மரணத்தை நோக்கிய பயணத்தில் சுடர்விட்ட மனிதநேயம்..!

-வசந்த் பாரதி

இப்படியும் படம் எடுக்க முடியுமா? மரணிக்கும் தருவாயிலும் மனிதத்தை உணர்த்தி – தன்னை கொல்லத் துணிந்த காவல்துறையினரை குற்றவுணர்வு மிகுந்து கதிகலங்க வைக்கும்  – ஒரு புரட்சிகர கதாபாத்திரம் மெய் சிலிர்க்க வைக்கிறது..! சிங்கள மொழியில் ஒரு உலகத் தரம் வாய்ந்த உன்னத படைப்பு;

பல சர்வதேச பட விழாக்களில் விருதுகளை வென்று கொண்டிருக்கும் படம் ரிவஸ்டோன். மனிதம் பேசும் படங்களை எடுப்பதில் கவனம் பெற்றவரான லலித் ரத்ன நாயக்கே இயக்கியுள்ள இந்தப் படம் பார்ப்பவர்களை பல படிகள் மேன்மையாக பயணிக்க வைப்பதாக உள்ளது.

ரிவெர்ஸ்டோன் என்பது இலங்கையின் ஒரு மலைப்பிரதேச பகுதியாகும் அங்கு அரங்கேறிய என்கவுண்டர் நிகழ்வின் வெளிப்பாடாக இந்த படைப்பு உருவாகியுள்ளது. என்கவுண்டர் மரணம் என்பது அரசின் வசமுள்ள ஒரு அழித்தொழிப்பு உத்தி. நீதிமன்றத்தின் முன்பு குற்றம் சுமத்தப்பட்டவரை நிறுத்தினால் அரசின் முகத்திரை கிழிந்து போய் விடும் என்கின்ற உந்துதலில் கையாளப்படுகிற மனிதநேயமற்ற தண்டனை முறை தான் இது .

அரசிற்கு எதிராக கேள்வி கேட்ட சந்திரபால் என்பவரை (நந்திதா) மூன்று போலீஸ் அதிகாரிகள் ஒரு போலீஸ் வேனில் ஏற்றி செல்கிறார்கள். அது ஒரு மரணத்தை நோக்கிய பயணம்.

சந்திரபால் (நந்திதா) தமிழ் பேசுகிறார், மேலும் அவர் ஒரு புரட்சியாளராக காட்டப்படுகிறார். திருட்டு, கொள்ளை போன்ற குற்றங்களுக்கு கிடைக்காத கடும் தண்டனை, புரட்சிகர செயல்களுக்கு வழங்கப்படுகிறது.

அதிகார அமைப்பை கேள்வி கேட்பவர்கள் ஆட்சிக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறார்கள். அதனால், அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்கள் பிடியை நிலைநிறுத்த, இத்தகைய நபர்களை இரக்கமின்றி ஒடுக்குகிறார்கள்.

ஒரு கோணத்தில் பார்த்தால் அந்த போலீஸ் வாகனத்தில் பயணம் செய்யும் நால்வருமே ஒரே விதமான வாழ்க்கை போராட்டத்தில் ஒரே படகில் பயணம் செய்யும் பயணிகள் போன்றவர்கள்.ஒரு போலீஸ்காரரின்(பிரியந்தா ஸ்ரீகுமாரா ) மனைவிக்கு இதய கோளாறு மருத்துவமனையில் அனுமதி. செய்வது அறியாது திண்டாடுகிறார். அறுவை சிகிச்சைக்கு இரண்டு லட்ச ரூபாய் செலவாகும் என்கிற பதட்டம் அந்த பதட்டத்தோடே அவரின் அந்த பயணம் தொடர்கிறது. ஜீப்ஓட்டுநர் போலீஸ்காரருக்கு( மகேந்திர பெரேரா ) ரேடியோ கேள்வி பதில் போட்டியில் வெற்றி பெற்று பிரிட்ஜ் பரிசு பெறவேண்டும் என்கிற ஆவல்.

இந்த இரண்டுபோலீஸ்காரருக்கும் உயர் அதிகாரியான இன்ஸ்பெக்டர்(ஷியாம் பெர்னான்டோ) வேறு வித ரகம். அந்த கொலைக்கான பயணத்தினூடே தன்னுடைய காதலியை சந்திக்க வேண்டும் அவருக்கு தங்க மோதிரம் பரிசளிக்க வேண்டும் என்கிற நிர்பந்தம். இந்த மூவரும் ஒரு புள்ளியில் சந்திக்கின்றனர். ஒரு புள்ளியில் பயனும் அடைகின்றனர். அந்த புள்ளி அரசாங்கத்திற்கு எதிராக கலகம் செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டு கைது செய்து அழைத்து செல்லப்படும் குற்றவாளியின் (ரந்திக குணதிலக) அறிவுப்புலமை மற்றும் கொடைத் தன்மையில் மையம் கொண்டிருக்கிறது.

