யூகோஸ்லாவியா உருவானதும், சிதைந்ததும் ஒரு பாடமே!

-சைபர் சிம்மன்

பெரிய  கம்யூனிச நாடாக இருந்த யூகோஸ்லாவியாவானது சோவியத் யூனியன், சீனாவிற்கு அடுத்த நிலையில் முக்கால் நூற்றாண்டுகளாக கோலோச்சியது. ஆறு தேசிய இனங்களைக் கொண்ட கூட்டாட்சி நாடாக சுடர்விட்டது!  உலகமயக் கலாச்சாரத்தில் அதன் கூட்டாட்சி உருக்குலைந்ததில் பல நாடுகளாக சிதறுண்டதை நினைவு கூற ஒரு வாய்ப்பு:

20 -ஆம் நூற்றாண்டில் தென்கிழக்கு ஐரோப்பா பகுதியில்  இருந்த ஒரு முன்னாள் கூட்டாட்சி நாடே  யூகோஸ்லாவியாவாகும். முதல் உலகப் போருக்கு பிறகு உருவான யூகோஸ்லாவியாவானது 1929 முதல் மிகப் பெரிய ராணுவத்தைக் கொண்டு இருந்தது! இது, செர்பியா, குரோஷியா, ஸ்லோவேனியா, போஸ்னியா-ஹெர்சகோவினா, வடக்கு மாசிடோனியா மற்றும் மாண்டினீக்ரோ ஆகிய தேசிய இனங்களைக் கொண்ட நாடுகளை  உள்ளடக்கியிருந்தது.மாபெரும் தலைவர் ஜோசிப் ப்ரோஸ் டிட்டோவின் தலைமையின் கீழ், அணிசேரா இயக்கத்தில் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவுடன் இணைந்து முக்கிய பங்காற்றியது.

சோவியத் யூனியன் வீழ்ச்சிக்கு பிறகு யூகோஸ்லாவியாவின் தேசிய இனங்கள் படிப்படியாக பிரிந்து போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, மாண்டினீக்ரோ, மாசிடோனியா, ஸ்லோவேனியா, செர்பியா மற்றும் கொசோவோ என்னும் ஆறு தேசங்களாகப் பிரிந்து சென்றுவிட்டன..

யூகோஸ்லோவியா பிளவுண்டதற்கு, பலவித வரலாற்று காரணங்கள் இருந்தாலும், வன்முறை நிறைந்த இரத்தக் களறியாகவே இது நடந்தேறியது என்பது தான் பெரும் சோகம். யுகஸ்லோவியாவை ஒன்றிணைந்த சோஷலிச பற்று வலுவிழந்த நிலையில், செர்பியா, கொசாவோ, குரோஷியா உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள்  தங்கள் தேசிய தன்மையை வலியுறுத்தி தனி நாடு கண்ட போது, கொடுர தாக்குதல்களிலும், பதில் தாக்குதல்களிலும் லட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

பல பகுதிகளில் இன அழித்தொழிப்பும் மேற்கொள்ளப்பட்டது. வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் அதன் ஆழமான வடுக்களை கொண்டிருக்கின்றனர். யூகோஸ்லோவியா எனும் நாடே இப்போது இல்லை.

இந்த பின்னணியில், பழைய  யூகஸ்லோவிய நினைவுகளை பதிவு செய்யும் நோக்கம் கொண்டதாக ஒரு இணையத் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இணையதளங்கள் தொழில்நுட்ப நோக்கிலானவை மட்டும் அல்ல, அவை வரலாறு, கலாச்சாரம், பண்பாடு, அரசியல் என பலவற்றை பிரதிபலிப்பவை. ஒரு சில தளங்கள் காலத்தின் சாட்சியாகவும் அமைவது உண்டு. இன்னும் சில தளங்கள் வரலாற்று நோக்கில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் உண்டு.

இப்போது நாம் பார்க்க இருக்கும் இணையதளம் யுகஸ்லோவிய நினைவுகளை மீட்டெடுக்கும் முயற்சியாக அமைக்கப்பட்டுள்ள தளம்.

நினைவலைகளை உருவாக்கும் நோக்கம் கொண்டது என்றாலும், ’ரிமம்பரிங் யூகோஸ்லோவியா’ (https://rememberingyugoslavia.com/about/ ) எனும் இந்த தளம் லேசானது இல்லை, மாறாக உங்கள் உள்ளத்தை மென்மையாக உலுக்கி விடக்கூடியது. யூகோஸ்லோவிய வரலாற்றுடன் தொடர்பு கொண்டவர்களை இன்னும் வலுவாகவே உலுக்கலாம்.

“ இனியும் இல்லாத ஒரு நாட்டின் நினைவுகளை கண்டறிவது’ இந்த நோக்கம் என தளத்தின் அறிமுக பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் யூகோஸ்லோவிய குடியரசுகளை சேர்ந்த மக்கள் தங்கள் பழைய தாய்நாட்டை எப்படி நினைவு கொண்டுள்ளனர். யூகோஸ்லோவிய நினைவுகள் இந்த பகுதிகளில் எந்த வகையில்மிஞ்சி இருக்கின்றன அல்லது நினைவில் கொள்ளப்படுகின்றன’ என்பதிலும் கவனம் செலுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிதறுண்டு பல நாடுகளாக உருமாறிய யூகோஸ்லாவியா!

