மக்கள் கல்வி கொள்கைக்கான மாபெரும் மாநாடு!

-பேராசிரியர் க.யோகராஜன்

தேசியக் கல்விக் கொள்கை  2020 என்பது கல்வியைத் தனியார்மயமாக்கல், வணிகமயமாக்கல், மத்தியமயமாக்கல்  மற்றும் கார்ப்பரேட் மயமாக்கலுக்கானது. இதற்கு மாற்றாக ‘ வரைவு மக்கள் கல்விக் கொள்கை’ 2025 உருவாக்க, ஒரு வரலாற்று நிகழ்வு பெங்களூரு மாநகரத்தில் நிகழ்ந்தது. அதன் சாராம்சம்.

இந்திய கல்வி வரலாற்றில் ஒரு மைல்கல்லாக பெங்களூரில் ஜனவரி, 24,2026 அன்று ஆயிரத்திற்கும் அதிகமான பேராசிரியர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் இராமையா தொழில் நுட்ப கல்வியகத்தில் கூடினர். அவர்கள் 26 மாநிலங்களின் மக்கள் பாராளுமன்ற பிரதிகள்.

இந்தியாவின் மிகச்சிறந்த கல்வியாளர்கள் பேரா சுகதேவ் தோரத் (முன்னாள் யுஜிசி தலைவர்), பொருளாதார அறிஞர் பேரா அருண்குமார்(JNU), பேரா ராம் புணியானி (IITB), திருவாளர் ஜவஹர் சர்க்கார்(Former Union Culture Secretary & Ex MP Rajya Sabha), பேரா மகாலக்ஷ்மி  (JNU), பேரா நிரஞ்சன் ஆரதியா(பொருளாதார நிபுணர் ), பேரா ஆதித்ய முகர்ஜி (வரலாற்றாளர் , JNU), பேரா மிருதுளா முகர்ஜி(வரலாற்றாளர் , JNU), பேரா முரிகப்பா, பேரா சுமித்ரோ பானர்ஜி, பேரா மணிவண்ணன், பேரா ஜவஹர் நேசன் (முன்னாள் துணை வேந்தர் ), பேரா சந்திரசேகர் சக்கரவர்த்தி (முன்னாள் துணை வேந்தர் ), பேரா ஸ்ரீகாந்த்(NEHU), திருவாளர் பிரகாஷ் ஷா(மூத்த பத்திரிக்கையாளர், தலைவர், AISEC), பேரா அருண்குமார்(பொதுச்செயலர், AIFUCTO ), பேரா தருண் காந்தி நஸ்கர்(JU, பொதுச்செயலர், AISEC ), மிக மூத்த பேராசிரியரும் கல்வியாளர்களின் வழிகாட்டியுமான பேரா திருப ஜோதி முகர்ஜி(INSA அறிஞர் )  ஆகியோரை உள்ளடக்கிய  எண்ணற்ற பேராசிரியர்களும் கல்வியாளர்களும்   மக்கள் பாராளுமன்றத்தில் பங்கெடுக்க இந்தியாவின் அனைத்துப்பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டு வந்திருந்தனர்.

பேராபத்துகள் நிறைந்த தேசியக்கல்விக் கொள்கை(NEP 2020 )க்கு மாற்றாக மக்கள் நலனைக் காக்கும் மக்கள் கல்விக் கொள்கை  2026 ஐ வகுத்து வடிவம் கொடுப்பதற்கான  மக்கள் பாராளுமன்றம் பெரும் உற்சாகத்துடன் துவங்கியது. பரந்த ஆழ்கடலில் இருளில் அலைந்து தவிக்கும் கலத்திற்கு விடிவெள்ளி திசைகாட்டுவது போல நீளிருளில் அமிழ்ந்திருக்கும் இந்தியக் கல்விக்கான விடிவெள்ளியாக மக்கள்  அகில இந்தியா கல்வி பாதுகாப்பு கமிட்டியின் மக்கள் பாராளுமன்றம் திகழ்ந்தது. 8 மணி நேரம் நடைபெற்ற அனைத்தையும் இங்கே எழுத இயலாது, எனவே அதன் சாராம்சத்தை இங்கே தருகிறோம்.

