பேராசை அரசியலின் உச்சம் தொட்ட பிரேமலதா…!

-சாவித்திரி கண்ணன்

கேப்டன் விஜயகாந்தின் மறைவுக்கு பிறகு தேமுதிகவின் ஓட்டு வங்கி என்ன என்பது நிரூபணம் ஆகாத நிலையில்,  எத்தனை டிமாண்டுகள்..? மலைக்க வைக்கும் பேரங்கள்..! அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட பாரம்பரியக் கட்சிகளே பிரேமலதாவின் பேர அரசியலைக் கண்டு பிரமிக்கின்றன..;

திரிசங்கு நிலையில் திணறித் தவிக்கிறார், பிரேமலதா!

அப்படியும் இல்லாமல், இப்படியும் இல்லாமல் இரண்டுங்கெட்டான் நிலைமை!

பாஜகவின்  ஐடியாலாஜிக்கு மிகவும் இணக்கமாக உள்ளவர் என்பதால் எப்படியும் தேமுதிக தங்கள் பக்கம் வந்துவிடும் பாஜக நினைத்தது.

கேப்டன் விஜயகாந்த் அவர்கள் எம்.ஜி.ஆர் மீது பெருமரியாதை வைத்திருந்தவர் என்ற வகையில், ஒரு கட்டத்தில் அதிமுக தொண்டர்களும் தேமுதிகவோடு நெருங்கிவிட்டார்கள். சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவினர் தேமுதிகவின் வெற்றிக்காக மிக தீவிரமாக செயல்பட்டதைக் கொண்டேனும் தங்கள் பக்கம் பிரேமலதா வரும் என்று அதிமுக எதிர்பார்த்தது.

விஜயகாந்த் மகனுக்கும் அதிமுக கூட்டணியில் தான் ஆசையாம். அந்த அளவுக்கு அவருக்கு விருதுநகர் தொகுதியில் வெற்றிக்கு நெருக்கமாக கொண்டு செல்லும் அளவுக்கு தீயாய் கள வேலை பார்த்த அதிமுக மீது இயல்பாகவே அவருக்கும் ஒரு விசுவாசம் ஏற்பட்டுவிட்டது.

அதே சமயம் அதிமுகவிடம் பிரேமலதா வைத்த டிமாண்ட் அவர்களை அதிர வைத்துவிட்டது. 18 சட்டமன்ற தொகுதிகளும், ஒரு ராஜ்ய சபா சீட்டும் எதிர்பார்த்துள்ளார். அத்துடன் மிகப் பெரிய அளவில் – நிறைவேற்றவே முடியாத அளவுக்கு ‘விட்டமின் ப’வும் கேட்டாராம்.

அதிமுகவுக்கு தற்போதுள்ள வகையில் இரண்டு ராஜ்யசபா சீட்டே வாய்ப்புள்ளது. அதில் ஒன்றை பாமகவும், ஜி.கே.வாசனும் கேட்டு நிர்பந்திக்கும் நிலையில், மற்ற ஒன்றையேனும் தங்கள் கட்சிக்கு வைத்துக் கொள்வதில் அவர்கள் உறுதிகாட்டுவதால் ராஜ்ய சபாவுக்கு வாய்ப்பில்லை. 18 தொகுதிகளும் இயலாது என தெளிவுபடுத்திவிட்டனர்.

தகுதிக்கு மீறிய பேராசையாக இருப்பதால்  பாஜகவும், அதிமுகவும் தேமுதிகவை கை கழுவுவதைத் தவிர வேறு வழியில்லை. அவங்களாக வந்தால் பார்க்கலாம் என விட்டுவிட்டனர்.

எனவே, திமுக தரப்பில் டீலிங் பேசினர். அங்கு ஏற்கனவே கூட்டணி கட்சிகள் ஜாஸ்தி. மேலும், மக்கள் நீதி மய்யமும், ராமதாஸ் கட்சியும் வேறு எதிர்பார்க்கிறார்கள். பழைய கூட்டாளிகள் யாருக்கும் தொகுதியைக் குறைக்க முடியாது. திமுக தன் தொகுதிகளை தியாகம் செய்து தான் தேமுதிகவை சேர்க்க இயலும். ஆகவே, ”ஆறேழு  சீட் தான் தர இயலும்” என்றவுடன் அம்மணி அதிர்ந்துள்ளார்.

அதே சமயம் தேர்தல் செலவுக்கு அதிமுக கூட்டணியை விடவும் திமுக கூட்டணி ‘விட்டமின் ப’ வை தாராளமாக அள்ளிக் கொடுப்பதாக சொன்னவுடன், அம்மணிக்கு சந்தோஷம்  என்றாலும், காங்கிரஸ் வெளியேறினால் கூடுதல் சீட்டை நிர்பந்திக்கலாம். அது வரை கமுக்கமாக இருந்து கொண்டு அதிமுக பாஜக கூட்டணியை ஆழம் பார்க்கலாம் என்றுள்ளாராம்.

