அநியாயமாக வஞ்சிக்கப்படும் கறிக்கோழி விவசாயிகள்!

-சாவித்திரி கண்ணன்

தமிழகமெங்கும் கறிக்கோழி விவசாயிகள் போராடிக் கொண்டுள்ளனர். கோழிக்கறி கிலோ என்ன விலை என நாம் அறிவோம். ஆனால், கோழிகளை வளர்க்கும் விவசாயிகளுக்கு  தரப்படும் கூலி கிலோவுக்கு ரூ-6.50 பைசா தான்! இவர்கள் கார்ப்பரேட் நிறுவனங்களின் அடிமைகளாக எப்படி சுரண்டப்படுகிறார்கள் என்பதான அதிர்ச்சி தகவல்கள்;

மக்களின் உணவுத் தேவையில்  சிக்கன் எனப்படும் கோழிக்கறிக்கு மிக முக்கியத்துவம் தற்போது ஏற்பட்டுள்ளது. வீட்டு விருந்தாகட்டும் ஹோட்டல் விருந்தாகட்டும் கோழிக்கறி என்பது  பலவித முறைகளில் பரிமாறப்படுகிறது. அத்தகைய கோழிக்கறிக்கான கறிக்கோழி வளர்ப்பு சார்ந்து சுமார் ஐந்து லட்சம் விவசாயிகள் உள்ளனர். கோழி வளர்ப்பு விவசாயிகளின் மிக முக்கிய வாழ்வாதாரமாக உள்ள சூழலில் சமீபத்திய பொங்கல் தினம் ஒரு கறுப்பு தினமாகிவிட்டது இவர்களுக்கு!

காரணம், கோழி வளர்ப்புக்காக தங்களுக்கு வழங்கப்படும் ரூ.6.50 பைசா கட்டுபடியாகவில்லை. அதை உயர்த்தித் தர வேண்டும்… ஏனப் பல வருடங்களாக கேட்டு வருகின்றனர்.  2013-ல் நிர்ணயிக்கப்பட்ட அந்த தொகையை 13 வருடங்களாக உயர்த்தாமல் இருப்பதால், ரூ 20 தந்தால் தான் கட்டுபடியாகும் என இவர்கள் நான்கு மாதங்களுக்கு முன்பே,  ஜனவரி 1 முதல் நாங்கள் கோழி வளர்ப்பை நிறுத்த உள்ளோம் என அறிவித்தனர்.  அதன்படி போராடிய விவசாயிகளை பொங்கலுக்கு முதல் நாள் அதிகாலையில் வீடுதேடிச் சென்று வேட்டையாடி கைது செய்துள்ளது, தமிழக காவல்துறை.

கோவை, திருப்பூா், ஈரோடு, திண்டுக்கல், விருதுநகா் உள்பட பல்வேறு மாவட்டங்களில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கறிக்கோழிப் பண்ணைகள் உள்ளன. இவர்கள் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களால் தரப்படும் கோழிக் குஞ்சுகளை வளர்த்து தரும் கூலி விவசாயிகளே. ஆம், இவர்கள்  வெளித்தோற்றத்திற்கு கோழிப் பண்ணையாளர்களாக இருந்தாலும், உண்மையில் கூலிகளே!

இந்திய  கறிக்கோழி சந்தையே ஒரு ஒற்றை கார்ப்பரேட் நிறுவனத்தின் காலடியில் தான் உள்ளது. அந்த நிறுவனத்தின் பெயர் வெங்கடேஷ்வரா ஹாட்சரிஸ். இந்திய கோழிக்கறி சந்தையின் 90 சதவிகிதத்தை இவர்கள் தான் கையாள்கிறார்கள். மற்ற 10 சதவிகிதத்தைத் தான் சுகுணா சிக்கன், எஸ்.கே.எம்.சிக்கன் உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட சிறிய நிறுவனங்கள் பங்கு போட்டுக் கொள்கின்றன.

வெங்கடேஷ்வரா ஹாட்சரிஸ் உரிமையாளர்கள்!