பெங்களூருவில் நடைபெற்ற மக்கள் நாடாளுமன்றத்தின்தொடக்க அமர்வில்

பேராசிரியர் தருண் காந்தி நஸ்கர்; ( அகில இந்திய கல்வி பாதுகாப்புக் கமிட்டியின்  (AISEC) பொதுச் செயலாளர் )

நாட்டின் முன்னணி கல்வியாளர்கள் மற்றும் பல்வேறு மாநிலப் பிரதிநிதிகள் இணைந்து ‘மக்கள் பாராளுமன்றம்’ நிகழ்வை நடத்த இருக்கிறோம் . முதன் முறையாக ஒரு கல்விக் கொள்கைக்கு இறுதி வடிவம் கொடுப்பதற்காக நடத்தப்படும் இந்த மக்கள் நாடாளுமன்றம் ஒரு வரலாற்றுத் தருணம். நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் ‘அனைவரையும் உள்ளடக்கிய கல்வி’ (Inclusive Education) என்ற உன்னதக் கனவை  இங்கே நினைவு கூறுகிறேன் : சாதி, மதம் மற்றும் வர்க்கப் பாகுபாடின்றி அனைத்துக் குழந்தைகளையும் அரவணைக்கும் கல்வி நிறுவனங்களே நாட்டின் உண்மையான தேவை.

சுதந்திரத்திற்குப் பிந்தைய அரசுகள் கல்வியைக் கட்டுப்படுத்த முயன்று வந்துள்ளன . குறிப்பாக, தேசியக் கல்விக் கொள்கை (NEP) 2020 என்பது கல்வியைத் தனியார்மயமாக்கல், வணிகமயமாக்கல், மத்தியமயமாக்கல்  மற்றும் கார்ப்பரேட் மயமாக்கலுக்கான ஒரு வரைபடம் . இதற்கு மாற்றாக ‘ வரைவு மக்கள் கல்விக் கொள்கை’ (PEP) 2025 உருவாக்கப்பட்டது.

மாநிலங்களின் உரிமைகளையோ அல்லது கூட்டாட்சித் தத்துவத்தையோ மதிக்காமல் உருவாக்கப்பட்ட NEP 2020-க்கு மாறாக, இலட்சக்கணக்கான மக்களின் பங்களிப்புடன் இந்த மாற்றுக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நாடாளுமன்ற அமர்வில் பத்து கருப்பொருள் சார்ந்த விவாதங்கள் (Thematic Sessions) மூலம் கொள்கை வரைவு இறுதி செய்யப்படும் . இறுதியாக, இந்த அமர்வின் முடிவில் ‘பெங்களூரு பிரகடனம்’ (Bangalore Declaration) வெளியிடப்படும் என்றும், அது NEP 2020-ஐத் திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தும் மக்கள் இயக்கத்திற்கான வழிகாட்டியாக அமையும்.

பேராசிரியர் சுகதேவ் தோரட்; ( முன்னாள் UGC தலைவர் )

# ஆய்வு முறைகளில் வீழ்ச்சி:  முந்தைய கல்விக்கான கமிட்டிகள் கல்வி நிறுவனங்களுக்கு நேரடியாகச் சென்று, தரவுகளைச் சேகரித்து அதன் பின்னரே பரிந்துரைகளை வழங்கின. ஆனால், NEP 2020 எவ்வித அடிப்படை ஆய்வுகளும் இன்றி, உறுப்பினர்களின் “தனிப்பட்ட விருப்பங்கள்” மற்றும் வெளிநாட்டு முறைகளைப் பின்பற்றி உருவாக்கப்பட்டது.

# மதச்சார்பின்மைக்கு எதிரான மாற்றம்: சுதந்திர இந்தியாவின் முந்தைய கல்விக் குழுக்கள் மத போதனைகளைத் தவிர்த்து “இயற்கை அறநெறியையே” வலியுறுத்தின. ஆனால் தற்போதைய கொள்கை, அரசியலமைப்பின் 28(1) விதியை மீறி, குறிப்பிட்ட ஒரு மதத்தின் (Brahmanism) விழுமியங்களைப் பாடத்திட்டத்தில் புகுத்துகிறது.

