அரசு பள்ளி, கல்லூரிகள் இனி வரும் காலங்களில் இல்லாமல் ஆக்கப்படும் நிலைக்கு முற்றுப் புள்ளி வைத்து, பொதுக் கல்வியை காப்பாற்ற, கதி கலங்கிக் கிடக்கும் தமிழகக் கல்விச் சூழலை மீட்டெடுக்கும் அக்கறையை அரசியல் கட்சிகளிடையே விதைக்க அகில இந்திய கல்வி பாதுகாப்பு கமிட்டியின் தமிழக கல்வியாளர்கள் அறைகூவல் விடுக்கின்றனர்;
தமிழகத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகும் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் இவ்வேளையில், மாநிலத்தின் கல்விச் சூழல் முன்னெப்போதும் இல்லாத ஒரு நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.
தற்போது மாணவர்கள் வெறும் வாடிக்கையாளர்களாகவும், ஆசிரியர்கள் விநியோகிஸ்தர்களாகவும், கல்வி நிலையங்கள் லாபம் ஈட்டும் தொழிற்சாலைகளாகவும் சுருங்கி விட்டன. இன்று கண்கவரும் கட்டிடங்களில் கல்வி ஒரு ஆடம்பரப் பண்டமாக விற்கப்படுகிறதே தவிர, அங்கே சமூக அக்கறைஇல்லை.
மறுபுறம், ஏழை எளிய மக்களின் புகலிடமான பொதுக்கல்வி நிறுவனங்களோ, “நிதி இல்லை, அதனால் நீதியும் இல்லை” என்ற நிலையில் அதோ கதியில் கிடக்கின்றன. நூலகர் இல்லாத நூலகங்கள், உபகரணங்கள் இல்லாத ஆய்வகங்கள், ஆசிரியர் பற்றாக்குறை, மற்றும் போதிய பாதுகாப்பின்மை என அரசுப் பள்ளிகளும் கல்லூரிகளும் திட்டமிட்டுச் சிதைக்கப்படுகின்றன. போதிய ஊதியமின்றி கௌரவப் பேராசிரியர்களைக் கொண்டு உயர்கல்வித் துறை தள்ளாடுகிறது. இத்துடன் கல்வி நிலையங்களில் ஊடுருவியுள்ள போதைப்பொருள் கலாச்சாரம், சாதி பாகுபாடு மற்றும் ஊழல் ஆகியவை எதிர்காலத் தலைமுறையையே கேள்விக்குறியாக்கி இருக்கின்றன.
இந்த இருண்ட சூழலை மாற்றவும், ஆட்சியாளர்கள் கைவிட்ட மக்கள் நலக் கல்வியை மீட்டெடுக்கவும் ஒரு புதிய திசைவழி அவசியமாகிறது. இதை உணர்ந்தே, கடந்த ஜனவரி 24, 2026 அன்று பெங்களூருவில் நடைபெற்ற ‘மக்கள் பாராளுமன்றம்’ நிகழ்வில், நாடு முழுவதுமுள்ள தலைசிறந்த கல்வியாளர்கள் ஒன்றிணைந்து “மக்கள் கல்விக் கொள்கையை” உருவாக்கியுள்ளனர். ஜனநாயக ரீதியிலான, அறிவியல் பூர்வமான இந்தக் கொள்கையே தற்போதைய தேசியக் கல்விக் கொள்கைக்குச் சரியான மாற்றாகும்.

