அரசியல் சட்டத்தை செயலிழக்க செய்கிறதா மனு தர்மம்?

-ஹரிபரந்தாமன்

இந்த 21 ஆம் நூற்றாண்டில் பெண்கள் இல்லாத துறையே இல்லை என அனைத்து துறைகளிலும் சாதனை படைக்கின்றனர். ஆனால், உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்தாலும், சபரிமலை சன்னதியில் இறைவனை வழிபடும் உரிமை பெண்களுக்கு இன்னும் சவாலாகவே உள்ளது, ஏன்? நீதிபதி ஹரிபரந்தாமன் அலசல்;

‘சபரிமலை கோயிலில் 10  முதல் 50 வயதிற்குட்பட்ட பெண்களை அனுமதிப்பதில்லை’ என்ற சம்பிரதாயத்தை வலியுறுத்தி ,திருவாங்கூர் தேவஸ்தானம் போர்டு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்த தேவஸ்தானம் போர்டு சுமார் ஆயிரம் கோயில்களை நிர்வகிக்கிறது.

‘அனைத்து பெண்களும் வயது வித்தியாசம் இன்றி சபரிமலை கோயிலில் சென்று வழிபடலாம்’ என்று உச்ச நீதிமன்றத்தின் 5  நீதிபதிகள் அமர்வு 2018 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.

அந்த தீர்ப்பினை எதிர்த்து பேசுகிறது’ மேற்சொன்ன திருவாங்கூர் தேவஸ்தான போர்டின்  தீர்மானம்.

ஆண்களுக்கு நிகரான பெண்களின் வழிபாட்டு உரிமையை அங்கீகரிப்பது உச்ச நீதிமன்ற தீர்ப்பு. எனவே, அத் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது.


சபரிமலை கோயிலில் வயது வித்தியாசம் இன்றி, பெண்கள் வழிபடலாம் என்று 5 நீதிபதிகளில் 4 நீதிபதிகள்–தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கன்வில் கர், நாரிமன், சந்திர சூட்–தீர்ப்பளித்தனர். பெண்கள் வழிபட உரிமையில்லை என்று ஒரு நீதிபதி தீர்ப்பளித்தார் அவர் ஹிந்து மல்கோத்ரா என்ற பெண் நீதிபதி என்பதே வேடிக்கை.

2018 இல் மேற்சொன்ன தீர்ப்பு வழங்கப்பட்ட போது ஆரம்பத்தில் அதை சங்பரிவார அமைப்பினர் எதிர்க்கவில்லை. பெண்களுக்கு எதிரான நிலையை நேரடியாக எடுத்தால் அது அவர்களின்  தேர்தல் அரசியலை பாதிக்கும் என்று கணக்கு போட்டு இருப்பார்கள்.

ஆனால், நமது ஆணாதிக்க சமூகத்தில், பெண்களை ஆணுக்கு சமமாக எண்ணாத போக்கு மேலோங்கி இருப்பதை அறிந்த சங்பரிவார் கும்பல் இதை அரசியலாக்கினர். அதாவது ,இந்தத் தீர்ப்பின்படி கோயிலுக்கு சென்ற பெண்களை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரித்தது. அதன் தலைமையிலான பினராய் விஜயன் அரசு பெண்களை அனுமதித்ததை ஆதரித்தன< முற்போக்கு பெண்கள் அமைப்புகள்!

தங்களின் வழிபாட்டு உரிமைக்கு ஆதரவாக நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்று திரண்ட பெண்கள்!

அதே நேரத்தில் பெண்கள் சபரிமைக்கு சென்றால், நாட்டில் அசம்பாவிதங்கள் நடக்கும். கேரளாவே அழிந்துபட்டு போகும். பாரம்பரியத்தை மீறக் கூடாது என தீர்ப்பை எதிர்த்து அரசியல் செய்தனர், சங்பரிவார் அமைப்பினர்.

உடனே , மேலே குறிப்பிட்ட தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று 67 மனுக்கள் – குறிப்பாக சங்பரிவார் அமைப்புகளால் – தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மறுபரிசீலனை கோரும் மனுக்கள் விசாரணைக்கு வந்த போது, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஓய்வு பெற்று விட்டார். அப்போது தலைமை நீதிபதியாக இருந்தவர் கோகாய் அவர்கள்.

மேலே கூறிய தீர்ப்பு 4:1 என்ற அடிப்படையில் அமைந்தது. அதாவது, நான்கு நீதிபதிகள் பெண்கள் வழிபாட்டு உரிமையை ஆதரித்தனர்; ஆனால், ஒரு நீதிபதி ஆதரிக்கவில்லை.

