இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் நாஜிப் படைத் தளபதிகள் நடத்திய கொலை பாதகங்களை காட்சிப்படுத்துவதிலும், சம்பந்தப்பட்டவர்களை விசாரித்து தண்டிப்பதிலும் நல்ல மைலேஜ் செய்துள்ளது. இதே போன்ற ஒரு விசாரணையை இஸ்ரேலின் நெதன்யாகுவும், அமெரிக்க டிரம்பும் எதிர்கொள்வார்களா..? என ஏங்க வைப்பதே இந்தப் படத்தின் வெற்றி;
உலகையே வீழ்த்த நினைத்த ஹிட்லர், இரண்டாம் உலகப் போரின் இறுதியில் தற்கொலை செய்து கொண்டான். அவனுடைய கொள்கை பரப்பு அமைச்சராக இருந்த கோயபல்சும் தற்கொலை செய்து கொண்டான். உயிரோடு இருந்த, அடுத்த இராணுவ தளபதியான ஹெர்மன் கோரிங், அமெரிக்கப் படைகளிடம் சரணடைந்தான். அவன் மீது சர்வதேச நீதிமன்றத்தில், விசாரணை நடந்தது. நியுரெம்பெர்க் நகரின் விசாரணை பற்றி பல திரைப்படங்கள் வந்துள்ளன. நியுரெம்பெர்க் என்ற இந்தப்படம் அந்தச் சூழலை காட்சிப்படுத்திப் பேசுகிறது
இரண்டாம் உலகப் போரின் கடைசி நாளில், தளப்தி ஹெர்மன் கோரிங், காரில் தனது மனைவி, மகள், கருவூலத்தோடு அமெரிக்கப் படைகளிடம் சரணடைவதில் கதை தொடங்குகிறது. கம்யூனிஸ்டுகளை, யூதர்களை கொன்றொழித்த ஹிட்லர் கும்பலில் ஒருவன் ஹெர்மன் கோரிங். இந்தப் பாத்திரத்தில் அருமையாக நடித்துள்ளார் ரஸ்ஸல் குரோவ். (கிளாடியேட்டர் படத்தில் நடித்தவர்). ஜெர்மனியை வீழ்த்திய நேச நாடுகள், இலட்சக்கணக்கானவர்களை கொன்றொழித்தவர்களை தண்டிக்க விரும்புகின்றன.

இதற்காக சர்வதேச நீதிமன்றம் ஜெர்மனியின் நியுரெம்பெர்க் நகரில் அமைக்கப்படுகிறது. இதே நகரில்தான், ஹிட்லர் பேரணி நடத்தி யூதர்களின் வாக்குரிமையை பறித்தான். யூதர்களை மற்றவர்கள் திருமணம் செய்யத் தடை விதித்தான். பாகுபாடான சட்டங்களை இயற்றினான். இதனை உலக மக்களுக்கு நினைவுபடுத்துவதற்காக அதே நகரில், இடிந்த கட்டங்களை சரிபடுத்தி நீதிமன்றம் அமைக்கப்படுகிறது.
இந்த நீதிமன்றத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து, சோவியத் ஒன்றியம், பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் நீதிபதிகளாக நியமிக்கப்படுகிறார்கள். இதுபோன்ற நீதிமன்றங்கள் முந்தைய காலங்களில் இருந்தது இல்லை. மனிதகுலத்திற்கு எதிரான குற்றம் என எதுவும், அதுவரை வகைப்படுத்தப்படவில்லை. வெற்றிபெற்ற நாடுகளுக்கு, குற்றம் சுமத்தியவர்களை தண்டிப்பது என்பது மானப் பிரச்சினை. அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக பின்னாளில் வரவிருக்கிறவர் இந்த வழக்கின் தலைமை வழக்கறிஞராக குற்றம் சுமத்துகிறார். சர்வதேச ஊடகங்கள் கண்காணிக்கின்றன. ஆரிய இன மேன்மை பேசிய மக்கள் அப்பொழுதும் இருந்தார்கள்.
ஹெர்மன் கோரிங்கோடு சேர்த்து 21 பேர் மீது குற்றம் சுமத்தப்படுகிறது. வழக்கில் இவர்களை தண்டிக்க வேண்டும்; அல்லது விடுதலை செய்ய வேண்டும். தொடர்ந்து அவர்களை சிறையில் வைத்திருக்க முடியாது. சட்டப்படி தாங்கள் செய்தது சரி என்று கூறுகிறார்கள். இந்த வாதத்தை உதாசீனப்படுத்தவும் முடியாது. இதற்கான வாத, எதிர்வாதங்கள் தான் இந்தக் கதைக்கான அடிப்படை. சட்டவாதங்களின் போக்கில் எழும் அறம் சார்ந்த கேள்விகள் வலுவானவை.
