பொதுத் துறை நிறுவனங்கள் என்பவை நாட்டின் பொக்கிஷங்களாகும். அவை பேராசை கொண்ட ஆட்சியாளர்களால் பெரும் நஷ்டத்தை சந்தித்துக் கொண்டுள்ளன. தமிழ்நாட்டின் பொதுத் துறை நிறுவனங்களை வேட்டைக்காடாக்கினால், இனி முன்னேறிய தமிழகத்திற்கு முற்றுப்புள்ளி ஏற்பட்டு, பெரும் வீழ்ச்சியை எதிர்கொள்ளக் கூடும்;
தமிழ்நாடு ஒரு வளர்ச்சி அடைந்த முன்னேறிய மாநிலம்!
ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்!
அதிக தொழிற்சாலைகள் மற்றும் உள் கட்டமைப்புகள் நிறைந்த மாநிலம்!
என்று நாம் பெருமைப்பட்டு மார்தட்டிக் கொண்டதெல்லாம் உண்மை தான்! பொய்யல்ல.
ஆனால், அதை தக்க வைத்துக் கொள்வதும், தகர்ந்து போக வைப்பதும் இங்கு ஆள்கின்ற ஆட்சியாளர்களின் நிர்வாக ஆளுமைத் திறனில் தான் உள்ளன.
தற்போது மாநிலங்களின் நிதி நிலைமை மற்றும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான வரிப் பகிர்வு (Tax Devolution) குறித்து ஆய்வு செய்யத் தமிழகத்திற்கு வருகை தந்துள்ள 16-வது நிதிக்குழு தந்துள்ள மாநில பொதுத்துறை நிறுவனங்களின் நிதி நிலைமை குறித்த தரவுகள் நம்மை நிலைகுலைய வைத்துள்ளன.

ஒரு பக்கம் மாநிலத்தின் கடன் சுமையும், நிதிப் பற்றாக்குறையும் அதிகரித்துக் கொண்டுள்ளன…என்றால், மறுபுறம் சிறப்பாக செயல்பட்டு வந்த பொதுத் துறை நிறுவனங்கள் சீர் குலைந்து படு நஷ்டத்தில் இயங்குகின்றன…என16 வது நிதிக் குழு பகீர் தகவலைப் பகிர்ந்துள்ளது. பொதுத் துறை நிறுவனங்களின் நஷ்டத்தை அதிகம் சந்திக்கும் மாநிலங்களில் தமிழகம் பிரதானமாக உள்ளது என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
இது வெறும் எச்சரிக்கை அறிவிப்பாகக் பார்க்கப்பட வேண்டியதல்ல. எதிர்காலத்தில் நாம் சந்திக்க சிக்கல்களுக்கு ஒரு முன் அறிவிப்பாகவும் கொள்ளலாம். இதன் தாக்கம் மாநிலத்திற்கு வழங்கப்படும் நிதி ஒதுக்கீட்டிலும் இருக்கலாம் என்பதற்கான அறிகுறியாகவே இதைப் பார்க்கலாம்.
மின் வாரியம், அரசு, போக்குவரத்துக் கழகங்கள், ஆவின் பால் போன்ற நிறுவனங்கள் நஷ்டத்தை சந்திக்கின்றன. நிறுவனங்களின் நிர்வாகச் சீர்குலைவுகளும், ஊழல் மலிந்த நடவடிக்கைகளும், அதன் செயல்பாட்டுத் திறனை பாதித்துள்ளன. விளைவாக கடனுக்கான வட்டிக் கூடிக் கொண்டிருப்பதோடு, நிதிச் சுமை அதிகரித்து வருகிறது!
ஏன் நஷ்டத்தை சந்திக்கின்றன?
மின்வாரியம் புதிய தொழில் நுட்பங்களை அமல்படுத்தாமை, பழுதான எந்திரங்களை உடனுக்குடன் பழுது பார்க்காமை, மின் இழப்பு, அரசியல்வாதிகள், செல்வாக்கானவர்கள் மின் திருட்டில் ஈடுபடுவது, எல்லாவற்றுக்கும் மேலாக கையூட்டுப் பெற்றுக் கொண்டு, தனியார்களிடம் அதிக விலைக்கு மின்சாரத்தை கொள்முதல் செய்வது,மின் பகிர்மானத்தையும் தனியாரிடம் தாரை வார்த்திருப்பது போன்ற பல்வேறு காரணங்களால் தமிழக மின் வாரியம் பெரும் இக்கட்டில் உழல்கிறது. தமிழக அரசோ செந்தில் பாலாஜி போன்ற அமைச்சர்களிடம் நிர்வாகத்தை ஒப்படைத்து, நிர்வாகச் சீர்கேடுகளை மேன்மேலும் அதிகரித்துக் கொண்டே செல்வதோடு, அதிக கட்டணங்கள் மூலம் நஷ்டத்தை ஈடுகட்ட முயற்சிக்கிறது.
ஆனால், 16 வது நிதிக்குழுவை பொறுத்த வரை அவர்கள் மக்களுக்கான மானிய மின்சாரத்தையும், விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தையும் நிறுத்த நிர்பந்திக்கிறார்கள் என்பதோடு, வெளிநாட்டுக் கடன்களையும் குறைக்கச் சொல்லி உள்ளார்கள். அத்துடன் மானியங்கள், இலவசங்கள்.. என்பதாக உற்பத்தி சாரா வகையில் நிதி திசை திருப்பப்படுகிறது என்பதையும் நிதிக் குழு சுட்டிக் காண்பித்துள்ளது.
போக்குவரத்துக் கழகங்களிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. பேருந்துகள் வாங்குவது, உதிரி பாகங்கள் வாங்குவது, தனியார் பயன்படும்படி அரசு பேருந்தின் புறப்படும் நேரங்களை நிர்ணயிப்பது, கட்சிக்காரர்களை வேலைக்கு அமர்த்தி தண்டச் சம்பளம் தருவது…என பல வகையிலும் ஊழல் போதாது என்று பெண்களுக்கு இலவசப் பயணம்..போன்ற ஓட்டுப் பொறுக்கும் திட்டங்களால் அரசு போக்குவரத்துக் கழகங்கள் பலவீனப்பட்டுள்ளது.
ஆவின் பால் நிர்வாகம் என்பதும் அதிகபட்ச ஊழல் முறைகேடுகளை அரங்கேற்றும் இடமாகிவிட்டமையால், தனியார் பால் நிறுவனங்களே சந்தையில் தழைத்தோங்குகின்றன.
16 வது நிதிக் குழுவின் அறிக்கைக்கு பதில் தந்துள்ள தமிழக அரசு, “அரசாங்கத்தின் சமூகப் பங்களிப்பை கருத்தில் கொள்ள வேண்டும். நாங்கள் அதிக வரி வருவாயை மத்திய அரசுக்கு வழங்குகினாலும், எங்களுக்குத் திரும்பக் கிடைப்பது மிகக் குறைவாகவே திரும்பக் கிடைக்கிறது’’ என்று சொல்லி இருக்கிறது.
தமிழக அரசு சொன்னது உண்மை என்றாலும், பொதுத் துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவது குறித்த சுயபரிசீலனைக்கு தமிழக அரசு தன்னை உட்படுத்திக் கொண்டால், லாபம் இல்லாவிட்டாலும் நஷ்டத்தையாவது தவிர்க்கலாம் என்பதே நாம் சுட்டிக் காட்ட விரும்புவதாகும்.
சாவித்திரி கண்ணன்























Leave a Reply