பயங்கரவாத நாடான இஸ்ரேலுக்கு துணை போவது, அமெரிக்க அதிபர் டிரம்பின் கருணைக்கு ஏங்குவது, பாலஸ்தீனப் படுகொலைகளுக்கு மெளனம் சாதிப்பது, அமெரிக்காவின் வரி பயங்கரவாதத்திற்கு இந்தியாவை பலி கடா ஆக்குவது என மோடியின் திருவிளையாடல் திகைக்க வைக்கின்றன….!
“நாட்டு நலன்” என்பது என்ன என்று மோடிக்கு புரியவில்லையோ..? என எண்ணும்படி, பிரதமரின் சமீப நகர்வுகளும், முன்னேற்பாடுகளும் உள்ளன..!
இரண்டாம் முறை டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு கிடைத்த சந்தர்ப்பத்தில் டிரம்பை சந்தித்து , இந்தியா, 500 பில்லியன் டாலர் பெருமான அமெரிக்க பொருட்களை இறக்குமதி செய்யும் என உறுதி கொடுத்தார் மோடி. ஆனாலும், தான் தோன்றித்தனமாக இந்தியாவின் மீது இறக்குமதி வரியை விதித்தார், அமெரிக்க அதிபர்!
இத்தகைய வரிவிதிப்பு அமெரிக்க அதிபரின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது, என பலரும் அமெரிக்க உச்சநீதிமன்றத்தை அணுகிய வழக்கு நிலுவையிலிருக்கும் பொழுதே , பிற நாடுகள் அமெரிக்காவுடன் வர்த்தக உடன்பாடுகள் நடத்த தயங்கிய நிலையில் மோடி அரசு அடிபணிந்து , நாட்டு நலன்களை அடகு வைத்து வர்த்தக ஒப்பந்தம் செய்து கொண்டது. அத்துடனின்றி இந்தியா எந்த நாட்டில் இருந்து எரிபொருள் (கச்சா எண்ணெய், எரிசக்தி) இறக்குமதி செய்ய வேண்டும்
என முடிவெடுக்கும் உரிமையையும் டிரம்பின் காலடியில் சமர்ப்பித்து விட்டார். இத்தனை துரோகங்களுக்கு பிறகும் இந்திய அமெரிக்க வர்த்தக உடன்பாட்டை ஏதோ பெரிய சாதனை போல “பெருமை” பேசி சமாளிக்க துணிந்தது மோடி அரசு. இதற்கு ஆப்பு வைப்பதைப் போல் அமெரிக்க உச்சநீதிமன்றம் டிரம்பின் அடாவடி வரிவிதிப்பை சட்டவிரோதமானது என ரத்து செய்தது.
எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தியும் , விவசாய தொழிலாளர் அமைப்புகளும் மோடியின் இந்தச் செயலை “சரணாகதி” என விமர்சித்துள்ளனர். நம்மை பொறுத்த வரையில் மோடி தனது விசுவாசமான அடிமையின் குணத்திற்கேற்ப நடந்து கொண்டார் , இதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. இவற்றிற்கெல்லாம் காரணமாக அமெரிக்காவில் தொடுக்கப்பட்டுள்ள அதானி மீதான வழக்குகளை சொல்வதா? அல்லது நாமறியாத எப்ஸ்டீன் கோப்பு ரகசியங்களை டிரம்ப் அறிந்திருப்பதால், மோடியின் குடுமி டிரம்ப்பின் கையில் உள்ளது என்பதா?

