லஞ்ச ஒழிப்பு சோதனைகள் உண்மையானவையா…? நாடகமா…?

லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடியாக சோதனைகள் நடத்தியதாக வெளிவரும் செய்திகள் இது நம் தமிழகத்தில் தான் நடக்கின்றவா? என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது! எனவே, ஒரு மிகப் பெரிய ஊழல் அரசாங்கத்தின் கீழும் சில நல்ல அதிகாரிகள் முயற்சித்து உறுதியோடு செயல்பட்டால், ஒரு சில ஊழல் அதிகாரிகளையாவது கைது செய்யமுடிகிறது என தெரிய வருகிறது! ஆனால், இந்த ரெய்டுகளைத் தொடர்ந்து இந்த அதிகாரிகள் முறையாக தண்டிக்கப்படுகின்றனரா..? என்ற கேள்வி எழுகிறது…

தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் பணிகள் நடப்பதாகவும், ஊழல் அதிகரித்துள்ளதாகவும்  உயர் நீதிமன்றம் கவலை தெரிவித்திருந்தது. மேலும், பத்திரப்பதிவு, சுற்றுசூழல் மற்றும் மாசுகட்டுப்பாட்டு வாரியத்தில் லஞ்சம் தலைவிரித்தாடுவதாகவும் சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் குற்றம்சாட்டி  வந்தனர்.

இதைத் தொடர்ந்து ஏதாவது செய்தாக வேண்டும் என்ற நிர்பந்ததில் தமிழகம் முழுவதும் கடந்த இரண்டரை மாதங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் 130 இடங்களில்சோதனை நடத்தி, லஞ்சம் வாங்கியதாக 33 அரசு அதிகாரிகளை கைது  செய்துள்ளனர். குறிப்பாக கடந்த 75 நாட்களில் மாநிலம் முழுவதும் உள்ள சுற்று சூழல் மற்றும் மாசு கட்டுப்பட்டு வாரிய அலுவலகங்கள், பத்திரபதிவுத்துறை அலுவலகங்கள், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், போக்குவரத்து சுங்கச்சாவடிகள், டாஸ்மாக் கடைகள், மாவட்ட சமூக நலத்துறை அலுவலகங்கள், வீட்டு வசதி வாரிய அலுவலகங்கள், ஊரக வளர்ச்சித்துறை அலுவலகங்கள் என சுமார் 130 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

# லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய இந்த அதிரடி சோதனைகளில் கணக்கில் வராத ரூ.7 கோடி, 7.232 கிலோ தங்கம், 9.843 கிலோ வெள்ளி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

# வேலூர்  மாசுகட்டுப்பாட்டு  பொறியாளர் பன்னீர்செல்வம் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.33,73,000, வீட்டில் இருந்து  ரூ.3.25 கோடி , 450 சவரன் தங்க நகைகள், 6.5 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

# பதிவுத்துறை டிஐஜியின் சென்னை வீட்டில்  ரூ.63 லட்சத்து 70 ஆயிரம்  7 வங்கி கணக்கில் உள்ள ரூ.1 கோடி பறிமுதலானது.  விருதுநகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.25 லட்சத்து 66 ஆயிரத்து 880 பணம், 117 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

# சைதாப்பேட்டையில் உள்ள சுற்று சூழல் கண்காணிப்பாளர் பாண்டியன் அலுவலகத்தில்  ரூ.88, 500, அவரது வீட்டிலிருந்து ரூ.1.37 கோடி , வங்கி டெபாசிட்  ரூ.37 லட்சம், பல்வேறு வங்கயில் ரூ.38,66220 .18 இடங்களில் ரூ.7 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் என ரூ.10.40 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதலாயின.

# மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் தன்ராஜ் அலுவலகத்தில் ரூ.40ஆயிரம் , அவரது வீட்டிலிருந்து  ரூ.57 லட்சம் , ரூ.2.66 லட்சம் மதிப்புள்ள பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள், அவர் வாடகைக்கு எடுத்து வைத்திருந்த வீட்டில் இருந்து ரூ.3.14 லட்சம் பணம் என மொத்தம் ரூ.62 ,82 ,500 பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த செய்திகள் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு,வெகு விரைவில் மறக்கப்பட்டால், இவ்வளவு மெனக்கிடல்களுக்கும் பயனில்லாமல் போய்விடும்!