# கல்வி வாய்ப்பு முடக்கம்: 70% உயர்கல்வித் துறை தனியார்மயமாகிவிட்ட சூழலில், உயர்கல்வி என்பது ஏழை மக்களுக்கு எட்டாக் கனியாகிவிட்டது. CUET போன்ற நுழைவுத் தேர்வுகள் மற்றும் நான்கு ஆண்டு பட்டப் படிப்புகள் கிராமப்புற மாணவர்களின் முன்னேற்றத்தைத் தடுக்கும் “தடைகற்கள்” .

இந்த கொள்கையின் மறைமுக நோக்கம், அடித்தட்டு மக்கள் உயர்கல்வியில் முன்னேறுவதைக் கட்டுப்படுத்தி, கல்வியை ஒரு குறிப்பிட்ட உயர் வர்க்கத்தினருக்கு மட்டுமேயானதாக மாற்றுவதே.

பேராசிரியர் மிருதுளா முகர்ஜி : (ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்JNU) 

பெங்களூரில் அகில இந்திய கல்வி மாநாட்டை நடத்திய கல்வியாளர்கள் குழு.

இந்தியக் கல்வி நிறுவனங்கள் சிதைக்கப்படுவதற்கு எதிராக “அறிவுசார்ந்த தற்காப்பை” (Knowledge-based resistance) முன்னெடுக்க வேண்டும். அரசாங்கங்களை மிக விரைவில் வீழ்த்தி விட முடியும், ஆனால் பல தசாப்தங்களாகக் கட்டியெழுப்பப்பட்ட ஒரு கல்வி நிறுவனத்தை அழித்து விட்டால், அதை மீண்டும் உருவாக்குவது என்பது தலைமுறைகள் கடந்த உழைப்பு தேவைப்படும் . நிலைமைகள் சீராகும் வரை காத்திருக்காமல், தற்போதைய பாதகமான சூழலிலும் கல்வி நிறுவனங்களின் சிதைவைத் தடுக்கத் தொடர்ச்சியாகப் போராட வேண்டும் .ஜே.என்.யு மற்றும் டெல்லி பல்கலைக்கழகங்கள் திட்டமிட்டு சீரழிக்கப்படுகிறது.

#  2016-ஆம் ஆண்டு ஜே.என்.யு பல்கலைக்கழகத்தில் புதிய நிர்வாகம் பதவியேற்ற வெறும் 15 நாட்களுக்குள், ஒரு தேசிய அளவிலான “நாடகத்தை” அரங்கேற்றி, மாணவர்களுக்குத் தேசவிரோத முத்திரை குத்தினர்.

# ஒரு பேராசிரியரின் கீழ் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையைத் தன்னிச்சையான விதிகளின் மூலம் கட்டுப்படுத்தியதன் விளைவாக, ஜே.என்.யு-வின் ஆராய்ச்சிப் படிப்புகளுக்கான சேர்க்கை ஆறில் ஒரு பங்காகக் குறைந்துவிட்டது. இது  ஒரு ஆராய்ச்சிப் பல்கலைக்கழகத்தின் ஆன்மாவைக் கொல்லும் செயல்.

# அமைதிப் பேரணிகளில் பங்கேற்ற பேராசிரியர்களின் ஓய்வூதியம், பணிக்காலப் பலன்கள் மற்றும் ஆராய்ச்சி விடுப்புகளை முடக்குவது, கல்வியாளர்களை அச்சுறுத்தி, கூட்டு எதிர்ப்பைச் சிதைக்கும் ஒரு மோசமான போக்காகும்.

# சித்தாந்த ரீதியிலான திணிப்புகளைத் தாண்டி, டெல்லி பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் நியமனங்களில் மிகப்பெரிய அளவில் “ஊழல்” புகுந்துள்ளது, பதவிகள் பணத்திற்கு விற்கப்படுகின்றன.

இத்தகைய இக்கட்டான சூழலிலும், பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடுத்த 250-க்கும் மேற்பட்ட வழக்குகளில் ஐந்தில் நான்கு பங்கு வழக்குகளில் அவர்கள் வெற்றி பெற்றனர். “எதிர்ப்பின் முதல் கோட்பாடே அறிவு தான்”. புதிய பாடத்திட்டங்களை ஆழமாக ஆய்வு செய்து, ஒருங்கிணைந்த போராட்டத்தை முன்னெடுப்போம்.

