கேரளா பாணி கூட்டணியின் சாதக அம்சங்கள் இங்கும் சாத்தியமே!

-சுபுடு

எப்படிப் பார்த்தாலும் அதிகாரப் பரவல் என்பதிலே தான் ஜனநாயகத்தின் ஆன்மாவே உள்ளது. அதிகார குவிப்பு என்பது மத்தியில் இருப்பதை எதிர்க்கும் போது மாநிலத்திற்கு மட்டும்  விதி விலக்கா என்ன? கூட்டணி ஆட்சி என்பதை எடுத்த எடுப்பிலேயே எதிர்க்காமல் அதன் சாதக அம்சங்களை பார்க்கலாமே;

கூட்டணி ஆட்சி பற்றி பேசினால், ”பேராசை பிடித்து கேட்கிறார்கள், கூட்டணிக்கு நெருக்கடி தருகிறார்கள்..” என்று கொச்சையாக கேலி, கிண்டல் செய்யப்படுகிறது.

கூட்டணி ஆட்சி முறை அதிகார பரலவலாக்கத்திற்கும், பன்முகத்தன்மை கொண்ட – அனைத்து பிரிவினருக்குமான ஆட்சி உருவாக வகை செய்யும். பொருளாதார வளர்ச்சிக்கும் வகை செய்யும் என்று வரலாறு கூறுகிறது.

பீகார், ஜார்காண்ட், ஆந்திர பிரதேசம், கேரளா, மகாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களில் ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை இருந்தாலும், இல்லாவிட்டாலும் கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கும் முறை பல ஆண்டுகளாக தொடர்கிறது.

2026 ல் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் பலரும் குரல் கொடுக்கின்றனர். அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, மாணிக்கம் தாக்கூர் உள்ளிட்ட பலரும் கூறுகின்றனர். ஆனால், கடந்த 65 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி ஏற்பட்டதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2006-11இல் கலைஞர் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி வெறும் 96 எம்.எல்.ஏக்களை கொண்ட சிறுபான்மை அரசாக ஆட்சி செய்தது. காங்கிரஸ் உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சிகள் வெளியே இருந்து ஆதரவு அளித்தனர். அந்த சூழலில் கூட இங்கு கூட்டணி ஆட்சி அமையவில்லை.

மத்தியில் கூட்டணி ஆட்சி என்பது 35 ஆண்டுகளுக்கு முன்பே சாத்தியமான நிலையில் தமிழகத்தில் அது சாத்தியபடாமல் வெறும் கோரிக்கையாகவே  உள்ளது. மத்தியில் கூட்டணி சகாப்தம் நிகழ்ந்த 1991 முதல் 2014  காலகட்டத்தில் தான் இந்திய பொருளாதாரம், வரலாறு காணாத வளர்ச்சியை பெற்றது குறிப்பிடத்தக்கது. மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் உருவான அசுர வளர்ச்சி விகிதத்தை, பெரும்பான்மை பலம் கொண்ட மோடி ஆட்சியில் எட்டவே முடியவில்லை என்பதும் ஒப்பிடத்தக்கது.

அண்டை மாநிலமான கேரளா, கல்வி, சுகாதாரம், வறுமை ஒழிப்பு, வாழ்க்கை தரம் போன்ற பல்வேறு மனித வளர்ச்சிக் குறியீடுகளில் தமிழகத்தை விட முன்னனியில் உள்ளது. அங்கு கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கூட்டணி ஆட்சி முறை தொடர்வது இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

கூட்டணி ஆட்சி முறையில் சிறுபான்மை சமூகத்தினர், தலித்துகள், தொழிலாளர்கள், பெண்கள் உள்ளிட்ட பல்வேறு விளிம்பு நிலையினரை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள், இயக்கங்களுக்கு அதிகாரத்தில் பங்கு கிடைக்கும்.

அமைச்சரவையிலும், பல்வேறு வாரியங்கள், அரசு பொதுத் துறை நிறுவனங்களின் நிர்வாக குழுவில் இடம் பெற வழி பிறக்கும். இதன் மூலம் ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலை பிரிவினரின் கோரிக்கைகள், பிரச்சனைகள் குறித்து, மாநில அரசு கவனம் குவிக்க, தீர்வுகளை முன்னெடுக்க அழுத்தம் உருவாகிறது.

உதாரணமாக சாதி ஆணவக் கொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் தேவை, சேவை பெறும் உரிமை சட்டம் போன்ற கோரிக்கைகளைச் சொல்லலாம்.  ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இது போன்ற சட்டங்கள் இயற்றப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் இன்று வரை இது சாத்தியமாகவில்லை.

