சிவாஜி, கமலை விட சிலிர்க்க வைக்கும் நடிப்பாற்றல் கொண்டவர்கள் அரசியல் அரங்கில் அதிகமாகவே உள்ளனர். இது நடிப்பு என்பதே ஒருபோதும் வெளிப்படாமல், கொள்கைவாதியாக சதா சர்வ காலமும் அரசியல் அரங்கில் வலம் வர முடிவது என்பது அபார சாதனையாகும்! ஆனால், உண்மை ஒரு நாள் வெளியாகும்! அதில் பொய்யும், புரட்டும் பலியாகும்!
இந்தியாவின் மூத்த அரசியல்வாதியான ப. சிதம்பரம் அவர்கள் சொல்வதில் உடன்படுகிறேன்.
‘’பாஜக அரவணைத்துள்ள அதிமுக நீண்டகாலம் நிலைத்திருக்க முடியாது’’
ஆம், உண்மை தான்! அதிமுக சுதாரித்துக் கொள்ளாவிட்டால், அதனை பாஜக விழுங்கிவிடும் என்பதே நிதர்சனம்.
அதே சமயம் அதிமுகவை மட்டும் தானா பாஜக அரவணைத்துள்ளது..?
அதிமுகவை பாஜக அரவணைத்துள்ளது வெளிப்படையாகத் தெரிகிறது. ஆனால், அது திமுகவைத் தான் உண்மையிலேயே அரவணைத்து, ”ஆடுடா ராஜா’’ என ஆடவிட்டு ரசித்துக் கொண்டிருக்கிறது…!
பாஜகவின் பர்ஸ்ட் அஜந்தா அதிமுக. இரண்டாவது அஜந்தா திமுக.
அதிமுகவை தனியாக தன் போக்கில் விட்டு இருந்தாலே அது சட்டமன்ற தேர்தலை தன் சக்திக்கு ஏற்ற வகையில் எதிர்கொண்டு ஒரளவு சாதிக்க வாய்ப்புள்ளது.
ஆனால், அதை அரவணைத்து பலவீனப்படுத்தி, திமுக சிக்ஸர் அடிப்பதற்கான அனைத்து சூழல்களையும் உருவாக்கித் தருகிறது,பாஜக.
அதிமுக – பாஜக கூட்டணி கட்சியான பா.ம.கவில் தந்தை- மகனுக்கு இடையில் பிளவை ஏற்படுத்தி பலவீனப்படுத்தியது பாஜக தான்!
2026 தேர்தலில் திமுக தான் வெற்றி பெறும் என்று அமித்ஷா ஓபிஎஸ்சிடம் ஆருடம் கூறியதையடுத்தே அவர் திமுகவிற்கு வந்ததை ஒபிஎஸ்சே போட்டு உடைத்துவிட்டார். மேலும், ஆடிட்டர் குருமூர்த்தியின் ஆலோசனை இல்லாமல் எது ஒன்றையும் ஒபிஎஸ் செய்யமாட்டார் என்பதும் தெரிந்ததே!

அதிமுக- பாஜக கூட்டணியில் தொடர்ந்து பயணித்து வந்த தேமுதிகவை திமுக பக்கமாக திசை மாறிப் போக அனுமதித்ததும் பாஜக தான்.
வரைமுறையில்லாமல் ஊழலில் ஊறித் திளைத்து தமிழ்நாட்டை சூறையாடி வரும் திமுக அரசையும், அதன் அமைச்சர்களையும் அரவணைத்து பாதுகாப்பு தந்து கொண்டிருப்பது பாஜக அரசின் தலைமை தான்!
மேற்குவங்கத்தை மம்தா பானர்ஜியிடம் இருந்து எப்படியாவது அபகரிக்க திரிணமுள் ஆட்சியை நாளும், பொழுதும் திக்குமுக்காட வைக்கிறது பாஜக.
ஆம் ஆத்மி அரசையும், அரவிந்த் கெஜ்ரிவாலையும் பொய் வழக்கு போட்டு சிறையில் தள்ளி செய்த கொடுமைகளை நாடறியும்.
இன்னும் சிபு சோரன், ஹேமந்த் சோரன், லாலுபிரசாத் யாதவ், அவர் மகன் தேஜஸ்வி ஆகியோருக்கு பாஜக செய்து கொண்டிருக்கும் குரூரமான குடைச்சல்களை நாடே அறியும்.
