பிஎம் கேர்ஸ் ஃபண்ட் என்பது பிரதமர் பதவிக்கு கிடைக்கும் நன்கொடை! இதன் முழு கணக்கையும் அரசு சம்பளம் பெறும் பிரதமர் அலுவலக அதிகாரிகள் நிர்வகிக்கிறார்கள். இதை இந்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் பார்வைக்கே வராமல் கமுக்கமாக மறைப்பது மாபெரும் அதிகார துஷ்பிரயோகமாகும் என அலசுகிறார், ஓய்வு பெற்ற சிஏஜி உயரதிகாரி;
இந்திய பிரதமர், மார்ச் 27, 2020 அன்று ‘அவசர காலங்களில் குடிமகன்களுக்கான உதவி மற்றும் நிவாரண நிதி’ (பிஎம் கேர்ஸ் ஃபண்ட்) என்ற ஒன்றை தன் பதவியின் பெயரில் அறிவித்து மக்களிடமிருந்து நன்கொடை கேட்டார். அப்படி நன்கொடை கேட்ட காலம் (கொரானாவின் கோரப்பிடி), கேட்டவர் பதவியின் உச்சநிலை கருதி பெரும் பணம், (அதாவது 31 மார்ச் 2020 வரையான சில நாட்களில் மட்டும் வந்து சேர்ந்த பணம் ரூ. 3,076.25 கோடி) நன்கொடையாக வந்தது.
முன்பே பிரதமர் தேசிய நிவராண நிதி, தேசிய பேரிடர் மேலாண்மை நிதி என இரண்டு நிதிகள் இருக்கும் போது, இப்படி வேறொரு நிதி தேவையா? (WP (C) No.546 of 2020) என்ற வழக்கில், உச்சநீதிமன்றம் அந்த அறக்கட்டளை ஒரு பொது தொண்டு அறக்கட்டளை, அதற்கு அரசு நிதி ஏதும் தராததால், அதை தணிக்கை செய்ய சிஏஜிக்கு வாய்ப்பு இல்லை என்று கூறியது (18 ஆகஸ்ட் 2020). பின்னர், தகவல் அறியும் உரிமை சட்டம் கீழ் இந்நிதிபற்றிய தகவல்கள் அளிக்க முடியாது என்றார்கள்.
தற்போது இந்நிதி பற்றி பாராளுமன்றத்திலும் கேள்வி எழுப்பமுடியாது என்கிறார்கள். சிஏஜியும் அமைதியாக இருந்து வருகிறார். இவை எல்லாம் சரிதானா?
சட்டத்தை மீறிய பிஎம் கேர்ஸ் பண்ட்
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி, அரசின் செயல்கள் யாவும் அமைய வேண்டும். ஆனால், இந்நிதி, அரசின் தலைமை நிர்வாகியால், பாராளுமன்றத்தின் ஒப்புதல், சட்டபூர்வ ஆதரவு இல்லாமலும், உரிய நிர்வாக அதிகாரமெதுவுமின்றியும், பிரதமரின் அலுவலகத்திலேயே அமைக்கப்பட்டது என்பது சட்டத்திற்கு அப்பாற்பட்ட செயலாகும்.

சிஏஜியின் தணிக்கையின் அவசியம்
பி.எம்.கேர்ஸ் நிதிக்கு பட்டய கணக்காளர்களின் சான்று போதாதா? என கேள்வி எழலாம். ஆம், போதாது. அவர்களின் தணிக்கை ஓர் அளவை தாண்டி போக முடியாது. ஆனால், சிஏஜியின் தணிக்கை வரம்பு, வரவு-செலவு பதிவுகளை மட்டுமல்லாமல், அனுமதி, ஒழுங்கு மற்றும் நியாயத் தன்மை தணிக்கையையும் உள்ளடக்கியது.
அரசின் நிதி நிர்வாகத்தை பொருத்தவரை, எத்தகைய உயர் பதவியிலிருப்பவரையும், நீதித்துறை உட்பட, கேள்வி கேட்கும் வகையில் அதிகாரம் படைத்தது, சிஏஜி. இதற்கு அனைத்து பாதுகாப்புகளும் அரசியலமைப்பு சட்டத்தால் வழங்கப்பட்டுள்ளது. டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் வார்த்தைகளில் சொன்னால், ‘அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள அதிகாரிகளில் மிக முக்கியமானவர் சிஏஜி, நீதித் துறையை விடவும்’.
சிஏஜியின் தணிக்கை இல்லாமல், நிர்வாக அரசின் முழு வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்பாக்கம் சாத்தியமற்றது — அவர் அரசு அலுவலகங்களில் உள்ள அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்ய முழு அதிகாரம் பெற்றவர்.
