பராசக்தி சொல்ல வரும் செய்தி என்ன? காங்கிரஸ் மீதான அதி தீவிர வெறுப்பை ஆழமாக விதைப்பதா? இளைய தலைமுறைக்கு பாஜகவை விட காங்கிரஸ் தான் மிகப் பெரிய வில்லன், அழிக்கப்பட வேண்டிய நாசகார சக்தி என்ற உணர்வை தோற்றுவிப்பதா..? இந்தி எதிர்ப்பால் ஆட்சிக்கு வந்த திமுக இன்று செய்து கொண்டிருப்பது என்ன..?
மிகுந்த ஆர்வத்தோடு பராசக்தி படம் பார்க்கச் சென்றேன்.
தமிழ்நாட்டு வரலாற்றில் தமிழ் காக்க நடத்தப்பட்ட மகத்தான உணர்வெழுச்சியே இந்தி எதிர்ப்பு போராட்டங்களாகும்.
இந்தி எதிர்ப்பு போராட்டத்தை ஆவணப்படுத்தும் வகையில் இது வரை யாரும் எடுக்காத நிலையில், அந்த வரலாற்றை பதிவு செய்ய எடுக்கப்படும் முன்னெடுப்பை நாம் பார்க்க வேண்டாமா? வாழ்த்த வேண்டாமா? என்று தான் சென்றேன்.
படம் தமிழ் மொழி மீதான அன்றைய இளைஞர்களின் பற்றுதலை காட்டுவதில் வெற்றி பெற்றுள்ளது. சிவகார்த்தியேன் நடிப்பு அபாரம். வசன உச்சரிப்பில் மாத்திரமல்ல, உடல் மொழியையும் சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார்.
இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் தொடர்பாக ஏராளமான நூல்கள், கட்டுரைகள் வந்துள்ளன. வரலாறு பதிவாகி இருக்கிறது. ஆனால், படம் இதைச் சொல்வதாக வந்து திசைமாறிப் பயணித்தது போன்ற உணர்வைத் தந்தது.
முதல் காட்சியிலேயே மாணவர்களை ரயிலுக்கு தீ வைப்பவர்களாக காட்டியுள்ள லாஜிக்கை புரிந்து கொள்ள முடியவில்லை. அது தொடங்கி இந்தி எதிர்ப்பு போராட்டம் என்பது ஒரு தனிப்பட்ட நாயகனுக்கும், வில்லனான போலீஸ் அதிகாரிக்குமான நகர்வாக அதிகம் பயணிக்கிறது.

தெலுங்கு குடும்பப் பெண்ணை வலிந்து கதாநாயகியாக்கியது படத்திற்கு பலம் சேர்க்கவில்லை. அதற்கு வம்சா வழியில் தெலுங்காக இருந்தாலும் தமிழக மண்ணில் பிறந்து வளர்ந்த இளைஞர்கள் பலரும் தமிழ் மொழி காக்க இந்தி போராட்டத்தில் இங்கு ஈடுபட்டதை சொல்லி இருக்கலாம்.
படித்த மாணவர்களைக் காட்டிலும் தமிழ் எழுதப்படிக்க தெரியாத பாமரத் தமிழர்களே இந்தி எதிர்ப்புக்காக அதிகமாக உயிர் கொடுத்தனர் என்ற எழுச்சிமிக்க வரலாறு இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு உண்டு.
ஆனால், அந்த வரலாற்றையெல்லாம் சரியாக உள் வாங்காமல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஆந்திரா, கேரளா, பெங்காலைச் சேர்ந்த மாணவர்கள் ஈடுபட்டு, அந்தந்த மொழிகளிலும் கையெழுத்து இயக்கம் நடத்தி பிரதமரிடம் வழங்கியதாக – உண்மைக்கு மாறான மிகைப்படுத்தப்பட்ட சித்தரிப்பை செய்துள்ளதோடு, காங்கிரஸ் முதல்வரை முட்டாளாகவும், காங்கிரஸ் ஆட்சியை கர்ண கொடூரமான ஆட்சியாகவும், காங்கிரஸ் தொண்டர்கள் மாணவர்களை துவம்சம் செய்வதாகவும் படம் சித்தரிக்கிறது. ஒரு தனி போலீஸ் அதிகாரி டெல்லியில் இருந்து வந்து முதல் அமைச்சரையே முடக்கிப் போட்டு கண்ணில் பட்ட இளைஞர்களையெல்லாம் கொன்று குவித்ததாக சொல்லப்படுவது படு அபத்தம்.