முதலில் ஹைதராபாத்தில் பி.வி.ராவ் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் பிறகு புனேவுக்கு இடம் மாறுகிறது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும், அமெரிக்கா, லண்டன், இத்தாலி, சிங்கப்பூர் உள்ளிட்ட பல வெளி நாடுகளிலும் இவர்களுக்கு கிளை நிறுவனங்கள் உள்ளன. கே.எப்.சி, மெக் டோனால்ட்ஸ் போன்ற உலகப் பெரும் நிறுவனங்களுக்கும் இவர்கள் தான் கோழிக்கறி விநியோகம் செய்கிறார்கள். கோழிக்கறி வியாபாரத்தின் மூலம் பல்ல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதிகளான பி.வி.ராவின் வாரிசுகள் அந்தப் பணத்தில் சினிமா தியேட்டர்கள், நவீன மருத்துவமனைகள் போன்ற பலவற்றில் கொடிகட்டிப் பறக்கிறார்கள். வி.கே. குரூப்பின் முதலாளிகளான பாலாஜி, வெங்கடேஷ், அனுராதா, மருமகன் தேசாய் ஆகியோர் உலக பணக்காரர்கள் வரிசையில் வருபவர்கள். இவர்கள் அழைத்தால் இவர்கள் நடத்தும் விழாவுக்கு குடியரசுத் தலைவர் தொடங்கி பாலிவுட் ஸ்டார்கள் வரை ஓடோடிச் சென்று கலந்து கொள்கிறார்கள் என்பதே இவர்களின் செல்வாக்கின் அடையாளமாகும்.

இந்தியாவில் லட்சக்கணக்கான கோழிப் பண்ணையாளர்கள் 10,000முதல் 20,000 சதுர அடிகள் வரை சொந்த செலவில் விரிந்து பரந்த கோழிப்பண்ணை ஷெட் அமைத்து, மின்சராம் பல்புகள் பொருத்தி, கோழிக் குஞ்சுகளை பாதுகாக்க தேங்காய் மஞ்சி, உமி உள்ளிட்டவற்றை வாங்கி வைத்து, கூலிக்கு ஆட்களும் வைத்து கோழிக் குஞ்சுகளை வளர்த்து ஒப்படைக்கிறார்கள்.

30 முதல் 50 கிராம் அளவினான கோழிக் குஞ்சு இவர்களிடம் கார்ப்பரேட் நிறுவனங்களால் ஒப்படைக்கபடுகிறது. தீனியையும், மருந்தையும் அவர்களே தந்து விடுகிறார்கள். அதனால், அதை சுமார் இரண்டு கிலோ வருமளவுக்கு 35 முதல் 40 நாட்களில் வளர்த்து தருகிறார்கள். ஒரு கிலோவுக்கு ரூ 6.50 தான் இவர்களுக்கு தரப்படுகிறது. அது கோழிச் சந்தை மார்க்கெட்டில் ரூ 150 க்கு சில்லறை விலையில்  இது வரை விற்கப்பட்ட நிலையில் தற்போது கோழிபண்ணைகளின் போராட்டத்தையும் தங்களுக்கு சாதகமாக்கி ரூ 300 க்கு விற்கிறார்கள். ஆக, நிறுவனங்கள் லாபம் பார்க்கிறார்கள். அந்த லாபத்திற்கு அடிப்படையாக உள்ள கோழிப்பண்ணையாளர்களின் உழைப்பையும், மூலதனத்தையும்  கார்ப்பரேட்கள் செலவில்லாமல் சுரண்டிக் கொழுக்கிறார்கள்.

கோழிப் பண்ணை ஆரம்பிக்க வங்கிகளில் 30 லட்சம் 50 லட்சம் கடன் வாங்கி, வட்டி கூட கட்ட முடியாமல் கோழிப்பண்ணையாளர்கள் காலப் போக்கில் தங்கள் நிலத்தையும் இழப்பது சோக கதை போல தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த சூழலில் இன்னும் அடிமைப்பட்டிருந்தால் அழிவில் தான் முடியும் என தமிழ்நாடு கறிக்கோழி பண்ணை விவசாயிகளும், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கமும் இணைந்து ஜனவரி 1 முதல் கறிக்கோழி வளர்ப்பு நிறுத்த போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.

90% க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்துள்ளனர். அந்த வகையில் தற்போது தமிழக அளவில் 20 ஆயிரம் பண்ணைகளில் கறிக்கோழி உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. மற்ற  பண்ணைகளில் உள்ள கறிக்கோழிகளும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டவுடன், அவர்களும் விரைவில் போராட்டத்தில் இணைய உள்ளனர்…என்பதால் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒருபுறம் ஆட்சியாளர்களுக்கு அழுத்தம் தந்தும், கோழிப்பண்ணையாளர்களை மிரட்டியும் கோழிக் குஞ்சுகளை இறக்குவதற்கு நிர்பந்தித்து வருகிறார்கள்.