பாராளுமன்ற ஜனநாயகத்தில் அரசு நிர்வாகம்
மத்திய, மாநில அரசுகள், அரசியலமைப்பு சட்டத்தின்படியும், அதன் கீழ் இயற்றப்படும் விதிகள், மற்றும் ஏற்படுத்தப்பட்ட அதிகாரங்கள் வழிப்படி மட்டுமே பொது நிருவாகமானாலும், நிதிநிருவாகமானாலும் செயல்படவேண்டும்.
அரசியலமைப்பு சட்டத்தின்படி, பாராளுமன்ற அல்லது சட்ட சபையின் அனுமதியின்றி, அரசு ஒரு பைசாகூட வசூலிக்கவும் முடியாது, அப்படி வசூலிக்கப்பட்ட பணத்தை செலவழிக்கவும் கூடாது. இப்படியான அரசு நிதிகள் ஒருங்கிணைந்த அரசு நிதி என்ற பெயரில் பராமரிக்கபடுகிறது.
சிஏஜியின் தணிக்கை கடமை
இந்திய அரசியலமைப்பு சட்டப்படி சிஏஜியின் கடமை, அதிகாரம் மற்றும் சேவை நிபந்தனைகள் சட்டம், 1971- ன் படி, சிஏஜி அரசின் அனைத்து கணக்குகளையும் ஆய்வு செய்வதோடு, அரசு அலுவலகங்களின் அனைத்து கணக்குகளையும் தணிக்கை செய்து அதன் முடிவுகளை பாராளுமன்றம், சட்டமன்றங்களுக்கு சமிர்பிக்க வேண்டும்.
அரசு செலவினங்களை பொருத்த வரை, பொதுவான தணிக்கை நோக்கான நிதியிழப்பு, நிதிகையாடல், தேவையற்ற செலவுகள், விதி மீறல் ஆகியவற்றை சிஏஜி சுட்டிக்காட்டும். அனுமதிக்கப்பட்ட வகையில் நிதி செலவிடப்பட்டு இருக்கிறதா? என்று பார்த்து, அதில் விதி மீறல்கள் இருந்தால் அவை பற்றிய அறிக்கையை சமர்பிக்கும் என்ற கடமை சிஏஜி க்கு உண்டு (பிரிவு 13 (அ)).
இவ்வளவு ஏன்? அரசின் டெலிபோன், கார் போன்றவற்றை கூட ஒரு அரசு ஊழியர் தன் தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்தக்கூடாது. சில ‘வேறு வழியில்லை’ என்ற நேர்வுகளில் கூட இது பொருந்தும். உதாரணமாக கைபேசி வருவதற்கு முன்பாக, அரசுப் பணியில் உள்ளவர்கள் சொந்தக் காரணத்திற்காக அலுவலக தொலைபேசியை பயன்படுத்தினால், அதற்காக பராமரிக்கப்பட்ட பதிவேடுகளில் ‘பிரைவேட்’ அழைப்பு என எழுதிவிட்டு, அதற்கான தொகையை செலுத்தும் வழக்கம் இருந்தது. அவ்வாறு செய்யப்படுகிறதா என்பதை சிஏஜி தணிக்கையிலும் ஆய்வு செய்வார்கள்.
இதற்கெல்லாம் மேலாக சிஏஜி சட்டம், 1971 வருவதற்கு முன்பாகவே கூட, நேர்மையின் உச்சமாக, 1951 ஆம் ஆண்டில் நடந்த நிகழ்வை மேற்கோள் காட்டலாம். நாட்டின் பிரதமர் அவருடைய அரசு முறைப் பயணங்களுக்கான இந்திய விமானப் படை விமானத்தை தன் சொந்த கட்சிக் பயணங்களுக்கு பயன்படுத்த முடியாது.. அப்பொழுதைய பிரதமர் நேரு அவர்கள் தானாக முன்வந்து, அவ்வாறன நேரங்களில் தன்னுடன் பயணிக்கும் மற்ற நபர்களின் விமான பயணத்திற்கான செலவை அரசுக்கு செலுத்திவிட வேண்டும் என்ற சிஏஜியின் அறிவுரையை ஏற்றுக் கொண்டு செயல்பட்டார்.
இவ்வாறாக அரசு பணத்தை மட்டுமின்றி, பொது சொத்துகளையும் தவறாக/சொந்த/தனிபட்ட காரணங்களுக்கு பயன்படுத்துவதை கண்காணிப்பதும் சிஏஜியின் கடமையாகும்.
பிஎம் கேர்ஸ் ஃபண்டின் நிர்வாகம்
பிரதமர் தன் பதவியின் காரணமாக இந்நிதியின் தலைவராக இருப்பார். அவருடன் அவரால் நியமனம் பெற்ற அமைச்சரவை சகாக்களான பாதுகாப்பு, நிதி மற்றும் உள்துறை அமைச்சர்களும், பிரதமரால் நியமிக்கப்படும் மேலும் மூன்று நபர்களும், இந்நிதியின் அறங்காவலர்களாக செயல்படுவார்கள்.