பேராசிரியர் மகாலட்சுமி :  “பாரதியதா” என்ற பெயரில் கல்வியில் ஒரு குறிப்பிட்ட சாதிய விழுமிய முறையைப் புகுத்த முயற்சி நடக்கிறது, இது நமது அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்புகளுக்கு எதிரானது.

புதிய பாடத்திட்ட முறையில் கொண்டுவரப்பட்டுள்ள “மதிப்புக்கூட்டுப் பாடங்கள்” (Value Addition Courses) மாணவர்களின் முதன்மைப் பாட அறிவைக் குறைத்து, கல்வியின் தரத்தை வீழ்த்தி வருகிறது. இது கேள்வி கேட்காத ஒரு குடிமைச் சமூகத்தை உருவாக்கும் முயற்சியாகும்.

பேராபத்தான ‘விகசித் பாரத் சிக்ஷா அதிஷ்டான்’ (VBSA) மசோதா மத்திய மற்றும் மாநிலப் பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிப்பதோடு, தனியார் நிதியாதாரங்களுக்குக் கட்டுப்பாடற்ற அனுமதியை வழங்குகிறது. ஆனால், அரசு நிதியுதவி குறித்து எவ்வித உறுதிப்பாட்டையும் வழங்கவில்லை .

மக்கள் கல்விக் கொள்கையை (PEP) அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நாடாளுமன்றக் கூட்டுக்குழுவிற்கும் கொண்டு செல்வதன் மூலம் இந்த ஜனநாயகப் போரை முன்னெடுப்போம்.

வரலாற்றுப் பேராசிரியர் ஆதித்யா முகர்ஜி :  ஏழை மக்களின் சமூக முன்னேற்றத்திற்கு (Social Mobility) கல்வி மட்டுமே ஒரே வழியாகும். ஆனால், பொதுக் கல்வி முறையை அழித்து, ஒரு பட்டப்படிப்பிற்கு 40 இலட்சம் ரூபாய் வசூலிக்கும் தனியார் மயமாக்கலை ஊக்குவிப்பதன் மூலம், ஏழைகளுக்கான கதவுகள் அடைக்கப்படுகிறது.

டார்வினின் பரிணாமக் கொள்கை மற்றும் தனிம வரிசை அட்டவணை போன்றவை நீக்கப்பட்டு, அறிவியல் ஆதாரமற்ற தகவல்கள் திணிக்கப்படுகின்றன. குறிப்பாக, பாடப்புத்தகங்களில் இருந்து மௌலானா ஆசாத் போன்றவர்களின் பெயர்களை நீக்குவது வெறும் பாடக்குறைப்பு அல்ல, அது ஒரு சமூகத்தின் அடையாளத்தையே அழிக்கும் “அடையாள அழிப்பு” .

கோடி முஸ்லிம்களைத் தொடர்ந்து இழிவுபடுத்துவதும், வரலாற்றிலிருந்து அவர்களை அகற்றுவதும் ருவாண்டாவில் நடந்த இனப்படுகொலைக்கு முந்தைய சூழலை ஒத்திருக்கிறது.

ஹிட்லர் ஜெர்மனியின் பிராங்பேர்ட் பல்கலைக்கழகத்தை எவ்வாறு சிதைத்தாரோ, அதே பாணியில் ஜே.என்.யு (JNU) போன்ற சிறந்த கல்வி நிறுவனங்கள் தாக்கப்படுகின்றன. உமர் காலித் போன்ற மாணவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஜாமீன் இன்றி சிறையில் வாடுவதும், அதற்கு நீதித்துறை ஒத்துழைப்பதும் ஜனநாயகத்தின் வீழ்ச்சியைக் காட்டுகிறது.

“கல்விக்கூடங்கள் குறுகிய மனப்பான்மை கொண்ட இடங்களாக மாறினால் நாடு முன்னேறாது” என்றார், நேரு. இந்த மக்கள் இயக்கமே ஜனநாயகத்தைக் காப்பதற்கான ஒரே வழியாகும்.

