காந்தியப் பற்றாளரான பாலசுப்பிமணியம் முத்துசாமி மனிதவள மேலாளராக தான்சானியா நாட்டில் பணிபுரிகிறார். குமாரப்பாவின் கொள்கைகள் மீது ஆர்வமுள்ளவர். சென்னை காந்தி கல்வி நிலையத்தில் அவருடன் மனித வளம், பொருளாதாரம், காந்தியம் குறித்த ஒரு நேர்காணலை பீட்டர் துரைராஜ் நிகழ்த்தியதன் சாராம்சம்;
இன்றைக்கும் காந்தியைப் போன்றே நம்மிடையே வாழும் ஆளுமைகளைக் கண்டறிந்து இன்றைய காந்திகள் என்ற நூலை எழுதி உள்ளீர்கள்! இந்த நூல் உருவானது எப்படி?

வி.பி.சிங் அரசாங்கத்தில் திட்டக்குழுவின் உறுப்பினராக இருந்தவர், L.C.ஜெயின். இவர் ஒரு காந்தியவாதி. L.C.ஜெயின் யாரென்றே தெரியாத ஒருவர் ‘தேசத்துரோகி’ என, வாட்ஸ் அப் குழுவில் போகிற போக்கில் எழுதியிருந்தார். அமுல் நிறுவனம் நடத்தும் மேலாண்மைக் கல்லூரியில் நான் படிக்கும் போது, அங்கு L.C. ஜெயின் வந்திருக்கிறார். இந்திரா காந்தி காலத்தில், கூட்டுறவு அமைப்புகளை நிறுவி, அதன் வழியாக விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டு வந்தவர். எனவே, லட்சுமி சந்த் ஜெயினைப் பற்றியும், ‘வெண்மைப் புரட்சியின் தந்தை’ எனப்படும் வர்கீஸ் குரியனைப் பற்றியும் கட்டுரைகள் எழுதினேன்.
இதைப் போல காந்தியக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் மற்றவர்களைப் பற்றியும் எழுதுங்களேன் என்று ஜெயமோகன் சொன்னார். அதன் விளைவே இந்த நூல். அதில் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையை நிறுவிய டாக்டர். வெங்கிடசாமி, தண்ணீர் மனிதர் ராஜேந்திர சிங், தகவல் அறியும் உரிமைச் சட்டம் வரக் காரணமாக இருந்த அருணா ராய் உள்ளிட்ட பத்து ஆளுமைகளைப் பற்றி எழுதியுள்ளேன். இதனை திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் காந்தியவாதி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் வெளியிட்டார்.
இந்த நூலில் நீங்கள் எழுதியுள்ள சோனம் வாங்க்சுக் இப்போது சிறையில் இருக்கிறாரே? 
இன்றைய காந்திகள் நூலில் நூலை வெளியிட்ட ஈரோடு, தன்னறம் அமைப்பினர், சோனம் வாங்க்சுக் – ஐ சந்தித்து இந்த நூலை அளித்தனர். அவர் வாழும் லடாக் மலைப்பகுதியில் உள்ளது. மலைவாழ் மக்களின் வாழ்க்கை முறை வித்தியாசமானது. காஷ்மீரில் உருது பேசுகிறார்கள். லடாக்கியர்கள் பேசும் மொழி வேறு. எனவே, அங்கே பிரச்சினைகள் இருந்தன. லடாக் ஒரு தன்னாட்சி பெற்ற நிலப்பரப்பாக மாறுகையில், லடாக்கியர்கள் பிரச்சினைகள் தீரும் என சோனம் வாங்க்சுக் நினைத்தார், ஆனால், பாஜக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை. அவற்றை நிறைவேற்றக் கோரி 21 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். அரசு பேச்சுவார்த்தை நடத்தவில்லை. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. லடாக்கில் இருந்து தில்லி நோக்கி யாத்திரையை மேற்கொண்டார். அப்பவும் அரசு பிரச்சினைகளைத் தீர்க்க முன்வரவில்லை. மீண்டும் உண்ணாவிரதம் இருக்கும் போது, வன்முறை எழுந்தது. அதைச் சாக்காக வைத்து,. அவரைக் கைது செய்துள்ளனர். இது தேவையற்றது.