சிறையில் இருப்பவர்களை தற்கொலை செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு, தற்கொலை செய்துகொள்ளும் மனநிலை இருக்கிறதா என்பதை பரிசோதிக்க அமெரிக்க இராணுவ உளவியல் மருத்துவர் வருகிறார். இவர் சிறைவாசிகளை பரிசோதித்து, அவர்களின் மனநிலை பற்றி சிறை நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும். மனநிலை மருத்துவரான டக்ளஸ் கெல்லி, இவர்களோடு உரையாடுகிறார். தங்கள் குடும்பம் எங்கு உள்ளது என்று தெரியாமல், விசாரணையை எதிர்நோக்கி இருக்கும் சிறைவாசிகள், யாரிடமாவது பேச வேண்டும். கோரிங் பேசுவதை, மருத்துவரான கெல்லி காதுகொடுத்துக் கேட்கிறார். அவர்கள் இருவருக்கும் இடையில் ஒரு வகையான நட்பு உருவாகிறது. சிறைக்கு வெளியில் இருக்கும் கோரிங் மனைவி, மகள் அவர்களைச் சந்தித்து கெல்லி கடிதம் வாங்கி இவரிடம் கொடுக்கிறார். இப்படி தனிப்பட்ட நெருக்கம் காட்டுவதாலேயே அவர்மீது இராணுவ மேல் அதிகாரி சந்தேகம் கொள்கிறார். 
ஹிட்லரின் எல்லா செயல்களுக்கும் உடந்தையாக இருந்த கோரிங், தான் செய்ததை தவறு என நினைக்கவில்லை. இன்னமும் தனது தலைவன் ஹிட்லர் என்றே சொல்கிறான். அவனது மனநிலையை, உரையாடலை மருத்துவரான கெல்லி அன்றாடம் எழுதி வருகிறார். என்னை வைத்து, நீ பெரிய ஆளாகப் போகிறாய் என்று கோரிங் சொல்கிறான். ரஸ்ஸல் கிரோவின் நடிப்பு அபாரம்.
இருவருக்கும் இடையில் நடக்கும் உரையாடல், விசாரணை அலுவலர்கள் தமக்குள் பேசுவது மூலமாக அந்தக்கால அரசியல் பார்வையாளனுக்குத் தெரிகிறது. ஹிட்லருக்கு முதலில் ஆதரவு கொடுத்தது கிறிஸ்தவர்களின் மதத்தலைவரான போப் ஆண்டவர். அவருக்கு இந்தப் படுகொலைகளில் பங்கு இல்லை என்று சொல்ல முடியுமா ? இதில் ஹிட்லரை நியாயப்படுத்தும் வசனங்களும் வருகின்றன.
விசாரணையின் போது, ஹிட்லர் வதை முகாம்களில் நடத்திய இரக்கமற்ற படுகொலைகள் காட்சிப் படுத்தப்படுகின்றன. நீதிபதிகளின், மனசாட்சியை உலுக்குகிறது.(1961 ல் judgement at Nuremberg என்ற ஒரு படம் வந்துள்ளது). 21 பேருக்கும் தண்டனை வழங்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து மற்றவர்கள் மீதும் அடுத்த கட்டங்களில் வழக்கு தொடுக்கப்பட்டு தண்டிக்கப்பட்டது வரலாறு. இதே அடிப்படையில் பின்னர் ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில், நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு ஜப்பானிய அதிகாரிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டன. (டோக்கியோ டிரையல் என்ற தொடர் தற்போது நெட்பிளிக்சில் ஓடுகிறது).
Also read
மருத்துவரான கெல்லிஸ், கோரிங் எப்படி விசாரணையை எதிர்கொள்ளப் போகிறான் என்ற தகவலை இராணுவத்திற்குச் சொல்லுகிறான். வதை முகாம்களில் கொலை செய்தது தவறு என்றால், ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் அமெரிக்கா அணுகுண்டு வீசி அப்பாவி பொதுமக்களை அழித்தது தவறு இல்லையா? என்ற கேள்வியை கோரிங் கேட்கிறான். மருத்துவரான கெல்லிஸ் தனது நூலில், வாய்ப்பு கிடைத்தால் அமெரிக்காவில் உள்ள மக்களும் இதே போல ஒரு பேரழிவை, சகமக்கள் மீது நடத்துவார்கள் என எழுதுகிறான். அதனால், அந்த நூல் வணிகரீதியாக வெற்றி அடையவில்லை. ஆனாலும், தான் நம்பும் உண்மைக்கு மாறாக அவன் எழுத விரும்பவில்லை.
இப்படத்தை ஜேம்ஸ் வாண்டர்பில்ட் இயக்கியுள்ளார். தரவரிசையில், IMDb இதற்கு 7.4 புள்ளிகள் கொடுத்துள்ளது. பிரைம் தளத்தில் (148 நிமிடங்கள்) ஓடுகிறது. கடந்த நூற்றாண்டில் இனப்படுகொலைக்கு ஆளான யூத மக்கள் உள்ள இஸ்ரேல், இப்போது பாலஸ்தீன மக்கள் மீது தாக்குதல் நடத்திவருகிறது. அதே நியுரெம்பெர்க் தீர்ப்புகளின் அடிப்படையில், இஸ்ரேலிய பிரதமரை தண்டிப்பது சாத்தியமே! அந்த வகையில் சர்வதேச சட்டங்களில் ஒரு முன்னுதாரணத்தை நியுரெம்பெர்க் விசாரணை ஏற்படுத்தியுள்ளது.
திரைப்பட விமர்சனம்; பீட்டர் துரைராஜ்















Leave a Reply