எனவே, வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் அரசியல் கட்சிகள், கல்வித் துறையைக் காக்க, இந்த ‘மக்கள் கல்விக் கொள்கையை’த் தங்களின் தேர்தல் அறிக்கையில் முதன்மை வாக்குறுதியாக அறிவிக்க வேண்டும். இதுவே கல்வியை நேசிக்கும் தமிழக மக்களின் எதிர்பார்ப்பாகும். தமிழ்நாடு இன்று எதிர் கொள்ளும் கல்விச் சிக்கல்கள் குறித்து கல்வியாளர்களின் சுருக்கமான ஆய்வினையும் அரசியலாளர்களின் பார்வைக்கு வைக்கிறோம்.
1. தேசியக் கல்விக் கொள்கை 2020: ஒரு பன்முகத் தாக்குதல்
1986-ல் தொடங்கிய தனியார் மயம், 2020-ல் தேசியக் கல்விக் கொள்கை (NEP) மூலம் உச்சத்தை எட்டியுள்ளது. இது கல்வியை ஒரு வணிகச் சரக்காக மாற்றியது மட்டுமல்லாமல், பின்வரும் ஆபத்துகளைக் கொண்டுள்ளது:
• அதிகாரக் குவிப்பு: மாநில இறையாண்மையை நசுக்கி, பாலர் கல்வி முதல் ஆய்வு வரை அனைத்தையும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டுக்குள் (PARAKH, NTA, ANRF) கொண்டு செல்கிறது.
• ஊழல் முறைகேடுகள்; உயர் கல்வித் துறையில் ஆசிரியர், பேராசிரியர் பணியிடங்கள், துணை வேந்தர்கள் நியமனங்கள் போன்றவற்றில் நடக்கும் அரசியல் தலையீடுகள் மற்றும் லஞ்சப் பணப் பரிமாற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் கல்வி சிறக்காது.
• மதமயமாக்கல்: ‘இந்திய அறிவு அமைப்பு’ (IKS) என்ற பெயரில் அறிவியலுக்குப் புறம்பான கருத்துக்களையும், வேதக் கல்வியையும் திணித்து மாணவர்களின் பகுத்தறிவை மழுங்கடிக்கிறது. இது 1930-களின் ஜெர்மானியப் பெருமைவாதத்தை நினைவூட்டுகிறது.

• VBSA – உயர்கல்விக்கான சாவுமணி: நாடாளுமன்ற நிலைக்குழுவின் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ள ‘விக்சித் பாரத் சிக்சா அதிஷ்டான்’ (VBSA) மசோதா மிகவும் ஆபத்தானது. இது நிறைவேற்றப்பட்டால், உயர்கல்வி நிறுவனங்களின் நிர்வாகம் மற்றும் நிதி அதிகாரங்கள் அனைத்தும் ஒன்றிய அரசின் கட்டைவிரலுக்கு கீழ் கொண்டுவரப்படும். இது பல்கலைக்கழகங்களின் தன்னாட்சியை முற்றிலுமாக அழித்துவிடும்.
தமிழக அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் தற்போதைய அவலம்:
தமிழ்நாடு அரசாங்கம் NEP-ஐ எதிர்ப்பதாகக் கூறினாலும், கள யதார்த்தம் கவலை அளிக்கிறது. தேசியக் கல்விக் கொள்கையின் பல்வேறு அம்சங்களை வெவ்வேறு பெயர்களில் மாநிலக் கல்விக் கொள்கை என்ற பெயரில் நடைமுறைப்படுத்தி வருகிறது. கல்வியை தனியார் மயம் வியாபாரமயம் செய்து வருவதோடு, அரசுக் கல்வி நிறுவனங்களையும் போதிய நிதி தராமல் படிப்படியாக சிதைத்து வருகிறது.

ஆசிரியர் பற்றாக்குறை: தமிழக அரசுப் பள்ளிகளில் சுமார் 80,000 ஆசிரியர் பணியிடங்கள், அரசுக் கல்லூரிகளில் சுமார் 8000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. கடந்த 10 ஆண்டுகளாக முறையான பணிநியமனம் இல்லாமல் இக்கல்வி நிறுவனங்கள் சிதைக்கப்பட்டு வருகின்றன.
கல்வி நிறுவனங்கள் மூடல்: மாணவர் இடைநிற்றலைக் காரணம் காட்டி 208 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பராமரிப்பற்ற கட்டிடங்கள் மாணவர்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ளன. சமீபத்தில் ஒரு மாணவன் சுவர் இடிந்து விழுந்து இறந்து போனதே இதற்கு சான்று.
உயர்கல்வி நிதி நெருக்கடி: சென்னை மற்றும் மதுரை காமராசர் உள்ளிட்ட பாரம்பரியப் பல்கலைக்கழகங்கள், அரசுக் கல்லூரிகள் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கக்கூட நிதி இன்றித் தவிக்கின்றன. அரசுக் கல்வி நிறுவனங்களில் நிதி நெருக்கடியால் கட்டிடங்கள், நூலகங்கள் ஆய்வகங்கள் சிதைந்து வருகின்றன.

