2026 தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை தீட்டி வேகமாக செயல்படுவதில் – பாஜகவை விஞ்சி – நிகரற்று விளங்கும் திமுக தலைமையானது தற்போதைய கொள்கைக் கூட்டணிக்கு எதிரானவர்களை கூட்டணிக்குள் இழுத்துக் கொண்டிருப்பதின் பின்னுள்ள அரசியல் சொல்லும் செய்தி என்ன..?
தற்போது கொள்கைக் கூட்டணி என்றும், இடதுசாரிகள், விசிக, காங்கிரசை உள்ளடக்கிய இந்தியா கூட்டணியின் முகமாகவும் பார்க்கப்படும் திமுக கூட்டணியில் பாஜகவின் தொங்கு சதையாக அறியப்பட்ட பிரேமலதா, ஒபிஎஸ் போன்றோர் வருவது குறித்து கூட்டணி கட்சிகளிடம் குறைந்தபட்ச ஆலோசனையை ஸ்டாலின் நடத்தினாரா…?
பாஜகவின் பாசிக கொள்கை எதிர்ப்பு, ஆளுநர் எதிர்ப்பு, சனாதன எதிர்ப்பு ஆகியவற்றில் இன்றைய திமுக கூட்டணிக் கட்சிகளிடம் இருக்கும் ஒருமித்த எண்ணவோட்டத்திற்கு புதிய கூட்டாளிகள் இசைவானவர்களா…? வருங்காலத்தில் பாஜகவுக்கு எதிரான தீர்மானத்தை சட்ட சபையில் கொண்டு வரும் போது, களம் கண்டு போராடும் போதும் இந்த புதிய கூட்டாளிகள் என்ன நிலை எடுப்பார்கள்..?
அரசியலில் இருந்தே அப்புறப்படுத்தப்பட வேண்டிய நபர்கள் எல்லாம் அறிவாலயத்தை நோக்கி வந்து கொண்டுள்ளனர்!
பிரேமலதா, ஒபிஎஸ் போன்ற எந்தக் குறிக்கோளுமற்ற பிற்போக்கு உதிரி சக்திகள் இந்த தேர்தலுக்கு பிறகு அரசியலில் இருந்தே முற்றிலும் இல்லாமல் போவது தமிழக நலன்களுக்கு நல்லது.
நேற்றுத் தான் தேமுதிக வந்தது. இது 2021 சட்டமன்றத் தேர்தலில் 0.43 % வாங்கிய கட்சி! அதாவது அரை சதவிகிதத்திற்கும் கீழ் உள்ள கட்சி! அதுவும் கேப்டன் விஜயகாந்த் உயிரோடு இருக்கும் போதே, இளைத்து துரும்பாகிப் போன கட்சி.
தகுதிக்கு மீறிப் பேராசைப்படும் பிரேமலதாவை அதிமுக – பாஜக கூட்டணியே அலட்சியமாக விட்டுவிட்ட நிலையில், திமுக அரவணைத்து, ஆயுசு முடியக் கூடிய நேரத்தில் ஆக்சிஜன் தருவது போல கூட்டணி கண்டது. கூட்டணி கண்டது என்பதைவிட அரசியல் ஏலத்தில் அதிமுகவால் தர முடியாத விலைக்கு வாங்கியது என்று சொல்லுவதே பொருந்தும்.

மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கே தகுதியற்ற அந்தக் கட்சிக்கு ஆறேழு இடங்கள் என்று சில ஊடகங்களும், இல்லையில்லை 10 +1 என மற்ற சில ஊடகங்களும் எழுதின…!
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட்டு தருவது என்பது அது பாஜகவை பலப்படுத்தவே பயன்படும்.
எந்த பதவியிலும் இல்லாத போதே பாஜகவின் சி.ஏ.ஏ தொடங்கி ஜி.எஸ்டி வரை அனைத்தையும் ஆதரித்ததோடு, சனாதன சர்சையில் கூட இந்துத்துவ பிற்போக்கு சக்திகளுக்கு துணை போனவர் தான் பிரேமலதா!
