கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் ராட்ச வேகத்தில் திருடப்பட்டும் மணல் கொள்ளையால் ஆற்று மணல் பரப்பே அதகளமாகியுள்ளது. ஆற்றுப்படுகை விவசாயிகள் அல்லல்படுகிறார்கள். மணல் கொள்ளையை தட்டிக் கேட்போர் மீது போலீசையும், ரவுடிகளையும் ஏவி மிரட்டும் செந்தில் பாலாஜியின் அராஜகம் மாவட்ட மக்களை மருள வைத்துள்ளது;
கரூர் மாவட்டத்தில் திருமுக்கூடலூர், அரங்கநாதன் பேட்டை, புதுப்பாளையம் , நெரூர் தென் பாகம் மற்றும் வடபாகம், முனியப்பனூர், மல்லம்பாளையம், வாங்கல், காளிபாளையம், கடம்பன்குறிச்சி, மேட்டுபாளையம், கிழக்கு தவுட்டுப் பாளையம், தோட்டக் குறிச்சி, மறவாபாளையம் மற்றும் குளித்தலை வரை காவிரி ஆற்றில் மணல் தொடர்ந்த் இடையறாது திருடப்பட்டு வருகிறது. இதற்கு ஒரு தீர்வு கிடைக்காதா…? என மக்கள் பெரும் விரக்தியில் உள்ளனர்.
அரசு நடத்தும் மணல் குவாரிகள் போல, காவிரி ஆற்றில் வழித்தடம் அமைத்து ஹிட்டாட்சி இயந்திரம் மூலம் தினசரி நூற்றுக் கணக்கான லாரிகளில் மணல் கொள்ளை நடந்து வருகிறது. இதன் பின்னணியில் இருக்கும் முக்கிய பிரமுகர்கள் யார்? யார்.? என தெரிந்தும் நடவடிக்கை எடுப்பதில்லை. காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு இதெல்லாம் தெரியுமா? என்பது தெரியவில்லை.
காவிரி பாதுகாப்பு இயக்கத்தினர் பல கட்டப் போராட்டங்களை நடத்தி, களைப்படைந்து விட்டார்கள்! பொது மக்கள் மற்றும் விவசாயிகள் எத்தனை புகார் கொடுத்தாலும் கண்டு கெள்வதில்லை. ஆற்றில் மணல் எடுப்பதையும், லாரிகளில் கொண்டு செல்வதையும் பொது மக்களாகவே போட்டோ மற்றும் வீடியோ எடுத்து ஆதாரத்துடன் அதிகாரிகளுக்கு அனுப்பி புகார் அளித்தாலும் கூட நடவடிக்கை எடுப்பது இல்லை.
மணல் கொள்ளைக்கு எதிராக யார் பேசினாலும், ஆள் வைத்து கொலை மிரட்டல் விடுவது, மிரட்ட முடியாவர்களிடம் லட்சக்கணக்கில் பணத்தை கொடுத்து வாயை அடைப்பது, இது ரெண்டும் முடியாத நபர்கள் மீது போலீசை விட்டு பொய் வழக்கு போடுவது என கரூரில் சர்வாதிகாரம் தலைவிரித்து ஆடுகிறது.
இது குறித்து பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ’’நெரூர் மல்லம்பாளையம் பகுதியில் காவிரி ஆற்றில் பகல், இரவாக மணல் அள்ளிக் கடத்தப்பட்ட வண்ணம் உள்ளது. பிப்ரவரி 10 ஆம் தேதி நாங்கள் அங்கு சென்ற போது, இதனை நேரில் கண்டோம். உடனே கரூர் எஸ்பி மற்றும் மாவட்ட ஆட்சியருக்கும் பலமுறை போன் செய்தோம். இருவரும் தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளதாக செல்போனில் தகவல் வந்தது. இதையடுத்து டென்சனான நான், திருச்சி மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணனை தொடர்பு கொண்டு கரூரில் நடந்து வரும் சட்ட விரோத மணல் கடத்தல் பற்றியும், மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் மணல் கடத்தும் ஆசாமிகளுக்கு துணை போவது பற்றியும் கூறினேன்.
