திமுக தரப்பில் ஒருவழியாக பேச்சு வார்த்தைக்கு குழு அமைப்பதாக கூறிவிட்டனர். ஆயினும்,
கைகோர்த்தும், இணைய முடியாமல்
விலகி நின்றாலும், வெட்டிவிட முடியாமல்
ஒட்டியும், ஒட்டாமலும் இருக்கும் ஒரு உறவாக காங்கிரஸ் – திமுக உறவு உள்ளது குறித்த ஒரு அலசல்;
ராகுல் காந்திக்கும், ஸ்டாலினுக்கும் பரஸ்பரம் நல்ல அன்பும், மரியாதையும் இருக்கிறது.
ஆனால், தமிழக காங்கிரஸ் தன்னுடைய தனித்துவத்தை இழந்து பெரிதும் திமுகவை சார்ந்துள்ள நிலைமைக்கு சென்று கொண்டிருப்பதாக பல தகவல்கள் ராகுல் காந்தி கவனத்திற்கு தொடர்ந்து கொண்டு செல்லப்பட்டுள்ளது. தமிழக காங்கிரசின் படித்த முகங்களாகவும், இளம் தலைவர்களாகவும் அறியப்படும் ஒரு வலுவான கொள்கை பற்றுள்ள – முன்னணியாளர்களாகவும், களப் பணி தளபதிகளாகவும் உள்ள சுமார் 60 நபர்கள் கொண்ட குழுவினரில் சிலர் நேரடியாகவும் மற்ற சிலர் இமெயில் மூலமாகவும் ராகுல் காந்திக்கு பல அதிர்ச்சிகரமான தகவல்களைக் கூறி, தமிழக காங்கிரஸ் திமுகவின் ஒட்டுண்ணியாக மாறி வருகிறது என்பதை விளக்கி உள்ளனர்.
ஆளும் திமுகவிடம் காங்கிரஸ் பேனரில் ஒட்டி உறவாடி பலர் என்னென்ன தனிப்பட்ட பொருளாதார ஆதாயங்களை அடைந்து கொண்டிருக்கின்றனர் என்பதையும் , அவர்கள் காங்கிரசின் வளர்ச்சிக்கு எந்த துரும்பையும் கூட கிள்ளிப் போடத் தயார் இல்லாதவர்களாக இருப்பதையும் பல சம்பவங்களுடன் அவர்கள் ராகுல் காந்திக்கு தெரிவித்தார்களாம்….!
இதையடுத்து தான் காங்கிரஸ் யாருடன் கூட்டணி வைக்க வேண்டும்? என்பது குறித்து தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளை டெல்லிக்கு அழைத்து ஒரு ஆலோசனை கூட்டத்தை காங்கிரஸ் தலைமை நிகழ்த்தி அவரவர் கருத்துக்களை மனம் திறந்து பேசுங்கள்’’ எனக் கூறியுள்ளது.
திமுகவோடு கூட்டணி தொடர வேண்டும் என்று கூறுபவர்கள் அதற்கான வலுவான காரணங்களாக, ”திமுகவின் உறுதியான பாஜக எதிர்ப்பு, திமுகவின் கூட்டணியால் காங்கிரஸ் கடந்த காலத்தில் வென்ற நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் ரிசல்டுகள், திமுகவின் வலுவான கட்சி கட்டமைப்பினால் பூத் முகவர்கள் மற்றும் பிரச்சார பலம் பெறுவது..” எனப் பலவற்றை பட்டியலிட்டு சொல்லி உள்ளனர். அத்துடன் ஸ்டாலினின் ஆட்சி நிர்வாகத்தை வாயாற புகழ்ந்து அவர்கள் பேசியதையும் ராகுல் காந்தி கணக்கில் எடுத்துக் கொண்டார்.