அந்த நான்கு நீதிபதிகளில் ஒருவரான தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஓய்வு பெற்று விட்டாலும், தலைமை நீதிபதி  கோகாய் அவர்கள் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யலாம் என்று முடிவெடுத்தாலும், 3:2 என்ற நிலை தான் இருந்திருக்க வேண்டும்.

ஆனால் பெண்கள் வழிபடலாம் என்று கூறிய நீதிபதிகளில் கன்வில்கர் , மறுபரிசீலனை செய்யலாம் என்ற நிலைக்கு சென்றதால், மறுபரிசீலனை மனுக்கள் மூன்று நீதிபதிகளால்–தலைமை நீதிபதி  கோகாய், கன்வில்கர் , ஹிந்து மல்கோத்ரா ஆகியோரால்–அனுமதிக்கப்பட்டன. மற்ற இரு நீதிபதிகளான நாரிமன் மற்றும் சந்திர சூட் ஆகியோர் மறுபரிசீலனை மனுக்களை தள்ளுபடி செய்தனர்.

அதாவது, 4:1 என்ற நிலை மாறி, 2:3 என்ற நிலைக்குச் சென்றதால் ,மறுபரிசீலனை மனுக்கள் அனுமதிக்கப்பட்டு, இந்த சபரிமலை வழக்கு 5 நீதிபதிகளுக்கு பதிலாக 7 அல்லது 9 நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வு விசாரிக்கும் என்று தீர்ப்பானது. இந்த விசாரணை இந்த ஆண்டு ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதே சமயம் இந்த சபரிமலை வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கும் வரை 2018 ஆம் ஆண்டில் வழங்கிய அனைத்து பெண்களும் சபரிமலையில் வழிபடலாம் என்ற தீர்ப்பு தடை செய்யப்படவில்லை.  இதனால்,  சில முற்போக்கான பெண் அமைப்புகளும், தனிப்பட்ட துணிச்சலான பெண்களும் சபரிமலைக்கு செல்ல முயன்றனர்.

அதற்கு கடும் எதிர்ப்பை இந்துமத பிற்போக்குவாதிகள் தெரிவித்து அச்சுறுத்தினர். பெண்களை திரட்டியே பெண்களுக்கான உரிமையை எதிர்க்கச் செய்யும் அரசியலும் நடந்தது. இதனால் நடைமுறையில் பெண்கள் சபரிமலை சென்று வழிபடுவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான அரசு அனுமதிக்க இயலாத அரசியல் சூழலே இருந்தது.

மேலே கூறிய மறுபரிசலனை மனுக்கள் விசாரிக்கப்பட்ட போது, திருவாங்கூர் தேவஸ்தானம் போர்டு அந்த மறு பரிசீலனை மனுக்களை எதிர்த்து, நீதிமன்றத் தீர்ப்பை ஆதரித்தது என்பதை குறிப்பிட்டாக வேண்டும்.

ஆனால், இப்போது அவர்களின் கருத்தை மாற்றிக் கொண்டார்கள்.


திருவாங்கூர் தேவஸ்தானம் போர்டு இப்போது எடுத்துள்ள தீர்மானத்தை – அதாவது, வயது வித்தியாசமின்றி பெண்கள் அனைவரும் சபரிமலையில் வழிபடலாம் என்பதை அனுமதிக்க முடியாது என்ற தீர்மானத்தை – ஸ்ரீ நாராயண குரு தர்ம பரிபாலன யோகம் (SNDP) மற்றும் நாயர் சர்வீஸ் சொசைட்டி (NSS) என்ற இரு பலமான அமைப்புகள் ஆதரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அன்று நீதிமன்றத் தீர்ப்பை ஆதரித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தற்போதுள்ள மாறுபட்ட சூழலில் இதை விவாதித்து உரிய முடிவு எடுக்கப் போவதாக அறிவித்துள்ளது. அதாவது, ஆணும் பெண்ணும் வழிபாட்டு உரிமையில் சமம் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எடுக்க போகும் முடிவு உறுதிப்படுத்துமா..? என்பது தெரியாது.

