புதிய யுஜிசி விதிகள், கிளம்பிய எதிர்ப்பு, நீதிமன்றத் தடை!

-அ.குமரேசன்

உயர்கல்வி வளாகங்களில் சாதி, மத அடிப்படையிலான பாகுபாடுகளும், அதனால் தற்கொலைகளும் அதிகரித்து வருகின்றன. அவற்றை தடுத்து தீர்வு காண யுசிஜி விதிகள் கொண்டு வந்ததற்கு எத்தனை எதிர்ப்புகள்..! அது நீதிமன்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதன் பின்னுள்ள அரசியலை அலசுகிறது இந்தக் கட்டுரை!

பாட நூல்களை வாசித்து மாணவர்களை தேர்வுகளுக்குத் தயார்படுத்துவதோடு மட்டும் இருந்து விடாமல், சமுதாய மாற்றங்களுக்கான களங்களாகவும் திகழ்பவற்றையே உன்னதமான உயர்கல்வி நிலையங்களாகக் கொண்டாட வேண்டும்.

இதனை வலியுறுத்தி வரும் நெடும் போராட்டத்தின் வெற்றியாகத் தான் பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு (யுஜிசி)  கடந்த ஜனவரி 13 அன்று, உயர்கல்வி வளாகங்களுக்குள் பாகுபாடுகளைக் களைவதற்கான புதிய விதிகளை அறிவித்தது.

அதிகரிக்கும் புகார்கள்

நாடாளுமன்றத்தில் தரப்பட்ட தகவல்களின் படி 2019–20 முதல் 2023–24 வரையிலான ஐந்தாண்டு காலத்தில் பல்கலைக் கழகங்களில் சாதிப் பாகுபாடு புகார்கள் 173 என்ற எண்ணிக்கையிலிருந்து 378 ஆக அதிகரித்துள்ளன – 118 சதவீதம் அதிகரிப்பு. 2018 முதல் 2023 வரையிலான ஐந்தாண்டுகளில் உயர்கல்வி நிறுவனங்களில் 2,500க்கும் மேற்பட்ட பாலியல் துன்புறுத்தல் புகார்கள் வந்திருக்கின்றன. மத்தியப் பல்கலைக்கழகங்களில் மட்டுமே ஆண்டுதோறும் 150 முதல் 200 அத்துமீறல் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.

தேசிய மனித உரிமைகள் ஆணையம் மேற்கொண்ட ஓர் ஆய்வின்படி, தில்லி போன்ற நகரங்களில் பயிலும் வடகிழக்கு மாநில மாணவர்களில் சுமார் 54 சதவீதத்தினர் தங்களின் தோற்றம், வாழும் வட்டாரம் காரணமாகப் பாகுபாட்டை எதிர்கொள்வதாகத் தெரிவித்துள்ளனர்.  வட இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் தென்னிந்திய மாணவர்கள்,  மொழி மற்றும் உணவுப் பழக்கம் காரணமாகப் புறக்கணிக்கப்படுவதாகப் புகார்கள் எழுகின்றன. இந்தி தெரியாதவர்கள் இந்தியர்கள் அல்ல என்று கூறுகிற அளவுக்கு அங்கெல்லாம் மொழி ஆணவம் புகட்டப்பட்டிருக்கிறது.

சாதி, மதம், இனம், பாலினம், பிறந்த இடம், உடல்சார் இயலாமை ஆகியவற்றின் அடிப்படையில் எந்த மாணவரும் புறக்கணிப்புகளுக்கோ அவமதிப்புகளுக்கோ உட்படுத்தப்படுவதைத் தடுக்கும் வகையில் அந்த விதிகள் அறிவிக்கப்பட்டன. இவை அரசமைப்பு சாசன லட்சியத்துக்கானவை. அத்துடன் – மொழி, கலாச்சார ஆதிக்கமாக விமர்சிக்கப்படும் தேசிய கல்விக் கொள்கையிலுமே கூட இந்த நோக்கங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.

உடனடியாக நடைமுறைக்கு வந்திருக்க வேண்டிய இந்த விதிகளை தற்போது இடைக்காலத் தடையாணையால் நிறுத்தி வைத்துள்ளது உச்சநீதிமன்றம். வழக்குரைஞர் வினித் ஜிண்டால் இந்த விதிகளைத் திரும்பப் பெறுமாறு மனுத்தாக்கல் செய்தார்.  வாரணாசி இந்து பல்கலைக்கழக முனைவர் பட்ட மேலாய்வாளர் மிருத்யுஞ்சய் திவாரி, ‘‘சமூக ஆர்வலர்’’  ராகுல் திவான் ஆகியோரும் மனுத்தாக்கல் செய்தனர்.

