தனி மரமாகத் தடுமாறும் ஒ.பி.எஸ்!

சாவித்திரி கண்ணன்

அதிமுகவில் எங்களை சேர்க்க வேண்டும் என்று அமித்ஷா மூலம் அழுத்தம் தந்து வந்தவரான ஒ.பி.எஸ் அது கை கூடாததால் திமுகவில் சேர தூதுவிட்டுள்ளார். அதிமுகவில் சேர்வதற்கும், திமுகவில் சேர்வதற்கும் ஒ.பி.எஸ் வைத்த நிபந்தனைகளே அவரை எங்கும் சேர முடியாமல் இரண்டுங்கெட்டான் ஆக்கிவிட்டது;

தை பிறந்தால் வழி பிறக்குமாம்!

வயலில் அறுவடைக்கு தயாராக இருக்கும் நெற் பயிர்களை நம்பி வாழும் விவசாயிகள் உதிர்க்கும் சொலவடை இது!

ஒ.பி.எஸ் இதைச் சொல்வதற்கு காரணம், எப்போதுமே அதிர்ஷ்டத்தை எதிர்பார்த்து தேவுடு காக்கும் மன நிலை தான்.

அதிமுகவில் தன்னை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே ஒ.பி.எஸ்சின் ஒரே எதிர்பார்பாக இருந்தால் அது என்றோ இயல்பாக நடந்தேறி இருக்கும். ஆனால், அவர் அதிமுக தலைமை மீதான எல்லா வழக்குகளையும் வாபஸ் வாங்கிவிட்டு திறந்த மனதோடு வரமாட்டாராம். அத்துடன் எக்ஸ்டிரா நிபந்தனைகள் வேறு.

சரி அதிமுக மீதான வழக்குகளை வாபஸ் வாங்கிட்டு  போய்விடலாமே என்ற பாஜகவின் அட்வைஸையும் ஏற்கவில்லையாம்!

தன்னுடைய பிடிவாதத்தால் தன்னை நம்பி வந்தவர்களின் எதிர்காலத்தையும்  பாழ்படுத்திவிட்டார்.

சரி, டி.டி.வி.தினகரனைப் போல ஒரு தனிக்கட்சி ஆரம்பித்து உன் பலத்தை நிரூபித்து அதற்கேற்ப சீட் வாங்கிக் கொண்டு போ என்றால்..,

தனிக்கட்சியா? அதுக்கு செலவழிக்கணுமே.., ஊர் ஊராகச் சென்று ஆதரவாளர்களை அணிதிரட்டி பொறுப்புகள் வழங்கி நிர்வாகம் செய்யணுமே. நான் எந்த ரிஸ்க்கும் எடுக்க மாட்டேன். ஆனால் எனக்கு தின்னுவதற்கு மட்டும் ரஸ்க் வேண்டுங்கிற ஆசாமியாக காலத்தை உருட்டிக் கொண்டு இருக்கிறார்.

இரண்டுங்கெட்டான், ஒட்டுண்ணி, உழைக்கத் தயாரில்லாத சோம்பேறி, அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பி வாழும் அழுகுண்ணி…

இவை எல்லாவற்றுக்குமான ஒரு மனிதரைப் பார்க்க வேண்டும் என்றால் அது ஒ.பி.எஸ் தான்.

அவரை நம்பிச் சென்ற பற்பலரும் காலப்போக்கில் தான் இவர் நம்மை வழி நடத்திச் செல்லும் தலைவர் அல்ல. நம் வாழ்க்கையை நாம் தான் பார்த்துக் கொள்ள வேண்டும்…எனக் கூட்டிலிருந்து சிறகு விரித்து ஒருவரையடுத்து ஒருவராக பறந்தார்கள்!

அரசியல் என்பது போராட்டக் களம். அதில் தலைமை பொறுப்புக்கு வருவதற்கு தன்னிகரில்லாத் தகுதியும், ஓயாத உழைப்பும் தேவை..என்ற விதிக்கு மாறாக  மூன்று முறை இவர் வாழ்க்கையில் அதிர்ஷ்டக் காற்று வீசி முதலமைச்சர் ஆசனத்தில் உட்கார வைத்தது.

ஆரம்பத்தில் தகுதி இல்லை என்றாலும், வாய்ப்பு கிடைத்த பிறகு அதற்கேற்ப தன்னை தகவமைத்துக் கொள்வர் சிலர். ஆனால், அதுவும் இவரிடம் இல்லை. இன்னும் சொல்வதென்றால் ஒரு போதும் இவர் தன்னை தகவமைத்துக் கொள்ளமாட்டார். அடிமை விசுவாசியாகவே தொடர்வார் என்பதால் தான் ஆபத்து நேரங்களில் அரியணையில் எடுத்து வைக்கப்படும் பொம்மையாக ஜெயலலிதா ஒ.பி.எஸ்சை பயன்படுத்தினார். மூன்றாவது முறை  இதே காரணத்திற்காக முதல்வாராகும் வாய்ப்பு ஒ.பி.எஸ்சுக்கு பாஜக நிர்பந்தத்தால்  வழங்கப்பட்டது.

