சனாதனிகளின் சதி வென்றது! நீதி தோற்றது…!

நண்பர்களே,பொன்னான வாய்ப்பு! போராடிப் பெற்றத் தீர்ப்பு!

மண்ணாகிப் போனதுவே.. என் சொல்வது..!

சாஸ்திரா சனாதனிகள் உச்சநீதிமன்றம் சென்று ஆக்கிரமித்த நிலத்தை அரசுக்கு தரமறுத்து தங்களுக்கு சாதகமான தீர்ப்பை பெற்றுவிட்டனர்! என்ன நடந்தது..? ஏன் இந்தத் தோல்வி?

சாஸ்திரா பல்கலைக் கழகம் 1984 ல் தஞ்சையில் ஆக்கிரமித்த 58.17 ஏக்கர் நிலத்தின் ஒரு பகுதியான 31 ஏக்கர் நிலத்தை நீண்ட நெடிய சட்டப் போராட்டத்திற்கு பிறகு 2018 ல் அரசுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தது.

அப்போது எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்த போது அந்த தீர்ப்பை உறுதிபடுத்தி சிறைத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், சம்பந்தப்பட்ட நிலம் சிறைத் துறைக்கானது. அங்கு அரசாங்கம் திறந்தவெளி சிறைச் சாலை அமைக்க திட்டமிட்டுள்ளது சாஸ்த்ரா அக்கிரமிப்பினால் தடைபட்டதை தொட்ர விரும்புகிறோம் என பைலில் உறுதிபட எழுதியதோடு, அன்றைய தமிழக அரசு நீதிபதிகள் வலியுறுத்திய சாஸ்த்ரா தரும் மாற்று இடத்தை ஏற்க மறுத்துவிட்டனர்.

திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் ஜெயந்தி ஐ.ஏ.எஸ் தலைமையில் ஒரு குழு அமைத்து கள ஆய்வு செய்து 2021 ஆம் ஆண்டு நவம்பரிலேயே பல்கலைக் கழக நிர்வாகத்தை நிலத்தை காலி செய்து தரும்படி கூறியதோடு அங்கு கட்டப்பட்டுள்ள 28 பிரம்மாண்ட கட்டிடங்களை இடித்து நிலத்தை பழையபடி ஒப்படைக்க கூறி நோட்டீசும் ஒட்டினர். ஆனாலும் இந்த ஐந்தாண்டுகளாக மீண்டும் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் சென்று தங்கள் செல்வாக்கால் அரசையே செயலிழக்க வைத்தனர்.

2026, ஜனவரி 9 அன்று தஞ்சை சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள 31.37 ஏக்கர் அரசு நிலத்தை 4 வார காலத்திற்குள் மீட்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் சி. குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது.

இந்த வழக்கின் முக்கிய விவரங்கள்:

கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக அரசு நிலத்தை பல்கலைக்கழகம் ஆக்கிரமித்து வைத்துள்ளது. அந்த நிலம் சிறைத் துறைக்கு திறந்தவெளி சிறைச்சாலை அமைக்கத் தேவைப்படுகிற சூழலில் ஆக்கிரமிப்பாளர்களுக்குச் சாதகமாக நீதிமன்றம் செயல்பட முடியாது. மாற்று நிலம் வழங்குவதாக பல்கலைக்கழகம் வைக்கும் கோரிக்கையானது சட்டவிரோத ஆக்கிரமிப்பை தடுக்கும் அரசின் கொள்கை நிலைபட்டிற்கு எதிரானது என்பதால், நீதிமன்றமும் இந்தக் கோரிக்கையை நிராகரிக்கிறது எனக் கூறி, தேவைப்பட்டால் காவல் துறையின் உதவியுடன் நிலத்தை தஞ்சை மாவட்ட ஆட்சியர் மீட்க வேண்டுமென உத்தரவிட்டனர்.

தமிழக அரசு அங்கே இது அரசு நிலம் மீட்கப்பட்டுவிட்டது…என போர்டும் வைத்தனர். இந்த தீர்ப்பை வரவேற்று நான் அறம் ஆன்லைன் இதழில் எழுதினேன். ஆனால், ஆதிக்க சக்திகளிடம் இருந்து நிலம் மீட்கப்பட்ட இந்தத் தீர்ப்பை தமிழகத்தின் முற்போக்கு இயக்கங்கள், முக்கியமாக இடதுசாரி கட்சிகள் வரவேற்று கொண்டாடி இருக்க வேண்டும்.  நிச்சயமாக சாஸ்த்ரா மீண்டும் மேல்முறையீடு செய்வார்கள் என்பதால் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியேட் போட்டு இருக்க வேண்டும். சட்ட நிபுணர்கள் குழுவை கலந்து ஆலோசித்து விரைந்து நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும். முற்போக்கு இயக்கங்களுமே இந்த வழக்கில் தங்களையும் இணைக்க கேட்டு இருக்க வேண்டும்.