வழக்குத் தொடுக்கப்பட்டதன் பின்னணியில்  உயர்சாதி பிரிவுகளைச் சேர்ந்தோரின் எதிர்ப்பு இருக்கிறது. உ.பி. மாநிலத்தில் இந்தப் பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் சிலர் பதவி விலகினார்கள். இந்தச் சாதிப் பிரிவுகளைத் தனது வாக்கு வங்கியாக வைத்திருக்கும் பாஜக–வின்  வட்டாரத் தலைவர்களும் கடுமையாக எதிர்க்கின்றனர். வேறு சில வட மாநிலங்களிலும் மாணவர்களிடையே இது ஒரு அலையாகப் பரவத் தொடங்கிய நிலையில் தான் உச்சநீதிமன்றம் தலையிட்டிருக்கிறது.

பாகுபாடு காட்டுவது தங்கள் பிறப்புரிமை என்பதாகக் கருதி போராடுகிறார்கள்…!

விடுதிகளில் அறை ஒதுக்க மறுப்பது, வசதிகளற்ற அறைகளை ஒதுக்குவது, கல்வி சார்ந்த குழு விவாதங்களில் பங்கேற்க விடாமல் தடுப்பது, இத்தகைய பாகுபாடுகளை எதிர்த்துப் பேசினால், பலவிதமான சவால்களை, பாதிக்கப்படுவோர் எதிர்கொள்கிறார்கள். ஊர்ப்புறங்களில் நடக்கும் சமூகப் புறக்கணிப்பு போல.

புதிய விதிகள்

யுஜிசி விதிகள் என்ன சொல்கின்றன? பல்கலைக் கழகங்களிலும் கல்லூரிகளிலும் பாகுபாடுகளைத் தடுப்பதற்கு  சமத்துவக் குழுக்கள் அமைக்க  அந்த விதிகள் வலியுறுத்துகின்றன. அந்தக் குழு புகார்கள் மீது 24 மணி நேரத்தில் விசாரணையைத் தொடங்கி, 15 நாட்களுக்குள் அறிக்கையளிக்க வேண்டும். அதன் அடிப்படையில் நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உடல் மீதான தாக்குதல், கடும் மன உளைச்சலுக்கு உள்ளாக்குதல், சாதிய இழிவு ஆகிய குற்றங்கள் நடந்திருந்தால் தாக்கப்பட்டவர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் செய்வதற்கு சமத்துவக் குழு துணையாக இருக்க வேண்டும்; அல்லது தானே நேரடியாகக் காவல்துறையிடம் புகார் செய்ய வேண்டும். புதிய விதிகளைச் செயல்படுத்தாத கல்வி நிறுவனங்கள் மீது, நிதி விலக்கல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். புகார்களை எளிதாகப் பதிவு செய்வதற்கான இணையத் தளங்களை நிறுவனங்கள் உருவாக்கவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

சமத்துவக் குழுக்களுக்கு பல்கலைக்கழகத் துணைவேந்தர்களும், கல்லூரி முதல்வர்களும் தலைவர்களாக இருப்பார்கள். நாடு முழுதும் இந்த விதிகள் செயல்படுத்தப்படுவதைக் கண்காணிப்பதற்காகவும், விதிகளை மீறிப் பாகுபாடுகள் தொடருமானால் புகார் செய்வதற்காக மாணவர்கள் ஆம்புட்ஸ்மேன் எனப்படும் மேல் முறையீட்டு உயரதிகாரியை நாடலாம்.

போதாமைகள்

இந்தப் புதிய விதிகளில் சில போதாமைகள் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, யுஜிசி நிர்வாகத்தின் கீழ் உள்ள பல்கலைக் கழகங்களுக்கும் அவற்றிற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கும் மட்டுமே இந்த விதிகள் பொருந்தும். ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட இதர உயர் கல்வி நிலையங்களில் நிலவும் பாகுபாடுகளைத் தடுப்பதற்கான விதிகள் இதில் ஏதும் இல்லை. இந்த உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் மட்டுமல்லாமல் ஆசிரியர்களே கூட இழிவுகளுக்கும் இதர பாகுபாடுகளுக்கும் உட்படுத்தப்படுவது அதிகம் நிகழ்கின்றன.