பேராசிரியர் சௌமித்ரோ பானர்ஜி; பண்டைய காலத்தில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, இணையம் மற்றும் விமானங்கள் இருந்ததாக கூறுகிறார்கள். “எந்தவொரு தொழில்நுட்பத்திற்கும் அடிப்படை அறிவியல் விதிகள் (Background Science) தேவை”. ஏரோடைனமிக்ஸ் அல்லது வெப்ப இயக்கவியல் விதிகள் தெரியாமல் விமானங்கள் சாத்தியமில்லை.

தற்போது கற்பிக்கப்படும் “வேத கணிதம்” என்பது வேத காலத்தைச் சார்ந்ததும் அல்ல, அது உண்மையான கணிதமும் அல்ல. சுழியம் (Zero) மற்றும் இடமதிப்பு முறை ஆகியவை வேத காலத்திற்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னரே கண்டறியப்பட்டன. இவை வெறும் கணக்கீட்டு குறுக்குவழிகளே தவிர, கணிதச் சிந்தனை அல்ல.

இந்தியா இயற்கணிதம் (Algebra), முக்கோணவியல் (Trigonometry) மற்றும் வானவியலில் ஆற்றிய உண்மையான பங்களிப்புகளை நாம் போற்ற வேண்டும். ஆனால், அவற்றை ‘அறிவியல் வரலாறாக மட்டுமே கற்பிக்க வேண்டுமே தவிர, ‘லீலாவதி’ போன்ற பழங்காலப் புதிர்களை இன்றைய பாடப்புத்தகங்களாக மாற்றக் கூடாது. அறிவியல் என்பது எப்போதும் அண்மைக்கால  கண்டுபிடிப்புகளையே மாணவர்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும்.

கல்வி என்பது வெறும் வேலைவாய்ப்பிற்கான கருவி மட்டுமல்ல; அது ஒரு மனிதனைச் சிந்திக்க வைக்கும் சாதனம். அறிவியல் விதிகளை  உணர்ந்து சிந்திக்கும் ஒரு அறிவுசார் தேசத்தையே நாம் உருவாக்க வேண்டும்.

உண்மைக்கும் பொய்மைக்கும் இடையிலான இடைவெளியை உணரத் தெரிந்த, பகுத்தறிவு மிக்க ஒரு சமூகத்தை உருவாக்குவதே மக்கள் கல்விக் கொள்கையின் (PEP) நோக்கமாகும்.

வடகிழக்கு மாநில பேராசிரியர் பாட்ஸ்கெம் மைர்போ:  இந்தியாவின் வலிமையான ‘வேற்றுமையில் ஒற்றுமை’ மற்றும் கூட்டாட்சித் தத்துவத்தை NEP 2020 சிதைப்பதாக அவர் குற்றம் சாட்டினார். வடகிழக்கு மாநிலங்களின் தனித்துவமான புவியியல் மற்றும் மக்கள் தொகை சூழலை கருத்தில் கொள்ளாமல் இக்கொள்கை திணிக்கப்படுகிறது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் 3,000 மாணவர்கள் கொண்ட பெரிய கல்வி நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என்ற NEP-யின் விதிமுறை வடகிழக்கு மாநிலங்களுக்குப் பொருந்தாத, நடைமுறைக்குச் சாத்தியமற்ற ஒன்றாகும்.

நிதி உதவிக்காகப் பல வடகிழக்கு மாநில அரசுகள் இந்தப்Policy-யை அமல்படுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகின்றன. மேகாலயாவில் போதிய தயாரிப்புகள் இன்றி இக்கொள்கை அவசரமாக அமல்படுத்தப்பட்டதால் மாணவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாயினர்.

மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகள் (CUET) பழங்குடியின மாணவர்களுக்குப் பெரும் சுமையாக மாறியுள்ளன. உள்ளூர் தேர்வு மையங்கள் இல்லாததால், மாணவர்கள் ராஜஸ்தான், ஜார்கண்ட் போன்ற தொலைதூர மாநிலங்களுக்குச் செல்ல வேண்டிய அவலமும், அதனால் மாணவர்கள் இடையில் படிப்பைக் கைவிடுவதும் (Drop-out) அதிகரித்துள்ளது.