பக்தவச்சலத்தை முதல்வராகக் கொண்ட அன்றைய காங்கிரஸ் ஆட்சி மாணவர்களின் இந்தி எதிர்ப்பு போராட்டங்களை சரியாக கையாளத் தெரியாமல் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதை மறுப்பதற்கில்லை. ஆனால். அப்போது காங்கிரசில் காமராஜ் உள்ளிட்ட சில தலைவர்களே இந்தி திணிப்பு வேண்டாம் என மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்த பேச்சுக்களும், பதிவுகளும் நிறையவே உள்ளன.
காட்சிப்படுத்தும் விதத்திலும், மிகைப்படுத்தப்பட்ட திரைக்கதை வடிவிலும் இந்தி தெரியாத இன்றைய இளம் தலைமுறையிடம் இந்தப்படம் காங்கிரஸ் மீதான அதி தீவிர வெறுப்பை ஆழமாக விதைக்கிறது. இன்றைக்கு இந்துத்துவ மதவாத சக்திகள் தமிழகத்தில் மேலெழுந்து வரும் ஒரு ஆபத்தான காலகட்டத்தில் படம் பார்த்த இளைய தலைமுறைக்கு பாஜகவை விட காங்கிரஸ் தான் மிகப் பெரிய வில்லன், அழிக்கப்பட வேண்டிய நாசகார சக்தி என்ற உணர்வை தோற்றுவிப்பதை என்னவென்று புரிந்து கொள்வது?
இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், வெளியீட்டாளர் இன்பநிதி ஸ்டாலின் இருவரும் திமுகவின் தலைமை குடும்ப உறுப்பினர்கள். காங்கிரசை கூட்டணியில் வைத்துக் கொண்டே வச்சு செய்திருக்கிறார்களே.. என்று வியப்பாக உள்ளது.
படத்தில் ஒரு வசனம் வரும். ”பிரிட்டிஷ்காரர்களின் சர்வாதிகாரத்தை எதிர்த்து சுதந்திரப் போராட்டம் நடத்திய காங்கிரஸ், இன்று தானே அது போன்ற சர்வாதிகாரியாக மாறி நிற்பது சரியா?” என திமுக தலைவர்கள் சட்ட சபையில் காங்கிரஸ்காரர்களை கேட்பதாக அந்த வசனம் உள்ளது.
அந்த வசனத்தையே இன்றைக்கு திமுக அரசைப் பார்த்து கேட்கும் காலகட்டமாக இது இருக்கிறது. இந்தி எதிர்ப்பு போராட்டங்களின் வழியாக ஆட்சிக்கு வந்த திமுக அரசு, இன்றைக்கு மத்திய பாஜக அரசின் நிஜமான இந்தி திணிப்பை தடுக்க தவறியுள்ளதோடு, அதற்கு துணை போய்க் கொண்டுள்ளதை என்னென்பது?
# தமிழக வங்கிகள், தபால் அலுவலகங்களில், தமிழகப் பகுதி ரயில்வேயில், நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் போன்ற மத்திய அரசு நிறுவனங்களில் இன்று பெருமளவு வட இந்தியர்களே பணியில் அமர்த்தப்படுகின்றனர்.
# தமிழ் தெரியாத – ஆனால் ஆங்கிலத்தை நன்கறிந்த – இளம் தமிழ் சமூகத்தை உருவாக்கி இருப்பதற்கு 55 வருட திராவிட இயக்க ஆட்சியாளர்கள் பொறுப்பில்லையா?
# தமிழகத்தில் திரும்பும் திசையெல்லாம் வட இந்திய இளைஞர்களே தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் நிலை உருவானத்தில் இங்கே ஐம்பது வருடத்திற்கும் மேலாக ஆட்சி செய்பவர்களுக்கு பொறுப்பு இல்லையா?
தமிழக இளைஞர்களையெல்லாம் நீங்க உற்பத்தி செய்யும் டாஸ்மாக் மதுவைக் கொடுத்து பிளாட்டாக்கி போட்டுவிட்டீர்களே….! உங்க கல்லாவை நிரப்ப இளைஞர்களின் எதிர்காலத்திற்கே கல்லறை எழுப்பிக் கொண்டு இருக்கிறீர்களே!
Also read
# எல்லாவற்றுக்கும் மேலாக தமிழகத்தில் சிப்காட் சார்பில் தொழில் பூங்கா என்று சொல்லி 30 மாவட்டங்களிலும் விவசாயிகளின் பல்லாயிரம் ஏக்கர் நன்செய் நிலத்தை வம்படியாக பிடுங்கி அயல் நாட்டு முதலாளிகளுக்கும், வட இந்திய முதலாளிகளுக்கும் தாரை வார்த்ததோடு, அவற்றில் உருவாகும் தொழிற்சாலைகளில் 80 % வட இந்திய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்துள்ளீர்கள். இது குறித்து அறம் இதழில் விரிவாக ஆதாரபூர்வமாக எழுதியுள்ளோம்.
