ஜனநாயக வெளி குறைந்துள்ளது! பேச்சுரிமை மறுக்கப்படுகிறது

-தீஸ்தா செதால்வாட்

அடங்க மறுக்கும் தீரா மனித உரிமைப் போராளி தீஸ்தா செதால்வாட் பாஜகவிற்கு  சிம்ம சொப்பனமாகத் திகழ்பவர். குஜராத் கலவரத்தில் மோடியின் தொடர்பை  உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியவரான தீஸ்தா  சென்னை இஸ்கப் கருத்தரங்கில் ஆற்றிய உரையில் பாஜகவின் பயங்கரவாத ஆட்சியை தோலுரித்தார்;

இந்திய கலாச்சார நட்புறவுக் கழகம் (ISCUF)  நடத்திய ‘மக்களாகிய நாம்’ என்ற பொருளில் சென்னை அடையாறு முத்தமிழ் மன்றத்தில் நடத்திய ஒரு நாள் நிகழ்வில் வியாழன் அன்று நடந்த கருத்தரங்கில் மும்பையைச் சார்ந்த மனித உரிமைப் போராளியான தீஸ்தா செதால்வாட் பங்கேற்று சிறப்புமிக்க உரையை வழங்கினார்.

தென்னிந்திய மக்கள் அரசியல் விழிப்புணர்வு கொண்டவர்கள். ஓரிரு நாட்களுக்கு முன்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநில உரிமைகள் பற்றி நல்லதொரு உரையை சட்ட சபையில் நிகழ்தினார்.  அதில், கூட்டாட்சியின் அவசியத்தையும், முக்கியத்துவத்தையும் வலியுறுத்தி உச்சநீதிமன்றம் எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் வழங்கியுள்ள தீர்ப்பைக் குறிப்பிட்டு பேசியுள்ளார். ஆனால் இந்தத் தீர்ப்பை பற்றி உச்சநீதிமன்றம் அரிதாகவே குறிப்பிடுகிறது.

உச்சநீதிமன்றம் உமர் காலித், ஷர்ஜீல் இமாமுக்கு பிணையை மறுத்துள்ளது. இதனால் ஐந்து ஆண்டுகள் கடந்தும் அவர்கள் சிறையில் இருக்கிறார்கள்.ஏற்கனவே தனிமனிதச் சுதந்திரத்திற்கு ஆதரவாக வந்துள்ள மூன்று நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பைக் கண்டு கொள்ளாமல், இரண்டு நீதிபதிகளின் தீர்ப்பை மேற்கோள் காட்டி பிணையை உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. நீதிபதிகள் தமது சமூகப் பொறுப்பைக் கை விடுகிறார்கள்.

நான், என்னுடைய 16 வயதில் அவசரநிலையை எதிர்த்து குரல் கொடுத்திருக்கிறேன். அப்போதெல்லாம் ஊடக உரிமையாளர்கள் அரசுக்கு ஆதரவாக இருந்தாலும்,  பத்திரிகையாளர்கள் தனிபட்ட முறையில் ஜனநாயகத்திற்கு ஆதரவாக இருந்தார்கள்.

ஆனால், இப்போது, செய்தி அறைகளில் உள்ள பத்திரிகையாளர்கள் – சுதிர் சௌத்திரி போன்றவர்கள் அரசுக்கு ஆதரவாக, ஒரு கருத்து நிலை ஆதரவோடு இருக்கிறார்கள். இது நல்லதல்ல. டெல்லியில் நடந்த செயற்கை நுண்ணறிவு பற்றிய மாநாட்டுச் செய்திகள் சமூக ஊடகங்கள் இல்லையென்றால், வெளியில் வந்திருக்காது. முக்கியமான ஊடகங்கள் இதைப் பற்றி பேசவில்லை.

அதானியைப் பற்றி எழுதிய பத்திரிகையாளர் ரவி நாயருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வந்துள்ளது.

கூட்டுறவு வங்கியில் 12 ஆண்டுகாலமாக  நடக்கும் வேலை நியமன ஊழலை எதிர்த்து நடந்த பேரணியைப் பற்றி எழுதியதற்காக மஜூம்தார் கைது செய்யப்படுகிறார்.