”திமுக உறவை தவிர்க்க வேண்டும். கட்சி சுயேட்சையுடன் செயல்படவும், புதிய இளைய சக்தியோடு உறவாடவும், வெகு ஜனத்தளத்தில் வேகமான வீச்சை பெறவும், அதிக தொகுதிகள் கேட்டு ஆட்சியில் பங்கு பெறவும் த.வெ.க கூட்டணியே உகந்தது..” என்று கூறியவர்கள் கொஞ்சம் குறைவாகவே இருந்துள்ளனர். ஆயினும் இவர்கள், ”திமுகவுடனான கூட்டணி கட்சியின் எதிர்கால நலனுக்கு உகதந்தல்ல. மக்களை பாதிக்கும் பிரச்சினைகள் எதையும் நாம் கேட்க முடியாமல் திமுகவுடன் தொடர்ந்து செயல்பட்டத்தில் கட்சி பலவீனமடைந்துள்ளது” என்று அழுத்தமாகவே கூறியுள்ளனர்.
இதையடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் பிரதிநிதியாக கனிமொழி ராகுல் காந்தியை சந்தித்து,”காங்கிரஸ் கூட்டணிக்கு வருவதில் விரைந்து முடிவெடுக்க வேண்டும். ஆட்சியில் பங்கு என்பதை தமிழக மக்கள் விரும்பமாட்டார்கள். இது வரை தனிக்கட்சி ஆட்சியே மக்களின் விருப்பமாக இருந்துள்ளது. கூடுதலாக சில இடங்கள் வேண்டுமானால் காங்கிரசிற்கு தருகிறோம்” எனக் கூறியுள்ளார்.

எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட ராகுல் காந்தி, ”தேர்தல் குழுவை நாங்கள் அழைத்துள்ளோம். நீங்களும் அவ்விதம் அழைத்தால் அடுத்த கட்ட நகர்வுக்கு நல்லதாக இருக்கும்” எனக் கூறியுள்ளார். ”அதை தலைவரிடம் சொல்கிறேன்” என்று சொல்லிவிட்டு வந்த பிறகும் திமுக தரப்பில் குழு போடவில்லை.
மாறாக, ராகுல்காந்தி பிடி கொடுத்து பேசவில்லை என்பதால் சோனியாவிடம் திமுக எம்.பிக்கள் சிலர் பேசியுள்ளனர்.
இதையடுத்து ராகுலிடம் சோனியா பேசி இருக்கிறார்.
”திமுகவுடன் கூட்டணி வைப்பதில் நீண்ட இழுபறியாக உள்ளதே என்ன?” எனக் கேட்கவும், அதைத் தொடர்ந்து நீண்ட உரையாடல் நடந்துள்ளது. இது குறித்து டெல்லி காங்கிரஸ் வட்டாரத்தில் பேசிய போது கிடைத்த தகவல்களாவன;
இந்த உரையாடலில் ராகுல் காந்தி தன் எண்ணவோட்டங்களை அப்படியே அம்மாவிடம் கூறி விளக்கியுள்ளார்;
திமுக தலைவர் மீது எனக்கு எதுவும் எதிர்மறையான கருத்தும் இல்லை. ஆனால், அந்த கூட்டணியால் திமுகவானது மாநில காங்கிரசிற்குள் ஹையர்ஹேண்ட் கொண்டுள்ளதாக நமது கட்சிக்காரர்கள் திமுக தலைமை மீது அதிக ஈடுபாடு காட்டுவதை அவர்களின் பேச்சிலேயே நான் உணர்கிறேன்.தொலை நோக்கில் பார்க்கையில் இது கட்சியின் வளர்ச்சியை ரொம்பவே பாதிக்கும்.