விகசித் பாரத் சிக்ஷா அதிஷ்டான் மசோதா போன்ற மத்தியமயமாக்கும் முயற்சிகள் இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு எதிரானவைடாகும். மக்கள் கல்விக் கொள்கை (PEP) இத்தகைய போக்கைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

வடகிழக்கு மாநில பேராசிரியர் எச். ஸ்ரீகாந்த் :

வடகிழக்கு இந்தியா சாதியக் கொடுமைகளற்ற, பெண்களை மதிக்கும் மற்றும் பன்முகத்தன்மை கொண்ட ஒரு நிலப்பரப்பு. இங்கே “இந்தி-இந்து-இந்துஸ்தானி” போன்ற ஒற்றைத்தன்மை கொண்ட முழக்கங்களுக்கு இடமில்லை.

இப்பகுதியின் பழங்குடியின மக்கள் புவியியல் தனிமைப்படுத்தல் மற்றும் இனரீதியான பாகுபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசுப் பள்ளிகள் மிகக் குறைவாகவே உள்ள சூழலில், மிஷனரி மற்றும் சமூகக் கல்வி நிறுவனங்களுக்கு அரசு போதிய நிதி வழங்காதது வருத்தத்திற்குரியது.

NEP-யில் உள்ள பல அம்சங்கள் வடகிழக்கின் இயற்கைச் சூழலுக்கு (நிலச்சரிவு, வெள்ளம் போன்றவை) பொருத்தமற்றவை. கல்வி என்பது வெறும் புத்தக அறிவாக இல்லாமல், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் விழிப்புணர்வையும் நடைமுறை அறிவையும் தருவதாக அமைய வேண்டும. அனைத்துத் தொழில்களும் சமமானவை என்ற எண்ணத்தை மாணவர்களிடம் கல்வி உருவாக்க வேண்டும்.

PEP-ஆனது வடகிழக்கு மக்களின் இன உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதாகவும், இனவாதத்திற்கு எதிராகவும் இருப்பதால், அங்குள்ள மாணவர்கள் மற்றும் அரசியல் கட்சிகளிடையே இதற்குப் பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது.

ஜவஹர் சர்க்கார் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி) ; தற்போதைய கல்வி முறை மத்தியமயமாக்கல், வகுப்புவாதமயமாக்கல், ஊழல் மற்றும் கார்ப்பரேட் மயமாக்கல் ஆகிய நான்கு தூண்களின் அடிப்படையில் இயங்குகிறது.

கல்வியாளர்களின் அறிவும், கோபமும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குச் சென்றடைய ஒரு “தகவல் இணையப்பாதை” (Information Pipeline) தேவை. நாடாளுமன்றத்தில் கல்வி தொடர்பான மசோதாக்களை எதிர்க்க 20 அர்ப்பணிப்புள்ள உறுப்பினர்களுக்குத் தரவுகளை வழங்க வேண்டும்.

பல்கலைக்கழக மானியக் குழு (UGC) போன்ற அமைப்புகளை ஒருங்கிணைக்கும் புதிய மசோதாக்களைச் சட்ட வல்லுநர்களைக் கொண்டு நுணுக்கமாக ஆய்வு செய்து, நீதிமன்றங்களில் சவால் செய்ய வேண்டும்.

ஒரு பல்கலைக்கழகத்தின் மீது நடத்தப்படும் தாக்குதலை ஒட்டுமொத்த இந்தியக் கல்வியாளர்களும் தங்களின் மீதான தாக்குதலாகக் கருதி உடனடியாகப் எதிர்வினையாற்ற வேண்டும்.

இந்தியாவின் முதல் விடுதலைப் போராட்டத்தை வழக்கறிஞர்கள் வழிநடத்தியது போல, தற்போதைய “அறிவார்ந்த விடுதலைப் போராட்டத்தைக்” கல்வியாளர்கள் முன்னின்று நடத்த வேண்டும்.