நான் முதல்வன் திட்டம்: எல்லையற்ற தனியார்மயம் மற்றும் தொழிற்மயம்
கல்வியின் ஒரு பகுதியாக தொழிற்கல்வி இருக்கலாம். ஆனால், கல்வியையே தொழிற்மயமாக்குவது ஏற்கத்தக்கது அல்ல. கல்வியில் அறிவியல் மற்றும் கலைப் பொருண்மைகளுக்கே (Science and Humanities) அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். திறன் மேம்பாடு என்ற பெயரில் ‘நான் முதல்வன்’ போன்ற திட்டங்கள் மூலம், நிரந்தர ஆசிரியர்களைப் புறக்கணித்துத் தனியார் நிறுவனங்களுக்குக் கோடிக்கணக்கான ரூபாய் மக்கள் வரிப்பணம் வழங்கப்படுகிறது. இது பொதுக் கல்வியைக் குழிதோண்டிப் புதைக்கும் செயலாகும்.
வஞ்சிக்கப்படும் ஆசிரியர்கள்: நவீனக் காலக் கொத்தடிமைகளாக…
சமூகத்தின் சிற்பிகளான ஆசிரியர்கள் இன்று ஆட்சியாளர்களால் வஞ்சிக்கப்படுகிறார்கள்.
ஊதிய ஏமாற்றம்: ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரை அடிப்படையில் பணிமூப்பு வழங்க அரசாணை (G.O.) பிறப்பிக்கப்பட்டும், அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு இன்றுவரை ஊதியம் உயர்த்தப்படவில்லை. அரசாணை என்பது வெறும் காகிதமாகவே நீடிக்கிறது.
கொத்தடிமை நிலை: பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர்கள் ₹15,000-க்கும், கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் ₹25,000-க்கும் பணிபுரியும் அவலம் நீடிக்கிறது. பள்ளிகளில் இடை நிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியம் வழங்கப்படவில்லை. ‘சம வேலைக்குச் சம ஊதியம்’ என்ற தேர்தல் வாக்குறுதி காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது.
சீரழியும் மாணவர் சமூகம்: போதை கலாச்சாரம்
டாஸ்மாக் கடைகளின் பரவலால் உருவான போதைப் பழக்கம் இன்று பள்ளிகளின் வாயில் வரை கஞ்சா மற்றும் இதர போதைப் பொருட்களாக வந்து நிற்கிறது. இது தமிழகத்தின் அடுத்த தலைமுறையைச் சீரழித்து வருகிறது. கல்வி நிலையங்களில் போதைப் பொருட்கள் பரவுவதை முற்றிலும் ஒழிக்காமல் மாநில அரசாங்கம் வேடிக்கை பார்க்கிறது.