மக்கள் நல உதவிகள் ஒரு முதலீடு என்று கூறி வருகிறீர்களே?
‘கல்வி என்பது ஒரு விதையை விதைப்பது போன்றது. அதன் பலன் பல மடங்கு திரும்பக் கிடைக்கும்’ என்று காந்தி சொல்லுவார். தமிழ்நாட்டில் மகப்பேறு மரண விகிதம் குறைவு; குழந்தை மரண விகிதம் குறைவு. பிறக்கின்ற குழந்தைகள் உயிரோடு இருக்கும் என்ற நம்பிக்கை வந்துவிட்டதால், பெற்றோர்கள் ஓரிரு குழந்தைகளோடு நிறுத்திவிடுகிறார்கள். வலுக்கட்டாயமாக குடும்பக் கட்டுப்பாடு அமலாக்கப்பட்ட சீனாவில் பிறக்கும் குழந்தைகளின் விகிதத்தை விட – தமிழ்நாடு, கேரளா மாநிலங்களில் குழந்தை பிறப்பு விகிதம் குறைவு.

எம்ஜிஆர் சத்துணவுத் திட்டம் கொண்டு வந்த போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக அரசியல் காரணங்களுக்காக அதனை எதிர்த்தது.1983 ல் திட்டக்குழுவின் துணைத் தலைவராக இருந்த மன்மோகன் சிங் சத்துணவுத்திட்டத்திற்கு ஒதுக்கீடு வழங்குவதை விமரிசித்தார். ஆனால் முதலமைச்சராக இருந்த எம்ஜிஆர், பிரதமரான இந்திரா காந்தியைச் சந்தித்து ஒப்புதல் பெற்றார். அதே மன்மோகன் சிங் பத்து ஆண்டுகள் கழித்து, 1993 ல், நிதியமைச்சராக சத்துணவு திட்டத்தை இந்தியா முழுவதும் அமலாக்கினார். சத்துணவு திட்டத்தை எதிர்த்த கருணாநிதி, மதிய உணவு வழியாக குழந்தைகள் தினம் ஒரு முட்டை சாப்பிட வழிவகுத்தார். அனைவருக்குமான ரேஷன் திட்டத்தை கருணாநிதி அமலாக்கினார். இதைத்தான் ஜான் ட்ரீஸ், அமர்த்தியா சென் போன்ற பொருளாதார அறிஞர்கள், மக்கள் நல அரசு + சந்தைப் பொருளாதார அணுகுமுறை என வலியுறுத்தி வந்தனர். இதனால், தமிழ்நாட்டில் பட்டினிச் சாவு தடுக்கப்பட்டது.
வரிவிதிப்பில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று சொல்கிறீர்களே ?
சீர்திருத்தம் என்ற பெயரை வைத்து நல்லது என்று எல்லோரும் நினைக்கிறார்கள். அது தவறு. ஜிஎஸ்டி வரிவிதிப்பு, அதிகாரத்தை ஒரே இடத்தில் குவித்து மத்தியத்துவம் ஆக்கியுள்ளது. தேங்காய் எண்ணெய்க்கு எல்லா மாநிலங்களுக்கும் 18% வரி போட ஒரு முயற்சி நடந்தது. கேரளா, தமிழ்நாடு போன்ற உற்பத்தி மாநிலங்களில் உள்ள மக்கள் வாழ்வாதாரம் இதை நம்பியுள்ளது. கேரளாவில் மக்கள் இதனை உணவுத் தேவைக்கு பயன்படுத்துகிறார்கள். எனவே அந்தந்த மாநில அரசுகள் உள்ளூர் நிலமைக்கு ஏற்றபடி வரி போட வேண்டும்.