எதுவுமே நடக்கவில்லை. சாஸ்திரா பல்கலை தான் தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் முகாம்களை நடத்தும் இடம். இந்துத்துவ வெறி இயக்கங்களின் பயிற்சி பட்டறை. ஆகவே இந்த விவகாரத்தில் வாராது வந்த மாமணி போன்ற தீர்ப்பை ஆதரித்து  இடதுசாரி கட்சித் தலைவர்கள் அறிக்கை வரும் என எதிர்பார்த்தேன். அதுவுமில்லை. இவர்களின் அமைதியை புரிந்து கொள்ள முடியவில்லை.

சாஸ்த்ரா பல்கலையில் நடத்தப்பட்ட ஆர்.எஸ்.எஸ் முகாமில் கல்லூரியின் டீன் வைத்திய சுப்பிரமணியம் குத்துவிளக்கேற்றி துவக்கி வைக்கிறார்.

எதிர்பார்த்தது போலவே சாஸ்திரவின் சனாதனிகள் மிகப் பெரிய வழக்கறிஞர்களான முகுல் ரோத்தகி, ரோனாக் சங்கர் அகர்வால், சி.எஸ்.வைத்திய நாதன் ஆகியோர்களை வைத்து உச்ச நீதிமன்றத்தில் (ஜனவரி15) தடை வாங்கிவிட்டனர்.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சூர்யகாந்த் உள்ளிட்ட மூன்று நீதிபதிகள் அமர்வு சாஸ்திரா வாதங்களை ஏற்றுக் கொண்டு, ”அவர்கள் என்ன தொழிற்சாலையா அல்லது வியாபார ஸ்தாபனத்தையா வைத்துள்ளார்கள்? கல்வி நிறுவனம் தானே வைத்துள்ளனர்…! அதில் படிக்கும் மாணவர்களை யோசித்து பாருங்கள். அவங்க உங்களுக்கு மாற்று வாய்ப்பாக மூன்று இடங்களை காட்டுகிறார்கள், அதில் ஒன்றை பரிசீலனை செய்ய ஒரு உயர்மட்ட குழு அமையுங்கள்” என கட்டளை இட்டுள்ளது.

ஆம். அவர்கள் கல்வி நிறுவனம் என்ற பெயரில் ஆஅக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் 28 வானுயர்ந்த கட்டிடங்களை எழுப்பி, கொழுத்த வியாபார நிறுவனத்தை தான் நடத்துகிறார்கள் என அவர்களின் கல்வி கட்டண வசூல் வேட்டையை அம்பலப்படுத்த வேண்டிய அரசு தரப்பு அமைதி காத்தது ஏற்க முடியாததாகும்.

அரசு தன் கொள்கை முடிவை பின் வாங்கினால் தமிழ்நாட்டில் இது ஒரு முன் உதாரணம் ஆகிவிடும். ஏற்கனவே,  தனியார் எழுப்பிய எம்.ஜி.ஆர் பல்கலைக் கழக கட்டிடம் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது. இதைப் போல நாங்கள் ஜேப்பியார் கல்வி நிறுவனம் ஆக்கிரமித்த 10 ஏக்கர் நிலத்தை மீட்டுள்ளோம். சாஸ்திராவை ஆக்கிரமிப்பை மீட்டால், அதையே முன் மாதிரியாக்கி மற்ற ஆக்கிரமிப்புகளையும் தூக்குவோம். இல்லையென்றால், இதையே சாக்காக்கி மற்றவர்களும் டபாய்ப்பார்கள். இது எதிர்கால தமிழகத்தின் நிர்வாக செயல்பாட்டுக்கு நிரந்தரத் தடையாகிவிடும். ஆகவே ஒரு போதும் ஆக்கிரமிப்பை ஏற்க முடியாது.’’ என உறுதிபடச் சொல்லி இருக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசும், தமிழ்ச் சமூகமும் நல்லதொரு தீர்ப்பை உறுதிபடுத்தி தற்காத்துக் கொள்ளத் தவறிவிட்டது.

உச்ச நீதிமன்றங்களின் தீர்ப்புகள் எத்தனையோ ஏழை, எளிய நடுத்தர பிரிவு மக்களின் ஆயிரக்கணக்கான குடியிருப்புகளை இடித்து தள்ளியுள்ளது. அங்கே பல்லாண்டுகளாக வாழ்ந்து வந்த குடும்பங்களின் வாழ்வாதரங்கள் நீர்மூலமாக்கப்பட்டுள்ளது. ஆனால், சாஸ்திராவின் சட்ட விரோத ஆக்கிரமிப்புக்கு புதிய நியாயம் கற்பிக்கப்படுகிறது என்றால், அது தான் சனாதனத்தின் சக்தியாகும்.

அதே சமயம் சாஸ்திராவின் சட்ட விரோத அரசு நில ஆக்கிரமிப்பும், அந்த சதிச் செயலை சமரசமற்று எதிர்த்து நீதியை நிலை நாட்டத் தவறிய சமூகம் மற்றும் அரசியல் கட்சிகள், அரசாங்கம் ஆகியவற்றின் நிலைபாடும் தமிழக வரலாற்றில் நிலைத்து நிற்கப் போகும் களங்கமாகும்.

சாவித்திரி கண்ணன்

 

 

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time