பிரதமரின் அலுவலகமே இந்நிதியின் அலுவலகம். பிரதமர் அலுவலகத்தால் நிர்வகிக்கப்படும் இந்நிதிக்கான இணைய தளம் இந்திய அரசின் லட்சினையை கொண்டுள்ளது.
இந்நிதிக்கான இணைய தளத்தின்படி, கௌரவ அடிப்படையில், பிரதமர் அலுவலகத்தில் உள்ள கூடுதல் அல்லது இணை செயலாளர் இந் நிதியின் செயலாளராக உள்ளார். இதன் அறங்காவலர்களுக்கு தேவைபடும் நிர்வாக உதவியையும் பிரதமர் அலுவலகம் வழங்குகிறது. அதன்படி ஆண்டு வரவு, செலவுகளையும், அதற்கான கணக்குகளையும் பிரதமர் அலுவலகத்தில் உள்ள பிரதான அதிகாரிகளே பராமரிக்கின்றனர். ஆக, பி.எம்.கேர்ஸில் அரசு நிர்வாகம் சம்பந்தப்பட்டுள்ளது.
நிதியின் மறைமுகத் தன்மை
2019–20 முதல் 2022–23 வரையிலான ஆண்டுகளுக்கு வருவாய் & செலவு கணக்குகள் (மார்ச் 2023 இல் இருப்பு ₹6,283.68 கோடி) பட்டய கணக்காளர்களால் சான்றளிக்கப்பட்டு, இந்நிதியின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன — இது தான் நிதியின் பரிமாற்றங்கள் குறித்து மக்களுக்கு கிடைக்கும் ஒரே தகவல். இந்த கணக்கு அறிக்கையை தவிர, அத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படும் ‘நோட்ஸ் டு த பினான்சியல் ஸ்டேட்மென்ட்ஸ்’ என்ற விபரங்கள் கூட அங்கு காணப்படவில்லை.
இந்த குறைந்த தகவல்கள் கூட 2022-23 ஆண்டிற்கு பிறகு காணப்படவில்லை.
மேற்கொண்டு எந்த தகவல்களையும் தகவல் அறியும் உரிமை சட்டம் கீழும் அளிக்க முடியாது, இதுபற்றி பாராளுமன்றத்திலும் கேள்வி எழுப்ப முடியாது என்கிறது பிரதமர் அலுவலகம். ஆக, அவர்களாய் பார்த்து அளிக்கும் தகவல்களைத் தவிர, வேறு எந்த தகவல்களையும் எவரும் பெற முடியாது என்பதுதான் இன்றைய நிலை.
உச்சநீதிமன்ற கருத்து சரியானதல்ல
பிரதமர் அலுவலகம் மற்றும் அதன் கட்டமைப்புகள் யாவும், ஒன்றிய அரசின் ஒருங்கிணைந்த அரசு நிதியிலிருந்தே பராமரிக்கப்படுகிறது. எனும் போது பி.எம்.கேர்ஸ் அரசு நிதியை பெற்றிருக்கிறது என்று தான் பொருள். அந்த வகையில் அரசு நிதியானது அரசு அலுவல்களுக்கு அல்லாமல், தனிப்பட்ட ஒரு தொண்டு அறக்கட்டளைக்காக பயன்படுத்தபட்டிருக்கிறது.
இந் நிலையில், உச்சநீதிமன்றம் “இந்த நிதி அரசின் எந்த வரவு செலவுத் திட்ட ஆதரவையும் பெறவில்லை” என்று கூறியதில் நியாயமில்லை. உண்மையும் இல்லை. உச்சநீதி மன்றம், இக்கருத்தை சொல்லும் முன் சிஏஜியிடம் கருத்து கேட்டதாக தெரியவில்லை.
சிஏஜியின் செயல்படா தன்மை
மத்திய சிவில் சர்வீஸ் (நடத்தை) விதி 12 படி, எந்த அரசு பணியாளரும், அரசிடமிருந்து அனுமதி பெறாமல், எந்த நோக்கத்திற்காகவும் மக்களின் பங்களிப்பு நிதியை கேட்கவோ, பெறவோ கூடாது. அப்படி இருக்கும் பொழுது, அரசின் மிக உயர்ந்த பொறுப்பில் உள்ளவர், எப்படி பாராளுமன்றத்தின் முன்அனுமதி பெறாமல் ஒரு அறக்கட்டளையை ஏற்படுத்தி அதற்கு நிதியும் பெறமுடியும்?