அமெரிக்காவில் ஒன்றிய அரசு, மாநில அரசு, உள்ளூர் அரசு என மூன்றுக்கும் வரிவிதிக்கும் அதிகாரம் உள்ளது. அங்கு நகராட்சிகளும் வருமான வரி விதிக்கலாம். இப்போது உள்ள ஜிஎஸ்டி முறை, பழங்கால முகலாய ஆட்சியைப் போல டில்லியில் முடிவு செய்யப்பட்டு, வரியை வசூலித்து டெல்லி சுல்தானுக்கு கொடுப்பதைப்போல உள்ளது. பொருளாதார அறிஞர், அரவிந்த் சுப்பிரமணியன் மாநில அரசுகள் தங்கள் வரி இறையாண்மையை விட்டுக் கொடுத்துள்ளன என்று பாராட்டுகிறார். இது எப்படிச் சரியாக இருக்கும் ? மாநிலத்திற்கு மாநிலம் வெவ்வேறு சூழல்கள் உள்ளன. ஒரே மாதிரியான வரிவிதிப்பு சரியல்ல. இந்த வரிவிதிப்பு முறை அரசியல் சட்டத்திற்கு விரோதமானது. உலகின் வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, சீனாவில் கூட இது போன்ற வரி விதிப்பு இல்லை.
விவசாயம் நலிந்து வரும் நிலையில் விவசாயிகள் பலனடைந்து லாபம் ஈட்ட நீங்கள் சொல்லும் ஆலோசனை என்ன?

உணவு இறையாண்மை ஒரு நாட்டின் தவிர்க்க முடியாத தேவையாகி விட்டது. விவசாயத்தில் தன்னிறைவைப் பெற வேண்டும். ஒரு ஏக்கர் நிலத்தில்( 43,560 சதுர அடி), 2000 சதுர அடிகளில் சூரியஒளி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்தால், விவசாயி தனது தேவை போக, மிகை மின்சாரம் மூலம் மாதம் ஒன்றுக்கு ரூ. 5000 வீதம், ஆண்டிற்கு ரூ.60,000 இலாபம் பெற முடியும். இதனை தமிழக அரசு கட்டாயமாக மாநிலம் முழுவதும் அமலாக்க வேண்டும். இப்படிச் செய்தால் விவசாயத்தை தமிழ்நாட்டில் இலாபகரமானதாக மாற்ற இயலும். இலாபம் இல்லையென்றால் உணவு உற்பத்தி குறைந்துவிடும். இப்போது 25 இலட்சம் விவசாயிகள் இலவச மின்சாரம் பெறுகிறார்கள். ஒரு யூனிட் மின்சாரத்திற்கு ராமநாதபுரத்தில் உள்ள அதானி மின் உற்பத்தி யூனிட்டுக்கு ரூ.6.25 தருகிறார்கள். இதோடு ஒப்பிடுகையில், உழவர்களுக்கு நல்ல விலை தரலாம்>
அரசுத் துறை பொது நிறுவனங்கள் என்றாலே பெரும்பாலும் நஷ்டம் என்றாகிவிட்டது. பொதுத் துறை நிறுவனங்களை லாபத்துடன் நடத்த முடியுமா?
தமிழ்நாடு அளவுக்கு மக்கள் தொகையுள்ள ஒரு நாடுதான் இங்கிலாந்து. அங்குள்ள தேசிய சுகாதார சேவைகளின்( National Health System) கண்சிகிச்சைப் பிரிவிற்கு ஆகும் செலவை விட, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மூலம் ஆகும் செலவு மிகக்குறைவு.