பாகுபாட்டு புகார்களுக்கான ஆம்புட்ஸ்மேன், யுஜிசி நிர்வாகத்தால் நியமிக்கப்படுவது  அந்தந்த மாநில அரசுகளின் உரிமைகளை கேள்விக்குள்ளாக்குகிறது!

மாநில உரிமை மீறல்

மேல்முறையீட்டு உயரதிகாரியை ஒன்றிய அரசு நியமிக்கும் என்பது அப்பட்டமான மாநில உரிமை மீறல். ஏற்கெனவே மாநில ஆளுநர்கள்தான் பல்கலைக்கழகங்கள் அனைத்திற்கும் வேந்தர்கள் என்ற  சர்ச்சையுள்ள நிலையில்,  இது இன்னொரு வகையான அதிகாரத் தலையீடாகிவிடும்.

குற்றச்சாட்டுகள் உண்மையென நிறுவப்படும் நிலையில், சமத்துவக் குழு தனது விசாரணை முடிவை அறிக்கையாக கல்லூரி அல்லது பல்கலைக்கழக நிர்வாகத்திடம் ஒப்படைக்கும். குற்றம் செய்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று யுஜிசி விதிகள் வரையறுக்கவில்லை. ஆகவே, குற்றத்தைச் செய்தவர்களின் குடும்பம், சமூகம், செல்வம், அரசியல் உள்ளிட்ட பின்னணிகளைப் பொறுத்து ஒப்புக்குச் சில மேம்போக்கான நடவடிக்கைகளோடு முடித்துவிடக் கூடிய வாய்ப்பும் இருக்கிறது.

யுஜிசி– அமைப்புக்குப் புதிய நிர்வாகிகள் வருகிறபோது இந்த விதிகளைத் தள்ளுபடி செய்யவும் வாய்ப்பிருக்கிறது. ஆகவே தான், யுஜிசி விதிகளாக அல்லாமல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமாகவே கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது. கோரிக்கையை எழுப்பியதோடு, அதற்காக ஒரு சட்ட முன்வரைவையும் தயாரித்து மக்கள் கவனத்திற்காக வெளியிட்டிருக்கிறார் ஒரு தாய். யார் அவர்?

ஒரு தற்கொலையின் தாக்கம்

2016ஆம் ஆண்டு ஜனவரி 16 – தேசத்தின் மனசாட்சி உலுக்கப்பட்டது. ஹைதராபாத் பல்கலைக்கழக  ஆய்வு மாணவரும், குண்டூர் நகரின் ஒரு எளிய குடும்பத்திலிருந்து வந்தவருமான ரோஹித் வெமுலா அன்றுதான் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அம்பேத்கர் மாணவர் சங்கத்தைச் சேர்ந்தவர் அவர். தலித் மாணவர்களின் பிரச்சினைகளுக்காகக் குரல்கொடுத்தவர். அம்பேத்கர் சங்கத்தினர் மீது ஆர்எஸ்எஸ் வழிகாட்டலில் செயல்படும் ஏபிவிபி அமைப்பினர் கொடுத்த புகார், மேலிட அழுத்தம் ஆகிய பின்னணியில் ரோஹித் வெமுலாவும், சங்க உறுப்பினர்கள் சிலரும் விடுதியிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். வகுப்பறையையும், நூலகத்தையும் தவிர வேறு பகுதிகளுக்கு வரக் கூடாதெனத் தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்த அவமதிப்புகளால் மனம் உடைந்தவராக அவர் தன் உயிரை மாய்த்துக் கொண்டார்.

அவரது மரணம் நாடு தழுவிய அதிர்வை ஏற்படுத்தியது. கல்வியாளர்கள், மனித உரிமைப் போராளிகள், அரசியல் இயக்கங்கள் எழுப்பிய கண்டனக் குரலும், வலியுறுத்தலுமாகச் சேர்ந்து தான், அவரது நினைவின் பத்தாமாண்டில், யுஜிசி இந்த விதிகளை அறிவித்தது. விதிகளின் குறைபாடுகளைக் கண்ணுற்றவராகத் தான் ரோஹித்தின் தாயார் ராதிகா வெமுலா ஜனவரி 23-ல் மாதிரிச் சட்ட முன்வரைவை வெளியிட்டார்.

ரோகித்தின் தாய் ராதிகா வெமூலா

பாகுபாடுகள் தடுப்பு என்பதை வெறும் நிர்வாக விதிகளாக வைக்காமல், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட முறையான சட்டமாகக் கொண்டுவர வேண்டும், அது, பல்கலைக்கழகங்களின் தன்னாட்சியைப் பாதுகாக்க வேண்டும்,  சாதியப் பாகுபாடு உள்ளிட்ட குற்றங்களுக்கு சட்டப்பூர்வமாகக் கடுமையான தண்டனை வேண்டும், பாதிக்கப்படுவோருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் .. உள்ளிட்ட அம்சங்கள் அந்த முன்வரைவில் இருக்கின்றன.

