அடிமாட்டுக் கூலி, அடிப்படை வசதிகளற்ற அவலம், கூடுதல் வேலை,இரக்கமற்ற சுரண்டல், கேட்க நாதியற்ற துயரம், சட்டப் பாதுகாப்பின்மை…இந்தச் சூழல்களுக்கு இடையில் தான் புலம்பெயர் தொழிலாளர்கள் நம்மிடையே கவனிபாரற்று வாழ்ந்து வருகின்றனர். சர்வதேச புலம் பெயர்ந்தோர் நாளான இன்று அவர்கள் படும் பாடுகளை சற்றே பார்ப்போமா…?
“கோயமுத்தூரில் உள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் புதிதாக கட்டப்பட்டது. இதன் கட்டுமானத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தைவிட குறைவாகவே வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சித்தலைவரின் கண்முண்ணே நடைபெறும் விதிமீறலை அவர் கண்டுகொள்ளவில்லை. பீகாரில் இருந்தும், ஒரிசாவில் இருந்தும், ஜார்கண்ட் மாநிலங்களில் இருந்தும் வந்துள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக யார் குரல் கொடுப்பார் ? ”
சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானம் புலம் பெயர் தொழிலாளர் உழைப்பால் சென்னை மக்கள் பெற்ற கொடையாகும். ஆனால், இந்த கட்டுமானத்தின் போது எத்தனை புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழக்கவும், ஊனமடையவும் நேரிட்டது…அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டதா..? என யாருக்கும் தெரியாது….!
1990 ஆம் ஆண்டு முதல், ஐ.நா. அவை டிசம்பர் 18 ம் நாளை ‘சர்வதேச புலம்பெயர்ந்தோர் நாளாக’ ( International Migrants Day) கடைபிடித்து வருகிறது. உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 28 கோடி புலம்பெயர்ந்தவர்கள் இருப்பதாக ஐ.நா.மதிப்பிட்டுள்ளது.வளர்ந்து வரும் தகவல் தொடர்பு, போக்குவரத்து போன்றவை காரணமாக புலம் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
“நான் சென்னையில் பிறந்தேன்; புது தில்லியில் மேற்கல்வி படித்தேன். இப்போது மும்பையில் பணிபுரிந்து வருகிறேன். ஒவ்வொரு முறை இடம்பெயர்ந்த போதும், இடப்பெயர்வு எனக்கு வசதியாகவே இருந்தது.என்னுடைய சாதியும், வர்க்கமும் இதற்கு ஒரு காரணமாக இருந்தது” என்றார் புகழ்பெற்ற பத்திரிகையாளரான பி.சாய்நாத். “அடிமட்ட தொழிலாளர்கள் புலம்பெயரும்போது மனித உரிமைமீறல்கள் நடைபெறுகின்றன. இதனால் ஆதிவாசிகள், தலித்துகள், பெண்கள் போன்ற வறிய நிலையில் உள்ளவர்களே பாதிப்புக்கு ஆளாகின்றனர். இதனை தடுக்க வேண்டிய அரசுகளோ, இது போன்ற நிறுவனங்களுக்கு தேவையான தொழிலாளர்களை விநியோகம் செய்யும் முகவரைப் போல செயல்படுகின்றன. கொரோனா காலத்தில் வேலைக்கு ஆள் கிடைக்காதபோதுதான், அதாவது மார்ச் 26 க்குப் பிறகுதான் புலம்பெயர்ந்த தொழிலாளர்களைப் பற்றி நகரத்து இந்தியா கவலைப்பட ஆரம்பித்தது ” என்றார் மகசாசே விருது பெற்ற பி.சாய்நாத்.
மத்திய அரசு ஊழியர்கள் புலம் பெயர்ந்து செல்லும் போது எவ்வளவு வசதிகள், தங்கு குவார்ட்டர்ஸ்,குழந்தைகள் படிக்க கேந்திரிய வித்தியாலயா..என எவ்வளவோ சலுகைகள் வழங்கப்படுகின்றன..! இந்த சமூகமும்,அரசும் வொயிட்காலர் ஜாப்பிற்கு கொடுக்கும் மரியாதையில் பத்துல் ஒரு பங்கு கூட உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கு தருவதில்லை!
புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்க 1979 ஆண்டு ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு, சம வேலைக்கு சம சம்பளம் அல்லது குறைந்த பட்ச கூலி இதில் எது அதிகமோ அதைச் சம்பளமாக தர வேண்டும். வந்துபோவதற்கு போக்குவரத்துப் படி தரவேண்டும். வந்துபோகும் காலத்தை பணிக்காலமாக கருத வேண்டும். வசிப்பிடம் ஏற்பாடு செய்த தர வேண்டும். வேலை அளிக்கும் முகவரும், முதன்மை வேலை அளிப்பவரும் தொழிலாளர் துறையிடம் பதிவுசெய்துகொள்ள வேண்டும். ஆனால் நடைமுறையில் சட்டத்தில் கூறியுள்ள விதிகளை ஒப்பந்தக்காரர்கள் கடைபிடிப்பதில்லை; அரசு விதிகளை அமலாக்குவதில்லை.
குறைந்தக் கூலிக்கு, கூடுதலாக வேலை வாங்க முடியும் என்பதாலேயே புலம்பெயர்ந்த தொழிலாளர்களை முதலாளிகள் வேலையில் அமர்த்துகின்றனர். உள்ளூர் தொழிலாளிகள் இதற்கு உடன்பட மாட்டார்கள் என்பதால் அவர்களுக்கு வேலை தருவதில்லை. உதாரணமாக தமிழகத்தைச் சார்ந்த கட்டுமான தொழிலாளர்கள் கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பணிபுரிகின்றனர். அதே சமயம் பீகார், ஜார்கண்ட், ஒரிசா… போன்ற வடமாநிலங்களில் இருந்து வந்த தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் பணிபுரிகின்றனர்.
“கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் கட்டும்போது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சுரண்டப்படுவது குறித்து தொழிலாளர் துறையிடமும் முறையிட்டோம்.எந்தப் பலனும் இல்லை. காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணிவரை, அல்லது காலை ஏழு மணி முதல் மாலை ஏழு மணி வரை ஒரு நாளைக்கு பனிரெண்டு மணிநேரம் பணிபுரிகிறார்கள். அவர்களுக்கு மாதம் ஐந்தாயிரம் ரூபாயை அவர்கள் வீட்டிற்கு அவரை அழைத்து வந்த ஏஜெண்ட் அனுப்புவார். கொரானா காலத்தில் இங்கிருந்த தொழிலாளிகள் ஆளுக்கு ஆயிரம் ரூபாய் வருவாய்த் துறையினரிடம் கொடுத்த பிறகுதான் இரயிலில் அவர்கள் சொந்த ஊர் செல்ல முடிந்தது. அப்படி கொடுக்காதவர்கள் கிட்டத்தட்ட எண்பது பேர் செல்லமுடியவில்லை” என்கிறார் ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த என்.செல்வராஜ்.
கோவை மாவட்டத்தில் பவுண்டரி ஆலைகளில், திருப்பூர் பின்னலாடைத் தொழில்களில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறுசிறு ஆலைகளில், சென்னையில் உணவுவிடுதிகளில் பல்லாயிரக்கணக்கான பேர் மோசமான சூழல்களில் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு புலம்பெயர்ந்தோர் தினம் என்றால் என்ன என்று தெரியுமா ?
தங்கள் ஊரை, மாநிலத்தை விட்டு வேறு இடங்களில் இருப்பதால் அவர்களால் தங்கள் உரிமைகளை வலியுறுத்திப் பெற இயலாது. அவர்களுக்காக பேச வேண்டிய அரசுத்துறைகள், நீதிமன்றங்கள் செயல் இழந்து இருக்கின்றன. இதைக் குறித்து ஊடகங்கள் எழுதுவதில்லை. ஊடகங்கள் தொழிலாளர் பிரச்சினைகளுக்காக ஒதுக்கும் இடம் குறைவு; அதில் புலம்பெயர்ந்தவர்கள் பற்றி பேசுவது அதனிலும் குறைவு. ஏனெனில் புலம்பெயர்ந்தோருக்கு பெயர் இல்லை; முகம் இல்லை !
அவர்களுக்கு ரேஷன் கார்டுகள் இல்லை. இதனால் வறுமை ஒழிப்புத் திட்டங்கள் அவர்களைச் சென்றடையாது.அங்கன்வாடி மையங்களில் பலன்பெறுவது சிரமம்.வாக்குரிமை இல்லாததால் அவர்களைப் பற்றி அரசியல் கட்சிகளும் கண்டுகொள்வதில்லை.