திமுக அரசு மட்டும் எப்படி இவ்வளவு தெனாவட்டாக பாஜகவை எதிர்த்துக் கொண்டே தமிழகத்தை சூறையாடிக் கொழுக்க முடிகிறது…? பிரம்மாண்ட டாஸ்மாக் ஊழல் என்னானது? அமலாக்கத்துறை ரெய்டுகள் எல்லாம் அமுக்கப்பட்டது எப்படி? ஆற்றுப் படுகைகளை பள்ளத்தாக்குகளாக்கியும், உயர்ந்தோங்கிய மலைகளை வெட்டி சாய்த்தும் இயற்கை வளங்களை சுரண்டி எடுத்து திமுக அரசு ஆதரவோடு அண்டை மாநிலங்களுக்கு தினமும் பல்லாயிரம் லாரிகளில் கடத்தப்படுவதை தடுக்க வழியில்லை, தண்டிக்கவும் வழியில்லை என்ற சூழலே நிலவுகிறது.
திருவாசகத்தில் மாணிக்க வாசகர் எழுதிய ஒரு வரியை மேற்கோள் காட்டினாலே போதுமானது ”அவன் அருளாலே அவன் தாள் வணங்கி..’’ என்பதைப் போல, ”பாஜக தயவாலேயே, பாஜகவை எதிர்த்து” ஒரு பாசாங்கு அரசியலை வெற்றிகரமாக நடத்தி வருகிறது திமுக.
நாடாளுமன்றத்தில் பாஜகவை எதிர்ப்பது போல பாவ்லா காட்டிக் கொண்டே டி.ஆர் பாலு பாஜக அரசுக்கு ஆதரவாக செயல்பட்டதை என்னென்பது?
தேசிய கல்விக் கொள்கை இங்கு திறம்பட அமலாகி வருவதை என் சொல்வது?
தொழிலாளர் நலத் துறையை கம்பெனி முதலாளிகள் நலத் துறையாக செயல்படுத்தி பாஜகவின் வயிற்றில் பால் வார்க்கும் திமுகவை அவர்கள் எப்படி கைவிடுவார்கள்?
அதிகமான அபராதங்களை நிர்பந்தித்து வாகன ஓட்டிகளின் வயிற்றெரிச்சலை பொருட்படுத்தாமல் வசூல் வேட்டை செய்யும் மத்திய பாஜக அரசின் போக்குவரத்து சட்டத்தை அமலாக்கும் ’தில்’லை திமுகவைத் தவிர, வேறு யாரிடம் காண முடியும் பாஜகவால்?

தொடர்ந்து மூன்றாண்டுகளாக தமிழக விவசாயிகள் திமுக அரசு கொண்டு வந்த கார்ப்பரேட்களுக்கு வேளாண் நிலத்தையும், நீர் ஆதாரங்களையும் தாரை வார்க்கும் நில ஒருங்கிணைப்பு சட்டத்தை எதிர்த்து உண்ணாவிரதம் கண்டனர். பயனில்லை. இந்த சட்டத்தால் தான் பல்லாயிரம் ஏக்கர் வேளாண் நிலங்களை தமிழக விவசாயிகளிடம் பறித்து கார்ப்பரேட்களுக்கு தந்து பாஜகவிடம் சபாஷ் பெற்றது திமுக அரசு.
இந்தியாவிலேயே இந்து அறநிலையத் துறையை அந்ததணர் நலத் துறையாக்கியுள்ள ஒரே அரசு திமுக அரசு தான். தமிழக பார்ப்பனர்கள் பாஜகவைவிட திமுக பக்கமே அதிகம் உள்ளனர். இதனால் தான் அதிமோசமான திமுகவின் ஐந்தாண்டு ஆட்சியை பெரும்பாலான ஊடகங்கள் புகழ்ந்து எழுதுகின்றன.
இதனால் தான், ”திமுகவும்- காங்கிரஸும் கூட்டணியை முறித்துக் கொள்ளக் கூடாது. அது இருவரையுமே பலவீனப்படுத்தும்’’ என உருகியபடி டிவிட் போட்டார், பார்ப்பன குல பாதுகாவலரான ஆடிட்டர் குருமூர்த்தி.
தமிழ் நாட்டில் சட்டம், ஒழுங்கு கடுமையாக சீர்கெட்டுள்ள நிலைமையில் திறமையான, தகுதியான டிஜிபியை நியமிக்காமல் ஒன்பதாவது வரிசையில் இருந்த ஒருவரை பொறுப்பு டிஜிபியாக்கி திமுக அரசு காலம் கடத்துவதை இது வரை வேடிக்கை பார்க்கிறது பாஜக அரசு.