கோழி குஞ்சுகளை வாங்க மறுப்பதால் கறிக்கோழி பண்ணை முதலாளிகளின் குஞ்சுகள் தேக்கமடைந்து வருகின்றன, இதனால் கார்ப்பரேட் முதலாளிகளின் நிறுவன ஊழியர்கள் விவசாயிகளை அச்சுறுத்தி குஞ்சுகளை இறக்குவதற்கு முயற்சி செய்வதை கண்டித்து   ஜனவரி12, 2026 உடுமலைப்பேட்டை சடையபாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தின் ஹாட்சரீஸ் முன்பு நூற்றுக்கணக்கான விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள்.

இதனால் உடுமலை கோட்டாட்சியர் அழைப்பில் அமைதி பேச்சு வார்த்தை நடந்தது. வருகிற 21ஆம் தேதி தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், அனைவரையும் அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

நிறுவனங்கள் விவசாயிகளை கட்டாயப்படுத்தி குஞ்சுகளை இறக்க கூடாது.காவல்துறை நிறுவனங்கள் அராஜகமாக வண்டி கொண்டு வருவதை தடுக்கும் விவசாயிகளை தடுத்து கைது செய்யக் கூடாது. விவசாயிகள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு தாருங்கள் எனக் கேட்டுக் கொண்டார்.

அதன்படி உடுமலைப்பேட்டை பெரியப்பட்டியிலும், கோவை மாவட்டம் – சுல்தான்பேட்டையிலும் காவல்துறைக்கு ஒத்துழைப்பு கொடுத்து விவசாயிகள் கலைந்து சென்று விட்டார்கள்.

அதன் பிறகு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. தேவையின்றி ஜனவரி-13, 2026 அதிகாலை காவல்துறை முந்திய நாள் காவல்துறை வேண்டுகோளை ஏற்று அமைதியாக கலைந்து சென்ற விவசாயிகள் அனைவரையும் வீடு தேடிச் சென்று வேட்டையாடிக் கைது செய்துள்ளது. நெகமம், சுல்தான்பேட்டை, உடுமலை ஆகிய இடங்களில் 11 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர் என்பது கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளை கலங்கடித்தது.

இதனை கண்டித்து பேசிய தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி மற்றும் தலைவர் சண்முகசுந்தரம் இருவரும் பயணப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் அதிரடியாக இரவு 10 மணி அளவில் வழிமறித்து அவிநாசிபாளையம் என்ற இடத்தில் குடிமங்கலம் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர் என்பது தான் தற்போது கறிக்கோழி பண்ணை விவசாயிகளை பெரும் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது.

பல்லடத்தில் நடந்த கறிக்கோழி விவசாயிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம்.

அதுவும் கைது செய்த விதம் மிக மோசமானது. இரவு பத்து மணி தொடங்கி காலை ஏழு மணி வரை இவர்கள் இருவரையும் வாகனத்திலேயே வைத்து எங்கெங்கோ சுற்றி அலைக்கழித்துள்ளதோடு, அவர்களின் குடும்பத்திற்கும் தகவல் தரவில்லை. குடும்பத்தினரின் பதட்டத்தை தொடர்ந்து சங்க நிர்வாகிகள் பல தரப்பிலும் இரவு முழுக்க விசாரித்தும், தேடி அலைந்தும் தான் காவல்துறை அள்ளிச் சென்றதை அறிய முடிந்தது என்றால், நாம் ஜனநாயக நாட்டில் தான் வசிக்கிறோமா? சட்டத்தின் ஆட்சி தான் நடக்கிறதா? என்ற கேள்வி தான் வேளாண் குடிகளின் விம்மலாக உள்ளது.

காவல்துறையில் இது குறித்து கேட்கப்பட்டதில் இவர்கள் இருவரும் தாராபுரம் சாந்தி ஃபீட்ஸ் நிறுவனம் குஞ்சுகளை வாகனத்தில் ஏற்றி வருகையில் வாகனத்தை மறித்து ஆபாசமாக பேசி, மிரட்டியதாக 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிகக்ப்பட்டதும் அதிர்ந்தனர் விவசாயிகள்.

