தேர்தல் ஆணையத்தை கிழித்து தொங்கவிட்ட மம்தா பானர்ஜி!

-சாவித்திரி கண்ணன்

‘வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் தேர்தல் ஆணையம் செய்யும் தில்லான தகிடு தத்தங்களை அகில இந்திய அளவில் அப்பட்டமாக தோலூரித்து காண்பிக்கும் நிகழ்வாக மம்தா பானர்ஜியின் உச்சநீதிமன்ற வாதங்கள் உஷ்ணத்தை கிளப்பி உள்ளன. மம்தா கவனப்படுத்தியவை பல மற்ற மாநிலங்களுக்கும் பொருந்தி போர் வாளாகின்றன;

இந்தியாவில் உள்ள மற்ற எந்த அரசியல்வாதிகளையும் விட மிக தைரியசாலி மற்றும் களச் செயற்பாட்டாளர், பிரச்சினைகளை நேருக்கு நேராக எதிர்கொள்ளக் கூடியவர் அந்த வகையில் மம்தாவின் உச்ச நீதிமன்ற வருகையும்,  அங்கு அவர் வெளிப்படுத்திய செய்திகளும் தேர்தல் ஆணையம் ஒரு  திருந்தாத திருட்டு ஆணையம் என்பதை சொல்லாமல் சொல்லிற்று.

ஒரு மாநில முதல்வராக அதிகார தோரணையில் தான் அங்கு வரவில்லை என்பதையும் மேற்குவங்க மக்களின் நலன்களுக்கான தனிப்பட்ட முறையிலும், சட்டம் பயின்றவள் என்ற வகையிலும் ஒரு பொது நல வழக்கிற்காக தன் வாதங்களை சமர்பிக்க  ஐந்து நிமிடமாவது அனுமதிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டு தான் வந்தார். ஆனால், நீதிபதிகள் 15 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் என்றனர். ஆனால் மம்தாவின் வாதங்கள் 20 நிமிடங்களுக்கு சென்றுவிட்டன. ஆயினும் நீதிபதிகள் அவரது ஆதங்கங்களை பரிவோடு கேட்டனர்.

தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்‌ஷி, வி.எம்.பஞ்சோலி அமர்வின் முன்பாக மம்தா பானர்ஜி வைத்த வாதங்களை பாயிண்ட் பை பாயிண்டாகப் பார்போம்;

# ஆறு முறை கடிதம் எழுதி கூட எந்த பதிலும் கிடைக்கவில்லை. பிரச்சினை என்னவென்றால், எங்களுக்கு எங்கும் நீதி கிடைப்பதில்லை’

# வங்க மொழியின் நடைமுறை சார்ந்த எழுத்து, உச்சரிப்பு குறித்து தேர்தல் ஆணையத்திற்கு சரியான புரிதல் இல்லை.  தாகூர், பானர்ஜி, தத்தா, ராய், கங்குலி போன்றவை குடும்பப் பெயர்களாகும். இதனாலேயே வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து பெருமளவு நீக்கப்பட்டுள்ளன. இப்படி நடப்பதை மாநில அரசால் ஏற்க முடியாது.

# நானே பாதிக்கப்பட்டுள்ளேன். எனக்கான வாக்காளர் அட்டையில் என்னுடைய புகைப்படத்தை ஒரு செய்திதாளில் இருந்து காபி எடுத்து சகிக்க முடியாத வகையில்  வைத்துள்ளனர்.

# பெண்கள் தனது கணவரின் குடும்பப் பெயரை தனது பெயருடன் சேர்த்துக் கொண்டதற்காக அவர்களது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. திருமணத்துக்குப் பின் ஒரு பெண் தனது கணவர் வீட்டுக்கு இடம் மாறுவது இயல்பாகும். இதனால், அவர்களது பெயர்களை, முரண்பாடுகள் பட்டியலில் சேர்த்துள்ளமை ஏற்கதக்கதல்ல.

