திவாலாகும் திரிணமுள்! தீயாய் வளரும் பாஜக! என்ன நடக்கிறது மே.வங்கத்தில்?

மேற்குவங்கத்தில் ஆளும் திரிணமுள் காங்கிரசை நாளும்,பொழுதும் அணு அணுவாகப் பிளந்து விழுங்கிவருகிறது பாஜக!

இரண்டு நாள் பயணமாக தற்போது கல்கத்தாவில் கால்பதித்துள்ளார் அமித்ஷா! திசைமாறி பயணிக்க தயாராகவுள்ள திரிணமுள் தலைவர்களை தீயாய் தேடி எடுத்து அமித்ஷாவிடம் ஒப்படைக்கும் செயல்திட்டம் படுவேகம் பெற்றுவிட்டது! திரிணமுள்ளின் பலமும்,பலவீனமும் மம்தாதான்! மம்தாவின் செயல்பாடுகள் பாஜகவை எப்படி பலம்பெற வைத்துக் கொண்டுள்ளன என்பதை அலசுகிறது இந்த கட்டுரை!

மதவாத அரசியலின் மாபாதகத்தை இந்திய – பாகிஸ்தான் பிரிவினையின் போது சந்தித்த மண் தான் வங்கம்! ரத்தகறை படிந்த அந்த மதவாத வரலாற்றை மாற்றி எழுத, கல்கத்தாவில் முகாமிட்டு அகிம்சை வேள்வி நடத்தினார் அண்ணல் காந்தி! ஆனபோதிலும் நீருபூத்த நெருப்பாக கழன்று கொண்டிருந்த இந்துமத தீவிரவாதம் வங்க மண்ணிலே வைத்து மகாத்மாவின் உயிரை காவு கொள்ள முயற்சித்தது. அதில் மயிரிழையில் உயிர்தப்பினார் காந்தி! இவையாவும் கடந்த கால வரலாறு!

காந்தியின் மரணம் இந்துமத தீவிரவாதிகளை மக்கள் மனம் நொந்து வெறுக்க வைத்தது! இதையடுத்து தன்னை மறைத்துக் கொண்டு சமயம்பார்த்து காத்திருந்த மதவாதிகள் காஷ்மீர் பிரச்சினையை கையிலெடுத்தனர்! அதில் வங்கத்தின் ஷியாம்பிரசாத்முகர்ஜி முக்கியமானவர். காந்திவழியில் நேருவும்,ராஜாஜியும் காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வுகாண முயன்றதற்கு முட்டுகட்டை போட்டு காஷ்மீர் விவகாரத்தை அணையா பெரு நெருப்பாக்கி மறைந்தார் ஷியாம்பிரசாத் முகர்ஜி!

ஆன போதிலும் வங்கத்தை பொறுத்தவரை காங்கிரசும், கம்யூனிஸ்டுகளும் மதசார்பற்ற தத்துவத்தை கட்டிஎழுப்பி, அங்கு பெருவாரியாக வாழும் இஸ்லாமியர்களுக்கும், இந்துக்களுக்கும் இடையே நல்லிணத்தை வலுவாக உருவாக்கினார்கள்!

கம்யூனிஸ்டுகள் ஆட்சியில் ’உழுபவனுக்கே நிலம்’ என்பதாக விவசாயக் கூலிகளுக்கு நிலப்பகிர்வு செய்துதரப்பட்டு மாபெரும் நிலச் சீர்திருத்தம் நிகழ்த்தப்பட்டது. அதே சமயம் கல்வி, வேலைவாய்ப்புகளில் முன்னேறிய சமூகத்துடன் போட்டியிடமுடியாமல் முட்டிமோதி தோல்வியும், விரக்தியும் அடைந்திருந்த பிற்பட்ட வகுப்பினரின் ஆதங்கங்களை கம்யூனிஸ்டுகள் கவனத்தில் கொள்ளத் தவறினர்.