ரேடியோவில் கேட்கப்பட்ட பெரும்பாலான கேள்விகளுக்கு பதில் கூறியது ரந்திகா மட்டுமே அதோடு மட்டுமன்றி குற்றமே செய்திராத தன்னை குற்றவாளியாக்கி ஒரு அடிமையாய் பாவித்து கூறுவது அதனையெல்லாம் கடந்து முகம் தெரியாத அந்த பெண்மணியின் உயிரை காப்பாற்ற இரண்டு லட்ச ரூபாயை கொடுக்க முன் வந்தது எல்லாமே ஒரு சாதாரன மனிதன் செய்யக்கூடிய செயல் வருகிற போலீஸ்காரர் பிரியந்தாவின் மனைவிக்கு நெஞ்சு வலி என்பதை அறிந்ததும் அந்த வேதனையில் பங்கெடுத்து கொள்வது மற்றும் ஆலோசனை அல்ல. மக்கள் நலனில் அக்கறை கொண்டு இந்த சமூகத்தில் ஒரு பெரிய மாற்றம் உருவாக வேண்டும் என்கிற உணர்வில் களத்தில் இறங்கி போராட துணிகிறானே அவனால் மட்டுமே இவ்வாறெல்லாம் செய்ய முடியும். காரணம், அவனின் போராட்டம் இந்த வாகனத்தில் தன்னை கொல்வதற்கு அழைத்து செல்கின்ற இந்த மூவருக்கும் சேர்ந்தது தான் என்று உணர்ந்து தான் ரந்தித செயல்பட்டுள்ளார் என்று தெரிகிறது.

அரசு சுரண்டலை எதிர்த்து கேள்வி கேட்பவன் அறிவு ஜீவியாய் மட்டுமல்ல, ஒரு சிறந்த மனிதாபிமானியாயும் இருக்க வேண்டும் என்பதை இயக்குனர் லலித் ரத்னாயகே உணர்ந்ததன் வெளிப்பாடு தான் ரந்தித கதாபாத்திரம்!

இந்த மூவரில் இன்னொருவர் நந்தித மூலம் இன்னொரு பலனை அடைந்தார்.

நேர்மையற்ற முறையில் கைது செய்யப்படும் போது குற்றவாளிவசம் இருக்கும் அனைத்து உடமைகளும் போலீசாரால் அபகரிக்கப்படும். அப்படி அபகரிக்கப்பட்ட ரந்திதாவின் ஒரு பொருள் அவரின் மணிபர்ஸ். அதில் இருந்த பணத்தை கொண்டுதான் தான் இன்ஸ்பெக்டர் ஷியாம் பெர்னாண்டோ தனது காதலிக்கு தங்க மோதிரம் வாங்கி பரிசளிக்கிறார். இவ்வாறு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் பயன்பெறுகின்றனர் ரந்தித மூலம் அந்த செயல் அவர்களுக்குள் ஒரு ரசாயன மாற்றத்தை ஏற்படுத்துகிறது இன்ஸ்பெக்டரும் ஓட்டுநர் போலீஸ்காரரும் சேர்ந்து பேசி நந்திதாவை விட்டுவிடலாம் என்கின்ற மனிதாபிமான சாரல் அவர்களுக்குள் வீசுகிறது.

ஆனால் எதையுமே முடிவு செய்கிற நிலையில் இவர்கள் இல்லை என்பதையும் அதற்கு அடுத்து வருகிற காட்சி நிரூபிக்கிறது. இந்த மூன்று அரசு அதிகாரிகளும் இவர்களுக்கு மேல் உள்ள ஒரு உயர் அதிகாரிக்கு கட்டுப்பட்டவர்கள் அவர்கள் தான் இந்த சமூகத்து வில் இவர்கள் வெறும் அம்பு மட்டுமே அந்த வில்லில் இருந்து ஒரு ஆணை வருகிறது எனக்கு ரந்திதாவின் உயிர் வேணும் என்கின்ற ஆணை அது. இந்த அம்புகள் அதனை நிறைவேற்றுகிறார்கள். இவர்களின் நலனுக்கும் சேர்த்து போராடிய ரந்தித உயிர் இவர்களாலேயே பறிக்கப்படுகிறது. ஒரு உண்மையான படைப்பாளி தமது படைப்பில் கதாபாத்திரம் இழைக்கின்ற அநீதியை அவன் உணர செய்ய வேண்டும். இது அந்த படைப்பாளியின் தார்மீக கடமையாகும். அதனை இந்த திரைப்பட இயக்குனர் சரிவர உணர்ந்து செயல்பட்டுள்ளார்.