சமீபத்தில் வெளியான எப்ஸ்டீன் கோப்பு ஈ மெயில் களில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, மற்றும் அனில் அம்பானி போன்றோர் எப்ஸ்டீனுடன் நீண்டகாலமாக தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது. இவர்கள் “மேலிடத்தின்”உத்தரவின் பேரிலேயே, மேலிடத்திற்காகவே எப்ஸ்டீனுடனை நாடி அவரின் உதவியை நாடியுள்ளது அம்பலமாகி உள்ளது. உலகெங்கிலும் உள்ள அரசியல் தலைவர்களின் தலைகள், எப்ஸ்டீன் கோப்பு தொடர்பால் உருண்டபொழுது இந்திய ஆளும் கட்சி மத்தியிலும், பத்திரிக்கை உலகிலும் இத்தகைய இழிசெயல் குறைந்தபட்ச கண்டனத்தை கூட பெறவில்லை என்பதை என்னவென்பது? ஆறுதலாக , சுப்ரமண்ய சுவாமி , இது குறித்து கூறுகையில் மோடி ஒரு உமனைசர் என கூறியுள்ளார், அதற்கு வலு சேர்க்கும் விதமாக குஜராத்தை சார்ந்த ஒரு பெண்ணை அன்றைய முதல்வர் மோடியின் உத்தரவில்,அவருக்காக அன்றைய குஜராத் உள்துறை அமைச்சர் அமீத் ஷா காலர்களை ஏவி வேவு பார்த்த நிகழ்வை கூறியுள்ளார்.
2017ம் ஆண்டே டிரம்பின் நட்பு வட்டத்திற்குள் “மேலிடம்”(leader) நுழைய உதவுமாறு எப்ஸ்டீனை அம்பானி கேட்டுக்கொண்டதும், எப்ஸ்டீனின் ஆலோசனையில், டிரம்பின் மதிப்பை பெறுவதற்காக மோடி இஸ்ரேல் சென்று நெதன்யாகுடன் நடன மற்றும் கேளிக்கை விருந்துகளில் கலந்து கொண்டதும் அம்பலமாகி உள்ளது. ஆக இவையெல்லாம் அரசாங்க நிமித்தமாக நடந்த வேலைகள் அல்ல, ஆசாபாசங்களின், இச்சைகளின் உந்துதலால் நடந்தேறிய அசிங்கங்கள் .
ஆனால், மோடி இஸ்ரேலிடமிருந்து பெகாசஸ் உளவு சாதனங்களை இறக்குமதி செய்து இந்தியாவிலுள்ள எதிர்கட்சி தலைவர்கள, கல்வியாளர்கள, நீதிபதிகள், சமூக ஆர்வலர்கள், வேண்டாத அதிகாரிகளின் தொலைபேசியை ஒட்டுக்கேட்டு வேவு பார்த்த கொடுஞ்செயல் நடந்தேறியது.
இந்தியா காலங் காலமாக கடை பிடித்த பாலத்தீன மக்களின் உரிமைகளுக்கான ஆதரவை , குறுகிய இஸ்லாமிய வெறுப்பு என்ற நிலையில் நின்று (யூத வெறி ) ஜியோனிச அரசின்
இனப் படுகொலையை ஆதரிக்கும் நிலைக்கு இந்திய அரசை கொண்டு வந்து நிறுத்தினார்.
உலகின் மிகப் பெரிய மக்கள்தொகை கொண்ட நாட்டின் பிரதமர் என்பதால் கிடைக்கும் மதிப்பை , தன்னுடைய குறுமதியால் தொலைத்த மோடி, சிந்தூர் குளறுபடிக்கு பிறகு மீண்டும் டிரம்ப்பின் அபிமானத்தை பெற இந்தியாவின் சுதந்திரமான அயலுறவு கொள்கைக்கும், பொருளாதார சுய சார்புக்கும் வேட்டு வைக்கும் விதமாக, ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை குறைப்பது, அமெரிக்க சோயா மற்றும் சமையல் எண்ணெய்களை , கால்நடை தீவனங்களை இறக்குமதி செய்வது,என்ற முடிவை எடுத்துள்ளார்.
இவைகள் போதாதென்று, சர்வதேச நீதிமன்றம் போர் குற்றவாளி (war criminal) என அறிவித்த நெதன்யாகுவின் திடீர் அழைப்பை சிர மேற்கொண்டு ஏற்று இஸ்ரேல் சென்ற மர்மம் என்ன?

காசாவில் இஸ்ரேல் இழைத்துக் கொண்டிருக்கிற மனிதப் படுகொலை கண்டு உலகத் தலைவர்கள் பலரும் இஸ்ரேலுக்கு செல்வதை தவிர்த்த வேளையில், இந்திய பிரதமர் மோடி இஸ்ரேல் சென்று அங்கு இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் உரையாற்ற சம்மதித்த மர்மம் என்ன?
