நீண்ட நெடிய இடைவெளிக்குப் பிறகு – கோமா நிலையில் ஐ.சி.யுவில் இருந்த ஒருவர் திடீர் பிரசன்னமானதைப் போல – காணாமல் போன கமலஹாசனும், மக்கள் நீதி மய்யமும் தேர்தல் நேரத்தில் மீண்டும் அரசியல் களத்திற்கு வந்திருக்கிறது..! ஆனால், ஐயோ பாவம்!
எவ்வளவோ சம்பவங்கள் நாளும், பொழுதும் நடந்தேறிக் கொண்டுள்ளன.
மக்களை பாதிக்கும் பிரச்சினைகள், தூய்மை பணியாளர்கள் தொடங்கி பகுதி நேர ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் .. என பலதரப்பட்ட போராட்டங்கள் நடந்த வண்ணம் இருந்தன!
திமுகவிடம் ராஜ்ய சபா எம்.பி பதவி வாங்கிவிட்டதனால், இயற்கை வளக் கொள்ளை தொடங்கி டாஸ்மாக் முறைகேடுகள் என அனைத்திலும் ‘கப்சிப்’தான்..!
‘இப்படி ஒரு கட்சி இருந்தது’ என்பதையே அனைவரும் மறந்து போன சூழலில் – ‘தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளிக்கலாம். அதற்கு ரூ 50,000 கட்ட வேண்டும். திமுகவிடம் 15 தொகுதிகள் கேட்கப்பட்டிருக்கிறது’ என்ற அறிவிப்பு! பாவம் எத்தனை பேர் 50,000 கட்டி ஏமாறப் போகிறார்களோ..?
‘அவரு ராஜ்ய சபா எம்.பி பதவியோட திருப்தி அடைஞ்சிட்டார்! மேற்கொண்டு எதுவும் கேட்க வாய்ப்பில்லாதது போலத் தெரியுது..’ என திமுகவே நினைத்திருக்கக் கூடும். இன்னொன்று கமலஹாசனுக்கு தன்னைச் சார்ந்திருப்பவர்கள் அதிகார மையத்திற்கு போவதையோ, ஏதேனும் பதவிகளில் இருப்பதையே சகித்துக் கொள்ளும் மனநிலை முற்றிலும் கிடையாது என அவரோடு நெருங்கிப் பயணித்தவர்கள் அனைவருக்கும் தெரியும்.
அதனால் தான் உள்ளாட்சித் தேர்தல்களில் கட்சிக்காரர்கள் போட்டியிடக் கூட அவர் அனுமதிக்கவில்லை. சென்ற முறை கூட, சிங்கா நல்லூர் தொகுதியில் ‘தான் மட்டுமே வெற்றி பெற்றால் போதும்’ என்பதாகத் தான் தன் தொகுதியிலேயே அதிக நாட்கள் பிரச்சாரம் செய்தார்.
தற்போதுமே கூட, ”நாங்கள் வெற்றி பெற்று வந்தால் சட்டமன்ற மேலவையை மீண்டும் புதுபிப்போம். அதற்கு உங்க ஆட்கள் ஒன்றிரண்டு பேருக்கு எம்.எல்.சி வாய்ப்பு தருகிறோம்” என்றால், அதை ஏற்றுக் கொள்ள வாய்ப்புள்ளது. அல்லது ”உங்க கட்சிக்கு சீட் ஒதுக்க முடியவில்லை. ரொம்ப டைட்டாக இருக்குது. கூட்டணியில் புது கட்சிகள் வேறு வருகிறார்கள்! உங்க பிரச்சாரத்திற்கு மிகப் பெரிய தொகை கூட தந்துவிடுகிறோம்” என திமுக தலைமை சொல்லுமானால் கமலஹாசன் அதை மறுப்பின்றி ஏற்க வாய்ப்புள்ளது.

சற்றே பின்னோக்கிப் பார்க்கிறேன்.
கட்சி ஆரம்பித்த புதுசுல காட்டிய பந்தா என்ன..? பேசிய பேச்சுகள் என்ன…?
”தமிழ்நாட்டின் தலை எழுத்தையே மாற்ற வந்த தவப்புதல்வனாக்கும் எங்கள் உலக நாயகன்” என்று கட்சியினரை பேச வைத்ததோடு, ‘கமலஹாசனை முதல்வராக ஏற்கும் கட்சிகளோடு தான் பேச்சு வார்த்தை’ என்று தீர்மானம் நிறைவேற்றிய 2021 தேர்தல் கால அரசியல் சதிராட்டங்கள் நினைவுக்கு வருகிறது…!