விதிகளை அரசு ஏற்றது ஏன்?

ஒன்றிய அரசு அப்படியொரு சட்டம் கொண்டுவரத் தயாராக இல்லை. ஆயினும், ஒன்றிய கல்வித் துறையின் கீழ் வரும் யுஜிசி புதிய விதிகளை அறிவிக்க அனுமதித்துள்ளது.

பிற்போக்குபார்வையுள்ள  ஒன்றிய அரசு, யுஜிசி புதிய விதிகளை வெளியிட அனுமதித்தது எனபதே கூட தன்னை தலித், பழங்குடி மக்களின் காவலனாகக் காட்டிக் கொள்ளும் அரசியல் ஆதாய நோக்கத்திற்காக இருக்கலாம். இந்த நேரத்தில் விதிகளை முடக்குவதால் அந்த மக்களின் வெறுப்புக்கு உள்ளாகிவிடக் கூடாது என்ற எச்சரிக்கையும் இருக்கக்கூடும்.

எதிர்ப்பும் தடையும்

பாகுபாடுகளை களையும் விதிகளை எதிர்க்கும் மாணவர்கள்

சும்மா ஒரு கண் துடைப்புக்காக கொண்டு வந்துள்ள யு.சி.ஜி விதிகளுக்கு கூட எதிர்ப்புத் உயர் சாதி மாணவர்கள் கடும் தெரிவித்திருக்கிறார்கள். வழக்காகவும் கொண்டு‘சென்றிருக்கிறார்கள். இதற்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு  இடைக்காலத் தடை விதித்திருக்கிறது.  உச்சநீதிமன்றம்  சொன்னதைக் காரணமாகக் காட்டித் தான் ‘நீட்’ வடிகட்டல் கொண்டு வரப்பட்டது.

இந்த வழக்கில், அது போல் காரணம் காட்டி புதிய விதிகளைப் புதைப்பதற்குத் தோதாகத் தீர்ப்பாகி விடுமோ என்ற கவலை ஏற்படுகிறது. ஒன்றிய அரசும், யுஜிசி–யும் தங்களது பதில் மனுக்களைத் தாக்கல் செய்ய ஆணையிட்டுள்ள  நீதிபதிகள் அமர்வு, தீர்ப்புக்கு முன்னரே கூறியுள்ள கருத்துகள் அந்தக் கவலையை ஆழப்படுத்துகின்றன.

“விதிகள் தெளிவாக இல்லை,” என்று சரியாகவே சொல்லியிருந்தாலும், “சமுதாயத்தில் பிளவை ஏற்படுத்திவிடும்”, “சாதியற்ற சமுதாயம் என்ற இலக்கை நோக்கிச் செல்வதில் அபாயகரமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்,” “தவறாகப் பயன்படுத்தப்படக்கூடும்,” என்றெல்லாம் நீதிபதிகள் அமரவு கூறியுள்ளது. மார்ச் 19 இல் விசாரணை தொடங்கவிருக்கிறது.

மற்ற பாகுபாடுகள்

சாதியப் பாகுபாடுகளோடு, கல்வி வளாகங்களுக்குள் புரையோடியிருக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் வக்கிரம் உள்ளிட்ட குற்றங்கள், பிற மாநிலத்தவர், வேறு வட்டாரத்தினர் என்ற வேறுபாடுகள், தாக்குதல்கள், மொழி அடிப்படையிலான இழிவுகள், மாற்றுத் திறனாளிகளுக்கு விடுக்கப்படும் சவால்கள் ஆகிய புகார்களையும் சமத்துவக் குழுக்கள் எடுத்துக்கொள்ளும்.

நீதிமன்றம் சென்றிருப்பவர்கள் இந்தப் பாகுபாடுகளைத் தடுப்பதற்கான விதிகளையும் எதிர்க்கிறார்களா? எஸ்சி/எஸ்டி வன்கொடுமை (தடுப்பு) சட்டம் இருந்தாலுமே கூட அந்தச் சட்டத்தின் கீழ் புகார்களை பெரும்பாலும் பதிவு செய்வதில்லை. குற்றவாளிகள் எந்தத் தண்டனையுமின்றித் தப்பித்த கதைகள் தான் நிறைய இருக்கின்றன.

