இது கனவா? நிஜமா? அல்லது நாடகமா? நம்ப முடியவில்லை. தஞ்சையில் அரசாங்கத்திற்கு சொந்தமான 58 ஏக்கர் நிலத்தை 42 ஆண்டுகளாக ஆக்கிரமித்து கல்வி வணிகம் நடத்தி வந்த சாஸ்திரா பல்கலைக் கழக சனாதனிகள் சுலபத்தில் விட்டுத் தருவார்களா? பார்ப்பன லாபி பின் வாங்கிப் பாயுமா..? ஒரு அலசல்;
தஞ்சை திருமலை சமுத்திரத்தில் சாஸ்திரா பல்கலைக் கழக ராமச்சந்திர ஐயரால் ஆக்கிரமிக்கப்பட்ட அரசாங்க நிலம் மீட்டெடுக்கப்பட்டுவிட்டதாம்…!
42 ஆண்டுகளாக தமிழ் நாட்டரசையே திணறடித்து தண்ணி குடிக்க வைத்தவர்களே சாஸ்திரா முதலாளிகள். சனாதனவாதிகளான இவர்கள் சட்டம், நீதி அனைத்தையும் முடக்கி, உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம்.. என ஆட்சியாளர்களை அலைக்கழித்தனர், பல்லாண்டுகளாக!
எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தின் போது திறந்த வெளி சிறைச்சாலைக்காக திட்டமிடப்பட்ட இடம் தான் இது! அப்போது தமிழகத்தில் தனியார் பொறியியல் கல்லூரிகள் தோற்றம் பெற்றுக் கொண்டிருந்தன. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இந்த நிலப்பரப்பை துணிச்சலோடு ஆக்கிரமித்தவர் எஸ். ராமச்சந்திர ஐயர். ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தின் அளவு 58.17 ஏக்கர்.
இது முதன் முதலாக சண்முகா பொறியியல் கல்லூரியாக ஆரம்பிக்கப்பட்டது. 2001-ல் தமிழகத்தின் முதல் தனியார் பல்கலைக்கழகமாக (Shanmugha Arts, Science, Technology & Research Academy (SASTRA) அங்கீகாரம் பெற்றது. தற்போது இதன் மொத்த பரப்பளவு 232 ஏக்கராகும். இதில் களவாடப்பட்ட நிலத்தின் அளவு 58.17 ஏக்கராகும்.
அரசாங்க நிலத்தையே அபகரித்து அரசாங்கமே முயற்சித்தும் 42 ஆண்டுகளாக போராடிப் பார்த்தும் நில மீட்பு என்பது முந்தாநேற்று வரை சாத்தியமற்றதாகவே இருந்தது.
இந்த ஆக்கிரமிப்பு நிலத்தை சாஸ்திராவிடம் இருந்து மீட்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ச்சியாக பல போராட்டங்களை நடத்தி ஒரு கட்டத்தில் ஓய்ந்துவிட்டது. அந்த போராட்டங்களை முன்னெடுத்த வழக்கறிஞர் தோழர் ஜீவகுமாரோ, மக்கள் நலப் பேரவை என தனி இயக்கத்தின் வழியே இந்த போராட்டங்களை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பது, மக்களை திரட்டி போராடுவது என தொடர்ந்து கடைசி வரை போராடி வந்தார்.

சட்டப் போராட்ட களத்தில் சாஸ்திராவுக்கு சாதகமாக அரசாங்கத்தையே அனுசரித்துப் போகும் படி சொன்ன நீதிபதிகளையும் பார்த்தோம். சாஸ்திரா பல்கலைக் கழகம் வழங்கும் மாற்று இடத்தை ஏற்றுக் கொள்ளுங்களேன் என அரசையே நீதிபதிகள் நிர்பந்தித்தனர்.
அப்போது தமிழக அரசின் வழக்கறிஞர்கள் சொன்ன வாதம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது;
தமிழகத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் சென்றால், முதலில் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்து வைத்துள்ள நிலத்தை மீட்டுவிட்டு எங்களிடம் வாருங்கள் என பொதுமக்கள் அரசாங்கத்தை ஏளனமாக பேசும் அளவுக்கு நிலைமையாகிவிட்டது. நீர்நிலைப் புறம்போக்கு பகுதிகளை இந்த பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ளதால் மாற்று இடத்தை பெற்றுக் கொள்ளும் அரசாணை சாஸ்த்ராவுக்கு பொருந்தாது’’ என ஆட்சேபம் தெரிவித்தது நாடெங்கும் விவாதிக்கப்பட்டது.
இதையெல்லாம் மீறி அடுத்தடுத்த மேல் முறையீடுகளைக் கண்டு 2018 ஆம் ஆண்டு அரசாங்கத்திற்கு சாதகமாக இறுதி தீர்ப்பு கிடைத்தது.
அப்போது அதிமுக ஆட்சியின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக் கழகம் அரசாங்க நிலத்தை ஆக்கிரமித்ததை ஏற்க முடியாது. எனவே உறுதியாக அரசு மீட்டெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதன் அன்றைய சிறைத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மீட்டெடுக்க வேண்டும் என்று அரசு ஆவணத்திலேயே எழுதிவிட்டார்.
நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு நீதி வென்றாலும் அதை செயல்படுத்த முடியவில்லை. அவர்களின் செல்வாக்கு அப்படிப்பட்டது. மத்திய பாஜக அமைச்சர்கள் பலரும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாத ஐயர், துக்ளக் சோ, ஆடிட்டர் குருமூர்த்தி போன்றவர்களும் இந்த பல்கலைக்கழகத்தின் பல நிகழ்வுகளில் அடிக்கடி கலந்து கொள்வார்கள். ஆர்.எஸ்.எஸ் முகாம்கள் இங்கு நடக்கும்.
இந்தக் கல்லூரி நிகழ்வுகளை விதந்தோதும் பிரபல ஊடகங்கள் நீதிமன்றத் தீர்ப்புக்காக நீதி கேட்டு எழுதுவதில்லை. அதிமுக ஆட்சி முடிந்து திமுக ஆட்சி வந்தது.
இந்த ஆட்சியாளர்கள் ஜெயந்தி ஐ.ஏ.எஸ் தலைமையில் ஒரு குழு அமைத்து கள ஆய்வு செய்து 2021 ஆம் ஆண்டு நவம்பரிலேயே பல்கலைக் கழக நிர்வாகத்தை நிலத்தை காலி செய்து தரும்படி கூறிவிட்டனர். அங்கு கட்டப்பட்டுள்ள 28 பிரம்மாண்ட கட்டிடங்களை இடித்து நிலத்தை பழையபடி ஒப்படைக்க கூறி அங்கு நோட்டீசும் ஒட்டினர். ஆனாலும் இந்த நான்காண்டுகளாக இவர்களை காலிபண்ணச் செய்ய முடியவில்லை.

