சர்வம் மாயா – காதல் பிசாசின் குறும்புகள்!

-பீட்டர் துரைராஜ்

பேய் படம் என்றாலும், அச்சுறுத்தும் காட்சிகள் இல்லை! மனதை கொள்ளை கொள்ளும் மலையாளப் படம்!  அழகிய இளம் பெண் ஆவியாக வந்து காதல் குறும்புத் தனங்கள் செய்கிறாள்!  ஒரு காதல் பேயை வைத்து படு ஜாலியாக  இனிய அனுபவத்தை தரும் சினிமா. திகில் காட்சிகள் இல்லாத காமெடி கலந்த திரில்லிங் படம்;

‘எல்லாம் மாயை’ என்ற பொருள்படும் ‘சர்வம் மாயா’ என்ற நகைச் சுவைப் படம் தற்போது நன்றாக ஓடிக் கொண்டு இருக்கிறது. இளமை ததும்பும் அழகிய நாயகன் நிவின் பாலி நடித்துள்ளதால், காதல் கதையாக இருப்பது இயல்பு தானே !  ஆனால், காதலியாக வருவது ஒரு பிசாசு ! கிறிஸ்தவப் பிசாசு ! பேர், ஊர் தெரியாத பிசாசு ! எப்படி இறந்தேன் எனத் தெரியாத பிசாசு! காதல் கதையில் பிசாசு  வரக்கூடாது என சட்டம் இருக்கிறதா என்ன…?

கதையின் நாயகன் பிரபேந்த் (நிவின் பாலி) ஒரு இசைக் கலைஞன். வாய்ப்பு கிடைத்தும், கிடைக்காமலும் அலைந்து கொண்டிருக்கிறான். இவனுடைய குழுவில் உள்ளவர்கள் ஒரு இசை நிகழ்ச்சிக்காக வெளி நாடு சென்று விட, அப்பாவின் எழுபதாம் பிறந்த நாளுக்கு கிராமத்திற்கு வருகிறான். நம்பூதிரி குடும்பத்தில் பிறந்து, பூஜை, மந்திரம் போன்ற சடங்குகளை படித்த அவன் ஒரு நாத்திகன். ஆனாலும், கைச்செலவுகளுக்காக தன் அண்ணனோடு பூசைக்கு செல்கிறான். அப்படி ஒரு வீட்டில் பேய் விரட்டும் பூசை நடக்கும் போது, ஒரு இளம் பிசாசும் அவனோடு சேர்ந்து கூடவே வருகிறது. இவனோடு பேசுகிறது. ஆலோசனை சொல்கிறது. அது, இவன் கண்ணுக்கு மட்டும் தெரிகிறது.(சூது கவ்வும் படத்தில் விஜய் சேதுபதி கூடவே மாமா என்ற அழைத்தவாறு மற்றவர்கள் கண்ணுக்கு தெரியாமல் ஒரு பெண் கூடவே வருமே – அதைப் போல).

அந்தப் பெண்ணுக்கு பெயர் தெரியாது. எனவே இவரும் சேர்ந்து மாயம் என்ற பொருள் வரும் டெலுலு என்ற பெயரை அதற்கு சூட்டுகிறார்கள் (delusion). ஏனெனில் பிசாசு என்று அழைப்பதை டெலுலு விரும்பவில்லை.(மிஷ்கின் ‘பிசாசு’ என்ற படத்தில், பிசாசை நல்லது செய்யும் பிசாசாக காட்டியுள்ளார்).   நாத்திகவாதியான, நாயகனுக்கு தீங்கிழைக்காத மாயாவோடு சுற்றுவதில் குழப்பம் இல்லை. அவள் புழங்கிய இடங்கள் தென்பட்டால், அவளுடைய முந்தைய கதை தெரியலாம்!.

பேய் இருக்கிறதா, இல்லையா என்ற விவாதத்திற்கு ரசிகர்கள்  போக வேண்டியதில்லை. நாம் எழுப்பும் கேள்விகளுக்கான விடைகள் கதையின் போக்கிலேயே நமக்கு கிடைக்கின்றன. படம், படு ஜாலியாக ஆரம்பம் முதல் இறுதி வரை செல்கிறது. தவிர, கலைஞர்களுக்கு அந்தச் சுதந்திரம் உண்டுதானே!

கதையின் நாயகியாக ரியா ஷிபு நடித்துள்ளார். படுசுட்டி. அவள் பேசும் ஒவ்வொரு வசனமும் மனதை அள்ளுகிறது. தவிர, இது நல்ல பிசாசு என்பதை நினைவில் வையுங்கள். புரோகிதர்கள் வாங்கும் தட்சணை, பங்கு பிரித்துக் கொள்வது (60:40), போன்றவை இதனை ஒரு மூட நம்பிக்கைப் படமாக காட்டவில்லை. (பங்கு பிரிப்பது இறுதிவரை வருகிறது. கடைசியில் 100%. கிராஜீடி போல). பூஜை செய்யும் அண்ணனின் லூட்டி, தனியான ஒரு தடத்தில் செல்கிறது.

மாயாவிற்கு தான் ஒரு கிறிஸ்தவள் என்று தெரிகிறது. பிசாசு சுடுகாட்டில் மட்டும் தான் வரவேண்டுமா என்ன ! கல்லறைக்கு வரக்கூடாதா?  ஆனால், மாயா சிலுவையைப் பார்த்து ஓடவில்லை. கிறிஸ்தவள் என்றால் எந்தப் பிரிவு –  கத்தோலிக்கமா, சீர்திருத்த கிறிஸ்தவமா அல்லது சிரியனா ! முடிச்சு ஒவ்வொன்றாக அவிழ்கிறது ! எப்போதோ நடந்த சண்டைக்காக இப்போதும் அப்பாவிடம் பேசக்கூடாதா?, அவருடைய காரை பயன்படுத்தக் கூடாதா? என்ற கேள்விகளை மாயா கேட்கிறது.  ரியா ஷிபுவை ரசிகர்கள் இனி மறக்க இயலாது..

இசை வாய்ப்புத் தேடி அலையும் போது, ஒரு பெண்ணைச் சந்திக்க நேரிடுகிறது. இரண்டாவது நாயகி சாத்யாவாக, ப்ரீதி முகுந்தன் நடித்துள்ளார். பிரபோந்துவை அவள் காதலிக்க முற்படும் போது, மாயாவிற்கு பொறாமை வருகிறது. கதையின் முடிச்சுகள் ஒவ்வொன்றாக அவிழ்ந்து மாயாவின் முன்கதை வருகிறது. அதன் வழியாக பிரபோந்துவின் கதை தொடர்கிறது! அகில் சத்தியன் எழுதி, இயக்கி உள்ளார். சிக்கலான கதைப் பின்னல், நாசுக்காக அவிழ்கிறது. திரைக்கதையின் கட்டமைப்பு எந்த இடத்திலும் தேக்கத்தை உருவாக்கவில்லை. எல்லா வயதினருக்கும் ஏற்ற படம்.. மனிதன், தன்னுடைய கற்பனையை எப்படியெல்லாம் இலாவகமாக பயன்படுத்தலாம் என்பதை காட்டும் படம்.. ஜியோ – ஸ்டாரில் ஓடுகிறது. நகைச்சுவைப் படம், காதல்படம் ,பிசாசுப் படம், பரிசோதனை முயற்சி படம் என பலவாறாக இதனை வகைப்படுத்தலாம்.

திரை விமர்சனம்; பீட்டர் துரைராஜ்

 

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time