இயக்கங்களுக்கு ஒரு பொறுப்பு

இதற்கெல்லாம் முடிவு கட்டுவதை நோக்கிச் செல்வதன் ஒரு கட்டம் தான் யுஜிசி விதிகள். இந்திய மாணவர் சங்கம் கூறியிருப்பது போல, கல்வி நிலைய சமத்துவக் குழுக்களில் துணைவேந்தர்களும், முதல்வர்களுமே தலைவர்களாக இருப்பார்கள் என்பது ஒருதலைச் சார்பாகப் போவதற்கு வாய்பாகிவிடும். குழு உறுப்பினர்களை நிர்வாகமே நியமிக்கும் என்பதும் விதிகளின் நோக்கத்திற்குத் தடையாகிவிடும். ஆகவே, நடுநிலையாளர்களையும், பல்வேறு தரப்பினரையும் உள்ளடக்கும் வகையில் பிரதிநிதிகள் முறைப்படித் தேர்ந்தெடுப்பது  நம்பகத் தன்மையை ஏற்படுத்தும்.

மாநில உரிமைகளில் தலையிடும் ஆம்புட்ஸ்மேன் நியமனத்தை விலக்கிக்கொண்டு அதனை மாநில அரசுகளிடமே ஒப்படைத்தல், பல்கலைக்கழகங்கள் அல்லாத ஐஐஐடி, ஐஐஎம், என்ஐடி, ஏஐஐஎம்எஸ், ஐஐஎஸ்இஆர், ஜிப்மெர், என்ஐஎஃப்டி என  நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களை உட்படுத்துதல், சமத்துவக் குழுக்களின் சுதந்திரமான செயல்பாடு, பாகுபாடு என்பதற்கான தெளிவான வரையறை ஆகியவற்றை சிபிஐ(எம்) அரசியல் தலைமைக் குழு வலியுறுத்தியிருக்கிறது. புதுப்பிக்கப்பட்ட விதிகளை யுஜிசி வெளியிட திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் கோரியுள்ளன.

இது சமூகநீதிப் போராட்டத்தோடு தொடர்புடையது. ஆகவே மாநில அரசுகள் தங்களையும் இந்த வழக்கில் சேர்த்துக் கொள்ளக் கோரலாம். அதன் மூலம், சரியான சட்டம் நிறைவேற்றப்படுவதற்கோ, திருத்தப்பட்ட விதிகள் வருவதற்கோ பங்களிக்க முடியும். நீதிமன்றத்தின் தலையீடு சரியான, திட்டவட்டமான சட்டத்திற்கும், விதிகளுக்கும் இட்டுச் செல்வதாக இருக்க வேண்டுமேயன்றி, எதிர்ப்பாளர்களின் ஆதிக்கத் தாகத்துக்கு நீர் வார்ப்பதாகிவிடக்கூடாது.

1990இல் மண்டல் குழு அறிக்கை அடிப்படையில் அரசாங்கப் பணிகளில் 27 சதவீத இட ஒதுக்கீட்டை  வி.பி. சிங் தலைமையிலான தேசிய முன்னணி அரசு அறிவித்தது. 2006ஆம் ஆண்டில் கல்விக் கூடங்களில் அதே இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்தி மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆணையிட்டது. அந்த இரண்டு ஆணைகளையும் எதிர்த்து நாடு முழுவதும் கலவரங்கள் தூண்டப்பட்டன. ஆயினும் அந்த இட ஒதுக்கீடுகள் நடைமுறைக்கு வந்தன.

இப்போது உச்சநீதிமன்றத் தலையீட்டால், எதிர்ப்பலைகள் கொஞ்சம் அடங்கியிருப்பது போலத் தோன்றுகிறது ஆயினும், பாகுபாடுகளைக் கலாச்சார மாண்பாகக் கருதும் மனப்போக்கு அடங்கி விடாது. அதன் தாக்கத்தில் முன்பு நடந்தது போன்ற பதற்றச் சூழல் இப்போதும் ஏற்படுத்தப்படலாம் என்ற கவலையும் ஏற்படுகிறது.

ஆக, சரியான சட்டத்தையும், விதிகளையும் உருவாக்கி நடப்புக்குக் கொண்டுவரச் செய்வதில் நாடாளுமன்றம், நீதிமன்றத்திற்கு அப்பால் மக்கள் மன்றத்திற்குப் பெரும் பங்கிருக்கிறது.

அ.குமரேசன்

மூத்த பத்திரிகையாளர்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time