இஸ்ரேலின் எதிர்கட்சிகள் புறக்கணித்த நிகழ்வில் உரையாற்றிய மோடி, ஹமாசின் தாக்குதலால் உயிரிழந்த இஸ்ரேலியர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். ஆனால் இஸ்ரேல் கொன்று குவித்த 70,000 பாலத்தீனர்களுக்கு – பச்சிளங்குழந்தைகளுக்கு – அஞ்சலி செலுத்தவில்லை! இஸ்ரேலால் காசாவில் கொல்லப்பட்ட இந்திய ராணுவ வீரர்களுக்கு- ஐ. நா அமைதிப் படையில் இருந்த இந்திய ராணுவ அதிகாரிகள் மூவருக்கு- மோடி அஞ்சலி செலுத்தவில்லை
இது வரை யாரும் அறிந்திராத , நெதன்யாகுவால் ஏற்பாடு செய்யப்பட்ட “நீசெட் விருதை” மோடி பெற்றுக் கொண்டார்! இஸ்ரேலின் நீதித் துறையும், இஸ்ரேலிய மக்களும், பிற எதிர் கட்சியினரும் நெதன்யாகுவின் அரசை எதிர்த்து தேர்தலை சந்திக்கும் சமயத்தில் நெதன்யாகுவின் இமேஜை உயர்த்த ‘ பிரச்சார நாயகன் ‘ மோடி இஸ்ரேல் நீசெட்டில் பிரசங்கம் செய்துள்ளார்.
பொதுவாக இஸ்ரேல் தனது பாவச் செயல்களுக்கு ஆதரவளிக்கும் நாடுகளுக்கு இரண்டு உதவிகளை செய்ய முன் வருவர். ஒன்று இஸ்ரேலின் ராணுவ தொழில் நுட்பத்தை ,தொழில்நுட்ப சாதனங்களை – பெகாசஸ் போன்ற – கொடுத்து வருகை தரும் தலைவர்களின் அரசை பலப்படுத்த உதவுவர்.
இரண்டாவது அமெரிக்க ஆட்சி பீடத்தை நெருங்குவதற்கு இஸ்ரேல் தனது “செல்வாக்கை” பயன்படுத்தி உதவும் .

இஸ்ரேலின் கைப்பாவையான எபஸ்டீனை வைத்து, உலக நாட்டு தலைவர்களை இஸ்ரேலிய மொசாத் மிரட்டுவதும், ஆட்டி வைப்பதும் உலகறிந்த ரகசியம். இந்த நிலையில் பிளாக்மெயிலரான நெதன்யாகுவின் “ கோரிக்கையை” ஏற்று இஸ்ரேல் சென்ற மோடி, தனது விசுவாசத்தை காட்டி டிரம்பை குவாட் மாநாட்டிற்கு இந்தியா வரவழைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுகிறார்.
இந்த முயற்சியால் இந்த ஆண்டு இந்தியாவின் தலைமையில் நடக்க இருக்கும் பிரிக்ஸ் மாநாட்டின் எதிர்காலம் , குளோபல் சௌத் நாடுகளின் எதிர்காலம் ஆகியவை பற்றி மோடி கவலைப்படவில்லை. எப்படியாவது டிரம்பிற்கு தான் விசுவாசமான அடிமை என்று நிரூபிக்க
மோடி முயற்சிக்கிறார். இதற்காக மேற்காசிய நாடுகளான ஈரான், சவுதி அரேபியா, எகிப்து,கத்தார் ஆகிய நாடுகளை பகைத்து கொள்ள மோடி தயங்கவில்லை!
மேற்காசிய நாடுகள் ஆதரவளிக்காத காசா அமைதி உடன்பாட்டையும், இஸ்ரேல் புதிதாக கிளப்பியிருக்கும் அறுகோண கூட்டணி (Hexagonal Alliance) யில் இடம்பெற மோடி துடிக்கிறார். இதில் இஸ்ரேல் இந்தியாவை தவிர்த்து மீதமுள்ள நாடுகள் யாவை என்பது யாருக்கும் தெரியாத மர்மமாக உள்ளது.