எனவே வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் மக்கள் கல்விக் கொள்கையின் கீழ்கண்ட கோரிக்கைகளை தங்களது கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளாக வழங்கி தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர் அவற்றை நிறைவேற்ற அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் கமிட்டி வலியுறுத்துகிறது.
கோரிக்கைகள்:
# கல்வியை தனியார்மயம், வணிகமயம், மதமயம், மத்தியமயம் ஆக்கும் தேசியக் கல்விக் கொள்கை 2020 யையும், தமிழ்நாடு மாநில அரசாங்கத்தின் மாநிலக் கல்விக் கொள்கை 2025 யையும் முற்றிலுமாக திரும்பப் பெறுக.
# அனைவருக்கும் ஜனநாயக, மதச்சார்பற்ற, அறிவியல்பூர்வ கல்வியை உத்திரவாதப்படுத்தும் மக்கள் கல்விக் கொள்கை 2026ஐ (PEP 2026) நடைமுறைப்படுத்துக.
# ஒன்றிய அரசாங்க பட்ஜெட்டில் 10%, மாநில பட்ஜெட்டில் 25% கல்விக்காக நிதி ஒதுக்குக. ஆராய்ச்சிக்கு 3% நிதி வழங்குக.
# தாய்மொழி வழிக் கல்வியை அனைவருக்கும் உத்திரவாதப்படுத்துக. இரண்டாவது மொழியாக ஆங்கிலத்தை கற்றுத் தருக.
# வயது 3 முதல் 17 வரை அனைவருக்கும் பள்ளிக் கல்வியை இலவசமாகவும் கட்டாயமாகவும் தருவதை உறுதிப்படுத்துக.
# வகுப்பு 10 வரை அனைவருக்கும் பொதுக் கல்வியை வழங்குக.
# பள்ளிக் கல்வி முதல் உயர்கல்வி வரை போதுமான எண்ணிக்கையில் ஆசிரியர்களை நிரந்தர அடிப்படையில் பணி நியமனம் செய்க.
# ECCE (5+3+3+4) முறைக்கு பதிலாக 10+2 முறையை நடைமுறைபடுத்துக.
# பாடங்களை தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்காமல் நிரந்தர ஆசிரியர்களை பணியமர்த்தி தரமான கல்வியை உத்திரவாதப்படுத்துக.
# கல்வியை தொழில்மயப்படுத்துவதை நிறுத்துக.
# பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி அதிகாரத்தில் தலையிடுவதை நிறுத்துக.
# தலைசிறந்த கல்வியாளர்களைக் கொண்டு துணைவேந்தர்கள், வேந்தர்களை நியமித்திடுக.
# NEET, CUET, TET உள்ளிட்ட மத்திய தேர்வுகளை கைவிடுக.
# விக்சித் பாரத் சிக்சா அதிஷ்டான் (VBSA) மசோதாவை திரும்பப் பெறுக.

# கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மீண்டும் கொண்டுவர உரிய சட்ட திருத்தம் செய்க.
# வரலாற்றை திருத்துவதை நிறுத்துக. இந்திய அறிவுசார் அமைப்பு (IKS) என்ற பெயரில் காலாவதியாகிப் போன வேதக் கல்வியை நடைமுறைப்படுத்துவதை நிறுத்துக.
# அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 80,000 மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள், அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள 8,000 மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்புக.
# இடை நிலை ஆசிரியர்களின் சம வேலைக்கு சம ஊதியம் என்ற நியாயமான கோரிக்கையை நிறைவேற்றுக.
# பள்ளிகளில் ஆயிரக்கணக்கான சிறப்பாசிரியர்கள் பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரமாக்குக.
# அரசுக் கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்களை நிரந்தரமாக்குக.
# அங்கன்வாடி ஊழியர்களை ஆசிரியர் பணியில் ஈடுபடுத்தாதீர்.
# முன்பருவ துவக்கக்கல்விப் பணிக்கு தகுதி வாய்ந்த பயிற்சிபெற்ற ஆசிரியர்களை மட்டுமே பணி அமர்த்துக.
# இல்லம் தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும் திட்டம், நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளித் திட்டம், நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட அனைத்து மாணவர் விரோத, கல்வி விரோதத் திட்டங்களை உடனையாகக் கைவிடுக.
# தனியார் சுயநிதி உயர்கல்வி நிறுவனங்களில் கல்விக் கட்டணங்களை ஏழை மாணவர்களும் கட்டும் வண்ணம் குறைத்திடுக.
# தனியார் சுயநிதி கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் பணியாளர்களை நியாயமான ஊதியத்துடன் கௌரவமான முறையில் நடத்தும் வகையில் சட்டம் இயற்றிடுக.
மேற்கண்ட மக்கள் நலக் கல்விக் கோரிக்கைகளை தமது தேர்தல் அறிக்கையில் குறிப்பிடவும் தாம் ஆட்சிக்கு வந்த பின்னர் அவற்றை நடைமுறைப்படுத்தவும் அரசியல் கட்சிகளுக்கு அழுத்தம் தரும் வகையில் குரலெழுப்ப கல்வியை நேசிக்கும் அனைவரையும் அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் கமிட்டி அறைகூவி அழைக்கிறது.
கட்டுரையாளர்; க. யோகராஜன்
மாநிலச் செயலாளர்
அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் கமிட்டி, தமிழ்நாடு























மாநில பட்ஜெட்டில் 25% கல்விக்காக நிதி – is it possible !