக்கள் பெருந்துயரங்களை அனுபவித்து வருகிறார்கள். இதே நிலைமை சேலம் ஜாகிர் அம்மாபாளையம் ஜவுளி பூங்காவால் நாங்கள் அனுபவிக்கத் தாய்ர் இல்லை என்கிறார்கள் சேலம் மக்கள்.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் தாலுகா வளையப்பட்டி, பரளி, அரூர், என். புதுப்பட்டி ஆகிய பகுதிகளில், 882 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்திற்கு நிலம் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் தொடர் போராட்டங்களை கடந்த மூன்றாண்டுகளாக நடத்தி வருகின்றனர். இதற்காக 80-க்கும் மேற்பட்ட நன்கு பயிர் விளையும் விவசாய நிலங்களை தரிசு நிலங்களாக வகைப்படுத்தும் சூழ்ச்சியை திமுக அரசு அரங்கேற்றியதை கண்டித்து விவசாயிகள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியும், கோவிலுக்கு காவடி தூக்கியும், உண்ணாவிரதம் இருந்தும் பல்வேறு கவன ஈர்ப்பு போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

கோவை கிணத்துக்கடவு மற்றும் சூலூர் பகுதி விவசாயிகளின் நில அபகரிப்புக்கு எதிரான போராட்டம்

கோவை கிணத்துக்கடவு கட்டாம்பட்டி சூலூர் வட்டாரத்தில் 1,360 ஏக்கர்பரப்பளவுள்ள விவசாய நிலங்களை மக்களிடம் எந்தவித கருத்துக் கேட்பும் இன்றி சிப்காட்டிற்காக எடுக்கப்படுவதை எதிர்த்து விவசாயிகள் போராடி வருகிறார்கள்.

இதே கோவை மாவட்டத்தின் அன்னூர், மேட்டுப்பாளையம் பகுதியில் மற்றுமொரு தொழிற்பூங்கா என்று சொல்லி 3,731 ஏக்கர் நிலங்கள் விவசாயிகளிடம் இருந்து பறிக்கும் முயற்சிக்கு பயங்கர எதிர்ப்பு தோன்றியுள்ளது. பெண் விவசாயிகளே களத்தில் இறங்கி போராடி வருகின்றனர்.

கோவை அன்னூர், மேட்டுப்பாளையம் பகுதியின் வேளாண் நிலங்களை விழுங்காதே எனப் போராடும் பெண் விவசாயிகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏற்கனவே நான்கு சிப்காட்கள் உள்ளன! இதற்காக ஏற்கனவே பல்லாயிரம் ஏக்கர் விளை நிலங்கள் இதற்காக கையகப்படுத்தப்பட்டு உள்ளன!  இந்த நிலையில் ஓசூரை அடுத்த உத்தனப்பள்ளி, நாகமங்கலம், அயர்னப்பள்ளி ஆகிய 3 ஊராட்சிகளில் 3,034 ஏக்கர் நிலப்பரப்பில் 21,000 கோடிகளில் 5-வது சிப்காட் அமைக்க , மத்திய அரசின் நிர்பந்தத்தால் தமிழ்நாடு அரசு செய்கிறது.

தர்மபுரியில் சிப்காட் நீதிமன்றத் தீர்ப்புகளை புறந்தள்ளி 70 நீர் நிலைகள், 30 தடுப்பணைகள், 5 பெரிய ஏரிகள், குலம், குட்டைகள், குன்றுகள் ஆகியவற்றை அபகரித்து 1733 ஏக்கர் நிலத்தில் உருவாக்கப்பட்டதற்கான சுற்றுச் சூழல் அனுமதி நவம்பர் 2021 ல் வழங்கப்பட்டது. இதை முதல்வர் ஸ்டாலின் ஆகஸ்ட்2025-ல் திறந்து வைத்துள்ளார். இந்த அழிப்புக்காகவும், அடிப்படை கட்டமைப்புகளுக்காகவுமே ஆயிரம் கோடிகள்  செலவிடப்பட்டுள்ளது. ஆனால், மீண்டும் இந்த இயற்கை ஆதாரங்களை புதுப்பிக்க 10,000 கோடிகள் செலவழித்தாலும் பயனில்லை.