‘பணபலம், பவர் பலம்’ இந்த இரண்டையும் தங்கு தடையின்றி பிரயோகித்து தமிழகத்தில் @026 சட்டமன்றத் தேர்தலை திமுக எதிர் கொள்வதை எந்த எதிர்ப்புமின்றி வேடிக்கை பார்க்கிறது பாஜக!
பாஜக அதிமுகவை அரவணைத்து அழிப்பதை பார்க்க முடிந்த ப.சிதம்பரத்திற்கு, காங்கிரசை திமுக அரவணைத்து அழிப்பதை தகர்த்து, காங்கிரசின் சுயாதீனத்தை மீட்க ஆர்வமில்லை. 75 சதவிகித காங்கிரஸ் தொண்டர்கள் விருப்பத்திற்கு மாறாக திமுகவுடன் கூட்டணி வைக்க காங்கிரசின் நிர்வாகிகள் அழுத்தம் தருகிறார்கள் டெல்லி மேலிடத்திற்கு! என்ன காரணம்? இவர்கள் காங்கிரசிற்கு காட்டும் விசுவாசத்தை விட திமுகவுக்கு அதிக விசுவாசம் காட்டுகிறார்கள் என்பதற்கு இதுவே சாட்சியாகிறது. காங்கிரசை சிதைத்ததில் சிதம்பரத்தின் பங்கு பளப்பரியது.
கடந்த ஐந்தாண்டுகளில் தமிழக காவல்துறை மக்கள் போராட்டங்களையும், தொழிலாளர் போராட்டங்களையும் கடுமையாக ஒடுக்கி வருகிறது. ஜனநாயக ரீதியாக போராடும் உரிமை அரசியல் சட்டம் அனுமதித்துள்ள உரிமை. அதையே கேள்விக்குள்ளாக்கிவிட்டது திமுக அரசு. போராட்டத்திற்கோ, அரசை எதிர்த்த கருத்தரங்கிற்கோ அனுமதி தருவதில் காவல்துறை மிகுந்த கெடுபிடி காட்டுகிறது.
கடந்த ஐந்தாண்டுகளில் தமிழக பாஜகவின் அதீத வளர்ச்சிக்கு திமுகவே காரணம்!
திமுக பாஜகவுக்கு அரண் அல்ல, ஆபத்பாந்தன்!
இந்தியாவின் மிகப் பெரிய ஆபத்து பாஜக!
தமிழ்நாட்டின் மிகப் பெரிய ஆபத்து திமுக!
இதை நான் சொல்லும் போதெல்லாம் என் மீது பாய்ந்து குதறுகின்றனர், திமுக ஆதரவாளர்கள்!
ஆனால், காலம் கடந்தேனும் இந்த உண்மை வெளிப்பட்டே தீரும். தற்போதைக்கு என்னை பகையாக கருதும் அந்த நண்பர்களுக்கு பட்டுக்கோட்டையாரின் இந்தப் பாடல் வரிகளை நினைவுபடுத்துகிறேன்.
போலிகளும் காலிகளும் பொம்மலாட்டம்
ஆடுகின்ற விந்தை! சொன்னால் நிந்தை! – இதில்
உப்புக்கல்லை வைரமென்று சொன்னால் _ நம்பி
ஒப்புக் கொள்ளும் மூடருக்கு முன்னால் _ நாம்
பதறி என்ன? கதறி என்ன? தோழா
ஒன்றுமே நடக்கவில்லை _ ரொம்ப நாளா!
என்று எழுதிய பட்டுக்கோட்டையார். இதனால், நம்பிக்கை இழந்துவிடக் கூடாது என இதையும் எழுதி வைத்துள்ளார்!
உண்மை ஒரு நாள் வெளியாகும் – அதில்
பொய்யும், புரட்டும் பலியாகும்.
சாவித்திரி கண்ணன்























ஜனநாயக உரிமைகளும் காவல்துறை ஒடுக்குமுறையும்
கடந்த ஐந்தாண்டுகளில் தமிழகத்தின் ஜனநாயகக் குரல் நெரிக்கப்பட்டு வருவதை நாம் பார்க்கிறோம்.
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரிமதியின் மர்ம மரண விசாரணை முறை நிச்சயமாக திமுக மீது சந்தேகத்திற்கு இடமின்றி அப்பட்டமாக பள்ளி முதலாளி பிஜேபியின் சங்கியை காப்பாற்ற முயற்சி செய்கிற காவல்துறையை வைத்து செய்து கொண்டு இருப்பது கவனிக்கத்தக்கது புரிந்து கொள்ள முடிகிறது
100% TRUE ARGUEMENT SIR…