ஒற்றை அதிகார மையத்தின் கீழ் ஒடுக்கப்படும் உயர்கல்வித் துறை!

-பேராசிரியர் க.யோகராஜன்

இந்திய கல்வித் துறை வரலாற்றுக்கே களங்கமாக ஒரு மசோதாவை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. பிற்போக்குத் தனமான மூட நம்பிக்கை சார்ந்த பாடத் திட்டத்தை இந்தியா முழுமைக்கும் ஒரே மாதிரியாக அறிமுகப்படுத்தி, கல்வித் துறையின் ஜனநாயக கட்டமைப்பை கருவறுக்கும் இந்த மசோதா குறித்த அலசல்;

மத்திய அரசு உயர்கல்விக்கான விக்சித் பாரத் சிக்ஷா அதிஷ்டான் மசோதாவைக் கொண்டு வந்துள்ளது. இந்த மசோதா விரைவில் நிறைவேற்றப்பட உள்ளதாம். அங்கனம் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், தற்போதுள்ள பல்கலைக்கழக மானியக் குழு (UGC), அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (AICTE) மற்றும் தேசிய ஆசிரியர் கல்விக் குழு (NCTE),  ஆகிய அமைப்புகள் அனைத்தும் கலைக்கப்பட்டு, அதற்கு மாற்றாக  விக்சித் பாரத் சிக்ஷா அதிஷ்டான் என்ற ஒற்றை அமைப்பு நடைமுறைக்கு வர உள்ளது.

ஆழ்ந்த அறிவை பெறுவது கல்வியின் தலையாய நோக்கம். மேலும் கல்விக்கு மெய்யான நோக்கம் மனிதனை சமூக மனிதனாக மாற்றுவது.   சக  மனிதர்களை வேறுபாடின்றி பார்த்து, அவர்களில் ஒருவனாக தன்னை உணர்ந்து  சமூகத்தின் தேவைக்காக தனது  அறிவாற்றலை செயல்படுத்துபவனே சமூக மனிதன்.

இந்த பண்பை பெரும் வழிமுறையே கல்விச் செயல்பாடு. இப் பண்பை அறிவுடன் இணைத்துப் புகட்டும் முறையே பயிற்றியம். இதற்காகவே கல்வியில் சுதந்திரமும், ஜனநாயகமும் அவசியம் எனக் கூறுகிறோம்.

உண்மையில் அரசின் பங்கு தேவையான நிதி வழங்குவதுடன் முடிந்து விடுகிறது. மற்ற அனைத்து செயல்பாடுகளும் அந்தந்த மாநிலத்தின் கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோரை மட்டுமே சார்ந்தது.

ஆனால், ஒட்டுமொத்த இந்திய உயர் கல்வி நிறுவனங்களின் சுயாதீனத்தையும் பறித்து ஒரு ஒற்றை அமைப்பிடம் தருவதாக இந்த மசோதா வடிவமைக்கப்பட்டுள்ளது.

இனி இந்த மசோதாவின் பின்னணியையும், நோக்கங்களையும் ஆய்வு செய்வோம்.

 வரலாற்றுப் பின்னணி:

 1970களுக்குப் பின்னர் உலகெங்கிலும் ஆபத்தான மாற்றங்கள் துவங்கின.  டங்கல் வரைவு, GATT ஒப்பந்தம் ஆகியன கொண்டுவரப்பட்டன.

சாதாரண நாடுகள் மீது உலகமயக் கொள்கை திணிக்கப்பட்டு, தேசங்கள் அனைத்தும் முதலாளித்துவ சந்தைகளாக மாறும் நிலை தோன்றலாயிற்று.

இப்பின்னணியில் தான் 1986 இல் இந்தியாவில் அப்போதைய  புதிய தேசியக் கல்விக் கொள்கை  1986 (NPE 1986) ராஜீவ் காந்தியால் கொண்டுவரப்பட்டது. இது கல்வியை  வணிகப்பொருளாகவும்,  பிழைப்பிற்கானதாகவும் மாற்றியது.

இந்தியக்கல்வியின் அழிவு இங்கிருந்து தான் துவங்குகிறது. அதற்குப்பின்னர்  அக்கொள்கைக்கு வலு சேர்க்கும் வகையில்  பல நிபுணர்களின் அறிக்கை பெறப்பட்டு  இந்த 40 ஆண்டுகளில் கல்வி முழுமையான வணிகமானது.

