சாமார்த்தியம் வென்றது, சத்தியம் தோற்றது!

-சாவித்திரி கண்ணன்.

இந்தக் கோழைத்தனம் தான் அவர்களின் தொடர் வெற்றியாகிறது!

மெய் பொருள் காண்பது அறிவு!

கடல் கடந்து சென்ற இடத்தில் தனக்கு உணவு தந்து உபசரித்த பெண்ணிடம் வற்புறுத்தி சாதியைக் கேட்டுவிட்டு, அது வெளியே தெரிந்து, கடும் கண்டணங்கள் எழுந்தவுடன், சம்பந்தப்பட்ட குடும்பப் பெண்ணின் கணவரைத் தொடர்பு கொண்டு, மன்றாடி சமாதானப்படுத்திவிட்டு, தான் அப்படிப் பேசவில்லை எனப் பேசிக் கொள்வதற்கு அனுமதி பெற்று இருக்கிறார், பட்டிமன்ற பேச்சாளர் ராஜா!

பேசாத ஒன்றைப் பேசியதாக தன் மீது குற்றசாட்டு வைக்கப்பட்ட ஒருவர் என்ன செய்திருப்பார்? எப்படி என் மீது பொய் குற்றச்சாட்டு வைக்கலாம்? இது அவதூறு அல்லவா? எனவே, நீங்கள் உண்மையைச் சொல்லி விளக்கம் அளியுங்கள்! என்றல்லவா அறச் சீற்றம் அடைந்திருக்க வேண்டும்.

ஏனென்றால், ராஜா நேற்றைய தினம் முழுவதும் வாங்கிய பல்லாயிரணக்கான செருப்படி என்பது சாதாரணமானதல்ல. இவ்வளவு  செமத்தியான வசவுகளுக்கு பிறகும்,  அறச் சீற்றம் இல்லாமல் ஒருவன் நயந்தும். உருகியும் பேச முடியும் என்றால், அவன் கடைந்தெடுத்த தொழில் முறைப் பொய்யனே!

என்ன சாதி? என்று கேட்ட குற்றத்தை விடவும், கேட்டு அது வில்லங்கமான பிறகு அதை நேர்மையோடு எதிர்கொள்ளும் துணிவின்றி, பொய் பேசி, கடவுளை இழுத்து வைத்து சமாளிப்பதும், பிப்ரவரி 4 ஆம் தேதி நடந்த சம்பவத்தை ஒன்பதாம் தேதி வரை அமைதியாக இருந்துவிட்டு சொல்வது ஏன்? என தன்னை யோக்கியனாக வெளிப்படுத்திக் கொள்ள பாதிக்கப்பட்டவர்களையே  குற்றவாளி ஆக்குவதும் அதைவிட கொடிய குற்றம்.

அந்த நேர்மை இல்லாத கோழை அமெரிக்காவிற்கு போன் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரோ,  ”ஐயா நீங்கள் பேசியது உண்மை. அது என் மனைவியின் மனதை வேதனைப்படுத்தியது நிஜம்’’ என்ற பிற்பாடும் கூட, நைச்சியமாகவும், உருக்கமாகவும் பேசி,  ”நான் இப்படி பேசி விளக்கமளித்துக் கொள்கிறேன். நீங்கள் என்னை அம்பலப்படுத்திவிடக் கூடாது” என முன்னேற்பாடு செய்துவிட்டு பேசுகிறார் பாருங்கள். அங்கிருக்கிறது, அவரது சாமார்த்தியமும், சாதுரியமும்! ஆனால், அவரிடம் சத்தியம் தான் இல்லை.

ஒரு பிரபலமனிதர் நமக்கே போன் செய்து மன்றாடுகிறாரே என்பது ஒருபுறம், அங்கே  அமெரிக்காவில் நிகழ்ச்சியை ஏற்பாடு அமைப்பினரின்  பொல்லாப்புக்கு ஆளாகி தனிமைப்பட நேரிடுமோ என்ற அச்சம் மறுபுறமாக அவரும் ”சரி, தாரளமாக பேசிக் கொள்ளுங்க” என்று சொல்லிவிட்டாராம்.

இதோடு யாரும் இது பற்றி உங்களிடம் பேசிவிடக் கூடாது உங்கள்  மனைவியின் சகோதரரை தொடர்ந்து எழுதிவிடாமல் கட்டுபடுத்த வேண்டிய பொறுப்பும் உங்களுக்கு இருக்கிறது, என்று சொன்னாரோ என்னவோ?

ஆயினும் நடந்த விவகாரங்களை அண்ணன் கார்த்திகேயன் ஃபாஸ்டுரா அழுத்தமாக வெளிப்படுத்திவிட்டு, ”என் தங்கைக்கு பல ரூபங்களில் அழுத்தம் தரப்படுகிறது. மாதொரு பாதகன் எழுதிய பெருமாள் முருகனுக்கு தரப்பட்டது போல” என்று சொல்லி’ ”என் தங்கை ஒரு கோழை” என்றதோடு, நிறுத்திக் கொண்டார். அவர் சொல்லாமல் தவிர்த்தது, தங்கையின் கணவரும் கோழை என்பதாகும். அப்படிச் சொன்னால் அது தங்கை வாழ்வை பாதிக்கும் என அண்ணனாக அவர் நினைப்பதை நாம் குற்றம் சொல்ல முடியாது.

இதில் அந்த தங்கையும், அவர் கணவரும் மட்டுமல்ல, சம்பவத்தின் போது அந்த தங்கையின் உடன் இருந்தவர்களும், இந்த உண்மை தெரிந்தும் ராஜவுக்கு சாதகமாக அமைதி காக்கும் பேச்சாளர் பாரதி பாஸ்கரும், கேட்ஸ் எனப்படும் அமெரிக்க தமிழ் அமைப்பினரும் கோழைகளே.

இப்படி தமிழகம் தழுவிய அளவில் விவாதிக்கப்பட்ட ஒரு விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களே உண்மையை  மறைத்துக் கொண்டு, அமைதியானதன் மூலம்,  தாங்கள் பொய்யர்களாக பார்க்கப்படும் பேரவல நிலைக்கு தங்களை தாழ்த்திக் கொண்டார்கள்.  அவர்கள் தங்களை மட்டும் தாழ்த்திக் கொள்ளவில்லை. அவர்களை தாங்கிப் பிடிக்க ஓடோடி வந்த லட்சோப லட்சம் சாதி மனோபாவமற்ற நல்லோர்களையும் சங்கடத்திற்கு ஆளாக்கிவிட்டனர்.

‘கோழைகளுக்கு ஒருபோதும் விடுதலை இல்லை. அவர்கள் தங்களைத் தாங்களே சிறையில் பூட்டிக் கொள்வதே தற்காப்பு’ என்று நினைக்கும் வரை!

இந்தக் கோழைத்தனத்தில் இருந்து தமிழ்ச் சமூகம் விடுபடாத வரை, சாதிய மனோபாவத்தில் உழல்பவர்கள்  தான் சாதித்துக் கொண்டே போவார்கள்!

சாவித்திரி கண்ணன்.

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time