உண்மையில் யாருக்கும், யாருக்குமான போட்டி இந்த தேர்தல்?

-சாவித்திரி கண்ணன்

”2026 சட்டமன்ற தேர்தல் திராவிட மாடல் vs  வட இந்திய மாடலுக்கானது” என்கிறார், முதல்வர் ஸ்டாலின். அதாவது, இந்த தேர்தலை திமுகவுக்கும் பாஜகவுமானதாக கட்டமைக்கிறார். தமிழக மக்களின் உண்மையான எதிர்பார்ப்புகள் என்ன?  இன்றைய பிரதான ஆபத்து என்ன? நாம் எதிர்க்க வேண்டியதையும், தடுக்க வேண்டியதையும் உணர்ந்திருக்கிறோமா?

ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒவ்வொரு பிரதான விவகாரம் முக்கியத்துவம் பெறுகிறது.

அந்த வகையில் முதல்வர் கூறியபடிக்கு இந்தத் தேர்தலை, “திராவிட மாடல் vs வட இந்தியா மாடல்”க்கான தேர்தலாக நாம் பார்க்க முடியுமா..?

மதவெறி, சிறுபான்மை மக்கள் மீதான வெறுப்புணர்வு போன்றவை இயல்பிலேயே தமிழக மக்களிடம் இல்லை. ஆகவே, மனிதாபிமானமற்ற அந்தப் போக்கை ஈன்றல்ல, என்றுமே நாம் எதிர்க்கிறோம்.

அந்த எதிர்ப்புணர்வு என்பது திமுக இல்லாவிட்டாலும், தமிழக மக்களிடம் இருக்கும். இந்த மண்ணும், மக்களும் வரலாற்று ரீதியாகவே இந்த இயல்பில் இருக்கிறோம்.

மதச்சார்பின்மை, சமூகநீதி, பாசிசத்தை எதிர்க்கும் கூறுகள் திருக்குறள் தொடங்கி சங்க இலக்கியங்கள் யாவற்றிலும் விரவிக் கிடக்கிறது. அதையே இங்கு திருமூலர் உள்ளிட்ட சித்தர்களும், ராமலிங்க அடிகளார் போன்ற யோகிகளும், பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன்,பட்டுக்கோட்டையார், தமிழ்ஒளி, இன்குலாப் போன்ற கவிஞர்களும் வளர்த்தெடுத்தனர்.

அதே சமயம் இங்கு நாம் கவனம் கொள்ள வேண்டியதும், தவறியதும் என்னவென்றால், வட இந்தியா தமிழ்நாட்டை  வேகமாக ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. சென்னையின் செளகார்பேட்டை ஒரு சிறிய ராஜஸ்தானாக ஏற்கனவே மாறிவிட்டது என்பதை நாம் அறிவோம். ஆனால், வட இந்தியர்கள் குடியேற்றம் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவு தற்போது அதிகமாக உள்ளது.

தமிழகத்தின் பிரதான நகரங்களில் ஒவ்வொரு தெருவிலும் வட இந்தியர்கள்  சொந்த வீடுகள் வாங்கி குடியேறிய வண்ணம் உள்ளனர். அது அக்கிரஹாரமானாலும் சரி,  செட்டியார் தெரு, முதலியார் தெரு , வன்னியர் தெரு, கவுண்டர்கள்  தெருவானாலும் சரி மார்வாடிகள், இந்தி வாலாக்கள் வீடு, நிலம் வாங்கி குடியேறிய வண்ணம் உள்ளனர். அதே போல இங்கு தொழிற்சாலைகளையும், வியாபார நிறுவனங்களையும் ஆங்காங்கே ஏற்படுத்தி, பொருளாதார ஆதிக்க நிலையிலும்  தங்கு தடையற்ற உயர்நிலை அடைந்து கொண்டுள்ளனர்.

அதானியும், அம்பானியும் தமிழ்நாட்டில் பல தொழில்களில் எக்கச்சக்க முதலீடுகளை குவித்து எல்லையின்றி சென்று கொண்டுள்ளனர். அதானிக்கு பழவேற்காடு துறைமுகத்தை உறுதிபடுத்தி கையளித்ததும், அதானியிடம் இருந்து அதிக விலைக்கு மின்சாரத்தை அதிகமாக கொள்முதல் செய்து அதை தமிழக மக்களின் தலையில் சுமையாக்கி இருப்பதும் இந்த திராவிட மாடல் தான்…என்பதை வருத்தத்துடன் கவனப்படுத்துகிறேன்.

கடந்த ஐந்தாண்டுகளில் வட இந்திய தொழிலாளர்களின் வருகை விரும்பத்தகாத அளவுக்கு பன் மடங்கு கூடியுள்ளது. இது தமிழக மக்கள் தொகையில்  சமநிலையற்ற போக்கை உருவாக்கி விடும். ஆனால், இது குறித்த பிரக்ஜை இந்த ஆட்சியாளர்களுக்கும் இல்லை. சென்ற ஆட்சியாளர்களுக்கும் இல்லை. போதாக்குறைக்கு இந்த அரசு தமிழக விவசாயிகளிடம் இருந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் வம்படியாக பசுமை நிலங்களை பிடுங்கி ஏற்படுத்தும் சிப்காட்களில் குவிவது எல்லாமே வட இந்திய தொழில் நிறுவனங்களும், தொழிலாளர்களும் தான்.