இதன்  விளைவுகளாக ‘சுயமாக  சிந்திக்கவே  இயலாத  படித்தவர்களை  கோடிக்கணக்கில் உருவாக்கியது.  இத்தகையர்கள் தான் இன்று துவக்க கல்வியில் இருந்து உயர்கல்வி வரை எங்கும் நிறைந்துள்ளனர்.

தேசியக் கல்விக் கொள்கை 2020:

2020 இல் அதையே 66 பக்கங்கள் கொண்ட தேசியக் கல்விக் கொள்கை 2020 பாராளுமன்றத்தில்  விவாதம் எதுவும் இன்றி நிறைவேற்றியது. அன்றில் இருந்து இன்று வரை ஒன்றிய அரசு கொள்கை ஆவணங்களை வெளியிட்டுக்கொண்டேயுள்ளது. அவையெல்லாம் சேர்த்தால் 10,000 பக்கத்திற்கு மேல் வரக்கூடும். வெறி கொண்டது போல ஆவணத்திற்கு மேல் ஆவணம் ஏன் ஒன்றிய அரசு வெளியிடுகிறது.? அதன் நோக்கம் தான் என்ன?

1986 கல்விக் கொள்கையில் உள்ள மூன்று கூறுகளுடன் இரு முக்கியக் கூறுகளான பண்டைய இந்திய பெருமைவாதமும்,  கல்வியை அதிகார முறையில் மையப்படுத்துதலும் இதில் இணைந்தன.

விக்சித் பாரத் சிக்ஷா அதிஷ்டான் மசோதா; 2025:

 ‘விக்சித் என்றால் வளர்ந்த’, ‘பாரத் என்றால் இந்தியா’, ‘சிக்ஷா என்றால் கல்வி’, ‘அதிஷ்டான்  என்றால் Authority அல்லது ஆணையம். கூட்டி பொருள் கொள்ளுங்கள்.  இதுவே இனி 150 கோடி மக்களின் உயர்கல்வி அனைத்திற்கும் ஒற்றை  ஆணையம். இனி  இந்திய உயர்கல்வி நிலையங்கள் அனைத்தும்  நேரிடையாக ஒன்றிய அரசின் கீழ் சென்றுவிடும் . இனி, மாநில அரசுகளுக்கும், உயர்கல்விக்கும்  எந்த உறவும் இல்லை. மாநில அரசின் இறையாண்மை என்று ஒன்று இல்லவேயில்லை. இனி ஏட்டளவில் மட்டுமே இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்.

விக்சித் பாரத் சிக்ஷா அதிஷ்டான் எவ்வாறு அமைக்கப்பட இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

 ஆணையத்தின் கீழ் மூன்று  கவுன்சில்கள் செயல்படுமாம்:

1. விக்சித் பாரத் சிக்ஷா வினியமன் பரிஷத்

இது இந்தியாவின் உயர் கல்விக்கான பொதுவான ஒழுங்குமுறை அமைப்பாகச் செயல்படுமாம்.

விதிகளை மீறும்உயர்கல்வி நிறுவனங்களுக்கு அபராதம் விதித்தல்.

2. விக்சித் பாரத் சிக்ஷா குணவத்தா பரிஷத்

இது உயர்கல்வி நிறுவனங்களின் தரத்தை மதிப்பீடு செய்து அங்கீகாரம் வழங்கும் அமைப்பாம். நிறுவனங்களின் தரம் மற்றும் தன்னாட்சியை மதிப்பிடுவதற்கான “அங்கீகாரக் கட்டமைப்பை” (Institutional Accreditation Framework) உருவாக்குமாம்.

3. விக்சித் பாரத் சிஷா மானக் பரிஷத்

இது உயர்கல்வியின் தரத்தை நிர்ணயம் செய்யும் அமைப்பாம்.

இந்த அமைப்புகள் அனைத்துமே நியமன உறுப்பினர்களை மட்டுமே கொண்டது. தர நிர்ணயம், ஒழுங்குமுறை, அங்கீகாரம் இவை அனைத்துமே  இந்த அமைப்புகள் மூலம் செய்யப்பட இருக்கின்றன. ஆக, இனி உயர் கல்வியில் சுதந்திரம், ஜனநாயகம், சுயசிந்தனை  என்று எதையும் அனுமதிப்பதில்லை என முடிவெடுத்துள்ளார்கள்.