திமுக அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம் பெற்றிருந்தால்,  சாதி ஆணவப் படுகொலை சட்டம் சாத்தியமாகியிருக்கும். அமைச்சரவை கூட்டங்களில் விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் இது குறித்து வலியுறுத்தி, இதற்கான மசோதாவை தாக்கல் செய்ய அழுத்தம் கொடுத்திருப்பார்கள். தற்போது வெளியே இருந்து ஆதரவு அளித்து வரும் நிலையில், முதலமைச்சரை சந்தித்து, கோரிக்கை மட்டுமே வைக்க முடிகிறது.

தமிழக சிறைகளில் பல பத்தாண்டுகளாக உள்ள கைதிகளை, கருணை அடிப்படையில் 15 ஆண்டுகளுக்கு பிறகு, அண்ணா பிறந்த நாள் போன்ற குறிப்பிட்ட நாட்களில் விடுவிக்கும் வழமையில், இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த இத்தகைய கைதிகள் புறக்கணிக்கப்படும் நிலை தற்போது இருக்கிறது.. மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் இங்கு இருந்தால், இதற்கான அழுத்தத்தை கொடுத்திருப்பார்கள்.

பின் தங்கிய பகுதிகள், வேலை வாய்ப்புகள் மிகக் குறைவாக உள்ள வறண்ட பகுதிகளுக்கு சிறப்பு நிதி தொகுப்புகள், சிறப்பு திட்டங்களை அமல்படுத்தவும், சம்பந்தப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த கூட்டணி கட்சிகள், ஒரு கூட்டணி ஆட்சியில் அதிக அழுத்தத்தை கொடுக்க முடியும்.

தற்போதைய ஆட்சியில் சர்வதேச ரீதியில் ஒத்துக் கொள்ளப்பட்ட எட்டு மணி நேர வேலையை 12 மணி நேரமாக்க ஒரு சட்டம் அவசர கதியில் 110 விதியின் கீழ் அமல்படுத்தப்பட்டு, மிக கடுமையான எதிர்ப்பை பெற்று பிறகு பின் வாங்கிக் கொள்ளப்பட்டது. கூட்டணி இருந்திருந்தால் இடதுசாரி கட்சிகள் இதை முன் கூட்டியே எடுத்துரைத்து தவிர்த்து, அரசுக்கு அவப் பெயர் ஏற்படாமல் காத்திருப்பார்கள்.

மேலும் தற்போது கூட்டணிக் கட்சியினர் நடத்தும் மக்கள் நலன் சார்ந்த  நல்ல முன்னெடுப்புகளைக் கூட இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குகிறது காவல்துறையும்,அரசு நிர்வாகமும். உதாரணமாக தமிழகத்தில் மதவெறி அமைப்புகள் வலுப்பெற்று வரக் கூடிய நிலையில் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மதுரை மாவட்ட ஆட்சியரும், காவல்துறையும் இந்துத்துவ இயக்கங்களுக்கு ஆதரவாகத் தொடர்ந்து செயல்பட்டதையும், முற்போக்கு இயக்கங்களின் சமய நல்லிணக்க முயற்சிகளுக்கு முட்டுக் கட்டை போட்டதையும் தடுக்க முடியாமல் போனது துர் அதிர்ஷ்டமே. கூட்டணி ஆட்சியாக இருந்திருந்தால், இன்று  நல்லிணக்க சூழல் இந்த அளவுக்கு மோசமான நிலைமைக்கு போகாமல் முளையிலேயே தடுத்திருக்க முடியும்.

இது போன்ற சாதகமான அம்சங்கள் நிறையவே உள்ளன. எனவே, கேரளா மாடல் போல தமிழகத்திலும், கூட்டணி ஆட்சி முறை உருவாக வேண்டும் என்பதே ஜனநாயகவாதிகளின் கோரிக்கையாக உள்ளது. ஆனால், இதற்கு காங்கிரஸ் மட்டும் அழுத்தம் கொடுத்தால் போதாது. விடுதலை சிறுத்தைகள் , மனித நேய மக்கள் கட்சி, சி.பி.எம். சி.பி.ஐ, மதிமுக உள்ளிட்ட இதர கூட்டணி கட்சிகளும் – தயக்கத்தை தவிர்த்து – ஒன்றிணைந்து அழுத்தம் கொடுத்தால் தான் இது சாத்தியமாகும்.

கட்டுரையாளர்; சுபுடு

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time