முஸ்லிம்களுக்கான 3.5 % இட ஒதுக்கீடு குறித்த வெள்ளை அறிக்கை வேண்டும், விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தலே அனைவரும் பிரதிநிதித்துவம் தரும். இது வரை திமுக சார்பில் ஒரு முஸ்லீம் கூட நாடாளுமன்றத்திற்கு அனுப்பட்டதில்லை. விசாரணை சிறைவாசிகளின் நிலைமை விக்கிக்க வைக்கிறது ..இந்த நேர்காணல் முஸ்லிம் சமூகம் பற்றிய ஒரு ஸ்கேன் ரிப்போர்டாகும்:
சமூக செயற்பாட்டாளரும், ஆய்வாளருமான ரியாஸ் அகமது, அப்துர் றஹ்மானின் ஆட்சியிலும், அதிகாரத்திலும் இடமில்லை என்ற நூலை மொழி பெயர்த்தவர். இவர் திருநெல்வேலியில் இருந்து சென்னை புத்தக கண்காட்சிக்கு வந்த போது, பீட்டர் துரைராஜ் எடுத்த நேர்காணல்;
மத நல்லிணக்கம் நிலவும் தமிழ்நாட்டில் முஸ்லீம்களுக்கு அரசியல் பிரதிதித்துவம் எப்படி உள்ளது?
இதுவரை நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தல்களில், தமிழ்நாட்டில் இருந்து வெற்றிபெற்ற முஸ்லிம் உறுப்பினர்கள் மொத்தமே 18 பேர்தான். இதில் அதிமுக சார்பாக ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். திமுக சார்பாக இதுவரை எந்த முஸ்லிமும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. 2024 நாடாளுமன்ற தேர்தலில் முஸ்லிம் கட்சிகளில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி (மமக) ஆகியவை திமுக அணியிலும் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (எஸ்டிபிஐ) அதிமுக அணியிலும் அங்கம் வகித்தன. முஸ்லிம் லீக் மற்றும் எஸ்டிபிஐ கட்சிகளுக்கு தலா ஒரு இடம் வழங்கப்பட்டது. இது தவிர பிரதான கட்சிகள் எதுவும் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தவில்லை.
சிறைக்குச் சென்றவர்களின் குடும்பங்களைப் பற்றி, நீங்கள் செய்து வரும் ஆய்வு சொல்வதென்ன?
விசாரணை சிறைவாசிகளின் குடும்பத்தினரின் சமூக உறவு என்ற தலைப்பில் ஆய்வு செய்து வருகிறேன். விசாரணைக் கைதிகள் என்பவர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தான்; குற்றவாளி அல்ல. ஒருவர் சிறைக்கு சென்றவுடன் அவரைச் சார்ந்து இருக்கும் மனைவி, குழந்தைகள் படும் சிரமங்கள் கொஞ்சமல்ல. குடும்பத்தினர் குறித்த சமூகத்தின் பார்வை திடீரென்று ஒரேநாளில் மாறிவிடுகிறது. குடும்ப பாரமும் மனைவி தலையில் விழுகிறது. குடும்ப உறுப்பினர்களின் வாழ்க்கை மாறிவிடுகிறது. குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படுகிறது. கல்லூரியில் படிக்கும் மாணவன் படிப்பைக் கைவிட்டு வேலைக்குப் போக நேரிடுகிறது. ‘சிறைக்குப் போன குடும்பம்’ என்ற புறக்கணிப்புக்கு ஆளாக நேரிடுகிறது.

விசாரணைக் கைதிகளின் நிலமை பற்றி சொல்லுங்கள்?
தேசிய குற்ற ஆவணக்காப்பக அறிக்கையின்படி சிறையில் இருப்பவர்களில் 74 % பேர் விசாரணைக் கைதிகள். தலித்துகள், முஸ்லிம்கள் கணிசமாக உள்ளனர். இதில் ஏழைகள், படிப்பற்றவர்கள், விளிம்புநிலை மக்களே அதிகம். இவர்களில் பலருக்கு, தாம் எந்தக் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டிருக்கிறோம் என்பது கூட தெரியாது. பிணையில் வருவதற்கான நடைமுறை தெரியாது. பிணைக்கு ஆட்களை (surety) ஏற்பாடு செய்யத் தெரியாது. சிறைகளில் உள்ள இசுலாமியர்களின் எண்ணிக்கை அவர்களின் மக்கள் தொகை விகிதாச்சாரத்தை விட அதிகம். எல்லா மாநிலங்களிலும் இதுதான் நிலை.
விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கையை எப்படி குறைப்பது?
இதற்கு நான் புதிதாக ஆலோசனை ஏதும் சொல்ல வேண்டியதில்லை. பல உச்சநீதி மன்ற தீர்ப்புகள் உள்ளன. சட்ட ஆணையங்கள் பரிந்துரை செய்துள்ளன. ‘பிணை என்பது விதி; சிறை என்பது விதிவிலக்கு’ (Bail is the rule, Jail is exception) என்று கூறுவார்கள். எல்லா குற்றங்களுக்கும் கைது செய்ய வேண்டியதில்லை. குற்றவாளி ஓடிவிடுவார், சாட்சிகளைக் கலைத்து விடுவார், விசாரணைக்கு ஒத்துழைக்க மாட்டார் என்ற நிலைமையின் போதுதான் கைது செய்ய வேண்டும். ஏழு ஆண்டுகள் வரை தண்டனையுள்ள குற்றங்களுக்கு கைதுசெய்ய வேண்டியதில்லை. பிணையில் விடுவிக்கலாம். குற்றத்திற்கு எவ்வளவு உயர்ந்தபட்ச தண்டனைக் காலமோ, அதில் பாதியை சிறையில் கழித்தால், பிணையில் விடுவிக்கலாம். இத்தகைய நெறிமுறைகளைக் கடைபிடிக்காததால், விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கை அதிகமாகிறது.
தண்டனை பெற்று, நீண்டகாலமாக சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்யக் கோருவது பற்றி..?
25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும், தண்டனை பெற்ற குற்றவாளிகள் தமிழ்நாட்டில் இன்னமும் இருக்கிறார்கள். இவர்களின் குடும்பத்தினர் அரசியல் கட்சிகளைச் சந்தித்து விடுதலை செய்ய வேண்டுகோள் வைத்துவருகிறார்கள். சிறையிலேயே சிலர் இறந்துவிட்டனர். பத்து ஆண்டுகள் சிறையில் இருந்தாலே முன்விடுதலை செய்ய வேண்டும் என்று மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன.
பொது மன்னிப்பு வழங்கவும், முன் விடுதலை செய்யவும் அரசுக்கு அதிகாரம் உள்ளது. கோயமுத்தூர் வழக்கு என்பது வெடிகுண்டு வழக்கு மட்டுமல்ல; அதில் மற்ற வழக்குகளும் இருக்கிறது. அனைவருக்கும் முன்விடுதலையை மறுக்கிறார்கள். 25 ஆண்டுகளுக்கு அதிகமாக சிறையில் இருப்பவர்களில் பெரும்பான்மையினர் முஸ்லிம்களே.
அதே கோயமுத்தூரில் 19 இசுலாமிய இளைஞர்களை படுகொலை செய்த குற்றவாளிகளில் ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை. தமிழ்நாடு முழுவதும், எத்தனை பேர் சிறைகளில் பல்லாண்டுகளாக இருக்கிறார்கள் என்ற எண்ணிக்கை கூட தெரியாது. ஒருவாறாக 50 பேர் நீண்டகாலமாக சிறைகளில் இருக்கலாம் என்று அனுமானிக்க வேண்டியிருக்கிறது. இவர்களுக்கு அரசு நீண்ட கால பரோல் வழங்கலாம். நோயாளிகளை, வயதானவர்களை வீட்டிற்கு அனுப்பலாம். சிறைவாசிகளின் கோரிக்கையை முஸ்லிம் சமூகம் பல காலமாக முன்னெடுப்பதாலேயே, அவர்களின் கல்வி, வாழ்வாதாரம் போன்ற மற்ற எத்தனையோ நியாயமான கோரிக்கைகளை எழுப்ப முடியாமல் போகிறது.

முஸ்லிம்களின் பொதுவான சமூக நிலை பற்றி…?