கிளைமாக்ஸில், இன்ஸ்பெக்டர் நந்திதாவுடன் தொடர்புள்ள வீட்டில் உணவு உண்ணுகிறார். கைபேசியில் உள்ள பெண்ணின் புகைப்படம் முக்கியத்துவம் பெறுகிறது. அவர்களுக்கு தெரியாமலேயே விதி அவர்களை நந்திதாவின் வீட்டிற்கே அழைத்துச் செல்கிறது. முன்பு, கைபேசியில் உள்ள பெண் தனது காதலி என்று நந்திதா கூறியிருந்தார். அந்த உண்மையை, உணவு பரிமாறும் பெண்ணே அவள் என்பதைக் கண்டறியும் தருணத்தில், இன்ஸ்பெக்டர் உணர்கிறார். அது உண்மை மிகவும் தாமதமாக வெளிப்படும், மனதை உலுக்கும் தருணம்.

கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவில் முதலமைச்சர் மம்தா பானர்ஜியிடம் விருது பெறும் இயக்குனர்.

இந்த திரைப்படத்திற்கு சென்ற வருடம் சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனர் விருது மற்றும் சிறந்த நடிப்பிற்கான விருது வழங்கப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் ஷாங்காய் திரைப்பட விழா மற்றும் கொல்கத்தா திரைப்பட விழாவிலும் விருதினை பெற்றிருக்கிறது. கொல்கத்தாவின் 31 வது சர்வதேச திரைப்பட விழாவில் கோல்டன் ராயல் பெங்கால் விருதையும் வென்றது.

திரை விமர்சனம்; வசந்த் பாரதி

கடந்த 26 வருடங்களாக திரைத் துறையில் இயங்கி வரும் கதாசிரியரும் இயக்குனருமான ரத்னாயகே  தனது முதல் திரைப்படமான "The Other Half" என்கின்ற திரைப் படத்தின் மூலம் திரைக்கு அறிமுகமானார்.

ரிவர்ஸ்டோன் திரைப்படம் குறித்து இயக்குனர் ரத்னாயகேவுடன், வசந்த் பாரதி நிகழ்த்திய ஒரு ஆன் லைன் உரையாடலின் சாராம்சம்;

நாம் ( தமிழர் – சிங்களர்) இரு சமூகங்கள் அல்ல, ஒரே சமூகம் தான்” – லலித் ரத்னாயகே

Riverstone என்பது உண்மை சம்பவங்களால் தூண்டப்பட்ட  ஒருகற்பனைப் படைப்பு. கதாபாத்திரங்களும் அவர்கள் Riverstone நோக்கிசெல்லும் பயணமும் கற்பனையானவை. ஆனால் கதையின் இயங்கும்முறை, நம் வரலாற்றின் கடுமையான உண்மைகளில் இருந்துஉருவானது.

அந்த அதிகாரிகள் அனைவரும் ஒரே படகில் பயணம் செய்பவர்கள்தான். கருணை எழுந்தாலும், அதன்படி செயல்பட முடியாத நிலை அவர்களுக்கு உள்ளது.அமைப்பு அடிப்படையில் சட்டமற்றது. ஆனால் சட்டவிரோத உத்தரவுகளை மிகவும் திட்டமிட்ட முறையில் நிறைவேற்றுவதால், வெளிப்படையாக எல்லாம் சட்டப்படி நடப்பதுபோல் தோன்றுகிறது.  இதுவே ஒரு வலை. உத்தரவை மீறினால், அதிகாரம் அல்ல—இந்த அதிகாரிகளே சட்டத்தின் பார்வையில் குற்றவாளிகளாக மாறுவார்கள். தண்டனை பற்றிய பயமும் சமூக முத்திரையும் அவர்களை, மனசாட்சி  எதிர்த்தாலும், கீழ்ப் படிதலுக்கு கட்டாயப்படுத்துகிறது.

இந்த படத்தில் இன மோதலை நேரடியாக எடுத்துரைக்கவில்லை.ஆனால் இப்படிப் பட்ட பிரச்சனைகள் இல்லாத நாடாக நம் நாட்டை ஒருபடைப்பாளி காட்ட முடியாது. என் முந்தைய தொலைக்காட்சி படைப்புகளில், சிங்களரும் தமிழரும் இரு தனித்த சமூகங்கள் அல்ல, ஒரே தேசம் என்பதையே தொடர்ந்து சொல்லி வந்தேன். Riverstone படத்தில், இந்த கருத்து நந்திதா என்ற கதாபாத்திரத்தின் மூலம் நுட்பமாக வெளிப்படுகிறது. பல இனங்கள் ஒன்றாக வாழும் சூழலில் வளர்ந்த ஒரு சிங்கள இளைஞனாகவும், தமிழ் மக்களுடன் ஆழமான பந்தம் கொண்டவராகவும் அவர் காட்டப்படுகிறார். வெளிப்படையாக சொல்லப்படாவிட்டாலும், நாம் இரு சமூகங்கள் அல்ல—ஒரே மக்கள் என்பதே செய்தி.

குறிப்பு; இந்தப் படம் வருகின்ற செவாய் கிழமை பிப்ரவரி-24 மாலை சென்னை சத்யம் திரை அரங்கில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது.

 

 

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time