தண்டனை முறை:

இப்பகுதியில் இந்த மசோதா பரிந்துரைக்கும் தண்டனை முறைகளைக் காண்போம்;

(1) இந்தச் சட்டம் சொல்லும் விதிகளை மீறினால் பத்து லட்சம் ரூபாய்க்கு குறையாத அபராதம் விதிக்கப்படும்.

() உயர்கல்வி நிறுவனம் மீண்டும் தவறிழைத்தால் முப்பது லட்சம் ரூபாய்க்கு குறையாத அபராதத்தை விதிக்கலாம். அல்லது  சம்பந்தப்பட்டவர்களை வேலையிலிருந்து நீக்குதல், மேலும், அந்த நிறுவனத்தின் சுயாட்சி அனுமதியையும், அரசின் நிதியுதவியையும் நிறுத்தி வைப்பதாம்.

உயர்கல்வி நிறுவனம் தொடர்ச்சியாக தவறிழைத்தால், ஒழுங்குமுறை கவுன்சில் எழுபத்தைந்து லட்சம் ரூபாய்க்கு குறையாத அபராதத்தை விதிக்கலாமாம். அல்லது  சான்றிதழ்கள், பட்டங்கள் வழங்கும் உரிமையை நிறுத்திவைக்கலாமாம்.

அதாவது அவர்கள் தரம் என்று எதைக்கருதுகிறார்களோ, அதுவே  தரம். அதை மீறினால் அபராதம். அதாவது இவர்கள் திணிக்கும் கலைத்திட்டத்தையும் பாடத்திட்டத்தையுமே ‘தரம்’ என்று நிர்ணயித்து, அதை ஏற்க மறுக்கும் கல்வி நிறுவனங்களை அபராதம் விதித்தும், தண்டனை வழங்கியும் தங்கள் வழிக்கு கொண்டு வருகிறார்கள்.

உதாரணத்திற்கு இதை சென்னை பல்கலைக் கழகம் ஏற்க மறுக்கலாம்.  அதன் board of studies, இது  விக்சி பாரத்தின் படத் திட்டம் மூடத்தனத்தை கொண்டிருப்பதாகக்  கருதி, அறிவியல் முறையில்  தாங்களே இளங்கலை கணிதத்திற்கு கலைத்திட்டத்தையும், பாடத்திட்டத்தையும் உருவாக்கலாம். இந்நிலையில் விக்சித் பாரத் சிக்ஷா குணவத்தா பரிஷத் சென்னை பல்கலைக் கழகத்திற்கு அபராதம் விதிக்கும். தண்டனை தரும். பல்கலைக்கழகத்தை மூடக்கூட பரிந்துரைக்கும். இது எங்கே இட்டுச் செல்லும்?

சட்டசபையில் சட்டம் இயற்றி, மாநில மக்கள் வரிப்பணத்தில்,  மாநில அரசால் உருவாக்கி நடத்தப்படும் பல்கலைக்கழகங்கள்  மீது தண்டனை விதிக்கும் அதிகாரம் இந்த நியமன அமைப்பிற்கு எப்படி வருகிறது? இப்படி ஒரு எதேசிக்கார மசோதாவா? இதில் அவல நகைச்சுவை என்னவென்றால்  பல்கலைக்கழகங்கள் அனைத்திற்கும் சுதந்திரம் தருவதாகக்கூறிக் கொண்டு, உண்மையில் சுதந்திரத்தை பறிக்கிறார்கள்.

ஒற்றை அமைப்பு:

ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் பலவிதமான பணிகளுக்காக பலவிதமான அமைப்புகள்(Academic councils, Board of studies, Senate, etc) தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு ஜனநாயக முறைப்படி செயல்படுகிறது. வெளி அதிகார அமைப்புகள் (Bureaucratic organizations) எதையும் கல்வியில் அனுமதிக்க இயலாது.