சச்சார் ஆணையம் முஸ்லிம்களின் பின்தங்கிய நிலைபற்றி விரிவான அறிக்கை கொடுத்தது. 2007 ல் கலைஞர் முஸ்லிம்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் 3.5 % இட ஒதுக்கீடு கொடுத்தார். அது குறித்த விரிவான விவரங்களுடன் வெள்ளை அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும். இதைப்பற்றிய விவரம் இருந்தால் தான், அதற்கேற்றபடி திட்டமிட முடியும். முஸ்லிம்களின் கல்வி, வேலைவாய்ப்பு பற்றிய பல விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற வேண்டி இருக்கிறது. அப்படி வரும் தகவல் முழுமையாக இருப்பதில்லை. எனவே, மேல் முறையீடு செய்யவேண்டி உள்ளது. இதற்கான நேரம், உழைப்பு, பொருளாதாரம் அதிகம் தேவைப்படுகிறது.
தனியார்துறைகளிலும் முஸ்லிம்கள் நிலை சொல்லும் படியாக இல்லை. அதனால்தான் முஸ்லிம்கள், பெரும்பாலும் முதலீடு அதிகம் தேவைப்படாத சிறுதொழில் செய்கிறார்கள். தெருவோர வியாபாரம் செய்கிறார்கள்.

தலித் முஸ்லிம்களுக்கு பட்டியல் இனச் சான்றிதழ் தருவதில்லையே.. ?
சீக்கிய, பௌத்த மதத்தில் சேரும் தலித்துகளுக்கு பட்டியலின மக்களுக்கு உரிய உரிமைகள் உள்ளன என சட்டத்தை திருத்தி உள்ளனர். ஆனால் அதே சமூக நிலையில் உள்ள கிறித்தவ, முஸ்லிம் மதத்தில் சேர்ந்த தலித்களுக்கு ச அந்த சலுகைகள் மறுக்கப்படுகிறது. எனவே தலித் இனத்தைச் சார்ந்த முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கிடையாது. இந்த பாகுபாட்டினால் அவர்களின் மத உரிமையும், சமூக உரிமையும் மறுக்கப்படுகிறது.
நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் எவ்வாறு உள்ளது?
பாஜக முஸ்லிம்களுக்கு இடம் அளிப்பதில்லை என்பது தெரியும். ஆனால் மதச்சார்பற்ற கட்சிகள் என்று சொல்லுபவை கூட முஸ்லிம்களுக்கு போதிய இடம் ஒதுக்குவதில்லை. எல்லா மாநிலங்களிலும் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப இல்லை. தற்போதைய மக்களவையில் 24 முஸ்லிம்கள் மட்டுமே உள்ளனர். அதாவது, மக்கள் தொகையில் 15 சதவிகிதம் உள்ள முஸ்லிம்கள் மக்களவையில் வெறும் 4.4 சதவிகிதம் மட்டுமே உள்ளனர். நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து மக்களவையில் முஸ்லிம்களின் பங்கு ஆறு சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளது.
Also read
தமிழ்நாட்டிலும் நிலை மோசமாகவே உள்ளது. இங்கு மக்கள் தொகையில் ஏறத்தாழ ஆறு சதவிகிதம் உள்ள முஸ்லிம்கள் சட்டமன்றத்தில் வெறும் 2.55 சதவிகிதம் மட்டுமே உள்ளனர். தற்போதைய சட்டமன்றத்தில் ஆறு முஸ்லிம் உறுப்பினர்கள் உள்ளனர்.
விகித்தாச்சார தேர்தல் முறையில் இசுலாமிய மக்களுக்கு ஓரளவு பிரதிநிதித்துவம் கிட்டும். தேர்தல் முறையில் மாற்றம் கொண்டுவருவது நீண்ட காலம் எடுக்கும். உடனடி தீர்வாக அரசியல் கட்சிகள் தங்கள் சார்பாக நிறுத்தும் வேட்பாளர்களில் முஸ்லிம்களை அவர்களின் மக்கள் தொகை விகிதத்திற்கு ஏற்ப நிறுத்த வேண்டும். சமூக நீதியில் முன்மாதிரியாக உள்ள தமிழ்நாடு இதிலும் முன்மாதிரியாக திகழ வேண்டும்.
நேர்காணல்; பீட்டர் துரைராஜ்















You have explained about the pathetic condition of muslims and dalit christians in the sphere of politics and society. The dalit christian condition is worst than muslim. Most of the dalit christians are re converting to hinduism to avail the privileges and benefits of dalit hindus. The jaganath mishra commission recommended that dalit christian be included in the SC list and they be accorded all the priveleges as dalit hindus. The congress government and BJP never looked in to this dalit christian issue. So is the journalism and jounalists never wrote detailed ground reality of dalit chriatian.