# 70 லட்சம் பெண்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

# 1.36 கோடி வாக்காளர்கள் ஆவணங்களை கேட்ட வகையில் முரண்பாடு பட்டியலில் உள்ளனர்.

# 63 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் நிலுவையில் உள்ளன.

# 36 லட்சம் புதிய வாக்காளர்கள் வாக்காளராக பதிவு செய்யபடவில்லை.

# இது தவிர உயிரோடு இருப்பவர்களை இறந்தவர் பட்டியலுக்கு தள்ளியுள்ளது தேர்தல் ஆணையம்.

# வங்கத்தின் புகழ்மிக்க நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென், வங்க கவிஞர் ஜாய் கோஸ்வாமி, திரிணமூல் காங்கிரஸ் எம்பி தீபக் அதிகாரி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலருக்கு தீவிர சிறப்புத் திருத்தம் தொடர்பாக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியதை நாங்கள் அவமானகரமான நிகழ்வாக பார்க்கிறோம். ( இதைக் கேட்டு நோட்டீஸ் அனுப்புவதற்கு முன்பாக சிறிதேனும் புத்திசாலித்தனத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று உங்கள் அதிகாரிகளுக்கு அறிவுறுத்துங்கள் என தேர்தல் ஆணைய வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கடிந்து கொண்டனர்.)

# ஆதார் அடையாள அட்டை, மாநில அரசு தரும் சாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவற்றை தேர்தல் ஆணையம் ஏற்க மறுப்பதன் மூலம் நீதிமன்றத்தின் உத்தரவை தேர்தல் ஆணையம் மீறுகிறது. மேற்கு வங்கம் மட்டும் குறிவைக்கப்படுகிறது, நசுக்கப்படுகிறது.

# இன்னும் மூன்று மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இரண்டு வருடங்கள் நேரம் எடுத்து செய்ய வேண்டிய வேலையை இரண்டு மாதங்களில் தேர்தல் ஆணையம் செய்ய வேண்டிய அவசரம் என்ன?

# சிறப்பு தீவிர திருத்தத்தால்  மேற்கு வங்கத்தில் 100-க்கும் மேற்பட்டோர் மன உளைச்சல் மற்றும் அதிர்ச்சியில் இறந்துள்ளனர். பலர் மருத்துவமனையில் நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

# சிறுபான்மையினர் திட்டமிட்டு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். பாஜகவைச் சேர்ந்த 8,300 பேர் தேர்தல் வேலைகளுக்கு தேர்தல் ஆணையத்தால் பயன்படுத்திக் கொள்ளப்பட்டனர்.

# மேற்கு வங்கம் புல்டோசர் கொண்டு இடிக்கப்படுகிறது. நீதி கதவுகளின் இடுக்குகளில் மாட்டிக் கொண்டு கதறுகிறது. தயவு செய்து மக்களின் உரிமைகளை நீங்கள் பாதுகாக்க வேண்டும்’’

மம்தாவின் வாதங்களை கேட்ட நீதிபதிகள், எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு உண்டு என தெரிவித்த மனுதாரர் எழுப்பியுள்ள பிரச்சினைகள் நியாயமானவை என்பதால் இதை விசாரணைக்கு  ஏற்கிறோம் எனக் குறிப்பிட்டனர்.

மேலும், இந்த வழக்கின் அடுத்த விசாரணையை வரும் திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தனர். அன்றும் தானே நேரில் ஆஜராக தன்னை தயார்படுத்தி வருகிறார்.

முன்னதாக தங்கள் மாநிலத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளால் இறந்து போன சுமார் 50 குடும்பங்களின் உறுப்பினர்களை மம்தா பானர்ஜி அழைத்து வந்து மேற்குவங்க விருந்தினர் மாளிகையில் தங்க வைத்திருந்தார். அவர்களை செய்தியாளர்கள் சந்தித்துவிடாதபடிக்கு டெல்லி போலீசாரைக் கொண்டு அராஜகம் செய்தது பாஜக அரசு. அப்போதும் மம்தா களத்திற்கு வந்து இன்கே உங்களுக்கு என்ன வேலை எங்க போலீசையே எங்கள் மக்களுக்காக அழைத்து வந்துள்ளோம். வெளியேறுங்கள் என்று சத்தம் போட்டார். அவர்கள் வெளியேறினர்.

சாவித்திரி கண்ணன்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time