இலவு காத்த கிளியாய் த.வெக! இரண்டுங்கெட்டானாய் காங்கிரஸ்!

-சாவித்திரி கண்ணன்

பல கட்டப் பேச்சுகள் இரு காங்கிரஸ் – திமுக நடந்த போதிலும் காங்கிரஸ்  காலம் தாழ்த்துகிறது. அதே சமயம் காங்கிரஸ் மீது த.வெ.க தரப்பில் அதிக எதிர்பார்ப்பு வைத்து காத்துக் கொண்டுள்ளனர்! இந்தச் சூழலில் திமுக வேகமாக சுதாரித்துக் கொண்டு காங்கிரசை இழுக்க சில படிகள் இறங்கி வந்துள்ளது; முழு விபரம்;

நாம் விரும்புகிறோமோ இல்லையோ சமீபத்திய பல கருத்து கணிப்புகள் விஜய்க்கு மிகப் பிரம்மாண்டமான ஆதரவு அலை ஏற்பட்டிருப்பதை பட்டவர்த்தனமாக உணர்த்துகிறது.

சென்னையின் பல தொகுதிகளில் தேர்தல் சர்வேயில் ஈடுபட்ட – எந்தச் சார்பும் இல்லாத – என்னுடைய சக பத்திரிகையாள நண்பர் ஒருவர் பல தொகுதிகளில் விஜய்க்கு 35 முதல் 40 சதவிகித வாக்குகள் இருப்பதைச் சொல்லி பெருவியப்பை வெளிப்படுத்தினார். அவர் மட்டுமல்ல, வேறு சிலரும் இவ்விதம் சொல்கிறார்கள்.

விஜய் மீதான ஈர்ப்பு மாத்திரமல்ல, இரு திராவிட கட்சிகளின் ஆட்சிகளிலும் மக்களுக்கு பெரும் ஏமாற்றம் உண்டாகி உள்ளது. இருவரும் மலை முழுங்கி மகாதேவன்கள். மத்தியில் உள்ள அதிகார மையத்தை சரிகட்டி தங்கள் அதிகாரத்தை துஷ் பிரயோகம் செய்பவர்கள் என்ற புரிதல் வந்துள்ளது. அதே சமயம் பாஜக எதிர்ப்பு பசுமையாகவே மக்களிடம் உள்ளது.

திமுகவின்  ஐந்தாண்டு ஆட்சியில் அதிக அதிருப்தி நிலவுகிறது என்றால்,

அதிமுக விவகாரத்தில் அது சரியான எதிர்கட்சியாக பெர்பாமன்ஸ் செய்யவில்லை என்பதும், பஜகவுடன் கூட்டணி வைத்திருப்பதும் பெரும் பின்னடைவாகி உள்ளது.

ஆகவே, தற்போது ஒரு மாற்றத்தை தேடும் அவர்களின் உடனடித் தேர்வாக த.வெ.க உள்ளது. விஜய்க்கு தலைமைக்கான  ஆளுமை திறன் உள்ளதா? நேர்மையான நல்லாட்சி தருவாரா? என்று யோசிக்கவும் தயார் இல்லை.

அவருகிட்ட ஆட்சியை கொடுத்துப் பார்த்தா தானே அது தெரியும். புதுசா வருகிறவன் இப்ப இருக்குற பழம் தின்னு கொட்டை போட்ட ஊழல் பெருச்சாளிகள் அளவுக்கு போயிட மாட்டாங்க… பார்க்கலாம் சார் என ஒரு சோதனை முயற்சிக்கு மக்கள் தயார் ஆகிவிட்டது கண் கூடாகத் தெரிகிறது.

அதே சமயம் த.வெ.க தனித்து நிற்காமல் ஒரு சிறிய கூட்டணியைக் கட்டி எழுப்பி தேர்தலை சந்தித்தால் மட்டுமே திமுக, அதிமுகவினரை சமாளிக்க முடியும்.

தற்போதைக்கு த.வெ.க அதிகம் எதிர்பார்ப்பது காங்கிரசைத் தான். அப்போது தான் தங்களுக்கு ஒரு இமேஜ் ஏற்படும் நம்புவதாகத் தெரிய வருகிறது. டெல்லி காங்கிரஸ் நிர்வாகிகளோடு த.வெ.க நிர்வாகிகள் சில சந்திப்புகளையும் நடத்திவிட்டனர். ஜனநாயகன் படத்திற்காக ராகுல்காந்தி குரல் கொடுத்ததற்கு தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் விஜய் நன்றி தெரிவித்து காங்கிரசுக்கு அழைப்பும் தந்ததாகச் சொல்கிறார்கள்!

விஜய்க்கு அதிக வாக்கு வங்கி இருக்கும் கருத்துக் கணிப்பு தகவல்கள் திமுக தலைமைக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் த.வெ.க, காங்கிரசோடு பேசும் நகர்வுகளையும் திமுக தலைமை மோப்பம் பிடித்துவிட்டது.