இந்திய அறிவியல் மற்றும் கல்வித்துறையின் பிதாமகர் பேராசிரியர் துருபஜோதி முகோபாத்யாய;  கல்வி என்பது ஒரு தேசத்தின் முதுகெலும்பு மட்டுமல்ல, அது ஒரு குடிமகனைப் பகுத்தறிவுள்ள சமூக மனிதனாக மாற்றும் கருவியாகும். சுதந்திரப் போராட்ட வீரர்கள் கண்ட ‘அனைவருக்குமான சமமான கல்வி’ என்ற கனவு, 78 ஆண்டுகளுக்குப் பிறகும் நிறைவேறாமல் போனது மட்டுமின்றி, இந்தியா இன்று உலகின் அதிகப்படியான படிப்பறிவற்றோரைக் கொண்ட நாடாக இருப்பது ஒரு வரலாற்றுத் துயரம்.

தேசியக் கல்விக் கொள்கை (NEP) 2020-ஐ “இந்தியக் கல்வியின் சவப்பெட்டியில் அடிக்கப்பட்ட இறுதி ஆணி”. பழங்காலப் பெருமை என்ற போர்வையில் அறிவியலுக்குப் புறம்பான, பிற்போக்குத்தனமான மற்றும் சிதைக்கப்பட்ட வரலாற்றுக் கருத்துக்களைப் பாடத்திட்டத்தில் புகுத்துவது என்பது கல்வித்துறையில் அரங்கேற்றப்படும் ஒரு ‘பாசிச’ நடவடிக்கை யாகும்.

இதற்கு ஒரு வலுவான தீர்வாக ‘மக்கள் கல்விக் கொள்கை 2026’ முன்வைக்கப்பட்டது. கல்வி என்பது ஒரு வணிகப் பொருளல்ல, அது ஒரு ஜனநாயக அரசின் அடிப்படைத் தார்மீகக் கடமை என்பதை இக்கொள்கை ஆணித்தரமாகத் தெரிவிக்கிறது. குறிப்பாக, ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்குக் கல்வி ஒரு அதிகாரமளிக்கும் கருவியாக அமைய வேண்டும் என்பதை இது வலியுறுத்துகிறது.

இந்தப் போராட்டம் வெறும் காகிதங்களோடு நின்றுவிடக் கூடாது என்று எச்சரித்த அவர், அடிமட்ட அளவில் மக்களைத் திரட்டி, அரசாங்கத்தை பணியவைக்கும் அளவிற்கு இந்தப் போராட்டத்தை ஒரு ‘பேரெழுச்சியாக’ மாற்ற வேண்டும்.

“மதச்சார்பற்ற, அறிவியல் பூர்வமான, ஜனநாயகக் கல்வி முறை நிலைக்கட்டும்!” என்ற முழக்கத்துடன், மக்கள் சக்தியின் மூலம் NEP 2020-ஐ வீழ்த்தி, PEP 2026-ஐ நடைமுறைப்படுத்த அவர் வழிகாட்டினார்.

மக்கள் நாடாளுமன்றத்தின் பெங்களூரு பிரகடனம்:

பெங்களூரு பிரகடனம் அமைப்பின் மூத்த உறுப்பினரான திபாசிஷ் ராய் அவர்களால் முன்மொழியப்பட்டு அனைவராலும் ஏற்கப்பட்டது;

# கல்வி வழங்குவதற்கான முதன்மைப் பொறுப்பையும், கல்விக்கான நிதிப் பொறுப்பையும் அரசாங்கமே ஏற்க வேண்டும்.

# அதற்கேற்ப, மத்திய மற்றும் மாநில அரசுகள் இரண்டும் தங்களது வரவுசெலவுத் திட்டங்களில் (Budget) கல்விக்கு போதுமான நிதியை ஒதுக்க வேண்டும்.

# கல்வியில் வணிகமயமாக்கல், வகுப்புவாதமயமாக்கல் மற்றும் அனைத்து வகையான பாகுபாடுகளும் முற்றிலுமாக நிறுத்தப்பட வேண்டும்.

# நாடு முழுவதும் இருமொழிக் கொள்கை (தாய்மொழி மற்றும் ஆங்கிலம்) அமல்படுத்தப்பட வேண்டும்.

# சமூக அந்தஸ்து அல்லது பொருளாதாரப் பின்னணி எதுவாக இருந்தாலும், அனைவருக்கும் உலகளாவிய கல்வி உரிமை மற்றும் கல்வியில் சமத்துவம் உறுதி செய்யப்பட வேண்டும்.