அரவிந்த் மருத்துவமனையில் 30 % இலவச சிகிச்சை, 30% நோயாளிகளுக்கு ஐம்பது சத கழிவில் சிகிச்சை, மற்றவர்களுக்கு கட்டண சிகிச்சை என்ற முறையை வைத்துள்ளனர். அப்படி இருந்தும் அரவிந்த் கண் மருத்துவமனை லாபம் ஈட்டுகிறது. இரண்டையும் ஒப்பிட்டு ஓர் ஆய்வு (case study) நடந்துள்ளது. அரவிந்த் கண் மருத்துவமனை எட்டு இலட்சம் அறுவை சிகிச்சைகளை ஆண்டுதோறும் செய்கிறது. எனவே, இலாபம் தரும் வகையில் அரசு நிறுவனங்களை நடத்துவது சாத்தியமே !
அமுல் நிறுவனத்தின் இலாபத்தின் பெரும் பகுதி பால் உற்பத்தியாளர்களும், நுகர்வோருக்கும் கிடைக்கிறது. ஆனால், தில்லியில் ரிலையன்ஸ் நிறுவனம் ஆரம்பித்த பால் தொழில் தோல்வி அடைந்து விட்டது. குமரப்பாவின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் வகையில் எழுத முடிவு செய்துள்ளேன். உற்பத்தி ஆகும் இடத்திலேயே முடிந்த வரை நுகர்வு இருக்க வேண்டும்.
சிறு நிறுவனங்களுக்கு ஆதரவாக பேசுகிறீர்களே?
இந்தியாவில் 50 சத மக்களின் வாழ்வாதாரம் வேளாண்மை மூலம் நடைபெறுகிறது. அதற்கு அடுத்து மளிகை, லேத் பட்டறை, வாகனங்களை பழுதுபார்ப்பது, போன்ற சிறு நிறுவனங்கள் நிறைய பேருக்கு வேலை தருகின்றன. இவைகளில் தானியங்கி இயந்திரங்கள் இருப்பதில்லை. இவைகளுக்கு டெண்டர்களில் முன்னுரிமை தரலாம். வங்கிகள் வழியே இவற்றுக்கு மிகக் குறைவான வட்டியில் கடன் தரலாம். மேல்நாட்டு பல்கலைக்கழகங்களில் படித்த மனநிலை, ஜமீன்தார் மனோபாவம், புள்ளிவிவரங்கள் வாயிலாக பார்ப்பது போன்ற காரணங்களால், இன்றைய திட்ட வடிவமைப்பாளர்களால், சிறு நிறுவனங்களின் முக்கியத்துவத்தை உணர முடிவதில்லை. அரசியல் சட்டத்தின் முகப்புரையில் உள்ளபடி சமூக, பொருளாதார நீதியை வழங்குவதே ஒவ்வொரு அரசின் கடமையாக இருக்க வேண்டும். அப்படிச் செய்தால், இந்தியாவில் ஏழ்மை ஒழியும். நாடு மிக வேகமாகவும் வளரும்.
மகாத்மா காந்தி வேலைத்திட்டத்தை அரசாங்கம் மாற்றி உள்ளது பற்றி …
2014 க்கும் 2024 க்கும் இடையில், ஐக்கிய முன்னணி அரசாங்கம் குறைந்தபட்ச திட்டம் மூலம் பல நல்ல திட்டங்களை உருவாக்கியது. உணவுப் பாதுகாப்புச் சட்டம்,தகவல் அறியும் உரிமைச் சட்டம், கல்வி உரிமைச் சட்டம் வந்தன. அப்படி வந்த ஒரு சட்டம்தான் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதியளிப்புச் சட்டம். இதனால் 14 முதல் 20 கோடி பேர் வறுமைக் கோட்டில் இருந்து வெளியேறினர். இது ஒரு புரட்சிகரமானச் சட்டம். இப்போது வந்துள்ள மாற்றப்பட்ட சட்டம், முன்பு உருவாக்கிய மேம்பாடுகளைச் சிதைத்துவிடும்.
நேர்காணல்; பீட்டர் துரைராஜ்
























Leave a Reply