ஜம்மு காஷ்மீரில் ஜகாங்கீர் அலி போன்ற 12  பத்திரிகையாளர்கள் நடந்ததை எழுதி வருவதற்காக காவல்துறையால் கேள்வி கேட்கப்பட்டு ஒடுக்கப்படுகிறார்கள்.

ஏற்கனவே உச்சநீதிமன்றத்தால் நீக்கப்பட்ட 124 A தேசத் துரோக குற்றத்தை, புதிய தண்டனைச் சட்டத்தில்  பிரிவு 152 ஆக வைத்து, மனித உரிமையாளர்களை, கேள்வி கேட்போரை தண்டிக்கிறார்கள்.

 

பேச்சுரிமை கட்டுப்படுத்தப்படுகிறது. யூ டியூப் நடத்தும் நகைச்சுவை பேச்சாளர்களையும் இந்த அரசு விட்டு வைக்கவில்லை. ஆனால், அதே நேரத்தில் வெறுப்பு பேச்சுகளை அனுமதிக்கிறார்கள். வெறுப்பாக பேசிய இரண்டு அமைச்சர்கள் மீது நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கவில்லை.

ஐக்கிய முன்னணி ஆட்சியில் தகவல் அறியும் உரிமைச் சட்டம், MNREGA, உணவு உரிமைச் சட்டம் போன்ற நல்ல சட்டங்கள் வந்தன. நடைபெற்ற மக்கள் இயக்கங்கள் வழியாக இவை கிடைத்தன. அதாவது, இத்தகைய போராட்டங்களை நடத்த முடிந்தது. ஆனால் 2014 க்குப் பிறகு இத்தகைய ஜனநாயக வெளி இல்லை. இதுவரை பெற்ற உரிமைகளை மறுக்கும் விதமாக சட்டங்கள் இயற்றப்படுகின்றன.

தொழிலாளர் உரிமைகளை மறுக்கும் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.  மேற்கத்திய நாடுகளில் அப்போது பெண்களுக்கு, கறுப்பின மக்களுக்கு வாக்குரிமை இல்லை. ஆனால், விடுதலை அடைந்த இந்தியா, அனைவருக்கும் வாக்குரிமை என்ற புரட்சிகரமான முடிவை எடுத்தது.

ஆனால், இதை மறுக்கும் விதமாக தீவிர சிறப்பு வாக்காளர் திருத்தம் மூலம் அடித்தட்டு மக்களின் வாக்குரிமையை பறிக்கிறார்கள்.தேர்தல் ஆணையம் நிதானமாக, குறிப்பிட்ட கால இடைவெளியில் வாக்காளர் பட்டியலை சரி செய்யலாம். குடிமைப் பணி அதிகாரிகள் அனைவரையும், அப்படியே வாக்காளராக எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற சுற்றறிக்கையை தேர்தல் ஆணையம் அனுப்புகிறது. அந்த அதிகாரத்தை அதற்கு யார் கொடுத்தது.?  புலம்பெயர் தொழிலாளர்களின் வாக்குரிமை பறிபோவது பற்றி யார் குரல் கொடுப்பது !  2019 முதலே,  மேற்கு வங்காளம் தனது குடிமக்களுக்கு உரிய ஆவணங்களை உருவாக்கி வழங்கி வந்தது. இத்தகைய நடவடிக்கைகள் தமிழ்நாட்டில் இல்லை. ஆளும் கட்சிக்கும், எதிர்கட்சிக்கும் சமமான வாய்ப்புகள் இருக்கும் வகையில் (Level Playing Ground) தேர்தல் இருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் ஓய்வுபெற்ற குடிமைப்பணி அதிகாரியான  M.G. தேவசகாயம்  போன்றவர்கள் இதுகுறித்து பேசி வருகிறார்கள். உத்திரப் பிரதேசத்தில் டிசம்பர் மாதம் வெளியிட்ட வாக்காளர் பட்டியலில் இருந்த 10,000 பேர் இப்போது நீக்கப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தில் ஐந்து மாவட்டங்களில் 77 இலட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். எனவே எதிர்கட்சிகள் விழிப்பாக இருப்பது அவசியம்.