மேலும், சென்ற பாராளுமன்றத் தேர்தலின் போது சு.திருநாவுக்கரசு, செல்லகுமார், ஜெயக்குமார், பிரவீன் ஆகியோருக்கு எந்தத் தொகுதியும் தரக் கூடாது என கண்டிஷன் போட்டு ஒரு சங்கடத்தை உருவாக்கியது. நம் கட்சியில் யாருக்கு சீட்டு ஒதுக்குவது என்பதையே நம்மால் முடிவு செய்ய முடியாமல் போவது ஏற்புடையதல்ல. தற்போதும் கூட சட்டமன்றத் தேர்தலில் ஒரு சிலருக்கு நாம் சீட்டு தரக் கூடாது என்பதை திமுக நிரப்ந்திக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
மேலும்,காங்கிரஸ் கட்சியிடம் கலந்துரையாடவோ அல்லது குறைந்தபட்சம் தகவலைக் கூடத் தராமல் காங்கிரசில் பலருக்கு திமுக அரசில் சில பதவிகள், சில பொறுப்புகள், வாய்ப்புகள் தரப்பட்டுள்ளன. அத்துடன் திமுக அரசை பயன்படுத்தி பல்வேறு காண்டிராக்ட் பெற்று சிலர் நன்கு பொருளாதார ஆதாயம் அடைகிறார்கள். ஆனால், இவர்கள் காங்கிரசிற்கு விசுவாசம் காட்டி கட்சியை வளர்க்காமல் திமுகவிடம் அதிக விசுவாசம் பாராட்டுகின்றனர். காங்கிரசின் மாநில தலைமை நிர்வாகிகள் தொடங்கி பல மாவட்டங்களில் காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் அங்குள்ள திமுக அமைச்சர்களின் செல்வாக்கான பிடிக்குள் இருப்பதாக நிர்வாகிகளிடையே குமுறல்கள் உள்ளன. ஆக, கட்சியின் தனித் தன்மையை மீட்டெடுக்க திமுகவிடம் இருந்து விலகி சில சோதனை முயற்சிகளில் நாம் ஈடுபட்டே ஆக வேண்டும். இது காங்கிரசிற்கு சவால் தான் என்றாலும் முயற்சி செய்து பார்க்க விரும்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.
”த.வெ.க தலைவர் விஜய் அரசியலில் மிகவும் அரைகுறை ஆளாக இருக்கிறார். அவரிடம் பாஜக எதிர்ப்பு உணர்வு போதுமானதாக இல்லை. திமுகவுடன் போவது பாதுகாப்பானது. மற்றபடி உன் விருப்பம்” என்று கூறிவிட்டாராம்.
இதையடுத்து ராகுல்காந்தி திமுகவிடம் அதிகார பகிர்வு குறித்து பேசுவதை முற்றிலும் தவிர்க்கும் மனநிலைக்கு சென்றதோடு, தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளில் கணிசமனவர்கள் தன்னுடைய மனவோட்டத்திற்கு ஒத்துவராத நிலையில் இருக்கும் யதார்த்த நிலை கருதி, மாநில நிர்வாகிகளிடம் அதிகார பகிர்வை வலியுறுத்த வேண்டாம் எனக் கூறியுள்ளார். ஆயினும், ஒரு ஆங்கில காட்சி ஊடகத்தின் வழியாக ஆட்சியில் பங்கு தரமாட்டோம் என ஸ்டாலின் அதிரடியாக பேசி காங்கிரசை கொஞ்சம் தர்ம சங்கடத்திற்கு ஆளாக்கிவிட்டார்.
இப்படியாக காங்கிரஸ் திமுக உறவில் இன்னும் ஒரு சுமூகமான சூழல் உருவாகவில்லை. திமுக ”பிப்ரவரி 22க்கு பிறகு தான் காங்கிரஸ் குழுவோடு தங்கள் குழு பேசும்” என தள்ளிப் போட்டுள்ளது. அதற்குள் தேர்தல் அறிவிப்பு வந்தால், காங்கிரஸ் த.வெ.க பக்கம் போவதற்கான வாய்ப்பு குறைந்துவிடும்… என்றே கணிக்கிறேன்.
சாவித்திரி கண்ணன்
























Leave a Reply