# தனக்கு மட்டுமே மேடையில் பிரம்மாண்ட நாற்காலி போட்டு அவர் நடத்திய கட்சியின் உள் அரங்கு கூட்டங்கள்!
# ‘நானே ராஜா! எனக்கு அனைவரும் தூக்க வேண்டும் கூஜா’ என ஒற்றை அதிகார மையமாக திகழ்ந்தது!
# கமலஹாசனின் அணுகுமுறையால் காலப் போக்கில் கட்சிக்காக தங்களை அர்ப்பணித்தவர்கள் – இழந்த வரை போதும் என – மிகப் பெரிய அளவில் வெளியேறிச் சென்றது…!
# திராவிட ஒவ்வாமையை வெளிப்படையாக காட்டியதும்,
# கார்ப்பரேட்களுக்கு ஆதரவாக கொண்டுவரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிய விவசாயிகளை ஆதரிக்க மறுத்ததும்,
# மத்திய பாஜக அரசு அன்றைக்கு அறிவித்த 12 மணி நேர உழைப்பை நிர்பந்திக்கும் சட்டத்தை எதிர்க்க மறுத்து மெளனம் காட்டியதும்…
கமலஹாசனின் அரசியல் யாருக்கானது? என்பதை நான் அன்றே கவனப்படுத்தினேன்.
சினிமாவில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு உச்சத்தை தொட்ட கமலஹாசன் அரசியலுக்கு நேரம் தர ஏனோ மனமில்லை. ‘மாதத்திற்கு ஒரு முறையேனும் அவர் கட்சி அலுவலகம் வந்து கட்சி நிர்வாகிகளிடம் பேசுவதைக் கூட எதிர்பார்க்க முடியாது’ என்ற அளவுக்கு பிக் பாஸுலும், சினிமா தயாரிப்பிலும், நேரம் செலவிட்டதால் தான் அவர் கட்சி தேடப்படும் நிலைக்குச் சென்றது.
இருக்கின்ற நிர்வாகிகளில் ஒரு சிலர் கமலஹாசனைத் தேடிச் சென்று, நாட்டில் நடக்கும் விவகாரங்கள், மக்கள் போராட்டங்களை அவர் கவனத்திற்கு எடுத்துச் சென்று அது குறித்து குறைந்தபட்சம் ஒரு அறிக்கையேனும் தரச் சொன்னால்.., அதிலும் பத்தில் ஒன்றுக்குத் தான் அறிக்கை தருவார்….என்ற அளவுக்கு கட்சியை ஐ.சியுவுக்கு தள்ளியது கமலஹாசன் தான்!
Also read
கூட்டணி தலைமையிடம் தேர்தலுக்கு சீட்டு கேட்டு பேரம் நடத்துவதற்கு முன்னரே பிரம்மாண்ட பொதுக் கூட்டம் அல்லது மாநாடு என ஏதாவது ஒன்றை நடத்தி நிருபிக்க வேண்டிய கட்டாயத்தை ஆகச் சிறிய கட்சிகள் கூட அக்கறையாகச் செய்துள்ளன. கமலஹாசன் அதிலும் ‘பெயிலியர்’.
கிட்டத்தட்ட மக்கள் நீதி மய்யம் என்பது இன்றைய தினம் ஒரு லெட்டர்பேடு கட்சி தான்! ஒரே ஒரு தொகுதி போட்டியிடக் கொடுத்தாலுமே கூட, அந்தத் தொகுதிக்கு 10 சதவிகித பூத் ஏஜெண்டுகளைக் கூட – தமிழகம் முழுக்க திரட்டினாலும் – மக்கள் நீதி மய்யத்தால் போட இயலாது..என்ற அவல நிலை!
‘என்ன செய்யப் போகிறது திமுக தலைமை?’ எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.
எதுக்காக இந்தக் கட்சி? என்று மக்களுக்கும் தெரியவில்லை!
மக்கள் தொண்டு என்றால் என்ன..? இவர்களுக்கும் தெரிவதில்லை.
இப்படியான நிலையில் தான் இன்றைக்கு பல கட்சிகள் உள்ளன. எல்லாம் காலத்தின் கோலம்!
சாவித்திரி கண்ணன்
















நேற்று இலங்கை தூதாக அதிகாரிகள் மற்றும் இலங்கை காவல் துறை அதிகாரிகள் மவுரியா, இவர்கள் கமலகாசனை சந்தித்ததாகவும்
கட்சி நிர்வாகிகள் அருணாசலம், செந்தில் ஆறுமுகம் ஆகியோர் உடன் இருந்ததாக (?) தினத் தந்தி யில் சிறியதாக செய்தி வந்துள்ளது.
என்னவாக இருக்கும்??
புரோக்கர் வேலை செய்கிறாரோ?