அரசு மருத்துவர்களால் புற்று நோயை வென்ற குழந்தைகள்.!

-ம.வி. ராஜதுரை

இன்றைக்கு புற்று நோய் பரவல் அதிகரித்து வரும் நிலையில் புற்று நோய் பாதித்த பிஞ்சுக் குழந்தைகளை குணப்படுத்துவதில்  சென்னை எழும்பூர் குழந்தைகள் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைக்கின்றனர். புற்று நோய் குழந்தைகளுக்கு வராமல் தடுப்பது எப்படி? வந்தால் எப்படி குணப்படுத்தலாம் என நம்பிக்கை தருகிறார்கள்;

ஆண்டு தோறும் பிப்ரவரி 4 ந்தேதி உலக புற்றுநோய் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

இந்த நாளை மையமாகக் கொண்டு, உலகம் முழுவதும் புற்று நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

புற்றுநோய் வந்தாலே உயிருக்கு ஆபத்து என்ற நிலை ஒரு காலத்தில் இருந்தது. நவீன மருத்துவ சிகிச்சைகள் அந்த நிலையை மாற்றிவிட்டது. ஆயினும், விழிப்புணர்வின்மை,

உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளாமை ஆகிய காரணங்களால் இந்நோயால் மரணங்கள் நிறைய நிகழ்கின்றன.

கார்ப்பரேட் மருத்துவ மனைகளில் 10 லட்சம் ரூபாய் 15 லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு குணப்படுத்தும் புற்று நோயை  அரசு மருத்துவமனைகள் கட்டணமின்றி குணப்படுத்தி வருகின்றன.

இந்த வகையில், சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏராளமான குழந்தைகளை, சிறுவர், சிறுமிகளை நோயிலிருந்து குணப்படுத்தி உள்ளது.

இது குறித்து இம் மருத்துவமனையின் இயக்குநரும் பேராசிரியருமான டாக்டர் மதிவாணன், மூத்த அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சங்கரபாரதியும் கூட்டாக பத்திரிக்கையாளர்களுக்கு  பேட்டி கொடுத்தனர்.

டாக்டர் சங்கர பாரதி 29 ஆண்டுகளாக இம் மருத்துவமனையில் பணியாற்றி வருபவர். இதுவரை 20,000-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளை செய்து சாதனை படைத்தவர். அவரிடம் பத்திரிகையாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:

அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில், புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள்- சிறுவர்களுக்கு கட்டணமின்றி சிறப்பாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த வயது பிரிவினருக்கு ஏற்படும் புற்று நோயை இரண்டு வகையாக பிரிக்கலாம். சிறுநீரகம்,ஈரல் போன்ற பாகங்களில் புற்றுநோய் கட்டிகள் உருவாகி அதற்கு செய்யப்படும் சிகிச்சை ஒரு வகை. கட்டி ஏற்படாமல் ரத்தத்தில் ஏற்படும் புற்று நோய்க்கு அளிக்கப்படும் சிகிச்சை இன்னொரு வகை. முதல்  பிரிவில் சராசரியாக ஆண்டுக்கு 70 முதல் 80 குழந்தைகளும் இரண்டாவது வகையில் 90 முதல் 100 குழந்தைகளும் உரிய சிகிச்சை பெறுகிறார்கள்.

இப்படி சின்ன வயதிலேயே புற்று நோய் வருவதற்கு முக்கியக் காரணம் மரபணு சார்ந்து அதாவது குழந்தையின் மூதாதையருக்கு இந்த நோய் இருந்திருக்க வேண்டும். நீர், காற்று,உணவு போன்றவற்றில் ஏற்படும் மாசும் காரணங்களில் மற்றொன்று. இது பற்றிய  ஆராய்ச்சிகள்  தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

புற்று நோய் கட்டிகளை அறுவை சிகிச்சை மூலம் அப்புறப்படுத்தி, தேவைக்கு ஏற்ப பின்னர் கீமோதெரபி, கதிர்வீச்சு போன்ற தொடர் சிகிச்சைகளை பரிந்துரைக்கிறோம்.

அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலையில் உள்ள சுமார் 10 சதவீதம் பேருக்கு கிமோ உள்ளிட்ட பிற சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.

நோய் மிக முற்றுவதற்கு முன்பு வந்தால், சிறந்த சிகிச்சை முறைகளைக் கொண்டு விரைவில் குணப்படுத்தலாம். ஆரம்ப நிலை புற்று நோயை 100 சதவீதம் குணப்படுத்திவிட முடியும்.

கீமோ தெரபியால் முடி கொட்டிவிடும் என்ற அச்சம் பரவலாக உள்ளது. இது போன்ற தேவையற்ற பயத்தை போக்குவதற்காகத் தான், கீமோதெரபி எடுத்துக் கொண்டு குணமடைந்த, குணமாகிக் கொண்டிருக்கும் குழந்தைகளையும், சிறுவர்களையும் இங்கு அழைத்து வந்துள்ளோம். இவர்களுடைய தலை முடி எப்படி உள்ளது, எவ்வளவு மகிழ்ச்சியாக இவர்கள் உள்ளார்கள் என்பதை நீங்களே பார்த்துப் பேசி தெரிந்து கொள்ளலாம்.