இன்னைக்கு என்னடாவென்றால், பிரேமலதாவைக் காட்டிலும் பெரிய அரசியல் அனாதையான ஒ.பி.எஸ் வந்துள்ளார். …!
தன் மகனைத் தவிர, தன்னுடன் யாருமில்லாத அனாதையான ஒ.பி.எஸ் வந்து தான் திமுக கூட்டணி பலம் பெற வேண்டுமா…? திமுக கூட்டணிக்குள் வந்தாலுமே கூட ஒ.பி.எஸ் என்றென்றும் பாஜகவின் பாதம் தாங்கியாகவும், மோடி பக்தராகவும் தான் இருப்பார்…என்பது திமுக தலைமைக்கு தெரியாதா என்ன?

ஏற்கனவே லெட்டர்பேடு கட்சி நடத்தினாலும், ஓரளவு தனிப்பட்ட செல்வாக்குள்ள கமலஹாசன் திமுக கூட்டணிக்குள் வந்துவிட்டார்.
இன்னும் அடையாளம் அழிந்து போனவர்கள் யார், யாரெல்லாம் வரப் போகிறார்களோ…?
அரசியல் அனாதைகளின் கடைசி புகலிடமா திமுக…?
இப்படியே துண்டு, துக்கடா கட்சிகளையெல்லாம் கூட்டணிக்குள் ’அக்காமடேசன்’ செய்து கொண்டே போவது திமுகவின் பலவீனமாகப் பார்க்கப்படும் என்பது ஒருபுறமிருக்க, திமுகவில் உள்ளவர்களுக்கான நியாயமான வாய்ப்புகளை வழங்கமுடியாத சூழல் உருவாகி கட்சியையே பலவீனப்படுத்திவிடும் என்பது திமுக தலைமை அறியாததா?
அப்படியானால், வெற்றி குறித்து உண்மையில் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?
சென்ற மாதம் பொங்கல் தொகுப்போடு மகளிருக்கு 4,000 ஆயிரம் தந்தது போதாது என்று இந்த மாதம் மகளிருக்கு ரூ 5000 தந்த பிறகும் இந்த அச்சம் நீங்கவில்லையா?
இந்த ஐந்தாண்டு ஆட்சி நல்லாட்சி என்றும் பாலும், தேனும் ஓடிய ஆட்சி என்றும் ஊடகங்களில் பக்கம், பக்கமாக விளம்பரங்கள் தந்தும், புகழ்ந்து எழுத வைத்தும் கூட உங்கள் உள் மனதிற்குள் ‘நாம் தந்தது நல்லாட்சி அல்ல, ஊழல் முறைகேட்டில் உச்சம் தொட்ட ஆட்சி, இயற்கை வளங்களை சூறையாடிய ஆட்சி’ என்ற உண்மை உறுத்துகிறது தானே!
இது நாள் வரை திமுக கூட்டணி கட்சிகளிடையே கொள்கை சார்ந்த ஒருமித்த கருத்து இருந்தது. மதவெறி பாஜக அரசை எதிர்த்து குரல் கொடுப்பதிலும், ஆளுனரை எதிர்த்து களம் காண்பதிலும் ஒருமித்த செயல்பாடு இருந்தது. இந்த காலகட்டங்களில் பிரேமலதாவும், ஒ.பி.எஸ்சும் பாஜகவை ஆதரித்து நின்றவர்கள் என்பதும், பாஜகவின் சித்தாந்தங்களில் ஒத்திசைந்த கருத்துள்ளவர்கள் என்பதும் அனைவருக்கும் தெரிந்த உண்மை.

புத்தம் புதிதாக அரசியலுக்குள் நுழைந்திருக்கும் விஜய் கட்சி கூட, ”வருபவர்கள் வரலாம். வராவிட்டால் நஷ்டம் எங்களுக்கில்லை” என தைரியமாக தனியாகக் களம் காணும் போது, ஏற்கனவே வலுவான கூட்டணியைக் கொண்டிருக்கும் ஸ்டாலின் ஏன் நாளும், பொழுதும் புதிதாக யாரும் கிடைக்கமாட்டார்களா? என வலையை வீசி பிடித்துக் கொண்டிருக்கிறார்…?