ஆனால், அதிமுக- பாஜகவை பொருத்த வரை பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வரும் முன்பே தேமுதிக வந்திருந்தால் கூட ஒரு மரியாதை தந்திருக்கலாம். ஆனால், ரொம்பவே டிமாண்ட் வைப்பதால் அப்படியே தொங்கலில் விட்டுப் பார்க்கலாம் என விட்டுவிட்டனர்.

விஜயகாந்த் உயிரோடு இருக்கும் போதே இந்த கட்சி வீழ்ச்சியின் பாதையில் வேகமாக சென்று கொண்டிருந்ததை 2016 தேர்தல் துல்லியமாகக் காட்டியது. விஜயகாந்த் நோய்வாய்ப்பட்டு வீழ்ந்த நிலையில், தேமுதிக இன்னும் தேய்பிறையானது. மேலும் கடந்த பத்தாண்டுகளாக ஒரு எம்.எல்.ஏவோ, எம்.பி பதவியோ கூட இல்லாத நிலையில் உள்ளது. உள்ளாட்சி தேர்தல்களிலும் செல்லுபடியாகாமல் ஓரம் கட்டப்பட்டுவிட்டது. இந்தச் சூழலிலும் பிரேமலதா பேர அரசியல்  செய்வதில் காட்டும் பிடிவாதத்தை ஆச்சரியமாக பார்க்கிறது அரசியல் களம்.

சமீபத்தில் நடந்த தேமுதிக மாநாட்டில் பிரேமலதாவின் தம்பி சுதீஸ், ”ஆமாம், நாங்க பேரம் தான் பேசுகிறோம். என்ன தப்பு? எங்க கிட்ட 20 லட்சம் தொண்டர்கள் இருக்கும் போது நாங்க பேசக் கூடாதா? இன்னும் சொல்லப் போனால் எங்களோடு கூட்டணி வைக்கும் கட்சி மட்டுமே ஆட்சிக்கு வர முடியும். வருங்காலத் துணை முதல்வராவார் அக்கா” எனக் கூறியதும், விஜயபிரபாகரன் சகட்டுமேனிக்கு மரியாதை இல்லாமல் பேசியவையும் இரு பெரிய  கூட்டணிகளும் இந்தம்மாவுடன் மிக எச்சரிக்கையாக விலகி நின்று பேச வேண்டும் என்ற முடிவை எடுக்க வைத்துவிட்டது.

ஆத்தாடி, இது ஆதரிக்க வருபவர்களின் அடிமடியிலேயே கை வைத்து அள்ளிச் செல்லும் குடும்பமாக உள்ளதே.. ‘’ என பழம் தின்று கொட்டை போட்ட பெரிய கட்சிகளே தேமுதிகவிடம் இருந்து விலகி நிற்கும் போது விஜய் கட்சி எப்படி இவர்களை விரும்பி அழைப்பார்கள்?

எப்படி பார்த்தாலும் இந்தக் கட்சிக்கு 20 லட்சம் வாக்குகள் இம்பாசிபிள்! ஒரு நான்கைந்து மாவட்டங்களில் கொஞ்சம் வாக்கு உள்ளது. அதுவும் தற்போது தங்களை பகடைக் காயாக்கி பிரேமலதா பேர அரசியல் செய்வது தொண்டர்களுக்கும் நன்றாகவே தெரிய வருகிறது.

ஜனவரி 9 ஆம் தேதி மாநாட்டில் நிச்சயம் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என ஆயிரத்தெட்டு முறை அளந்துவிட்ட பிறகு, அதிரடியாக ‘ஜகா’ வாங்கி மேன்மேலும் முடிவுறா பேர அரசியலில் மூழ்கி முத்தெடுக்கப் பார்க்கும் பிரேமலதாவின் அரசியல் தொண்டர்களையும் முகம் சுழிக்க வைத்துள்ளது.

ஆனால், இது எதைப் பற்றியும் துளியும் சங்கோஜப்படும் மனநிலையை எப்போதோ கடந்துவிட்டார் பிரேமலதா என்று தன் தோன்றுகிறது.

அரசியல் என்பதை மக்கள் தொண்டாகப் பார்த்த காந்தி, காமராஜர்  கால சகாப்த அரசியல் சமாதி நிலைக்கு போய்விட்டதோ…? மக்களை மண்டாக வைத்திருந்து, தொண்டர்களை அடிமையாகப் பழக்கப்படுத்தி, மக்களை  இலவசங்களை எதிர்பார்க்கும் சுயமரியாதை உணர்ச்சியற்ற பிண்டங்களாக ஆக்கியுள்ள  இன்றைய சூதாட்ட அரசியல் களத்தில் பிரேமலதாவின்  சுயநலம் சார்ந்த – கொள்கைக்கு துளியும் இடமற்ற –  ‘கேம்ப்லிங் பாலிடிக்சை’ கண்டு நாம் பிரமிக்க என்னவுள்ளது?

சாவித்திரி கண்ணன்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time