வானத்தை வில்லாக வளைத்து தந்திடப் போகும் தேர்தல் அறிக்கை!

சாவித்திரி கண்ணன்

அடேங்கப்பா ரகம் தான், அதிமுகவின் தேர்தல் அறிக்கை! பட்ஜெட்டின் ஒட்டுமொத்த தொகையையும் எடுத்து அறிக்கையில் சொல்லப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற அர்ப்பணிப்போடு முயன்றாலும் 10 % சதவிகிதத்தை நிறைவேற்றுவதே சவால் தான் எனும் போது, எடப்பாடி பழனிச்சாமியின் துணிச்சல் மலைக்க வைக்கிறது;

மக்களை ஏமாற்றும் வித்தையில் கைதேர்ந்தவர்கள் யாரோ, அவரே இங்கு வெற்றிகரமான அரசியல்வாதியாக கோலோச்ச முடியும் என்பது எழுதப்படாத விதியோ என்னவோ?

மக்களை பேராசைக்காரர்களாகவோ,

அல்லது  அறிவற்ற படு முட்டாள்களாகவோ

கணித்து வைத்தே அரசியல்வாதிகள் தேர்தல் அறிக்கை தயாரிக்கிறார்கள்  என்று தோன்றுகிறது.

இதற்கு அதிமுகவின் தேர்தல் அறிக்கையே அத்தாட்சியாகும்.

ஏற்கனவே திமுக ஆட்சி குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ1,000, பெண்களுக்கு இலவச பஸ் பயணம்.. போன்ற இலவசங்களை அறிவித்து, இது போன்ற இலவச திட்டங்களுக்காகவே பட்ஜெட்டில் கணிசமான தொகையை திசைமாற்றி வழங்குவதால் தான் ஒவ்வொரு துறை ஊழியர்களும், நியாயமான ஊதியத்திற்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

அல்லும், பகலும் அரசு மருத்துவமனைகளில் நோயளிகளுக்கு சேவை செய்யும் செவிலியர்கள், பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், தூய்மை பணியாளர்கள், உயிரை பணயம் வைத்து செயல்படும் மின்வாரிய ஊழியர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள் தொடங்கி அரசின் அனைத்து துறை பணியாளர்களுக்கும் உழைப்பிற்கு ஏற்ப சம்பளம் தர முடியாமல் ஒப்பந்தக் கூலிகளாக அல்லது தற்காலிக பணியாளர்களாக அடிமாட்டுச் சம்பளத்திற்கு வேலை வாங்கி, அவர்களின் வயிற்றெரிச்சலை பெற்று, பற்பல போராட்டங்களை எதிர்கொண்டு வருகிறது திமுக அரசு.

ஒரு வேளை அதிமுக ஆட்சிக்கு வந்துவிட்டால், இந்தப் போராட்டங்கள் பன்மடங்கு வீரியம் பெற்று வெடிக்கவே வாய்ப்புள்ளது. காவல் துறையை வைத்து கட்டுப்படுத்திவிடலாம் என்பது நிரந்தரத் தலைவலியில் தான் சென்றுவிடும்.

திமுக அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் அறிவித்ததன் விளைவாக போக்குவரத்து ஊழியர்களை நிரந்தரமாக்கி, நல்ல சம்பளம் தர முடியாமல் ஒப்பந்தக் கூலிகளாக வைத்து சுரண்டியும் கூட லாபமாக நடத்த முடியாமல் தனியாருக்கே போக்குவரத்து துறையை படிப்படியாக தாரை வார்த்து வருகிற சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த லட்சணத்தில் அரசு பேருந்துகளில் பெண்களைப் போல ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணத் திட்டம் செயல்படுத்தப்படும்… என்கிறது, அதிமுகவின் தேர்தல் அறிக்கை. அப்படியென்றால் அதிமுக அரசு பதவி ஏற்ற ஆறே மாதத்தில்  அரசு போக்குவரத்துக் கழகங்களை இழுத்து மூட வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் என்பது நிச்சயம். இறுதியில் தனியார் பேருந்துகள் ராஜாங்கத்தில் கேள்விமுறையில்லாத கட்டணங்கள் செலுத்தி பயணப்படும் நிலை தான் உருவாகும்.

இந்த நெருக்கடிகள் போதாது என்று அதிமுக தேர்தல் அறிக்கையில்  அனைத்து குடும்பத் தலைவியின் வங்கிக் கணக்கில் மாதம் தோறும் ரூ.2,000  செலுத்தப்படுமாம்!  தற்போது ஆயிரம் ரூபாய்  தருவதற்கே தமிழக நிதித் துறை கண்விழிப் பிதுங்கி நிற்கிறது. முதலாமாண்டு வரை கூட இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவது நடைமுறையில் சாத்தியமில்லை.

இருக்கும் இலவசங்கள் போதாது என்று மேன்மேலும் இலவசங்களை அள்ளித் தந்து, அரசு கஜானாவை சுத்தமாக வழித்து துடைத்துவிட்டு, பற்றாக்குறைக்கு, இருக்கவே இருக்கிறது அந்நிய நாட்டுக் கடன்கள் என்று பல லட்சம் கோடிகளில் கடன் வாங்கி, இலவசங்கள் தந்தால் நாடு எப்படி முன்னேறும்…? கடன் தந்த நாடுகள் மற்றும் வங்கிகளுக்கு அதற்கு பதிலீடாக நாம் கட்டுகிற வட்டியும், இழப்புகளும் கொஞ்சமா? நஞ்சமா?

