காங்கிரசின் தொடர் மெளனத்தாலும், த.வெகவுடன் ரகசியமாக பேசி வருவதாலும் திமுகவில் கோபம் நிலவுகிறது. காங்கிரஸ் த.வெ.க பக்கம் போனாலும் பரவாயில்லை ராமதாசின் பாமகவையும், தேமுதிகவையும் உள்ளே இழுத்து சரிகட்டிவிடலாம் என்ற பேச்சு திமுகவில் ஓடுகிறது. இதன் வெளிப்பாடே மதுரையில் கோ. தளபதியின் பேச்சு
யாருடன் கூட்டு என்பது குறித்து எல்லோரிடமும் கேட்டும் இன்னும் அறிவிக்காமல் இருக்கிறது காங்கிரஸ்!
திமுக கூட்டணியில் இருந்து விலகி, த.வெ.கவுடன் கைகோர்ப்பது குறித்து காங்கிரசுக்குள் இரு வேறு கருத்துக்கள் உள்ளன.
நீண்ட காலம் திமுகவோடு பயணித்த நட்பு காரணமாகவும், அந்த நட்பில் சில பலா பலன்களை அனுபவித்த வகையிலும் சிலர் திமுகவுடன் சேர தீவிரம் காட்டுகின்றனர். இவர்கள், வைக்கும் வாதங்கள் கவனிக்கத்தக்கன. திமுகவுடன் தொடர்வது பாதுகாப்பானது. விஜய்யுடன் போவது தேவையில்லாத ரிஸ்க்! 2029-ல் டெல்லி தலைமைக்கு பத்து எம்.பிக்கள் வேண்டும் என்றால், அது திமுக கூட்டணியில் மட்டுமே சாத்தியம். என்கிறார்கள்.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தோடு சேர விரும்புகிறவர்கள் வைக்கும் வாதங்கள்; திமுகவின் ஐந்தாண்டு ஆட்சியின் மிது மக்களுக்கு அதிக அதிருப்தி இருக்கிறது. 2021-ல் அதிமுக மீது மக்களுக்கு இருந்த கோபம் தற்போது திமுக மீது மக்களுக்கு இருக்கிறது. பண விநியோகத்தை மட்டுமே திமுக பிரதானமாக நம்புகிறது. திமுகவுடன் இருப்பதால் அந்த திருப்தி நம்மையும் தாக்கும். அதிகாரத்தில் ஒரு போதும் பங்கில்லாமல் திமுகவுடன் இருப்பதால் நமக்கு எதிர்காலமும் இல்லை. விஜய் கட்சியில் தான் இன்றைய இளம் தலைமுறை பொங்கி வழிகிறது. காங்கிரசை இளையோரிடம் எடுத்துச் செல்ல நமக்கு இது அருமையான வாய்ப்பு. செலவில்லாமல் அந்த இளைஞர் படை நமக்கு உதவும்,. அனுபவமில்லாத அவர்களை அரசியலில் நாம் பக்குபவப்படுத்த முடியும். இதன் மூலம் அமைகின்ற ஆட்சியில் நாமும் பங்கு பெற்று சரியான திசை வழியில் நல்லாட்சி தரலாம். இதனால் காங்கிரஸுக்கு ஒரு பிரகாசமான எதிர்காலத்தை தோற்றுவிக்கலாம். அத்துடன் திமுகவின் பாஜக எதிர்ப்பு நம்பகத்தன்மை கொண்டதல்ல. நாளை தங்கள் மீதான வழக்குகளில் தப்பிக்க திமுக 2029-ல் பாஜவுடன் சேரவும் வாய்ப்புள்ளது. என்கிறார்கள்.
இந்த இரண்டு வாதங்களையும் கூர்ந்து கேட்டுக் கொண்ட காங்கிரஸ் டெல்லித் தலைமை வழக்கம் போல முடிவெடுக்க முடியாமல் தடுமாற்றத்தில் உள்ளது. விஜய் உடனான கூட்டணி புதுச்சேரியில் காங்கிரசை புதுப்பித்து அரியணை ஏற்றவும் நிச்சயம் உதவும். அத்துடன் வரவுள்ள கேரள சட்டமன்றத் தேர்தலுக்கும் பேருதவி புரியும். எதிர்காலத்தில் ஆந்திரா, தெலுங்கான தேர்தலுக்கும் பயன்படும் என்றும் காங்கிரஸ் கணித்துள்ளது.
விஜய்யின் ஜனநாயகன் படத்தை தடுத்து நிறுத்தி பாஜக கூட்டணிக்கு வர வேண்டி அவருக்கு நிர்பந்தம் தரப்பட்டு வருகிறது. கூட்டணிக்கு வந்தால் கரூர் சம்பவ சி.பி.ஐ விசாரணையிலும் விஜய் தரப்புக்கு பாஜக உதவ காத்திருக்கிறது. ஆயினும் இந்த நிமிடம் வரை விஜய் இந்த நெருக்கடிகளுக்கு பணியவில்லை. பாஜக அதிகம் எதிர்ப்பை பேசாவிட்டாலும் அவர்கள் சகவாசத்தால் தன் அரசியல் எதிர்காலத்தை சூனியமாக்கிக் கொள்ளக் கூடாது. குறுகிய கால பலன்களுக்காக மிகப் பெரிய எதிர்காலத்தை இழக்கக் கூடாது என்பது த.வெ.க. தலைமையின் நிலைபாடாக உள்ளது.
இதையெல்லாம் கவனித்து வரும் காங்கிரசின் டெல்லி தலைமைக்கு விஜய் மீது ஒரு நம்பிக்கை ஏற்ப்பட்டுள்ளது. அதே சமயம் திமுக தலைமைக்கும், பாஜக தலைமைக்கும் உள்ள திரைமறைவு அண்டர்ஸ்டேண்டிங்கை காங்கிரஸ் தலைமை நன்கு அறிந்துள்ளது.
Also read
பல்வேறு கருத்து கணிப்புகளில் விஜய்யின் த.வெ.கவுக்கு தான் பிரதான முக்கியத்துவம் மக்கள் தருகிறார்கள் என்பது தொடர்ந்து அறியப்பட்ட நிலையில் திமுக, பாஜக, அதிமுக ஆகிய மூன்றும் த.வெ.கவை கடுமையாக தாக்குகிறார்கள். முத்தரப்பு தாக்குதலையும் சமாளித்து கட்சியை கரைத் தேற்ற காங்கிரஸ் ஆதரவு தங்களுக்கு கிடைத்தால் பேருதவியாக இருக்கும் என த.வெ.க தரப்பில் ஆசை இருக்கிறது.
இருதரப்பிலும் பல கட்ட சந்திப்புகள், ஆலோசனைகள் நடந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது ஜன நாயகன் படத்திற்கு ஆதரவாக ராகுல்காந்தி பேசியதற்கு தனிப்பட்ட முறையில் போனில் அழைத்து விஜய் நன்றி தெரிவித்ததாக த.வெ.க. தரப்பு சொல்கிறது. ஆனால், வெளிப்படையாக எதையும் சொல்ல மறுக்கிறார்கள். தொடர்ந்து கப்சிப் தான்.
இங்கனம் இருதரப்பிலும் ஆர்வமும், ஆசைகளும் இருந்தாலும், இதற்கு செயல் வடிவம் கிடைக்காமல் ஏதோ ஒன்று தடையாக உள்ளது. அந்தத் தடை தகர்க்கப்படுமா? தேர்தல் கூட்டணி கைகூடுமா? என்பது சஸ்பென்சாகவே தொடர்கிறது.
அஜிதகேச கம்பளன்
















Leave a Reply