இவ்வளவு அக்கிரமங்களை நிகத்தி உருவாக்கப்பட்ட இந்த சிப்காட்டில் மொத்தமே ஒன்பது தொழிற்சாலைகள். அதிலும் 85 சதவிகித வட இந்தியர்களே பணிபுரிகின்றனர். தமிழகத்தை சேர்ந்த 15 சதவிகிதத்தினருக்கான வேலையுமே கூட தமிழ்த் தேசிய இயக்கங்களின் போராட்டங்களுக்கு பிறகே சாத்தியமானது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்கனவே உள்ள சிப்காட்டிலேயே பல ஆயிரம் ஏக்கர்கள் பயன்படாமல் இருக்கையில் மேல்மாவிலும், செய்யாறிலும் விவசாயிகளில் பசுமை நிலங்களை வம்படியாக பறித்து, எதிர்த்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து அரங்கேற்றும் முயற்சிகள் நடக்கின்றன.

மதுரை மாவட்டம் மேலூர் கல்லங்காடு பகுதியானது இயற்கை எழில் சூழ்ந்த கோவில்காடு பகுதியாகும். இங்கு பாரம்பரியமான குல தெய வழிபாட்டு இடங்கள் உள்ளன. சுற்றுவட்டார 18 கிராமங்களில் விவசாயம் தழைத்தோங்கி உள்ளது. மேலும் கால் நடை வளர்ப்பிற்கான மேய்ச்சல் நிலங்களும் உள்ளன. இவற்றை அழித்து உருவாக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்ட சிப்கட்டை மக்கள் சீற்றத்துடன் தொடர்ந்து எதிர்த்து ஆவேசத்துடன் களம் கண்டு போராடி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புகோட்டை  வேளாண் அறிவியல் நிலைய பண்ணையில் சுமார் 450 ஏக்கர் நிலத்தில் விவசாயம் சிறப்பாக நடந்து வருகிறது. இதை நம்பி 500 குடும்பங்கள் உள்ளன. இவற்றை அழித்து சிப்காட் பூங்கா அமைக்க வேண்டாம் என விவசாயிகள் போராடி வருகின்றார்கள். இதே விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே அகத்தாகுளம் பகுதியில் நல்ல வேளாண் நிலங்களை அழித்து சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் கொண்டு வரப்படும் சிப்காட்டிற்கு எதிரான போராட்டங்களும் கடந்த மூன்றாண்டுகளாக நடந்த வண்ணம் உள்ளது.

விருது நகர் மாவட்டம் திருச்சுழி விவசாயிகள் திருடாதே விவசாய நிலங்களை என அரசுக்கு எதிராக போராடினார்கள்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், எட்டயபுரம் பகுதிகளில் அறிவிக்கப்பட்ட 2,700 ஏக்கர் வெம்பூர் சிப்காட் அறிவிப்பை தொடர்ந்து அங்கு  வெஞ்சினத்துடன் வீறு கொண்டு போராடி வருகின்றனர். காரணம் இங்கு உளுந்து, பாசிப்பயறு, மக்காச்சோளம், கடலை, மல்லி ..ஆகிய விவசாயம் செழித்தோங்கி உள்ள நிலையில் எதற்கு இங்கு சிப்காட்? வேறு இடத்தை பாருங்கள் எனக் கூறுகின்றனர்.

மேற்கூறியவை சில சாம்பிள்களே. இன்னும் இதை விரிவுபடுத்துவதாக இருந்தால் தனி நூலே எழுத வேண்டியதாகிவிடும். அறம் இணைய இதழில் இந்த விவகாரங்கள் குறித்து அவ்வப்போது கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.