பாஜக மக்கள் ஆதரவை இழந்து வருகிறது. இது அவர்களுக்கே தெரியும். அதனால் தான் SIR போன்ற தில்லுமுல்லு வேலைகளில் ஈடுபடுகிறார்கள். மீண்டும், வாக்குச் சீட்டுமுறை மூலம் தேர்தல் நடத்த வேண்டும். இப்போதுள்ள சூழலில் பாஜகவிற்கு 25 % வாக்குகளே கிட்டும். இதனை நான் கள நிலவரம் அறிந்து பொறுப்போடு தான் சொல்கிறேன்.

இந்த நாட்டின் தன்மை மாறி வருகிறது. அமெரிக்க இராணுவ தொழிற்துறை வளாகம் (America Military Industrial Complex) அந்நாட்டின் கொள்கைகளை கட்டுப்படுத்துவது போல, நமது நாட்டிலும் நடக்கிறதா…? கூகுள் பே, டிஜி யாத்ரா போன்ற பல்வேறு செயலிகள் மூலம் கட்டாயமாக டிஜிட்டல் மயமாக்கும் வேலை நடக்கிறது. இதன் வழியாக குடிமக்களை கண்காணிக்க முடியும்.

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு 2003 – ஐ எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் போடப்பட்ட 243 மனுக்களின் மீதான விசாரணை, நடைபெற உள்ளது. அதன் முடிவு எப்படி இருக்கும்..?

கல்வி நிறுவனங்களில் பாகுபாடு இருக்கக் கூடாது என்பதற்காக கொண்டு வரப்பட்ட UGC சட்டத்திற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஹைதராபாத் பல்கலைக் கழகத்தில் மரணமடைந்த ரோகித் வெமுலாவின் தாய் ராதிகா வெமுலா, மகாராஷ்டிராவில் தற்கொலைக்கு ஆளான மருத்துவ மாணவி பயல் தாட்வியின் தாய் அபேதா தாட்வி தொடுத்த வழக்கினால் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதற்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது. வலதுசாரிகளுக்குத் தடை எளிதாகக் கிடைக்கிறது.

இப்பொழுது நீதிமன்றங்கள் பெண்கள், சிறுபான்மையினர், தலித் மக்களைப் பற்றிய உணர்வின்றி தீர்ப்புகள் வழங்குகின்றன. UGC  சட்டத்திற்கு ஆதரவாக பல்கலைக்கழங்களில் மாணவர்கள் நடத்திவரும் போராட்டங்கள்  நம்பிக்கையளிக்கின்றன.

நான் சபர்மதி சிறையில் இருந்த 70 நாட்களில், எனக்கு 2,700 கடிதங்கள் வந்தன. அக்கடிதங்கள் எளிய மக்கள் எனக்கு எழுதியவை. அவை மன உறுதியைத் தந்தன. சிறைகளில் இருக்கும் கைதிகளுக்கு கடிதங்கள் எழுதுங்கள். அது அவர்களை வெளியுலகோடு தொடர்பில் வைத்திருக்க உதவும். அரசியல் கைதிகளின் பட்டியலை எடுங்கள்.

அவ்வப்போது  சிறைகளைப் பார்வையிடுங்கள். சிறைவாசிகளின் உரிமைகள் பற்றிய விதிகள் ஏட்டில்தான் உள்ளன. கைதிகளோடு இருக்கும் குழந்தைகள் உள்ளன. சிறைவாசிகளுக்கு பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. நீங்கள் சிறைகளைப் பார்வையிட்டால், சிறைவாசிகளின் பிரச்சினைகள் வெளி உலகுக்குத் தெரிய வரும்.

2014 வரை இந்தியாவை உருவாக்குவதற்கான, முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வதற்கான, உரிமைகளுக்கான  இயக்கங்கள் நடைபெற்றன. ஆனால் இப்போதைய ஆட்சியில் இதுவரை பெற்ற வெற்றிகளை, அடைந்த முன்னேற்றங்களை, ஒன்றுமில்லாமல் ஆக்கும் வகையில் சட்டங்கள் இயற்றப்படுகின்றன. இப்பொழுது நடைபெற்று வருவது எதிர்ப்புரட்சியாகும்.

இதனை எல்லாமட்ட மக்களிடமும் சொல்வோம். தொழிலாளர் உரிமைகள் பற்றி,  நிக்கோபார் பிரச்சினை பற்றி, காலநிலை மாற்றம் பற்றி, மக்களின் உரிமைகளைப் பற்றி சொல்லுவோம்.

தொகுப்பு; பீட்டர் துரைராஜ்

 

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time