அதுவும் கூட்டணியில் சேர்ந்தால் தேர்தல் செலவுக்கு இவ்வளவு பணம் தருகிறோம் என பணபலத்தை பிரயோகித்தும், ஆட்சியில் உள்ள அதிகார பலத்தைக் கொண்டு அரசாங்க கஜானாவை துஷ்பிரயோகம் செய்தும் திமுக தீவிரம் காட்டுவதை பார்க்கும் போது வருகின்ற தேர்தலில் வெற்றி பெறுவது சுலபமல்ல என்பதை நன்கறிந்தே இவ்விதம் செய்கிறது என்பதை நாம் உணரலாம்.
திமுக இத்துடன் நிற்கப் போவதில்லை. ஐந்தாண்டுகள் கொள்ளையடித்து கோடிக் கோடியாக சுருட்டி வைத்துள்ள பணத்தை தேர்தல் நேரத்தில் வாக்குகளைப் பெற வைத்து ஒரு பெரும் சூதாட்டத்தையே நடத்த திட்டமிட்டுள்ளார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.
இந்தச் சூழலில், ‘என் வாக்கு பணத்திற்காக அல்ல. நல்லாட்சிக்கான தேடலுக்கானது’ என மக்கள் நிருபிப்பது ஒன்றே இது போன்ற தீய சக்திகளுக்கு பாடமாகும்.
சாவித்திரி கண்ணன்
























முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினிடம் முதலமைச்சர் பொறுப்பு வராதா என்று தமிழகத்தில் ஏகியவர்கள் பலர். அவர்களின் ஏக்கத்தை போக்கியது 2021 சட்டமன்ற தேர்தல்.
அவர் பொறுப்பு ஏற்றவுடன் முதலில் ஆவின் பால் விலையை குறைத்தார். அந்த மகிழ்ச்சியை விட்டு மக்கள் வெளியே வரும் முன் இன்று வரை இதை குறைத்தேன் என்று வேறு எந்த துறையும் இல்லை. எந்த ஆவின் பால் விலையை குறைத்தாரோ அது உள்பட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையினையும் ஏற்றினார்.
தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி இலவச பேருந்தினை பெண்களுக்கு கொடுத்தார். அது கோவிலில் கொடுக்கப்படும் இலவச சாம்பார் சாதத்தை விட கேவலமாக இருந்தது. பழைய ஓட்டை பேருந்துகளை இலவசமாக விட்டார் அதைக் கூட பின்னர் குறைத்துக் கொண்டார்.
இவர் பேசும்போது ஒவ்வொரு திட்டத்தை போடும்போதும் மாற்றுத்திறனாளிகளை மனதில் வைத்துக் கொண்டே போடுவதாக கூறினார். ஆனால் வருடத்திற்கு ஒருமுறை அவர்கள் ஏதாவது கேட்டு வந்தால் விரட்டியடிக்கப்பட்டனர். அதற்கு மிகப்பெரிய உதாரணம் அவர்கள் ஊக்குத்தொகையினை 6 ஆயிரமாக உயர்த்தி கேட்டதோடு வேறு சில கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.
தங்களிடம் நிதி இல்லை என்று சொன்ன முதலமைச்சர், அவர் வசமுள்ள போலீஸ் துறையினர் அவர்களை எப்படி நடத்தினர் என்பதை நாடே அறியும். ஒற்றை மறந்துவிட்டார் முதலமைச்சர் இன்று தெருவோரத்தில் பூவிக்கும் பெண்ணிடம் கூட ஆண்ட்ராய்டு செல்போன் இருக்கிறது. அனைவரும் இன்று நாட்டு நடப்பை அறிந்துள்ளனர். மற்றவை காலம் பதில் சொல்லும். மீண்டும் திமுக வெற்றி பெற்றால் பல பேர் கல்லறைக்கு போவது உறுதி.