இதையடுத்து திமுகவின் தலைமைக் குடும்பம் கலந்து பேசியுள்ளது. அந்தக் கலந்துரையாடலில் கனிமொழியை டெல்லி காங்கிரஸ் தலைமையைப் பார்த்து சரிக் கட்டும்படி சொல்லியதற்கேற்பவே கனிமொழி ராகுல் காந்தியை சந்தித்து நீண்ட உரையாடலை நிகழ்த்தி உள்ளார்.

கூட்டணி ஆட்சி என்பதைத் தவிர்த்து வேறென்ன சொல்லுங்கள் தருகிறோம் என சமாதானப்படுத்தி பேசியதில், கூடுதல் தொகுதிகள், வாரியப் பதவிகள், உள்ளாட்சிகளிலும் அதிக தொகுதிகள் எனக் கேட்டதாகவும், அதைக் கொடுத்து காங்கிரசை த.வெ.க பக்கம் போக விடாது தன் பக்கம் ஈர்ப்பதற்கு திமுகவும் இறங்கி போயுள்ளதாகவும் டெல்லி செய்திகள் தெரிவிக்கின்றன.

அதே சமயம் காங்கிரசில் துடிப்பாக செயல்படும் இளம் தலைமுறையினர் திமுக கூட்டணியை இந்த முறை தவிர்க்கலாம். காங்கிரசை இளைய சமுதாயத்திடம் வலுப்படுத்தி வளர்த்தெடுக்க விஜய் கூட்டணி ஒரு அரிய வாய்ப்பு. இங்கே  காங்கிரசுக்கு இது கிழடு கட்டைகளின் கட்சி…என்றுள்ள இமேஜ் இதனால் மாற்றம் அடையும். அத்துடன் போதுமான அரசியல் அனுபவம் இல்லாத அவர்களை நாம் நன்கு வழி நடத்தி,  நல்லாட்சி தரலாம் என காங்கிரஸ் தலைமையிடம் மன்றாடுகிறார்கள்.

ஆனால். நீண்ட காலம் திமுகவோடு பயணித்த நட்பு காரணமாகவும், அந்த நட்பில் சில பலா பலன்களை அனுபவித்த வகையிலும் சில பெரிசுகள் திமுகவுடன் சேரவே தீவிரம் காட்டுகின்றனர். இவர்கள், வைக்கும் வாதங்கள் கவனிக்கத்தக்கன. திமுகவுடன் தொடர்வது பாதுகாப்பானது. விஜய்யுடன் போவது தேவையில்லாத ரிஸ்க்! அப்புறம் 2029-ல் டெல்லி பாராளுமன்றத்திற்கு பத்து எம்.பிக்கள் வேண்டும் என்றால், அது திமுக கூட்டணியில் மட்டுமே சாத்தியம்’’ என்கிறார்கள்.

ரிஸ்க் இல்லாமல் ரஸ்க் சாப்பிட ஆசைப்படுகிறது அதிகாரத்தை சுவைத்து பழகிய கூட்டம். ஆனால், பதவிகளைவிட கட்சி வளர்ச்சி முக்கியம். அது த.வெ.க கூட்டணியில் தான் சாத்தியம். நல்லதொரு அரிய வாய்ப்பு. தமிழக ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொண்டு கட்சியை மக்களிடம் வளர்த்தெடுக்கும் வாய்ப்பு என இந்த தரப்பினர் நெருக்குதல் தருகின்றனர். ஆனால், இப்படி சொல்பவர்கள் மிகவும் குறைவாக உள்ளனர்.

ராகுல் காந்திக்கு த.வெ.க பக்கம் சென்று ரிஸ்க் எடுக்கலாம் என்ற ஆசை இருக்கிறதாம். கே.சி.வேணுகோபாலுக்கும் கூட அதில் இசைவு இருக்கிறது. ஆனால், மல்லிகார்ஜுன கார்க்கே, ப.சிதம்பரம், தமிழக தலைவர் செல்வப் பெருந்தகை ஆகியோர்  திமுக கூட்டணிக்கே ஆர்வம்  காட்டுகின்றனர். இதனால் ரிஸ்க் இல்லாமல் ரஸ்க் சாப்பிட ஆசைப்படுவர்களுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

காங்கிரஸ் மீது அதிக நம்பிக்கை வைத்த த.வெ.க தலைவர் விஜய்யும், அதன் நிர்வாகிகளும்  தங்களைப் பயன்படுத்தி காங்கிரஸ், திமுகவிடம் தன் பேர வலிமையை அதிகரித்துக் கொள்வது குறித்து வருத்தப்பட்டுள்ளனர்.

எப்போது முடிவெடுக்குமோ காங்கிரஸ்! அந்த முடிவில் தான் அதன் எதிர்காலம் மட்டுமின்றி, தமிழகத்தின் எதிர்காலமும் இருக்கிறது.

காங்கிரஸ் தலைமை திரிசங்கு நிலையில் உள்ளது.

சாவித்திரி கண்ணன்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time