திமுக அரசை இந்த ஐந்தாண்டுகளில் 5 லட்சம் கோடிகளுக்கும் அதிகமாக கடன் வாங்கிவிட்டீர்களே எனச் சாடும் அதிமுக, அந்த கடனை குறைக்க வழி தேடாமல், மேலும் இரட்டிப்பாக்கும் வண்ணம் இலவசத் திட்டங்களை அறிவித்து, தமிழகத்தை தாளமுடியாத கடன் வலையில் வீழ்த்த திட்டமிடுவது முறையாகுமா?

‘அம்மா இல்லம்’ திட்டம் மூலம் கிராமப்புறங்களில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கும், நகரப் பகுதிகளில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கும் வீடுகள் கட்டி இலவசமாக வழங்கப்படும். ..! – இதை ஒரு போதும் செயல்படுத்த முடியாது. அவரவர்களும் தங்கள் உழைப்பில் வீடுவாங்கக் கூடிய பொருளாதாரச் சூழல்களை உருவாக்க தெரியாத அல்லது முடியாத ஆளுமை திறமையற்ற ஆட்சியாளர்கள் ஆட்சிக்கு வருவதானது கஜானாவை கபளீகரம் செய்து போகவே வழிவகுக்கும்.

5 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் மானியத்துடன் ‘அம்மா இருசக்கர வாகனங்கள்’ வழங்கப்படுமாம். _ இதற்கு மாற்றாக பெண்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திட்டத்தை செயல்படுத்தினால், தங்கள் சம்பாத்தியத்தில் அவர்களே தங்களுக்கான வாகனங்களை வாங்கிக் கொள்வார்களே..?

வங்கிகளில் பெற்ற கல்விக் கடனை அரசே ஏற்குமாம். சரி, பிறகு வங்கிகள் எப்படி செயல்பட முடியும் …? அதில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் எப்படித் தர முடியும்…?

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு, ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் விலையில்லாமல் வழங்கப்படும். – இது அரசாங்கத்தையே திவாலாக்கிவிடும் தீவட்டி அறிவிப்பாகும்.

ஜல்லிக்கட்டு வீரர்கள்  உயிரிழக்க நேரிட்டால், ரூ. 10 லட்சம், படுகாயமடைந்தால் ரூ. 2 லட்சம் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு ரூ. 5 லட்சம் என    அரசின் சார்பில் வழங்கப்படுமாம்! – இப்படி பிரபலமான ஒரு விளையட்டுக்கு மாத்திரம் தந்தால், மற்ற விளையாட்டு வீரர்களை அரசு புறக்கணிக்கிறது என்ற உணர்வே மேலோங்கும்.

ஓட்டு வேட்டையாடுகிறேன்.. என்ற அதிகார வெறியில் நாட்டியே காட்டைப் போல மாற்றிவிடலாகாது.

இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் ஏனைய சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த மகளிர் சுயதொழில் தொடங்குவதற்கு வட்டியில்லா கடன் வழங்கப்படுமாம். இது பாஜகவுடன் சேர்ந்ததற்கு நடத்தப்படும் பரிகார பூஜை போல இருக்கிறதே. எதிலும் மத பாகுபாடு காட்டப்படலாகாது.

அதிமுக தேர்தல் அறிக்கையில் பாராட்டப்பட வேண்டிய இரு அம்சங்கள் உள்ளன.

சமூக ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் முதியோர்களுக்கு வழங்கப்படும் ரூ. 1,000 உதவித் தொகை ரூ. 2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். மேலும், விதவைப் பெண்கள், முதிர் கன்னிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் ரூ. 1,200-ல் இருந்து ரூ. 2,000-ஆக உயர்த்தி வழங்கப்படும்.

அடுத்து நூறு  நாட்கள் வேலை திட்டத்தை 150 நாட்களாக அதிகரிக்கச் செய்வார்களாம். நல்லது, ஆனால், இதன் செயலாக்கத்தில் மாநில அரசின் நிதியை நிர்பந்திக்கும் மத்திய அரசை எதிர்க்காமல் இந்த நோக்கமும் ஈடேறாது.

மற்றபடி இது போன்ற  இலவச வாக்குறுதிகளைத் தவிர்த்து,

# அரசுத் துறைகளில் ஒப்பந்தக் கூலி முறையை முடிவுக்கு கொண்டு வந்து நியாயமான வகையில் ஊழியர்களை நியமித்து, உழைப்புக்கு ஏற்ற ஊதியம் தரப்படுவதை உறுதிபடுத்துவேன்.

# அரசுத் துறைகள் அனைத்திலும் லஞ்ச, ஊழல்களற்ற நல்ல  நிர்வாகத்தை தருவேன்.

# சட்டம், ஒழுங்கை பாரபட்சமின்றி சரியாக பராமரிப்பேன்.

# அரசு பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகளை சிறப்பாக வைத்து கட்டணமில்லா மருத்துவத்தையும், கல்வியையும் வழங்குவேன்.

# டாஸ்மாக்கின் வெளிநாட்டு மதுபான வகைகளை குறைத்து பனங்கள், தென்னங்கள் இறக்க விவசாயிகளை அனுமதிப்பேன்.

# கார்ப்பரேட்களின் தொழிற்சாலைகளுக்காக விவசாயிகளின் நிலத்தை பிடுங்கமாட்டேன்.

# இயற்கை வளங்களை சூறையாடாமல் பாதுகாப்பேன்.

என சொல்லக் கூடிய திரானி யாருக்கு, எந்தக் கட்சிக்கு இருக்கிறதோ அந்த கட்சியால் தான் சிறப்பானதொரு ஆட்சியைத் தர இயலும்.

சாவித்திரி கண்ணன்

 

 

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time