புற்றுநோய்க் கட்டியை நீக்கம் செய்யும் அறுவை சிகிச்சை முடிந்தவுடன் சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தொடர் சிகிச்சைக்கு அழைத்து வருவதில்லை. இதற்கு முக்கியக் காரணம் முடி கொட்டி விடும் என்பது தான்.! எனவே, மருத்துவர் அறிவுறுத்தும் தொடர் சிகிச்சை மற்றும் கண்காணிப்பின் முக்கியத்துவத்தை பெற்றோர் உணர்ந்து கொள்ள வேண்டும்.

எண்ணெயில் பொறித்த உணவு வகைகள், பேக்கரியில் தயாரான டால்டா கலந்த மைதா உணவுகள், உணவில் சேர்க்கப்படும் நிறமிகள், சுவையூட்டிகள் சேர்க்கப்பட்ட நொறுக்கு தீனிகளை (Junk Foods) குழந்தைகளுக்கு பெற்றோர் கண்டிப்பாக வாங்கிக் கொடுக்கக் கூடாது. இத்தகைய உணவுகளை நிறைய உண்ணும் குழந்தைகளுக்கு காலப்போக்கில் புற்று நோய் வர அதிக வாய்ப்புள்ளதை ஆராய்ச்சிகள் உறுதி செய்துள்ளன.உணவுப் பொருட்களை நன்கு வேக வைத்து சாப்பிடும் போது அதில் உள்ள நச்சுத் தன்மை அகல்வதற்கு வாய்ப்புள்ளது.

இந்த மருத்துவமனைக்கு தமிழ்நாடு முழுவதிலும் மற்றும் நெல்லூர் போன்ற தெற்கு ஆந்திர மாநிலத்தில் இருந்தும் சிகிச்சை பெற வருகிறார்கள்.

அறுவை சிகிச்சைக்கு பிறகு  குறிப்பிட்ட இடைவெளியில் கிமோ தெரபி சிகிச்சைசெய்ய வேண்டி இருக்கும். தொலை தூரத்தில் இருப்போர் அடிக்கடி வந்து போக இயலாது என்பதால், இக் குழந்தைகள் பெற்றோருடன் சென்னையில் தங்கியிருந்து சிகிச்சை பெற, சில தன்னார்வ அமைப்புகள்  உதவி செய்கின்றன. அது பற்றிய விவரங்களை மருத்துவமனையில் கேட்டு தெரிந்து கொண்டு, பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துப் பேசினார்.

இரத்தப் புற்று நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு குணமடையும் விகிதாச்சாரம் குறித்து கேட்ட கேள்விக்கு பேராசிரியர் மதிவாணன் பதிலளிக்கையில்,உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளும் குழந்தைகள் 80 சதவீதம் குணமடைகிறார்கள். ஒரு சில வகை ரத்தப் புற்று நோயால் பாதிக்கப்படும் குழந்தைகள் 100 சதவீதம் குணமடைகின்றன” என்று பதில் அளித்தார்.

இந்நிகழ்ச்சியில், புற்று நோயை வென்ற சிறுவன் ஹரிஷ் (வயது 8) பெற்றோருடன் பங்கேற்றான். 2021 ஆம் ஆண்டில் இந்த சிறுவனுக்கு மூன்றரை வயதாகும் போது சிறுநீரகத்தில் புற்றுநோய்க் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. அறுவை சிகிச்சை மற்றும் தொடர் சிகிச்சையால் குணமடைந்து, வெளி நோயாளியாக தொடர் கண்காணிப்பில் தற்போது இருக்கிறான்.  மாதவரத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவன் தர்ஷனும் வந்திருந்தான். இவன் 11 மாத குழந்தையாக இருந்த போது, மார்பில் பின்புற நடு பகுதியில் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது பூரண குணம் பெற்று விட்டான்.

லர்சன் என்ற குழந்தைக்கு மூன்று மாதத்தில் ஈரலின் இடது பக்கத்தில் இருந்த புற்று நோய் கட்டி அகற்றப்பட்டது. வெற்றிகரமான தொடர் சிகிச்சையில் உள்ள அக்குழந்தைக்கு தற்போது ஒரு வயது நான்கு மாதம் ஆகிறது.

பெற்றோரின் கையில் இருந்த அக்குழந்தை மகிழ்ச்சியுடன் விளையாடிக் கொண்டிருந்தது. கௌரிஷ் என்ற 11 வயது சிறுவனுக்கு  இரண்டரை வயதில் மார்பு பகுதியில் இருந்த புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டு, தற்போது பூரண குணமடைந்து பள்ளிக்குச் சென்று கொண்டிருக்கிறான். அவனும் பெற்றோருடன் இந் நிகழ்ச்சியில் பங்கேற்றான்.

கட்டுரையாளர்; ம.வி. ராஜதுரை

மூத்த பத்திரிகையாளர்.

 

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time