இந்தக் கொள்கையை ஏற்றுக்கொள்வது கல்வி இயக்கத்தின் ஒரு புதிய கட்டத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. எனவே, இந்த மக்கள் நாடாளுமன்றம் பின்வருமாறு தீர்மானிக்கிறது:

இங்கு வந்துள்ள அனைத்துப் பிரதிநிதிகளும் அந்தந்த மாநிலங்களுக்குத் திரும்பியதும், மக்கள் நாடாளுமன்றத்தின் சாதனையை, அதாவது ‘மக்கள் கல்விக் கொள்கை 2026’ ஏற்றுக் கொள்ளப்பட்டதை, குறிப்பாகப் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்களின் மாணவர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே பரவலாகப் பகிர்ந்து கொள்ள  வேண்டும்.

அகில இந்திய கல்வி மாநாட்டிற்கு சென்ற தமிழக பிரதிநிதிகள்

கல்வியின் அடிப்படை விழுமியங்களைச் சிதைக்கும், வகுப்புவாதத்தை ஊக்குவிக்கும், வரலாறு மற்றும் அறிவியலைத் திரிக்கும், கல்விச் சுதந்திரத்தை அழிக்கும் மற்றும் தீவிர மத்தியமயமாக்கல் மூலம் சர்வாதிகார முடிவுகளைத் திணிக்கும் தேசியக் கல்விக் கொள்கை 2020-ஐ உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று இந்த மக்கள் நாடாளுமன்றம் ஒருமனதாகக் கோருகிறது.

அதே நேரத்தில், மக்கள் கல்விக் கொள்கை 2026-ஐ அனைத்து நிலைகளிலும் அமல்படுத்த வேண்டும் என்று இந்த மக்கள் நாடாளுமன்றம் உறுதியுடனும் தீர்மானத்துடனும் கோருகிறது.

இயக்கத்தின் அடுத்த கட்டமாக கிராமம், தாலுகா (Block) மற்றும் மாவட்ட அளவில் தீவிரப் பிரச்சாரங்களை மேற்கொள்வதோடு, இயக்கத்தை விரிவுபடுத்தவும் வலுப்படுத்தவும் புதிய பகுதிகளில் குழுக்களை உருவாக்க வேண்டும்.

மக்கள் நாடாளுமன்றப் பிரதிநிதிகள், தாலுகா, உட்பிரிவு (Subdivision), மாவட்டம் மற்றும் மாநிலத் தலைமையகங்களில் உள்ள அனைத்துக் கல்வி நிர்வாக அலுவலகங்களிலும் மக்கள் கல்விக் கொள்கையை அமல்படுத்தக் கோரித் தொடர்ந்து குரல் எழுப்ப வேண்டும்.

அகில இந்திய கல்வி பாதுகாப்புக்குழுவின் தேசியக் குழுவின் சார்பாக, மேற்கண்ட கோரிக்கைகளின் அடிப்படையில் நாடு முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு, கையொப்பமிடப்பட்ட மனுக்கள் மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் சமர்ப்பிக்கப்படும்.

கல்வி இயக்கமானது –  ஒற்றுமை, வலிமை மற்றும் மக்கள் பங்கேற்பு  நிலைக்கு உயர்த்தப்படும், இதன் மூலம் அரசாங்கம் மக்கள் கல்விக் கொள்கை 2026-ஐ முழுமையாக அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்தக் கட்டாயப்படுத்தப்படும்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கச் சபையில் பங்கேற்றுள்ள அனைவரும் தேவையான அனைத்துத் தயாரிப்புகளையும் மேற்கொண்டு, இந்த நோக்கங்களை நிறைவேற்ற அயராது உழைக்குமாறு இந்த மக்கள் நாடாளுமன்றம் அழைப்பு விடுக்கிறது.

பேராசிரியர் க.யோகராஜன்

மாநிலச் செயலாளர்,

அகில இந்திய கல்வி பாதுகாப்பு கமிட்டி. (AISEC)

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time