மம்தா காங்கிரசிலிருந்து 1997ல் விலகினார். அவரை இந்துமதவாத சக்திகள் அரவணைத்தனர்! பாஜகவுடன் கூட்டணி கண்டு மத்திய அமைச்சர் பதவிபெற்று, வங்கத்தில் பாஜக காலூன்ற மம்தா வழி சமைத்தார்! இது குறித்து ஏற்கனவே அறம் இணைய இதழில் விரிவாக,

‘மேட்டுக்குடிமனோபாவமே மேற்குவங்கத்தில் இடதுசாரிகளின் வீழ்ச்சியானது’ என எழுதியிருந்தேன்!

பட்டைதீட்டி கூர்செய்து கொள்ள உதவிய மரத்தையே வெட்டி சாய்க்கும் கோடாரி போன்றவர்களே மேல்சாதி இந்துத்துவ அரசியல் சக்திகள். இதை இந்திய அரசியலில் மிகத் தெளிவாக உணர்ந்து அவர்களை தனிமைப்படுத்தி வைத்து அதிமுகவை கட்டிக் காத்தவர் ஜெயலலிதா தான்!

இதை உணரத் தவறியதால் கர்நாடகத்தில் மதசார்பற்ற ஜனதாதளம் மண்ணை கவ்வியது!

மராட்டியத்தில் சிவசேனா சின்னாபின்னமானது.

பீகாரில் நிதீஸ்குமார் கட்சி படிப் படியாக நிர்மூலமாகி வருகிறது!

மம்தா உணர்ச்சிகரமானவர், முரட்டுத்தனமாவர், மூர்க்ககுணம் மிக்கவர் அவரை ஜாக்கிரதையாக பயன்படுத்தி தங்களால் எதிர்க்கமுடியாத இடது சாரிகளையும், காங்கிரசையும் பலமிழக்க வைத்த பாஜக, தற்போது மம்தாவிற்கே மரணபயத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.

பாஜகவிற்கு மாற்றான ஆரோக்கிய அரசியலை அடையாளம் காட்டத்தவறும் மம்தா, அவர்கள் ஜெய் ஸ்ரீராம் என்றால், நாங்கள் ஜெய்காளி என்போம் என்பதான போட்டி அரசியலைத் தான் முன்னெடுக்கிறார்!

பாஜகவின் மதவாதம், சாதிய வகுப்புவாத அரசியலை எதிர்கொள்ள வங்காளிகள், வங்காளி அல்லாதவர்கள் என்ற இன உணர்வை கையில் எடுத்து ஆக்ரோச அரசியல் செய்து வருகிறார் மம்தா பானர்ஜி! ஆனால், அவரே வங்காளியல்லாத பிரசாந்த் கிஷோரை முழுமையாக நம்பி, கட்சிக் கட்டமைப்பை அவர் காட்டும் வழியில் மாற்றி அமைக்க முனைந்ததால் திரிணமுள் தற்போது திவாலாகும் நிலைக்கு சென்று கொண்டுள்ளது. இது குறித்து, ஏற்கனவே அறம் இணைய இதழில்,

500 கோடியில் சூனியம் வைத்துக் கொண்ட மம்தா பானர்ஜி

என எழுதியுள்ளேன். மம்தாவின் உறவினரான அபிஷேக் பானர்ஜியை கையில் போட்டுக் கொண்டு பிரசாந்த் கிஷோர் கட்சியின் ஆரம்பகாலத் தலைவர்கள்,முன்னணி நிர்வாகிகள் குறித்து ஒரு மதிப்பீடு தயாரித்து, ‘’இவர் சரியில்லை’’, ‘’அவர் தேறமாட்டார்…’’ ‘’இவருக்கெல்லாம் சீட் தருவது வேஸ்ட்…’’ என்று குறிப்பிட்டு வந்தது தான் திரிணமுள்ளுக்குள் புயல்வீசக் காரணமாயிற்று!