தமிழக உழைக்கும் ஆண் மகன்களின் உழைப்பை நமது டஸ்மாக் கடைகளின் மட்டரகமான மது உறிஞ்சி எடுத்து, அவர்களை உழைப்பதற்கு லாயக்கற்ற சக்கையாக்கிவிட்டுள்ளது…குறித்து, மனம் பதைக்க பலமுறை என் போன்றவர்கள் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றாலும், அது பொருட்படுத்தப்படுவதேயில்லை.

இது மட்டுமின்றி, வட இந்திய உணவு கலாச்சாரமும் சமீப காலமாக இங்கு மிகவும் அதிகரித்து வருகிறது. ’இதற்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை’ என அலட்சியமாக சொல்லிவிடலாம். உண்மை தான். ஆனால், நமது உணவு கலாச்சாரத்தின் உன்னதத்தை வளர்க்கவும், காக்கவுமான அரசியல் அவசியம் என்பதை நான் உறுதிபடச் சொல்கிறேன்.

இந்தி எதிர்ப்பு அரசியல் பேசித் தான் ஆட்சிக்கு வந்தது திமுக. ஆனால், இன்றைய தமிழகத்தில் கிராமத்தின் பெயர் பலகைகளில் கூட இந்தி எழுத்தை சர்வ சாதாரணமாக பார்க்க முடிகிறது. தமிழகத்தில் தழைத்தோங்கும் தனியார் பள்ளிகள் அனைத்திலும் தாய் தமிழ் புறக்கணிக்கப்பட்டு இந்தி திணிப்பு அரங்கேறி வருகிறது. அரசு பள்ளிகளில்  மட்டும் தான் தமிழ் இருந்தது. தற்போது அரசு பள்ளிகளில் தமிழ் ஆசிரியர் நியமனங்களே நிறுத்தப்பட்டு வருவதானது மிகவும் கவலையளிக்கிறது. வட இந்தியாவில் அரசு நிர்வாகத்தில் இந்தி இருப்பது போல தமிழகத்தில் அரசு நிர்வாகத்தில் ஆங்கில ஆதிக்கம் தவிர்க்கப்பட்டு தமிழ் மொழி எப்போது சாத்தியப்பட்டு எளிய மக்களுக்கு உதவுமோ?

திமுக ஆட்சியானாலும், அதிமுக ஆட்சியானாலும் மேற்படியான இந்த நிலைமைகளில் எந்த பெரிய மாற்றமும் இருக்காது என்றே நினைக்கிறேன். ஆக வட இந்திய ஆதிக்கம் இங்கு அதிகரித்து வருவது குறித்த பிரக்ஜை இல்லாமலே வெறும் அரசியல் சொல்லாடலாக திராவிட மாடல் வட இந்திய மாடல் எனப் பேசுகிறார், முதல்வர் ஸ்டாலின்.

பள்ளத்தாக்குகளாக மாறிக் கொண்டிருக்கும் மலைகள்!

சென்ற ஆட்சியின் தொடர்ச்சியாக வரைமுறையற்ற இயற்கை  வளச் சூறையாடல் இந்த ஆட்சியில் சற்று கூடுதலாக – மிகப் பெரிய அளவில் -நிகழ்ந்துள்ளது. 4,000 ஆயிரம் கல்குவாரிகள் தமிழக கிராமங்களை படு நாசகார நிலைமைக்கு தள்ளியுள்ளன. கேரளாவை போல, இதை முற்றிலும் தவிர்ப்போம் என்று சொல்லக் கூடிய ஆட்சி தான் தற்போதைய அவசியத் தேவை.

பொதுச் சேவை என்பதே பொதுப் பணத்தை சூறையாடல் என்ற போக்கு தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. அதை தவிர்த்த லஞ்ச, லாவண்யமற்ற நேர்மையான ஆட்சிக்கான மக்களின் எதிர்பார்ப்பை முதல்வரும் உணரவில்லை. எதிர்கட்சியினரும் உணரவில்லை என்பது துர்அதிர்ஷடமே.

மக்கள் இலவசங்களைக் காட்டிலும் அரசு வேலை வாய்ப்புகளில் எல்லா துறைகளிலும், எல்லா மட்டங்களிலும், ஒப்பந்தக் கூலி முறைகளை ஒழித்து நியாயமான சம்பளம் வழங்க வேண்டும் என்பதைத் தான் மிகவும் எதிர்பார்க்கிறார்கள். அதற்காகவே  ஓயாமல் போராடி வருகிறார்கள். கல்வியும், மருத்துவமும் மட்டும் மக்களுக்கு விலையில்லாமல் கிடைத்தால் போதுமானது.

இந்த தேர்தல் பொது நலன் விரும்பிகளுக்கும், சுய நலன் விரும்பிகளுக்குமான தேர்தலாக இருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால், நிஜத்தில் அப்படியில்லை.

முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளது உண்மை தான்.  “ நான் அடிக்கடி சொல்லி இருக்கிறேன். பிரதமரும், அமித்ஷாவும் அடிக்கடி வர வேண்டும். இந்த ஆளுநரை மாற்றக்கூடாது. இதுவே, எங்களுக்கு பெரிய பிரச்சாரம்,”

ஆம், தமிழக மக்களாகிய நாம் பாஜகவின் மோடியை, அமித்ஷாவை, ஆளுநர் ரவியை  ஆபத்தாக பார்த்து கடுமையாக எதிர்க்கிறோம். இந்த எதிர்ப்பு மன நிலை திமுகவுக்கு உதவுகிறது. அவ்வளவு தான் சொல்ல முடியும்.

சாவித்திரி கண்ணன்

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time