மோடி, தன்னுடைய இஸ்லாமிய வெறுப்பு மதவெறி நிலைப்பாட்டை காட்ட முனைவது கண்டனத்திற்குரியது. இதுவரை இந்தியா கடைபிடித்து வரும் பாலத்தீன மக்களின் அரசுரிமைக்கான ஆதரவு,இஸ்ரேலை ஆக்கிரமிப்பிலிருந்து பின் வாங்க வற்புறுத்துவது, பாலத்தீன அரசு அமைப்பதே அமைதிக்கான தீர்வு என்ற கொள்கை நிலைகளை கைவிட மோடிக்கு யார் அதிகாரம் கொடுத்தது?
இத்தகைய துரோக இழிசெயலை இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கானது எனக் கதைப்பது கீழ்த்தரமான செயலாகும். இந்தியா- இஸ்ரேல் பாதுகாப்பு உடன்பாடு இந்திய நலன்களுக்கு உதவும் என்பதும், இரும்புக் கூடம் மற்றும் இரும்பு திரை தொழில் நுட்பம் (Iron dome and Iron Beam) இந்தியாவிற்கு இஸ்ரேல் தந்துதவும் என கதையளப்பது கண்டு இந்திய மக்கள் ஏமாறக் கூடாது.
அண்டை நாடுகளுடன் கண்ணியமிக்க நட்புறவு, மதங்களிடையே நல்லிணக்கம், சமாதானம் என்பதே இந்திய மக்களின் அவாவாக இருக்கும் பொழுது இந்த உணர்வுகளைத் தான் இந்திய அரசு பிரதிபலிக்க வேண்டுமே ஒழிய , உள்நாட்டிலுள்ள பிற மத்த்தினரையும், அண்டை நாட்டு மக்களையும் அரசுகளையும் எதிரிகளாக கருதும் சித்தாந்தத்தை இந்திய அரசு பிரதிபலிக்க கூடாது. அவ்வாறு நடத்துவதும் இந்தியர்களின் கொள்கையில்லை. அவை இற்றுப்போன இந்துத்துவா காலிகளின் கற்பனை சித்திரங்களே ஆகும். இந்த சித்திரங்களெல்லாம் இந்தியர்களின் பெருமையின் அடையாளமோ, பரந்த மனதின் வெளிப்பாடோ அல்ல.
உலக நாடுகள் மத்தியில் செல்வாக்கிழந்த இந்தியாவை பற்றி கவலை படாமல், குவாட் மாநாட்டிற்கு டிரம்பை வரவழைத்து அவர் துதிபாடி, அவர் கட்டளைகிணங்க செயல்பட்டால் , சலுகைகள் சில பெற்று , இந்திய மக்கள் மத்தியில் தான் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறலாம் என்ற நப்பாசையில் மோடி தலைகீழாக நிற்கிறார். இதன் மூலம் அவமானத்திலிருந்தும் , அதானி வழக்கிலிருந்தும் தப்பிக்கலாம், மீசையில் மண் ஒட்டவில்லை என இந்திய மக்களிடம் கதையளக்கலாம் என காரியங்கள் நடைபெறுகின்றன.
ஆனால் இழப்பு எனபதென்னவோ இந்திய மக்களுக்குத் தான் . சுதந்திரமான பொருளாதார கொள்கையையும், அயல் நாட்டுறவில் சுதந்திரத்தையும், அடகு வைத்து விட்ட மோடி இந்திய மக்களின் எதிர்காலத்தையே டிரம்பிடம் அடகு வைத்து விட்டார். எதிர்காலத்திலும் இந்தியா அமெரிக்காவிடமிருந்து அமெரிக்கா கூறும் பொருட்களை, அமெரிக்க தொழில் நுட்பத்தை அமெரிக்கா கூறும் விலையில் இறக்குமதி செய்யும் என்று உத்திரவாதங்கொடுத்து “மீர் ஜாபரை “ விட மோசமாக இந்திய மக்களுக்கு துரோகமிழைத்துள்ளார் மோடி!
பிரதமர் பதவிக்கு இவர் சரியான ஆளா என்ற கேள்வி இந்தியர்களை துளைப்பதில் வியப்பில்லை!
கட்டுரையாளர்; ச.அருணாசலம்
























Leave a Reply