பிரதமர் அலுவலகம ஒரு பொது அலுவலகமாகும். அங்குள்ளோருக்கான சம்பளம், பொருட்கள், இருப்புகள் (காகிதம் உட்பட) அனைத்தும் அரசு நிதி தான்
பாராளுமன்றம் அனுமதி அளித்த பிரதமர் அலுவலகத்தை பராமரிக்கதானே தவிர, ஒரு தனியார் அறக்கட்டளை நிதியை நிர்வாகிப்பதற்காக அல்ல. எனவே, இந்த பி.எம்.கேர்ஸ் நிதியின் ஒழுங்கு மற்றும் நியாயத் தன்மையை சிஏஜி ஆய்வு செய்ய கடமைப்பட்டுள்ளது.
தேவைப்பட்டால், உச்சநீதிமன்றத்திடம் தகுந்த விளக்கம் கொடுத்து, சிஏஜி, பி எம் கேர்ஸின் நிதி ஒழுங்கை ஆய்வு செய்திருக்க வேண்டும். ஆனால், என்ன காரணத்தினலோ, கடந்த ஐந்து ஆண்டுகளாக சிஏஜி இதைச் செய்யத் தவறி விட்டார்.
அரசின் வருவாய் அல்லாத பணங்களை, மத்திய/மாநிலங்களின் பொது கணக்கில் பதிவு செய்து பராமரிக்க வேண்டும் என்ற அரசியலமைப்பு விதிகளுக்கு மாறாக, பிரதமர் பெயரில் உள்ள நிவாரண நிதி அதற்கு வெளியே இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
மக்களாட்சியின் அடிபடைகளில் முக்கியமானது நிர்வாகத்தில் வெளிப்படுத்தண்மையும், செய்யும் செயலுக்கு பொறுப்பேற்றலுமே.
சிஏஜி குறைந்தபட்சம் தற்பொழுதாவது அனைத்து நிவாரண நிதிகளையும் பொது கணக்கில் கொண்டு வந்து, அவற்றின் பரிமாற்றங்களை தணிக்கை செய்ய வேண்டும்.
இது பற்றிய சிஏஜியின் கருத்திற்காக கடந்த 9 அக்டோபர் 2024 நான் அனுப்பிய கடித்தத்திற்கு இது வரை (15.2.2026) பதிலில்லை.
த. செல்வராஜு, IA&AS ( ஒய்வு)
மூத்த துணை தலைமை கணக்காய்வாளர் (ஓய்வு)
இந்திய கணக்கு மற்றும் தணிக்கை துறை
























நேற்று தற்செயலாக பேங்க் ஆப் அமெரிக்காவில் 15 ஆண்டுகள் வேலை செய்த ஒரு நண்பரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அவரிடம் பேசியதிலிருந்து இந்தியாவினுடைய முன்னேற்றம் உலகளாவிய அளவில் ஒரு பெரும் பேசு பொருளாக மாறி இருக்கிறது. இதே வேகத்தில் பயணித்தால் அடுத்த 10- 15 ஆண்டுகளில் இந்தியா முதல் அல்லது இரண்டாம் இடத்தில் இருக்கும் என்று தெரிவித்தார். ஸ்டார்ட் அப் இந்தியா, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, டேட்டா சயின்ஸ் விண்வெளி ஆய்வு, ட்ரோன் டெக்னாலஜி அசுர வேகத்தில் முதலீடுகள் குனிந்து கொண்டும் புதிதாக வருபவர்களுக்கு மானியம் வழங்கியும் நம்முடைய பாரதத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதில் பிரதமர் முனைப்பாக இருக்கிறார். பி எம் கேர்ஸ் நிதியைப் பற்றி பிரதமர் மோடி காலம் வரும்போது அதற்கான தகுந்த நேரத்தில் பதில் அளிப்பார் என்பது என்னுடைய திண்ணம். இந்த தேசத்தை நேசிக்க கூடிய மோடி எதை செய்தாலும் அதில் ஒரு காரணம் இருக்கும். சுதந்திரத்துக்காக போராட பத்திரிகை ஆரம்பித்து ஹெரால்டு பத்திரிக்கையினுடைய உரிமையை தனதாக்கிய போலி காந்தி குடும்பத்தை சேர்ந்த அரசியல்வாதிகளால் இந்த நாட்டிற்கு இனி எந்த நல்லது நடக்க வாய்ப்பில்லை. அறம் தயவு செய்து நம் பாரத பிரதமர் நரேந்திர மோடியை குற்றச்சாட்டு சொல்வதை தவிர்க்கலாம். தமிழ்நாட்டில் கோடி கோடியா குவிக்கிற அரசியல்வாதிகளை பற்றி பேசாமல் பிரதமர் மோடியை குற்றம் சொல்லி குறை சொல்லி எழுதுவது கேலிக்கூத்தானது..