இது முற்றிலும் பொய் வழக்கு. காவல்துறை யாரையோ திருப்திபடுத்தவும், விவசாயிகளின் மன உறுதியை குலைக்கவுமே தலைவர்களை கைது செய்துள்ளனர் என்பதை உணர்ந்து மேலும் உத்வேகம் பெற்றனர்.

பொங்கல் திருநாள் இவர்கள் பொங்கி எழுந்து போராடிய நாளானது. ஜனவரி 14 –ல் தமிழகத்தின் திருப்பூர், கோவை, ஈரோடு,  திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, சேலம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திண்டுக்கல், மதுரை போன்ற பல மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் வெடித்தது. இதில் பெண்களும் கணிசமாக கலந்து கொண்டனர். இதோ இன்று வரை தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

ஜனவரி 21-ல் தமிழக அரசு முத்தரப்பு பேச்சு வார்த்தை அறிவித்த நிலையில் கார்ப்பரேட் நிறுவனங்கள் அது வரை காத்திருக்காமல் வலிந்து கோழிக் குஞ்சுகளை கொண்டு சென்று நிர்பந்தித்ததை கண்டித்து நிறுத்த முயற்சிக்காத தமிழக அரசு, கட்டுப்பாட்டுடன் போராடும் விவசாயிகளை தீவிரவாதிகளை கைது செய்வது போல வேட்டையாடுவதை புரிந்து கொள்ள முடியவில்லை. இது கார்ப்பரேட் நிறுவனங்களை திருப்திபடுத்தவே செய்கிறார்கள்…என்பது தான் விவசாயிகளின் குற்றச்சாட்டு.

இன்றைக்கு கோழிப்பண்ணை விவசாயிகளின் போராட்டத்தை சாதகமாக்கி ரு 6.50 பைசா தந்து வாங்கிய கோழிகறியை கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல் சந்தையில் ரூ300 வரை விற்றுக் கொள்ளை லாபம் பார்க்கும் கார்ப்பரேட்கள் அதில் ரூ20 ஐக் கூட அதை வளர்க்கும் விவசாயிகளுக்கு தர மறுப்பதையும், அதற்கு ஆதரவாக திமுக அரசின் காவல்துறை அராஜகங்களை கட்டவிழ்த்து விட்டிருப்பதையும் ஐந்து லட்சம் விவசாயக் குடும்பங்கள் மன்னிக்க மாட்டார்கள்.

ஏற்கனவே திருவண்ணாமலை மாவட்டம் மேல்மாவில் சிப்காட்டிற்காக பசுமை எழில் கொஞ்சும் விவசாய நிலங்களை பலாத்காரமாக தூக்க முயன்றதை எதிர்த்த உழவர் உரிமை இயக்கத் தலைவர் அருள் ஆறுமுகம் உள்ளிட்ட விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்த அராஜகத்திற்கு பேர் போன திமுக அரசின் காவல்துறை இளம் தலைவர் ஈசன் முருகசாமி உள்ளிட்டவர்களையும் குண்டர் சட்டத்தில் தள்ளுமோ என்ற அச்சம் விவசாயிகளிடம் நிலவுகிறது.

கறிக்கோழி விவசாயிகளையே கறி விருந்தாக்கி கார்ப்பரேட்களுக்கு விருந்தளிக்க ஆட்சியாளர்கள் நினைக்கிறார்களோ, என்னவோ..?

விவசாயிகள் கேட்பது நியாயமான கூலி. கார்ப்பரேட் நிறுவனங்கள் லாபத்தின் மிகச் சிறிய ஒரு பகுதியே அது. இதை தருவதில் அவர்களுக்கு எந்த சிரமும் இல்லை. ஆனால், ஆட்சியாளர்களே தங்களுக்கு அடிமைச் சேவகம் செய்ய காத்திருக்கையில், அற்ப விவசாயிகள் நம்மை எதிர்ப்பதா? என அகம்பாவத்தில் திளைக்கிறார்கள், கார்ப்பரேட்கள்! சிக்கன் சாப்பிடும் தமிழக அனைவருமே இந்த அநீதியை தட்டிக் கேட்க வேண்டும்.

சாவித்திரி கண்ணன்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time