ஆணும் பெண்ணும் வழிபாட்டு உரிமையில் சமம் என்ற முடிவானது ஓட்டு அரசியலுக்கு வேட்டு வைக்கலாம்…என்ற அச்ச உணர்வை மீறிய அறம் சார்ந்த பார்வையும், நோக்கமும் முன்னெடுக்கபடுமா? என்பதற்கு நமக்கு விடை கிடைக்கவில்லை. 2018 தொடங்கி 2026 வரையிலான இந்த காலகட்டத்தில் வரலாற்று சிறப்பு வாய்ந்த அந்த தீர்ப்புக்கு ஆதரவான கருத்தாக்கங்களை சமூக தளத்தில் வளர்த்தெடுக்கும் முன்னெடுப்புகள் போதுமான அளவுக்கு நடக்கவில்லை. அந்த வெற்றிடத்தை பிற்போக்கு சக்திகள் ஆக்கிரமித்து தங்கள் கருத்திற்கு ஆதரவான நிலையை அனைத்து மக்களிடமும் பிரச்சாரம் செய்துவிட்டனர்.

பெண்களுக்கான வழிபாட்டு உரிமையை பெருந்திரளான பெண்களை வைத்தே எதிர்க்கச் செய்தனர்.

தமிழ்நாட்டில் தந்தை பெரியாரைப் போன்ற போற்றுதலுக்குரிய சீர்திருத்த தலைவர் ஸ்ரீ நாராயண குரு அவர்கள். அவர் கேரளத்தில் 1856 முதல் 1928 வரை வாழ்ந்தவர். அவர் காலத்திலேயே தோற்றுவிக்கப்பட்ட அமைப்பு தான் மேற்சொன்ன SNDP.  அது இப்படிப்பட்ட ஒரு நிலையை எடுத்து இருப்பது மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கிறது. இது, சங்பரிவாரின் செல்வாக்கு அனைத்து இடங்களிலும் செல்லுபடியாகிறது என்பதை தெளிவாக்குகிறது.

அது மட்டுமல்ல. நாயர் சர்வீஸ் சொசைட்டி அமைப்பு, பாரதிய ஜனதா கட்சியை விமர்சனம் செய்துள்ளது. விமர்சனம் என்னவென்றால் ,பாரதிய ஜனதா அரசு சபரிமலை தீர்ப்பை ரத்து செய்யும் வகையில் பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றி இருக்க வேண்டும் என்பதே அந்த விமர்சனம். அதாவது , 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் சபரிமலை கோயிலில் வழிபடுவதற்கு அனுமதி இல்லை என்ற காலா காலமான பாரம்பரியத்தை உச்ச நீதிமன்ற தீர்ப்பு மாற்றி இருப்பதை ரத்து செய்யும் வகையில் சட்டம் இயற்றப்படவில்லை என்று பாஜக அரசை குற்றம் சொல்லுகிறது நாயர் சர்வீஸ் சொசைட்டி.

நாம் எழுப்பும் கேள்வி இது தான். அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக பாரம்பரியம் இருக்க முடியுமா? என்பது தான் அந்த கேள்வி. ஆணும் பெண்ணும் அனைத்து நிலைகளிலும் சமம் என்கிறது அரசமைப்புச் சட்டம். அந்த உன்னத அரசமைப்புச் சட்ட கோட்பாட்டின் அடிப்படையில் தான் உச்ச நீதிமன்றத்தின் 2018 ஆம் ஆண்டு தீர்ப்பு அமைந்தது. அந்த தீர்ப்பை இந்த சமூகம் காப்பாற்றிக் கொள்ளவில்லை என்றால், நாம் ஒரு 100 அல்லது 200 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விட்டோம் என்று பொருள்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நாம் செய்ய வேண்டியது என்ன என்பது இங்கே குறிப்பிட வேண்டும். பாரம்பரியம் மற்றும் சம்பிரதாயம் என்பதின் பெயரால் தான், ‘அனைத்து சாதியினரும் அர்ச்சராகலாம்’ என்பது சனாதனிகளாலும், சங் பரிவார கும்பலாலும் எதிர்க்கப்படுகிறது.

‘அரசின் பணி எதுவாக இருந்தாலும், அந்த நியமனங்கள் சாதி அடிப்படையில் இருக்கக் கூடாது’ என்பதே அரசமைப்புச் சட்டம் கூறும் உன்னதக் கோட்பாடு. எனவே, ‘அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் கோயில்களில்  சாதி வித்தியாசமின்றி தகுதி உள்ள அனைவரும் நியமிக்கப்படலாம்’ என்ற சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டும் என்பதே நமது கோரிக்கையாகும்.

கட்டுரையாளர்; ஹரிபரந்தாமன்

மேனாள் நீதிபதி,

சென்னை உயர்நீதிமன்றம்

 

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time