விவசாய வாழ்வாதாரங்களை வேரறுக்கும் திமுக அரசு!

இந்தப் போராட்டங்களின் பொதுவான அம்சங்கள் நாங்கள் விவசாயத்தில் தன்னிறைவோடு வாழ்கிறோம். எங்கள் அனுமதியின்றி எங்கள் நிலத்தை அரசாங்கம் எடுத்து யாருக்கோ தொழிற்சாலைக்கு கொடுப்பது நியாயமில்லை. தரிசு நிலங்கள், புறம்போக்கு நிலங்களில் தொழிற்சாலைக்கு இடம் தாருங்கள். அதுவும் அந்தப் பகுதி இளைஞர்களின் வேலை வாய்ப்புக்கு பயன்படாமல் வட இந்தியாவில் இருந்து தொழிலாளர்களை வரவழைத்து இங்கு தொழிற்சாலை செயல்பட வேண்டிய தேவையே எழவில்லை. ஆட்சியாளர்களுக்கு இதில் கையூட்டு கிடைப்பதால் இவை நடக்கின் றனவா? என்ற கேள்விகளை விவசாயிகள் எழுப்புகிறார்கள்.

2021-ல் திமுக அரசு பதவி ஏற்ற போது 20 மாவட்டங்களில் மொத்தம் 22 தொழிற் பூங்காக்கள் இருந்தன. ஆனால், அவை தற்போது 50 ஆக உயர்த்தப்பட்டுள்ளன. மேலும் 17 ஏற்படுத்த முன்னெடுப்புகள் நடக்கின்றன.   இதே போல ஏராளமான சிப்காட்களும் தொடங்கப்பட்டுள்ளன. ஏற்கனவே உள்ள சிப்காட்களை விரிவாக்கம் செய்கிறோம் என்பதாக 13,500 ஏக்கர் நிலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றில் சுற்றுச் சூழலுக்கு கேடான தோல் பதனிடுதல், ரசாயன ஆலைகள், பிளாஷ்டிக் தொழிற்சாலைகள், பெட்ரோ கெமிக்கல்ஸ், ஜீ பாஸ்டென்சர்கள், கிராபைட் போன்ற பாதிப்பை ஏற்படுத்துபவை கணிசமாக உள்ளன. இவை போதாது என்று மேலும் நில வங்கி என்பதாக வெளிநாடு மற்றும் வட இந்திய நிறுவனங்கள் தொழில் செய்ய 48,000 ஏக்கர் நிலவங்கி ஏற்படுத்தி உள்ளனர்.

இப்படி கள நிலவரங்களை பொருட்படுத்தாமல் அடுத்தடுத்து அராஜகமாக  நிலப்பறிப்பில் ஈடுபட்டு ஏற்கனவே இருந்ததை விடவும் ஐந்து மடங்கு நிலங்கள் அபகரிக்கப்பட்டு தமிழகத்தில் வேளாண்மையின் எதிர்காலம் கேள்விக் குறியாகி உள்ளதோடு விவசாயிகளின் சுயசார்பு  வாழ்க்கை சூறையாடப்பட்டுது. தமிழகம் எங்கும் பரவலாக ஆங்காங்கே தன் எழுச்சியுடன் களம் காணும் விவசாயிகளை ஒருங்கிணைத்து அரசின் அராஜக நில அபகரிப்புக்கு எதிரான அணி திரட்ட இது வரை எந்த விவசாய இயக்கமோ, அரசியல் கட்சியோ முயற்சி செய்யவில்லை என்பது மற்றொரு துர்பாக்கியமான நிலைமையாகும். இந்த கட்டுரையில் ஒட்டுமொத்த பாதிப்புகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் அத்தகையை ஒருங்கிணைப்பு நிகழுமானால், அது தமிழகத்தின் மாற்றத்திற்கான தொடக்க புள்ளியாகலாம்.

சாவித்திரி கண்ணன்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time