மேலும் நடவடிக்கைக்கு காலதாமதம் ஆனதால், நாங்களே கரூர் காவிரி ஆற்றில் சட்ட விரோதமாக மணல் திருடிக் கொண்டிருந்த ஹிட்டாச்சி இயந்திரம் மற்றும் ஐந்து டிப்பர் லாரிகளை கண்ட வகையில் சிறை பிடித்தோம். ஆனால், அங்கு மாட்டு வண்டியில் மணல் அள்ளிச் சென்ற தொழிலாளர்களை நாங்கள் தடுத்ததாக வன்னியர் மக்கள் கட்சி என்ற பெயரில் லெட்டர் பேடு கட்சியை நடத்தும் ஒருவரை வைத்து எங்கள் மீது ஒரு பொய் புகார் தரப்பட்டுள்ளது. அங்கே மாட்டு வண்டி ஒன்றைக் கூட நாங்கள் பார்க்கவில்லை. அப்படி இருக்க எப்படி தடுக்க முடியும்?’’ எனப் பேசினார்.
இதைத் தொடர்ந்து ஐஜியிடம் இருந்து கரூர் எஸ்பிக்கு கடுமையான அழுத்தம் தந்ததைத் தொடர்ந்தே 6 மணி நேர தாமத்திற்கு பிறகு முதல் தகவல் அறிக்கை பதிந்தனர்.
இதனால், ஆத்திரமடைந்த செந்தில் பாலாஜி, கோபத்தில் அதிகாரிகளை தூண்டி விட்டு, விஜயபாஸ்கர் வீடு கட்ட வாங்கி போட்டிருக்கும் மணலை பறிமுதல் செய்து, புகார் தந்த எம்.ஆர். விஜயபாஸ்கர் மீதே மீது வழக்கு போட வைத்துள்ளார்.
மணல் வாங்கியதற்கு பில் மற்றும் ஆதாரத்தை காட்டிய விஜயபாஸ்கர், ’’என்னை பழி வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் பொய் வழக்கு போட்டுள்ளார். இதை சட்டப்படி நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்கிறேன்’’ விளக்கம் அளித்தார்.
இது அனைத்து ஊடகங்களிலும், சமூக வலை தளத்திலும் வைரலானது.
கரூர் காவிரி ஆற்றில் அதிகாரிகள் ஆசியோடு சட்ட விரோத மணல் கொள்ளை நாள்தோறும் நடந்து வருகிறது. இதனால் இயற்கையின் சம நிலை கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இதன் விளைவை மழை கலங்களில் மழைவெள்ளம் ஊருக்குள் நுழைந்து வீடுகளை மூழ்கடிப்பதோடு, பயிர்களை நாசப்படுத்திவிடுகிறது.
கரூரில் மாவட்ட நிர்வாகம் என ஒன்று செயல்படுகிறதா? அதிகாரிகள் இருக்கிறார்களா? என தெரியவில்லை.

ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு ஆணவத்தில் இவர் செய்யும் மோசமான அரசியலை தட்டிக் கேட்க திராணியற்று இருக்கும் திமுக தலைமை, தன் காலடியில் உள்ளது என்பதால், யார் மீது வேண்டுமானாலும் பொய் வழக்கு போடலாம் என நினைக்கிறாரா செந்தில்பாலாஜி. ?
இவர் மீதும், இவருக்கு ஜால்ரா போட்டு ஆடிவரும் அதிகாரிகள் மீதும் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். சமீபத்தில் இதே மாவட்டத்தில் கல்குவாரி நடத்தி சட்ட விரோத கடத்தல் செய்த திமுக எம்.எல்.ஏ பழனியாண்டி, அதை செய்தியாக்கிய நீயூஸ் தமிழ் தொலைகாட்சி நிருபரையும், கேமரா ஒளிப்பதிவாளரையும் கடுமையாக தாக்கினார் என்பது பயங்கர வைரலானது.
மணல் கொள்ளை எல்லை மீறிக் கொண்டிருப்பது மக்களை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது. சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தது போல, அரசியலுக்காக பழிவாங்கும் நோக்கத்தில் பொய் வழக்கு போட்டு, மிரட்டும் செயல் ஏற்க்கதக்கதல்ல என கரூர் மக்கள் ஆளும் கட்சி மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
அஜிதகேச கம்பளன்
























Leave a Reply