சென்னை உயர் நீதிமன்றம், சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தை வருவாய்த் துறை மீட்க வேண்டும் என்று நேற்று முன்தினம் ( ஜனவரி 9, 2026) உத்தரவிட்டது.
மீண்டும் நீதிமன்றம் தலையிட்டு நீதிமன்ற உத்திரவை கறாரக நிறைவேற்றுங்கள் என சொல்வதற்கு இத்தனை ஆண்டுகள் கடந்து விட்டன. அதுவும் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் ஒரு பகுதி அளவான 31 ஏக்கர் மட்டுமே மீட்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. என்றாலும், இதை செயல்படுத்த முடியுமா? என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையடுத்து, கோட்டாட்சியர் நித்யா, வட்டாட்சியர் சிவக்குமார் தலைமையிலான வருவாய்த் துறையினர் நேற்று அங்கு சென்று, ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நிலத்தை வருவாய் துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் மேலும், “இது அரசு நிலம், அத்து மீறி நுழைபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்ற அறிவிப்பு பலகையை வைத்துள்ளதாகவும் பின்னர், மீட்கப்பட்ட நிலத்தை சிறைத் துறை அதிகாரிகளிடம், கோட்டாட்சியர் ஒப்படைத்தைத் தொடர்ந்து, சிறைத் துறை அதிகாரிகள் அந்த இடத்தில் திறந்தவெளி சிறை அமைப்பதற்கான ஆலோசனை கூட்டத்தை நேற்று மாலை அங்கு நடத்தியதாகவும் ஊடகங்களில் செய்தி வந்துள்ளது.
விரிந்து பரந்துள்ள 58.17 ஏக்கர் நிலங்களை – அதுவும் காவல்துறை சொத்தை – களவாடி இத்தனை நாள் உரிமை கொண்டாடியவர்கள் நிரபராதிகளா?
ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் 28 கட்டிடங்களை எழுப்ப துணை போன அதிகாரிகள், அரசியல்வாதிகள் யாருக்குமே தண்டனை இல்லையா? சாஸ்த்திராவிடம் தங்கள் பிள்ளைகளுக்கும், உறவினர்களுக்கும் சீட்டு கேட்டு வாங்கிக் கொண்டு சாஸ்திரா பல்கலைக் கழகம் மீது நடவடிக்கை எடுக்காமல் தவிர்த்த அரசு அதிகாரிகள், போராட மறுத்த அரசியல்வாதிகள் போன்றோர்கள் அம்பலப்படுவார்களா?
களவாடப்பட்ட இடத்தில் கல்வி வணிகம் செய்து கோடிக் கோடியாக கல்லா கட்டியவர்களுக்கு என்ன தண்டனை? சிறை உண்டா? குறைந்தபட்சம் அபராதமாவது உண்டா?
அங்கு கட்டப்பட்ட கட்டிடங்களை என்ன செய்வார்கள்..?
தெரியவில்லை.
அப்படியானால், இதுவும் கண் துடைப்பாக கடந்து போய்விடுமா?
சட்டம் அனைவருக்கும் பொது என்றால், அரசாங்க சொத்தை களவாண்ட இந்த சாஸ்த்திராவின் சனாதனவாதிகளுக்கு இந்திய அரசியல் சட்டம் பொருந்துமா? பொருந்தாதா?
நடக்கப் போவது என்னவென்று பார்ப்போம்.
இந்தத் தீர்ப்பை இடதுசாரிக் கட்சிகள் உள்ளிட்ட அரசியல் மற்றும் சமூக இயக்கங்கள் வரவேற்று அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை செய்ய உகந்த சூழலை உருவாக்க வேண்டும். இது போல மற்ற கல்வி நிலையங்கள் ஆக்கிரமித்துள்ள அனைத்து அரசு நிலங்களை மீட்கவும் குரல் கொடுக்க வேண்டும்.
சாவித்திரி கண்ணன்






















ஏன் இல்லை அவர்களுக்கு TAPSநிச்சயம் உண்டு