யூகோஸ்லோவிய மக்கள் தலைவர் டிட்டோ (Josip Broz Tito) துவங்கி, யூகஸ்லோவியாவின் கட்டிடங்கள், அருங்காட்சியகங்கள், கலை வடிவங்கள், இணையதளங்கள், ஊடகங்கள் மற்றும் யுகஸ்லோவியா சார்ந்த எல்லாம் தொடர்பான விஷயங்களை இந்த தளம் கொண்டுள்ளது.

தளத்தின் உள்ளடக்கம், நினைவு குறிப்புகளாக அமைந்துள்ளதோடு, இன்ஸ்டாகிராம் பக்கம், யூகோஸ்லோவிய நினைவலைகள் பாட்காஸ்ட், பயணக்கட்டுரை புத்தகம் உள்ளிட்டவற்றையும் கொண்டுள்ளது. எல்லாமே யூகோஸ்லோவிய நினைவுகளை மீட்டெடுப்பவை.

யூகோஸ்லோவியா இப்போது இல்லை என்றாலும், அதன் உறுப்பு நாடுகளை ஒன்றாக இணைக்கும் சக்தி கொண்டதாக இருந்த அதன் அடிப்படை கருத்தாக்கத்தை மைய சரடாக கொண்டு அணுகும் வகையில் இந்த தளம் அமைந்துள்ளது.

யூகோஸ்லோவியா பிளவுண்டது தொடர்பான முறையீடோ, புலம்பலோ இந்த தளத்தில் இல்லை; அது தொடர்பான புழுது வாரித்தூற்றலோ, குற்றச்சாட்டுகளும் இல்லை. மாறாக, கடந்த கால நிதர்சனத்தை திரும்பி பார்ப்பதாக அமைகிறது.

யூகோஸ்லோவியா ஏன் சிதறுண்டது எனும் கேள்விக்கான பதிலை தேடிய படி, இந்த தளத்தை அணுகுவது பலவித வரலாற்று பாடங்களையும் வழங்கும்.

பீட்டர் கோர்ச்னக் (Peter Korchnak. ) எனும் எழுத்தாளர் இந்த தளத்தை நடத்தி வருகிறார்.கோர்ச்னக் தன்னை வர்ணித்துக்கொள்ளும் விதம் இந்த தளத்தின் நோக்கத்தையும், தன்மையையும் கூடுதலாக புரிய வைக்கிறது.

“இனியும் இல்லாத ஒரு நாட்டில் ( செகஸ்லோவிகா) பிறந்த நான், இனியும் இல்லாத ஒரு நாட்டின் ( யூகோஸ்லோவியா) நினைவுகளை கண்டறிகிறேன்” என அவர் தன்னைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

யூகோஸ்லோவியா போல் அல்லாமல், கத்தியின்றி இரத்தமின்றி தனித்தனி நாடுகளாக செகஸ்லோவிகா பிளவுபட்டாலும், இந்த நாடுகளை ஒன்றிணைத்த சக்தி எது, அவை பிரிய காரணமாக இருந்த உணர்வுகள் எவை போன்ற கேள்விகள் முக்கியமானவை.

இப்படி பல கேள்விகளை இந்த தளம் எழுப்புகிறது. இணையத்தில், உடனடி கவனத்தை ஈர்க்கும் தகவல்களுக்கும், வைரல் போக்குகளுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் நிலையில், நாம் நின்று நிதானமாக யோசிக்க வேண்டிய விஷயங்களை இந்த தளல் நினைவூட்டுவதாக கருதலாம்.

இந்த தளத்தில் உள்ள, நிக்கலோ டெஸ்லா தொடர்பான பதிவு இந்த தளத்தின் நோக்கத்தையும், இந்த நினைவலைகள் எழுப்ப கூடிய கேள்விகளையும், தரக்கூடிய புரிதலையும் புரிய வைப்பதாக இருக்கிறது.

குரோஷியாவில் பிறந்த, செர்பிய வேர் கொண்டவரான நிக்கோலா தெஸ்லா பின்னர் அமெரிக்காவில் குடியேறி உலக புகழ் பெற்ற கண்டுபிடிப்பாளராக உருவானார். ஊக்கம் அளிக்கும் நவீன கண்டுபிடிப்பாளராக கொண்டாடப்படும் டெஸ்லாவை குரோஷியா, செர்பியா என இரண்டு நாடுகளுமே சொந்தம் கொண்டாடுகின்றன. ஒன்றுபட்ட யுகஸ்லோவியாவும் அவரை சொந்தம் கொண்டாடியது. இன்று அவர் அமெரிக்க நாயகனாகவும் கொண்டாடப்படுகிறார்.

டெஸ்லா தொடர்பாக முன்னாள் யூகோஸ்லோவிய நாடுகளில் ஏற்பட்ட மோதல் அதன் சிக்கலான வரலாற்றின் தொடர்ச்சி என்றாலும்,டெஸ்லா யார் எனும் கேள்வி நமக்கு பலவற்றை சொல்லாமல் சொல்கிறது.

https://rememberingyugoslavia.com/nikola-tesla-yugoslav-american/

கட்டுரையாளர்; சைபர் சிம்மன்

நரசிம்மன் என்ற இயற்பெரைக் கொண்ட சைபர்சிம்மன் ஒரு மூத்த பத்திரிகையாளர். தமிழில் இணையம், செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்பம் குறித்து  நீண்ட காலமாக எழுதி வருகிறார். இவை குறித்து நிறைய நூல்களை எழுதியுள்ள இவர் ‘இணைய மலர்’ என்ற இதழின் ஆசிரியராகவும் உள்ளார்.

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time