இதைத் தொடர்ந்து தான் கடந்த மாதம் சுவேந்து அதிகாரி எனும் மக்கள் செல்வாக்குமிக்க தலைவர் மனம் நொந்து பாஜக பக்கம் சென்றார். அவர் சென்றவுடன் திரிணமுள்ளில் இருந்து மூன்று முதல் ஐந்து எம்.பிக்களும், சுமார் 20 எம்.எல்.ஏக்களும் பாஜக பக்கம் நகர்வார்கள் என கூறப்பட்டது. அவர்கள் அனைவரும் பிரசாந்த் கிஷோரால், ‘செல்வாக்கற்றவர்கள்’ என கட்டம் கட்டப்பட்டவர்கள் என்பது குறிப்பிடதக்கதாகும்! இந்த நிலையில் தான் தற்போது அடுத்தடுத்து பன்சாரி மொய்தி, ஜிதேந்திரா திவா, சிபந்திரா தத்தா உள்ளிட்ட நான்கு எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு சென்றுள்ளனர்.

இப்படிப்பட்டவர்களையெல்லாம் ’கெட்ச்’ போட்டு தூக்குவதற்கென்று பணபலம், பதவித்தூண்டில் ஆகியவற்றை வீசி செயல்படுவதற்கு மத்திய அமைச்சர்கள் கஜேந்திர சிங் ஷெகாவத், சஞ்சீவ் பல்யான், பிரகலாத் படேல், அர்ஜுன் முண்டா, மன்சுக் மாண்டவியா உள்ளிட்டோரும், உத்தர பிரதேச மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா, மத்திய பிரதேச மாநில அமைச்சர் நரோத்தம் மிஷ்ரா உள்ளிட்டோரும்,  மோடி, அமித்ஷா அறிவுறுத்தலின் பேரிலும்,ஜே.பி.நட்டா வழிகாட்டுதலிலும் அடிக்கடி மேற்குவஙக விசிட் செய்து களம் காண்கின்றனர்.

பாஜகவிற்குள் முதலில் செல்லும் போது ராஜமரியாதை கிடைக்கும். பிறகு சென்றவர்கள் அதிகாரமற்றவர்களாக வைக்கப்பட்டு விடுவார்கள் என்பதற்கு முகுல்ராய் ஒரு நல்ல உதாரணம்! திரிணமுள் கட்சியில் மம்தா பானர்ஜிக்கு அடுத்த நிலையில் பெரும் செல்வாக்குடன் திகழ்ந்தவர் முகுல்ராய். அவர் பாஜகவிற்கு சென்ற போது மாபெரும் ராஜமரியாதை தரப்பட்டது. ஆனால்,அவரால் ஒரு எம்.எல்.ஏவைக் கூட தன் தொகுதிக்கு சிபாரிசு செய்ய முடியவில்லை.

இதெல்லாம் வெளிவந்த நிலையிலும் அடுத்தடுத்து மம்தா கட்சியில் இருந்து பாஜக பக்கம் தாவிக் கொண்டே இருக்கிறார்கள் என்றால், தன்னை ஆழமான சுயபரிசோதனைக்கு மம்தா ஆளாக்கி கொள்ள வேண்டும்.அது மம்தாவிடம் இருப்பதாகத் தெரியவில்லை. நேற்றைய ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, ‘’கட்சியை விட்டு வெளியேறியவர்களால் கட்சி தூய்மையாகி விட்டது, சுத்தம் செய்யப்பட்டுவிட்டது’’ என்று பேசுவது அறியாமையா? ஆணவமா? தெரியவில்லை! சரி, அப்படியானால் மம்தாவின் விருப்பப்படி அவரது கட்சியை மேலும் தூய்மைபடுத்தி சுத்தமாக காலிபண்ணிவிட்டுத் தான் பாஜக ஓயும் போலத் தோன்றுகிறது!

மேற்குவங்கத்தில் இருபதாண்டுகளுக்கு முன்பு தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய நிலையில் இருந்த பாஜக இன்று தனிப்பெரும் ஆக்டோபசாக வளர்ந்து, வரும் சட்டமன்ற தேர்தலில் வாகைசூடத் தயாராகி வருகிறது என்பதே நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இன்றைய யதார்த்தம்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time