இந்த ஜனநாயக சூழலின் முக்கிய நோக்கம் சுதந்திர சூழலை(Liberal Atmosphere) உருவாக்குதல். சுதந்திர சூழலே கேள்வி கேட்கும் மனோபாவத்தை உண்டாக்கும். கேள்வி கேட்பதும் பதில் அளிப்பதும், சிக்கலான நுட்பமான உரையாடல்களுக்கும் அதையொட்டிய பரிசோதனைகளுக்கும் ( Both field and lab experiments) அதனை சரிபார்த்தலுக்கும் இட்டுச் செலலும். இதன் மூலமே உய்ய சிந்தனை (critical thinking) ஒவ்வொரு மாணவரிடமும் பரிணமிக்கும். இந்தப் போக்கில் தான் ஒவ்வொரு மனிதனும் மற்ற மனிதர்களின் சிந்தனையையும், வலிமையையும் உணர்வார். இந்த செயல்பாடு மிக இன்றியமையாதது.

இந்த உரையாடல்களும் செயல்பாடுகளும் வேற்றுமைகளைகளையும்,  பால் பெருமை , சாதி பெருமை, மதப்பெருமை, இனப்பெருமை, நிறப்பெருமை ஆகிய அனைத்தையும் ஆவியாக்கி விடும். இவ்வாறு தான் மனிதர்களில் அடிப்படை மாற்றம் நிகழும்.

உண்மை இவ்வாறிருக்க இந்த மசோதா இந்தியா முழுமைக்கும் ஒரு 12அல்லது 13 பேர் கொண்ட அதிகார அமைப்பிடம் உயர்கல்வி அனைத்தையும் தாரை வார்க்க இருக்கிறது.  ஒற்றை அதிகார அமைப்பு கல்விச் சூழலையே நஞ்சாக்கி விடும். நமது  தமிழக அரசும் இதுவரை இந்த மசோதாவை எதிர்க்கவில்லை என்பதையும் வருத்தத்துடன் பதிவு செய்கிறோம். ஆங்கிலத்திலும் இந்தியிலும் உள்ள இந்த மசோதாவை தமிழில் மொழிபெயர்த்து நம் மக்களிடமும் இதன் ஆபத்தை விளக்க வேண்டும்.

என்ன செய்ய வேண்டும்

ஆசிரியர்களும், மாணவர்களும், கல்வியாளர்களும், பெற்றோர்களும் போராட்டத்தில் குதிக்காமல் ஒன்றிய அரசு இதில் இருந்து பின் வாங்காது. கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் நிலவும் விழிப்புணர்வு மட்டம் குறைந்திருக்கிறது. பெரும்பாலான கல்லூரிகள் சுயநிதி கல்லூரிகள். வணிக நோக்கில் இயங்குபவை. அரசுக் கல்லூரிகளிலோ பெரும்பாலும் நிலையான பேராசிரியர்கள் இல்லை. 12,000 இடத்திற்கு சுமார் 2,500 நிலையான பேராசிரியர்கள் மட்டுமே உள்ள அவல நிலை. எனவே அறிவு ஜீவிகள் ( Intellectuals, Lawyers, Doctors, literatures, poets, directors, journalists) எதிர்ப்பை துவங்க வேண்டும். ஏனெனில் இதன் மூலம் பாதிக்கப்படப்போவது மாணவர்கள் மட்டும் இல்லை. ஓட்டு மொத்த சமூகமும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது.

அறிவு ஜீவிகள், கருத்தரங்குகள், செமினார், கலந்துரை ஆகியவற்றை துவங்கி அதில் ஆசிரியர்களையும் மாணவர்களையும் பங்கெடுக்கச்செய்ய வேண்டும். அவர்கள் உணர்வு பெற்று விட்டால் போராட்டங்கள் துவங்கி விடும். இந்த அபாயத்தில் இருந்து தேசம் தப்பிக்கும். இதை  நாம் செய்யாவிட்டால், இந்த பாதிப்பில் இருந்து விடுபட மிக நீண்ட காலம் பிடிக்கும். மீண்டும் ஒரு சமரசமற்ற போராட்டத்தை காலம் கேட்கின்றது. காலத்தின் தேவையாகவே அகில இந்திய கல்வி பாதுகாப்பு கமிட்டி பெங்களுரில் மக்கள் பாராளுமன்றம் என்ற முழு நாள் கருத்தரங்கை நிகழ்த்துகிறது.

பேராசிரியர் க.யோகராஜன்

மாநிலச் செயலாளர்,

அகில இந்திய கல்வி பாதுகாப்பு கமிட்டி. (AISEC)

 

 

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time