ஜெயலலிதா இல்லாத அதிமுகவை தலைமை ஏற்று நடத்துவதற்காகவே தவம் கிடந்த சசிகலாவிற்கு தடை போட்டது பாஜக.  பாஜகவின் அந்த தடைக்கு ஆதரவாக ஒ.பி.எஸ் ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்தார். சொந்தக் கட்சிக்கு எதிராக சில எம்.எல்.ஏக்களை பிரித்துக் கொண்டு வெளியேறினார். பிறகு பாஜக நிர்பந்தத்தால் மீண்டும் கட்சிக்கு வந்தார். துணை முதல்வர், இணை ஒருங்கிணைப்பாளர் என முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டும் தொடர்ந்து பாஜகவின் உளவாளியாகவே கட்சிக்குள் வளம் வந்தார். இதனால், வெளியேற்றப்பட்டார்.

தூக்கி சுமக்க பாஜகவின் தோள்கள் இருந்த காரணத்தால் சொந்தக் கட்சியின் மீது வழக்குகள் போட்டு இரட்டை இலையை முடக்கினார். இன்று வரை எடப்பாடி பழனிச்சாமி பாஜகவுடன் அனுசரித்துப் போக வேண்டிய கட்டாயத்தை உருவாக்கியதில் ஒ.பி.எஸுக்கு பெரும் பங்கு உண்டு.

பாஜகவின் தயவினால் நீதிமன்றங்களின் ஆதரவு, தேர்தல் கமிஷனின் ஆதரவு..எல்லாம் ஒ.பி.எஸுக்கு கிடைத்தாலும் பெருமளவு கட்சியினரது ஆதரவு பழனிச்சாமிக்கு இருந்ததால் பாஜகவின் பாச்சா பலிக்கவில்லை. ரொம்பவும் நெருக்கடி தந்தால் உள்ளதும் கெட்டுவிடும். பழனிச்சாமி நெஞ்சழுத்தமுள்ள மனிதர். பணிவது போல பாசாங்குகாட்டி தன் நிலைபாட்டில் இருந்து கொள்கிறார் என்று பாஜகவும் ஒரளவுக்கு மேல் பின் வாங்கிவிட்டது.

கடைசியாக பழனிச்சாமி ஒ.பி.எஸ்சை ஒரு போதும் சேர்க்கமாட்டோம். தனிக் கட்சி ஆரம்பித்து வரட்டும். அவருக்கு சீட்டு தருகிறோம் என்றாராம்!

தனிக்கட்சி ஆரம்பித்து உழைக்கவோ, பணம் செலவழிக்கவோ மெனக்கிடத் தயார் இல்லை என்பதால் நோகாமல் நொங்கு திங்க விரும்புகிறேன். இதுவே என் நிலைபாடு என்பதை உறுதிபடுத்திக் கொண்டு, திமுகவில் தூதுவிட்டுப் பார்த்தார்.

என்ன எதிர்பார்க்கிறாராம்? எனக் கேட்கப்பட்டதற்கு,

மூன்று முறை முதல்வராக இருந்திருக்கேன். அதிமுகவில் இணை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்திருக்கேன். திமுகவில் பொதுச் செயலாளருக்கு இணையாக இணை பொதுச் செயலாளர் பதவி வேண்டும். என்னோட ஆட்கள் பத்து பேருக்கு சீட்டு வேண்டும் எனச் சொல்றாரு ..

என்றவுடன் திமுக தலைமை அதிர்ந்துவிட்டதாம்!

வெளியில் இருந்து வருகிறவர்கள் கட்சியின் முக்கிய பொறுப்புக்கு இங்கு வர முடியாது. சென்ற நாடாளுமன்றத் தொகுதியில் பாஜகவே இவருக்கு ஒத்த சீட்டைத் தான் கொடுத்திச்சு. என்னா தைரியத்துல 10 சீட்டு கேட்கிறார். நாம் பாஜகவை எதிர்த்து பாலிடிக்ஸ் பண்ணிக்கிட்டு இருக்கோம். இவரு பாஜகவின் பக்தர். ஆக சரிப்படாதுன்னு கதவை சாத்திட்டாங்களாம்.

அதிமுக ஆட்சியிலே மூன்று முறை முதல்வராக இருந்துட்டு, அதன் ஜென்ம விரோதியான திமுகவுக்கு சேர்ப் போனாரே..என்று அவரை சார்ந்திருந்த  கொஞ்ச, நஞ்ச தொண்டர்கள் மத்தியிலும் கொந்தளிப்பு ஏற்பட்டுச்சாம் !

கொந்தளிச்சு என்ன ஆகப் போறது? இன்றைய அரசியலில் சுயநலத்தின் உச்சம் தொட்டவர்கள் தாம் சுகமாக வாழ்கிறார்கள்!

ஆதரவாளர்களை எல்லாம் இழந்துவிட்டு ஒற்றை மரமாய் நட்டாற்றில் நிற்கும் ஒ.பி.எஸ்சுக்கு தை பிறந்தால் எப்படி வழி பிறக்குமோ..? பார்ப்போம்.

சாவித்திரி கண்ணன்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time