மேற்படி சோதனைகள் இரண்டாம், மூன்றாம் நிலை அதிகாரிகளிடம் தான் நடத்தப்பட்டுள்ளன என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.ஏன் ஐ.ஏ.எஸ்,ஐ.பி.எஸ் அதிகாரிகள் அலுவலகங்களில்,வீடுகளில் ரெய்டும், கைதும் நடப்பதில்லை? காரணம், அவர்களை சோதனையிட அரசின் அனுமதி லஞ்ச ஒழிப்புதுறைக்கு தேவை! அது கிடைப்பதில்லை! ஆக, லஞ்சத்தை ஊக்குவித்த, அல்லது கண்டும், காணாமல் அனுமதித்த, அல்லது அதில் கமிஷன் பெற்று வந்த மேல் நிலையில் உள்ளவர்கள் சோதனைக்கு ஆளாகி,முறையாக தண்டிக்கப்படும் நிலை தோன்ற வேண்டும்.சின்ன மீன்களை பிடுத்துவிட்டு,திமிங்கலங்களை ஜாலியாக உலா வர அனுமதிக்கப்படும் அவலங்களுக்கு முற்றுபுள்ளி வைத்தாக வேண்டும்.

கைதானவர்களுக்கு ஜாமீன் தரக்கூடாது! உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டு,குற்றத்தை ஆறு மாதங்களில் நிருபித்து தண்டனையை உறுதிபடுத்த வேண்டும்!

# இந்த அதிகாரிகள் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், என்ன நடக்கிறது…? நீலாங்கரை சப்ரிஜிஸ்டிரார் அலுவலகத்தில் இரு முறை சோதனைகள் நடத்தப்பட்டு கணக்கில்வராத பணம் அதிகளவில் கண்டெடுக்கப்பட்டும் இன்னும் அவர் இயல்பாக பணியாற்றிக் கொண்டுள்ளார். தான் ஐம்பது லட்சம் லஞ்சம் கொடுத்து தான் இந்த போஸ்டு வாங்கியதாகவும், இந்த ரெய்டெல்லாம் தன்னை ஒன்றும் செய்யாது என்றும் அவர் பேசிவருவதாகத் தெரிகிறது. எனில், தண்டிக்கப்பட வேண்டியது அவர் மட்டுமல்ல, அவரை இயக்கும் மேல்மட்டம் என்பது தெளிவாகிறது!!

சஸ்பெண்ட்டானவர்களுக்கு ஆறுமாதம் வரையில் வேலை செய்யாமல் பாதி சம்பளம் என்பதும், ஆறு மாதங்களைக் கடந்தால் முக்கால் சம்பளம் வேலைக்கு வராமலே கிடைக்கும் என்பதுமான நடைமுறையால் இன்று தமிழகத்தில் ஊழல் செய்து மாட்டிக் கொண்ட பலர் வேலை செய்யாமலே முக்கால் சம்பளம் வாங்கி வருகின்றனர்.

இந்த வகையில் சும்மா வீட்டில் இருந்தே சம்பளம் வாங்கும் நூற்றுக்கணக்கான கிராம நிர்வாக அலுவலர்களை ஒரு கட்டத்தில் தண்டிக்காமலே மீண்டும் வேலைக்கு வரச் சொன்ன அவலமும் நடந்துள்ளது!

சில மாதங்களுக்கு முன்பு மதுரை வேலைவாய்ப்பு அலுவலகத்தின் உதவியாளரான கண்ணன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதில், அவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்திருப்பது தெரிய வந்தது. இதில் அவருக்கும், அவரது தவறுக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவிக்கும் தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மதுரை லஞ்ச ஒழிப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த மாதிரியான உடனடி விசாரணை, உறுதியான தீர்ப்புகள்..வந்தால் தான் ஊழலை ஒரளவுக்காவது தடுக்க முடியும்!

சமீபத்தில் லஞ்சம் கொடுப்பவர் மற்றும் வாங்குபவருக்கு கடுமையான தண்டனை அளிக்கும் வகையில் புதிய திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வந்தது! அதில் ஊழல் நிரூபிக்கப்பட்டால், சிறை தண்டனையாக இப்போதுள்ள 6 மாதத்தை 3 ஆண்டுகளாகவும், அதிகபட்ச தண்டனையை 7 ஆண்டுகளாக அதிகரிக்கவும் அதிகரிக்க மத்திய அமைச்சரவை அனுமதி அளித்தது! இப்படி ஏட்டில் மட்டும் கடுமையாக சட்டம் போட்டுவிட்டு, தமிழ்நாட்டில் ஊழல் ஆட்சியாளர்களை ஆதரித்து தாங்கி பிடிக்கிறதே மத்திய அரசு!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time