விவசாய நிலப்பறிப்பில் வியத்தகு சாதனை படைத்த திமுக அரசு!
சொந்த மண்ணில் பாரம்பரியமாக விவசாயம் செய்த பல்லாயிரக்கணக்கான தமிழக விவசாயிகளை அகதிகளாக்கும் அட்டூழியத்தை செய்து கொண்டே இந்தி எதிர்ப்பு பேசுவதும், சனாதனக் கருத்தாக்கத்தை உள்வாங்கிய தேசிய கல்வி கொள்கையை பள்ளி கல்வியில் பகிரங்கமாக அமல்படுத்திக் கொண்டே பார்ப்பனிய எதிர்ப்பு என்று பாசாங்கு செய்வதும் இன்னும் எத்தனை நாளுக்கு என்று பார்ப்போம்.
திராவிட இயக்கங்களே தேசியத்தின் பங்குதாரர்களாகி எல்லா பாதகங்களையும் செய்து தந்து பலாபலன்களை அனுபவிக்கும் தற்காலச் சூழலில் இந்தப் படத்தின் சேவையுமே கூட காங்கிரசை கருவறுத்து, பாஜகவை நிலை நிறுத்துவதாகத் தான் உள்ளது.
சாவித்திரி கண்ணன்
















மிகுந்த ஆர்வமின்மை காரணமாக நான் பராசக்தி படம் பார்க்கச் செல்லவில்லை.
பாஜகவுக்கு ஆதரவாக திரைப்படத்தில் எதுவும் வசனங்கள் இல்லையே. காங்கிரஸை விமர்சிப்பதாக உள்ளது என்று சொன்னால், காங்கிரஸின் நிலைப்பாடு 70 ஆண்டுகளாக இந்தியைத் திணிப்பதாகத் தானே இருந்தது.
தற்போதைய ராகுல் காந்தியின் தலைமையிலான காங்கிரஸ் கட்சி தங்களது பழைய இந்தியைத் திணிக்கும் முயற்சி தவறு என்றோ, மாநில உரிமைகளுக்கு முக்கியத்துவம் தருவோம் என்றோ எங்காவது சொன்னார்களா.
இந்தத் திரைப்படம் வைக்கும் கேள்விகளுக்குப் பின்னராவது காங்கிரஸ் தாங்கள் முன்பு கையாண்டு வந்த இந்தித் திணிப்பு என்கிற தேசியக் கொள்கை தவறானது என்று அறிவிக்குமா.
ராகுல் காந்தி வெளிப்படையாகச் சொல்வாரா.
காங்கிரஸ் தனது குணத்தை மாற்றிக் கொண்டதற்கான எந்த அறிகுறிகளையும் காட்டாத போது இந்தப் படம் அக்காலத்தைய காங்கிரஸின் நிலைப்பாட்டை விமர்சிப்பது சரியானது தானே.
திமுக செய்து வரும் கார்ப்பரேட் சார்பு நிலைப்பாட்டை நீங்கள் கேள்வி எழுப்பியிருப்பது சரி.
காங்கிரஸை நோக்கி , இந்தித் திணிப்பை அது மறுபரிசீலனை செய்யுமா என்பது பற்றி நீங்கள் ஏன் கேள்வி எழுப்பவில்லை.
காங்கிரசும் பாஜக வும் ஒண்ணு அதை அறியாதவன் வாயில் மண்ணு
ஐயா ஆசிரியரே
சற்று ஆழமாக புரிந்துக் கொள்ள தேவை உள்ளது. நடுவண் அரசுக்கும் மாநில அரசுகளுக்குமான உறவு குறித்தது என்று பாருங்கள்.கட்சி எது என்பதை தாண்டி பாருங்கள்.
சாவர்க்கர் பெண்ணுரிமை போராளி என்று கருத்து சொல்லி மன்னிப்பு கேட்டவர் எப்படி மொழி போராட்ட வரலாறை நேர்மையான முறையில் எடுப்பார் என்ற சந்தேகம் பராசக்தி படம் பற்றிய அறிவிப்பு வந்த நாளில் இருந்தே இருக்கிறது. அதற்கு ஏற்றது போலவே காட்சிகள் இருப்பதாக நீங்கள் கூறுகிறீர்கள். நான் இன்னும் படம் பார்க்க வில்லை