Also read
இங்கிருந்து மேல்நாடுகளுக்கு பணிபுரியச் செல்லும் கணிப்பொறி பணியாளர்களைப் போன்றவர்கள் தங்கள் குடும்பங்களோடு செல்கின்றனர்.அவர்களின் குழந்தைகளுக்கு சிபிஎஸ்சி பள்ளிகள் கூட உள்ளன. ஆனால் உடல் உழைப்புத் தொழிலாளிகளாக, ஓட்டுநர்களாக, வீட்டு வேலையாக செல்பவர்களுக்கு அந்தந்த நாட்டு சட்டப்படி வழங்கப்பட வேண்டிய உரிமைகள் கூட மறுக்கப்படுகின்றன. அவைகளை வழங்க உறுதி செய்யக் கூடிய அளவில் அந்த நாடுகளில் உள்ள நமது நாட்டின் வெளிநாட்டு அலுவலகங்கள் முனைப்பாக செயல்படுவதில்லை.
வேலைவாய்ப்பு, கல்வி, தொழில் முன்னேற்றம் போன்ற காரணங்கள் மட்டுமின்றி அரசியல் காரணங்களாலும் இடப்பெயர்வு நடைபெறுகிறது. இந்தியப் பாகிஸ்தான் பிரிவினையின் போது கிட்டத்தட்ட ஒரு கோடி பேர் தங்கள் வீடுகளை விட்டு , சொத்துகளை விட்டு அப்படியே இடம் பெயர வேண்டிய அவலத்திற்கு ஆளாயினர். சாதாரணமாக ஒரு வாடகை வீட்டில் இருந்து இன்னொரு வீட்டிற்கு குடிபெயர்வதற்கே நாம் எத்தனை சிரமங்களை எதிர்கொள்கிறோம் என்பதை நினைத்துப் பாருங்கள். இப்படிப்பட்ட சூழலில் கட்டிய துணியோடு, கால் நடையாகவே கொளுத்தும் வெயிலில் குழந்தைகளுடன் குடும்பமாக நடந்து சென்ற புலம்பெயர் தொழிலாளர்களின் வலிகளை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். இதனால் இந்துக்களும் பாதிப்புக்கு ஆளாகினர். முஸ்லிம்களும் பாதிப்புக்கு ஆளாயினர். ஆனாலும் வெறுப்பு அரசியலை இந்திய மக்களிடம் சிலர் நுழைக்கின்றனர்.
“புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக உள்ள சட்டம் ஒப்பந்தக்காரர்களை மனதில் வைத்து 1979 ல் இயற்றப்பட்டது. ஆனால் இப்போது குடும்பம் குடும்பமாக இடப்பெயர்வு நடை பெறுகிறது. எனவே அதற்கேற்றபடி புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும். தொழிலாளர்கள் சுயமாக செல்பேசி மூலமாகவே, இடப்பெயர்வை பதிவு செய்துகொள்ளும் வகையில் வசதி ஏற்படுத்த வேண்டும். இடம்பெயர்ந்து செல்லும் மாநிலமும், குடியேறும் மாநிலமும் தமக்குள் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுக்கொள்ள வேண்டும். ஏனெனில் இடப்பெயர்வில் அவர்களின் பாதுகாப்பு முக்கியமானது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தொழிலாளர்கள் முக்கிய அங்கம் வகிக்கிறார்கள். அதற்கேற்றவாறு திட்டங்களை உருவாக்க வேண்டும் என்று வீட்டுவசதி,வறுமை ஒழிப்புத் திட்ட அமைச்சகத்திடம் ஒரு அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. அவைகளை அரசு அமலாக்க வேண்டும்” என்கிறார் இலயோலா சமூக ஆய்வியல் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனராக இருக்கும் ஆய்வாளரான பெர்ணார்ட் சாமி.
ஆதரவற்ற புலம்பெயர் தொழிலாளர்களை ஒரு சமூகம் எப்படி நடத்துகிறது என்பதில் தான் அந்த சமூகத்தின் பண்பாடு மதிப்பிடப்படுகிறது!
Leave a Reply